Published:Updated:

`ரஜினியுடன் கிறிஸ்துமஸ், விஜய்யின் மெசேஜ், அப்பாவின் அன்பு!' - ஜோவிதா லிவிங்ஸ்டன்

குடும்பத்தினருடன் ஜோவிதா
குடும்பத்தினருடன் ஜோவிதா

``ஹைதராபாத்துக்கு அழைச்சு ரஜினி சார்கூட கிறிஸ்துமஸ் கொண்டாட வெச்சார் அப்பா. ரஜினி சாருக்குப் புது சட்டையைப் பரிசாகக் கொடுத்தோம்."

நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா, தற்போது சின்னத்திரை நாயகி. இயக்குநர் பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்டவர், வெள்ளித்திரையில் புகழ்பெற நினைத்தவர், திடீரென சின்னத்திரையில் என்ட்ரியாகி இன்று பிஸி. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் `பூவே உனக்காக' சீரியலில் ஜோவிதாதான் நாயகி. உற்சாகமாக இருப்பவரிடம் வாழ்த்துகள் கூறிப் பேசினோம்.
குடும்பத்தினருடன் ஜோவிதா
குடும்பத்தினருடன் ஜோவிதா

``அப்பாவின் அம்மா கிராமத்துப் பெண். `சுந்தரபுருஷன்' படத்துல அப்பா ஹீரோவானதும், அதுபத்தி தன்னோட அம்மாகிட்ட சொல்லியிருக்கார். `மில்லு வேலைக்குப் போகாம சினிமாவில் நடிச்சு ஏம்பா கஷ்டப்படுறே'ன்னு வெகுளித்தனமா கேட்டிருக்காங்க. அப்பாவின் குடும்பத்தினர் சினிமாகூட பார்க்க மாட்டாங்க. சினிமா பத்தின எந்தப் புரிந்துணர்வும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அப்பா, நடிகரா பிரபலமானது ஆச்சர்யமான மாற்றம். உதவி இயக்குநரா இருந்தபோதும் ஹீரோவா ஆன பிறகும் அப்பா நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சந்திச்சிருக்கார்.

அந்த நிலை குடும்பத்தில் தன்னோடு போகட்டும்னு நினைப்பார். அதனால, சினிமா விஷயங்கள் பத்தி வீட்டில் அதிகம் பேச மாட்டார். குடும்பத்தில் யாரும் சினிமாவுக்கு வரக்கூடாதுனு நினைச்சார். ஆனா, எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. மியூசிக்கும் பிடிக்கும். அதனால, ஒருவேளை சினிமாவை தேர்ந்தெடுத்தாலும் என்னைப் பாடகியாக்கவே அப்பா விரும்பினார். ப்ளஸ் டூ முடிச்சிருந்த நேரம். ஒருமுறை என்னை எதேச்சையா பாரதிராஜா சார் பார்த்திருக்கார். அவரோட இயக்கத்தில் புதுப்படத்துல என்னை நடிக்க வெக்க அப்பாகிட்ட கேட்டார். அவர் சம்மதிக்கவேயில்லை. ஒருவழியா அப்பாவின் சம்மதம் வாங்கிய பாரதிராஜா சார், என்னை நாயகியா செலக்ட் பண்ணினார். போட்டோஷூட் முடிச்சுட்டு, ரிகர்சல்கூட நடத்தினார்.

ஜோவிதா
ஜோவிதா

அந்நேரம், பி.சி.ஶ்ரீராம் சார்கிட்ட அப்பா என்னைக் கூட்டிட்டுப்போனார். `நடிக்க ஆசைப்படுறா. சரிவருமா?'ன்னு ஶ்ரீராம் சார்கிட்ட அப்பா கேட்டார். அவர் என்னை போட்டோ எடுத்து முடிச்சதும், ``குடும்பப் பாங்கான முகம். நடிகையா வர்றதுக்கு எல்லா அம்சமும் இருக்கு"ன்னு வாழ்த்தினார். இந்நிலையில, சில காரணங்களால் பாரதிராஜா சாரின் புதுப்பட ஷூட்டிங் தள்ளிப்போயிடுச்சு. அதனால வருத்தப்பட்டேன். `எவ்வளவு அவமானமும் கஷ்டமும் படுறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில வெற்றி பெறலாம்'னு அப்பா ஊக்கம் கொடுத்தார். பிறகு, வேறு பட வாய்ப்புகள் வந்தா நடிக்கலாம்னு இருந்தேன். ``சினிமாவில் நடிக்க நேரம் கூடிவரணும். இப்போதைக்கு ஆசையை வளர்த்துக்காத. படிச்சு முடி. நல்ல வாய்ப்பு ஏதாச்சும் வந்தா அப்புறம் நடிக்கிறதைப் பத்தி முடிவெடுப்போம்"னு சொல்லிட்டார். பிறகு, ரெண்டு வருஷம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன்" என்பவர், சமீபத்தில்தான் பி.ஏ டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்கிறார்.

