Published:Updated:

பாக்யராஜ் டான்ஸ், அஞ்சனாவின் அக்கறை, தேவயானியின் டெடிகேஷன்! - `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' ஹைலைட்ஸ்

`ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஷூட்டிங் சுவாரஸ்யங்கள்

Junior Super Stars 3.0
Junior Super Stars 3.0

குழந்தைகளிடம் நடிப்புத் திறமையைப் பட்டை தீட்டும் முயற்சியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’. முதல் சீஸனில் டைட்டில் வென்ற அஷ்வந்த் இன்று தமிழ் சினிமாவின் பிஸியான குழந்தை நட்சத்திரம். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இது ஒன்றே போதுமான சாட்சி எனலாம். தற்போது மூன்றாவது சீஸன் நடந்துகொண்டிருக்கிறது.

K Bhagyaraj
K Bhagyaraj

மூன்றாம் சீஸனின் இறுதிச்சுற்றுக்கான ஷூட்டிங் நேற்றைய தினம் நடைபெற்றது. நடுவர்கள் பாக்யராஜ், தேவயானி, ரச்சிதா ஆகியோர் முன்னிலையில் குழந்தைகள் தங்களது முழுத்திறமையை வெளிக்கொண்டு வந்து, `ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வெல்ல மேடையேறிய நிகழ்வின் சில ஹைலைட்ஸ் இங்கே…

* ரியாலிட்டி ஷோ என்றால், மதிப்பெண் போட வரும் நடுவர்களிடம் பர்ஃபாமன்ஸ் வாங்காமல் எப்படி. அதுவும் நடிகர், இயக்குநர் எனப் பல முகம் கொண்ட பாக்யராஜ் சிக்கினால் விடுவார்களா. கொண்டை நிறைய மல்லிகைப் பூவுடன் வலதுபக்கம் தேவயானியும், இடதுபக்கம் ரச்சிதாவும் அமர்ந்திருக்க, நடுநாயகமாக உட்கார்ந்திருந்த பாக்யராஜை நடனமாட வைத்தது, `செம’யாக கிளாப்ஸ் அள்ளியது.

K Bhagyaraj
K Bhagyaraj

பாக்யராஜ் டான்ஸுக்குத் தயாராக, ரச்சிதாவா தேவயானியா யார் கம்பெனி தரப்போகிறார்கள் என ஆடியன்ஸ் எதிர்பார்க்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளின் அம்மாக்கள் நான்கு பேர் மேடையேறினார்கள். உடனே, `வெச்சுக்கவா உன்ன மட்டும்’ பாடல் ஒலிக்க, `எனக்கே ட்விஸ்டா இருக்கே’ எனச் சொன்ன பாக்யராஜ், `ஏம்மா, உங்க வீட்டுக்காரங்க எல்லோரும் இங்கே வந்திருக்காங்கதானே’ எனக் கேட்டாலும், அவர்களுடன் பாக்யராஜ் போட்ட ஆட்டம் டாப் டக்கர்.

* குழந்தைகளின் பர்ஃபாமன்ஸுக்கு அவ்வப்போது எழுந்து நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார், ரச்சிதா. ஒருமுறை எழுந்தபோது தலையில் சூடியிருந்த பூ கீழே விழ, மேக்அப் உதவியாளர் அதை எடுத்துச் சூட்டிவிட்டார்.

Rachitha
Rachitha

வீடியோ கேமராக்கள் இந்தக் காட்சியை க்ளிக் செய்ய, `குளோஸப்ல காட்டி குடும்பத்துல கும்மியடிக்கிறதுக்கா... தொழில் பக்திக்கு அளவே இல்லாம போச்சு. போதும் சாமி, உங்க ஃபோகஸ்’ எனப் பெரிதாக கும்பிடு ஒன்றைப் போட்டார்.

* தொகுப்பாளினி அஞ்சனா ஒன்றை வயது மகன் ருத்ராக்‌ஷையும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வந்திருந்தார். கிடைக்கும் இடைவெளியிலெல்லாம் கேரவனுக்குச் சென்று பையனைப் பார்த்து வந்தபடி இருக்க, கோ-ஆங்கர் கமல் இப்படிக் கலாய்த்தார்.

Anjana
Anjana

`பேசாம இங்கே கூட்டியாந்துடுங்க. ஒரு ஓரமா உட்காரவெச்சிடலாம். அடுத்த சீஸன்லேயே டைட்டில் வாங்குற அளவுக்கு டிரெயினிங் ஆகிடுவார். அம்மா ஆங்கர், பையன் டைட்டில் வின்னர்... எப்படி இருக்கு?'

ஆறு மாசமா குட்டீஸ்களோடு பயணித்த இந்தப் பயணம் ஹாப்பியா இருந்தது. யாராவது ஒருத்தர்தான் டைட்டில் வாங்க முடியும். டைட்டில் வின்னரை அறிவிக்கிற அந்த நிமிடம் எப்படி இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா, இன்னைக்குக் குழந்தைகள் பெரியவங்களைவிட ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிறாங்க!
தேவயானி

பிரேக்கில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டவர்களுக்கெல்லாம் புன்னகையுடன் ஒத்துழைத்தார் தேவயானி. ‘அம்மா இறந்து நாலு நாள்தான் ஆகுது சார். ஆனாலும் கமிட் ஆனபடி ஷூட்டிங் வந்துட்டாங்க’ என தேவயானி குறித்து பெருமிதமாகச் சொன்னார், சீனியர் டெக்னீஷியன் ஒருவர்.

Devayani
Devayani

நள்ளிரவு தாண்டியும் நடந்தது ஷூட்டிங். ‘ஒரு இட்லி; ஒரு ஃப்ரைடு ரைஸ்’ எனத் தனக்கான டின்னரை ஆர்டர் செய்தார், தேவயானி. ‘வித்தியாசமான காம்பினேஷனா இருக்கே’ என்றேன். ‘அந்த இட்லியை உதிர்த்து ஃப்ரைட் ரைஸ்ல போட்டுச் சாப்பிடுங்க, நல்லா இருக்கும்’ எனச் சிரித்தார். சுண்டல், ஹார்லிக்ஸ், இன்னொருபுறம் அங்கேயே தயாரான பிரியாணி.. என உணவுக்குப் பஞ்சமில்லை. ரச்சிதா மட்டும் அவ்வப்போது ரவா லட்டை ருசித்துக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்து தயாராகி வந்ததாம்!

இப்படிப் பல ஹைலைட்களோடு நடந்து முடிந்தது, 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' ஷூட்டிங்.