Published:Updated:

`கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்!’ - `கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஷேரிங்ஸ்

குடும்பத்தினருடன் தீபா

``நான் எதிர்பார்த்தது கைத்தட்டல்கள் மட்டுமே. அது ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்னு உறுதியுடன் இருந்தேன்." - தீபா

`கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்!’ - `கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஷேரிங்ஸ்

``நான் எதிர்பார்த்தது கைத்தட்டல்கள் மட்டுமே. அது ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்னு உறுதியுடன் இருந்தேன்." - தீபா

Published:Updated:
குடும்பத்தினருடன் தீபா

சின்னத்திரையில் வெற்றி முகமாக நடைபோடும் `கடைக்குட்டி சிங்கம்’ தீபா, தனது இயல்பான உடல்மொழியால் என்டர்டெயினராக மாறியிருக்கிறார். சினிமா, சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி என, கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் பெரிதாக ஸ்கோர் செய்கிறார். கடந்த 18 ஆண்டுகளில் பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்டு போராடி ஜெயித்திருக்கும் தீபா, பாசிட்டிவிட்டி ஊற்றெடுக்கும் புது மனுஷியாக மாறியிருக்கிறார். தனது வெற்றிப் பயணம் குறித்துப் பகிர்கிறார் தீபா.

தீபா
தீபா

``சின்ன வயசுல வெளியுலக அனுபவம் எதுவுமே தெரியாம, என்னோட போக்குல ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். அப்பல்லாம் வேப்பமரக் கிளையில உட்கார்ந்து தூங்கின நாள்கள்தாம் அதிகம். ஆனா, ஒருநாள்கூட தூக்கக் களைப்புல மரத்துல இருந்து கீழ விழுந்ததில்ல. தலைநார் பயன்படுத்தாமலேயே அசால்டா பனை மரம் ஏறி இறங்குவேன். மனுஷங்ககிட்ட பேசிப் பழகினதைவிட, நாய், ஆடு, மாடு, கிளினு பிராணிகள்கிட்டதான் அதிகம் பேசி மகிழ்வேன். அந்தக் குழந்தைத்தனம் வயசு கூடக்கூட பக்குவப்பட்டு, பொறுப்புணர்வா மாறணும். ஆனா, இயல்பா அப்படி என்னால மாற முடியல.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடு சுத்தமா இருக்கணும்ங்கிறது வூட்டுக்காரர் சொல்ற முதல் கண்டிஷன். ஆனா, நான் வீட்டுக்குள்ள வந்தால்தான் குப்பையே அதிகமாகும். பணத்தை எங்கயாச்சும் வெச்சுட்டு மறந்திடுவேன். இதனாலதான் எனக்கும் வூட்டுக்காரருக்கும் சண்டையே வரும். நிறைய விஷயங்கள்ல இப்ப வரைக்கும் பொறுப்பில்லாமதான் இருக்கேன். வயசுக்கு ஏத்த பக்குவத்துடன் நடந்துக்க அன்பு கலந்த கண்டிப்புடன் என்னைப் பழக்கப்படுத்துறார். அது நல்லதுக்குத்தான்னு புரிஞ்சாலும்கூட, என்னோட இயல்புத்தன்மையை இழக்கிறதா வருத்தப்படுறேன். தண்ணியிலயே இருக்கிறதுதான் மீனோட இயல்பு. அதுபோல, என்னோட போக்குலயே இருந்துட்டா நல்லா இருக்குமேன்னு தினமும் நினைப்பேன். இது உட்பட எனக்குள்ள இருக்கிற எல்லா ஏக்கத்தையும் போக்குறது நடிப்புத் தொழில்தான்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தீபா
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தீபா

சின்ன வயசுல டிவியில சினிமாவைப் பார்த்து, அதே மாதிரியே நடிச்சுக்காட்டுவேன்; டான்ஸ் ஆடுவேன். `லூசு மாதிரி ஆடிகிட்டு கிடக்கா’ன்னு வீட்டுல சொல்லுவாங்க. எதையும் கண்டுக்காம, சினிமாவுலதான் வேலை செய்யணும்னு உறுதியா இருந்தேன். இதை என் வூட்டுக்காரர்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கின பிறகுதான் கல்யாணத்துக்கே ஒத்துகிட்டேன். அந்தப் பிடிவாதத்துலயே ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரியான வாய்ப்புகளே கிடைச்சும்கூட, வேற வேலைக்குப் போகாம என் பெத்தவங்களுக்குச் சிரமத்தைக் கொடுத்துட்டேன். அப்போ வூட்டுக்காரர் மளிகைக்கடை நடத்தினார். அதுல வர்ற வருமானமெல்லாம் எங்க ரெண்டு பசங்களோட மெடிக்கல் செலவுகளுக்கே சரியா இருக்கும். பொண்ணு கஷ்டப்படக் கூடாதுனு எங்க செலவுகளுக்கு என்னோட பெற்றோர்தான் ரொம்ப காலம் உதவினாங்க.