திடீர் நடிப்பு வாய்ப்பு குறித்துப் பேசுபவரின் முகத்திலும் குரலிலும் கூடுதல் உற்சாகம். ``லாக்டெளனால் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியாம, ஏதாச்சும் உருப்படியா ஒரு வேலை செய்யலாம்னு நினைச்சுட்டிருந்தேன். ஒருநாள் திடீர்னு `பூவே உனக்காக' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. என்னோட ரோல் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஆடிஷன் முடிச்ச சில மணிநேரத்தில் என்னை நடிக்க வரச்சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டேன். ``சின்னத்திரையில் புகழ்பெற்ற பிறகும்கூட வெள்ளித்திரைக்குப் போகலாம். படிப்படியா முன்னேறினால்தான் அந்த வெற்றி நிலைக்கும். விருப்பம் இருந்தா இந்த சீரியல்ல நடி"ன்னார். நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு, சினிமா ஆசைக்குச் சின்னதா இடைவெளி கொடுத்துட்டு சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஜோவிதா
ஜோவிதா

சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு சில வாரங்கள்தான் ஆகுது. தொடக்கத்துல சில எபிசோடுகள் மட்டும்தான் அப்பா பார்த்தார். `இன்னும் நல்லா நடிக்கலாம். இம்ப்ரூவ் பண்ணிக்கோ'ன்னார். அப்பா சில படங்கள்லதான் ஹீரோவா நடிச்சார். தொடக்கத்துல அவரை ஒரு ஹீரோவாவே யாரும் மதிக்கலை; ஏத்துக்கலை. அதனால நிறைய வருத்தப்பட்டாலும், உண்மையா நடிச்சார். அவர் ஹீரோவா நடிச்ச சில படங்களுமே ஹிட்டாச்சு. அப்பாவுக்கு எங்க மேல அளவுகடந்த அன்பு. அவுட்டோர் ஷூட்டிங்ல ஒருவாரம்கூட எங்களைப் பிரிஞ்சு இருக்க மாட்டார். எப்படியாச்சும் கிளம்பி வந்து எங்களைப் பார்த்திடுவார்.

அப்பாவுக்கு இசையில ஆர்வம் அதிகம். நல்லா கிடார் வாசிப்பார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாசிப்பார். தமிழ்ல ரிலீஸாகும் புதுப்படங்களை உடனே தியேட்டர்ல பார்த்திடுவார். அந்தப் படங்கள்ல சிறப்பா வேலை செஞ்சிருக்கும் கலைஞர்களுக்கு போன் பண்ணி வாழ்த்துவார். படங்கல்ல வர்ற மாதிரி அப்பா வீட்டுலயும் கலகலப்பா இருப்பார். ஆனா, நியாயமான விஷயங்கள்ல கடுமையா நடந்துப்பார்.

தந்தையுடன் ஜோவிதா
தந்தையுடன் ஜோவிதா

எங்க நல்லது கெட்டதுல ரொம்பவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பார். `ஷூட்டிங்லதான் ஆர்ட்டிஸ்ட். வீட்டுக்கு வந்ததும் நாமளும் சராசரி மனிதர்கள்தாம்'னு அப்பா சொல்வார். அப்படித்தான் நடந்துப்பார். அதைப் பார்த்து வளர்ந்ததால, எனக்கும் ஷூட்டிங் போறது ஒரு வேலைக்குப் போற மாதிரிதான் இருக்கு" - ஜோவிதாவின் அப்பா பாசம் `அப்பப்பா.'

மறக்க முடியாத சில நினைவுகளைப் பகிர்பவர், ``கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு அப்பாமேல அதிக அன்பு உண்டு. என் சின்ன வயசுல ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்துடன் கலைஞர் ஐயாவை சந்திச்சு வாழ்த்து பெறுவோம். போன வருஷக் கடைசியில், ரஜினி சாரின் 'அண்ணாத்த' படத்துல அப்பா நடிச்சிட்டிருந்தார்.

முதல் முறையா கடந்த கிறிஸ்துமஸ்லதான் அப்பா எங்ககூட இல்லை. நாங்க வருத்தப்பட்டோம்னு, அடுத்த சில நாள்ல எங்களை ஹைதராபாத்துக்கு அழைச்சு ரஜினி சார்கூட கிறிஸ்துமஸ் கொண்டாட வெச்சார் அப்பா. ரஜினி சாருக்குப் புது சட்டையைப் பரிசாகக் கொடுத்தோம். அன்புடன் வாங்கிகிட்டவர், அடுத்த நாளே அந்தச் சட்டையைப் போட்டுகிட்டுவந்து நின்னு சந்தோஷமா சிரிச்சார்.

நடிகர் விஜய் சார் எங்க குடும்ப நண்பர். ஜோன்னுதான் என்னைக் கூப்பிடுவார். ஒவ்வொரு வருஷமும் அவரோட பிறந்த நாளைக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்புவேன். உடனே அவரும் ஸ்வீட்டா ரிப்ளை கொடுப்பார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மறக்காம எங்களுக்கு வாழ்த்து சொல்வார். ரெண்டு வருஷத்துக்கு முன் பாரதிராஜா சார் படத்துல நான் கமிட்டானது தெரிஞ்சு விஜய் சார், எனக்கு வாழ்த்து சொன்னார். ஆனா, இன்னும் விஜய் சாரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கலை. சீக்கிரமே அதற்கான தருணம் அமையும்னு நினைக்கறேன்" என்பவர், நிறைவாக...

ரஜினியுடன் ஜோவிதாவும் தங்கையும்
ரஜினியுடன் ஜோவிதாவும் தங்கையும்

``நான் நிரந்தரமான கவர்மென்ட் அல்லது தனியார் வேலைக்குப் போகணும்னுதான் அப்பாவுக்கு ஆசை. அதன்படி ஏதாவதொரு வேலைக்குப் போயிட்டே, நடிப்பு வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் சினிமாவிலும் நடிப்பேன்" என்று சிரிப்பவருக்கு, ரஜினிக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க ஆசையாம்!

அடுத்த கட்டுரைக்கு