அதுலயும் என்னோட அம்மா அமிர்தவல்லி, நான் எந்த வகையிலயும் கஷ்டப்படக் கூடாதுனு ரொம்பவே சிரமப்பட்டாங்க; எனக்காக நிறைய உதவிகள் செஞ்சாங்க. போன வருஷம் என் கையைப் பிடிச்சுகிட்டேதான் அவங்க உயிரை விட்டாங்க. உயிரோடு இருந்த வரைக்கும் அவங்களோட அருமையை நான் முழுசா புரிஞ்சுக்கல. இந்தப் பருவத்துலதான் அவங்களோட அன்பும் அருமையும் எனக்குப் புரியுது. அதனாலதான், விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி மேடையில ரொம்பவே எமோஷனலா பேசினேன்” என்று நெகிழ்ச்சியாகிறார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தீபா
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தீபா

``ஏதாச்சும் ஒரு விஷயத்துக்காக என்னைப் பாராட்டிட்டா, அந்தக் காரியத்துல கூடுதல் ஆர்வத்துடன் வேலை செய்வேன். `நீ இதைச் சரியா செய்யல’ன்னு சொல்லிட்டா, அப்படியே சோர்ந்துபோய் அந்த வேலையில நாட்டமில்லாம இருப்பேன். என்னோட ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே இதுதான். நான் எதிர்பார்த்தது கைத்தட்டல்கள் மட்டுமே. அது ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்னு உறுதியுடன் இருந்தேன். அதனாலயே, உழைப்புக்கான சரியான ஊதியமும் அங்கீகாரமும் பல வருஷங்களா எனக்குக் கிடைக்காட்டியும்கூட, நம்பிக்கையோடு கிடைச்ச வாய்ப்புகள்ல நடிச்சேன். அப்பல்லாம் பஸ்லயும் லோக்கல் ரயில்லயும்தான் ஷூட்டிங் போவேன்.

கடைசி ரயிலைத் தவறவிட்டுட்டு, விடியற்காலையில அடுத்த ரயில் வர்ற வரைக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்துலயே கொசுக்கடியில நிறைய நாள்கள் காத்துகிட்டு இருந்ததுண்டு. அதெல்லாம்கூட எனக்குக் கஷ்டமா தெரியல. அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்பவே ஏங்குற குணம் எனக்கு. நடிப்புத் தொழில்ல இருந்தது பிடிக்காம, கூடப் பிறந்த பொறப்புக சிலர் என்கிட்ட பேசாமலேயே இருந்தாங்க. இதுதான் என்னை ரொம்பவே பாதிச்சது. இன்ஜினீயரான என் தம்பி பல வருஷங்கள் கழிச்சு என்கிட்ட மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டான். முன்னாடி மாதிரியே குடும்பத்துல எல்லோரும் இப்போ ஒத்துமையா இருக்கோம்.

நடன வகுப்பெடுக்கும் தீபா
நடன வகுப்பெடுக்கும் தீபா

இப்போ ஷூட்டிங் விஷயமா வெளியிடங்களுக்குப் போறப்போ, சினிமா, சின்னத்திரை நண்பர்கள் பலரும் அவங்க கடந்துவந்த அனுபவங்களை என்கிட்ட பகிர்ந்துப்பாங்க. அதையெல்லாம் கேட்கிறப்போ, நாம எதிர்கொண்டதெல்லாம் கஷ்டமே இல்லைனு தோணுது. கஷ்டமில்லாம வெற்றி சாத்தியமில்லைனு புரிஞ்சுக்கவே எனக்கு இத்தனை வருஷமாகியிருக்கு. என்னைப் பக்குவமுள்ள மனுஷியா மாத்தின என்னோட வூட்டுக்காரர் மட்டும் இல்லைனா, எனக்கான இந்த வளர்ச்சி சாத்தியமே இல்லை. சில வருஷத்துக்கு முன்னாடி வரைக்குமே அவர்தான் வீட்டுல சமையல் செய்வார். படிப்படியா எனக்கு சமையல் கத்துக்கொடுத்தார்.

ஷூட்டிங் இல்லாத நாள்கள்லதான் அரைகுறையா வீட்டு வேலைகள் செய்வேன். ஓரளவுக்குத்தான் சமைப்பேன். வீட்டுல யாரும் எந்தக் குறையும் சொல்ல மாட்டாக. இத்தனை வருஷத்துல, `நடிக்க போகக்கூடாது’னு ஒருநாள்கூட அவர் சொன்னதில்ல.

என்னோட வருமானத்தையும் அவர் பெரிசா எதிர்பார்த்ததில்ல. நடிப்பு தவிர, கதையாசிரியர் ஆகும் ஆர்வமும் எனக்கு இருக்கு. கிராமத்து வாழ்க்கை முறையை கதையா எழுதியிருக்கேன். சரியான வாய்ப்பு கிடைச்சா, அதை சீரியலாவோ, வெப் சீரிஸாவோ எடுக்கத் திட்டமிட்டிருக்கேன்” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் தீபா.

தீபாவின் விரிவான பேட்டியை தற்போதைய அவள் விகடன் இதழில் படிக்கலாம்.