Published:Updated:

`விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன? பிக்பாஸ் – நாள் 34

பிக்பாஸ் – நாள் 34

ஓர் ஆச்சர்ய திருப்பமாக திடீரென்று நாகார்ஜூனா திரையில் வந்தார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர். தொழில்நுட்பம் தரும் சாத்தியத்தால் இரு மேடைகளும் சங்கமித்தன. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 34

Published:Updated:

`விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன? பிக்பாஸ் – நாள் 34

ஓர் ஆச்சர்ய திருப்பமாக திடீரென்று நாகார்ஜூனா திரையில் வந்தார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர். தொழில்நுட்பம் தரும் சாத்தியத்தால் இரு மேடைகளும் சங்கமித்தன. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 34

பிக்பாஸ் – நாள் 34
முதலில் விகடன் இணையத்தள நண்பர்கள் சார்பில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லி விடலாம்.

கமல் மீது சிலருக்கு சிலபல விமர்சனங்கள், மாற்று அபிப்ராயங்கள் இருக்கலாம். அவற்றைத் தாண்டி ஒரு திரைக்கலைஞனாக கமலின் ஆளுமை விஸ்தீரணம் என்பது பிரமாண்டமானது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரின் கலைப் பயணத்தைப் பாருங்கள். ஒரு பெரிய டிக்ஷனரியைப் புரட்டிப் பார்ப்பது போன்று இருக்கும். முக்கியமான படங்கள் என்று தேர்ந்தெடுத்து பார்த்தாலே மூச்சு முட்டுமளவிற்கு அத்தனை சாதனைகளை விதம் விதமாகப் படைத்திருக்கிறார்.

எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் தமிழிற்கு முதன்முதலில் கொண்டு வந்து இங்குள்ள தரத்தை முன்னேற்றி நகர்த்திச் செல்வதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம், பாடகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு பரிமாணங்களை அடைந்தது. இந்தியத் திரையில், ஏன் உலக அளவில் கூட கமலின் சாதனை முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தவொரு நடிகரும் பிரமித்து பெருமூச்சு விடக்கூடிய டிராக் ரெக்கார்ட்டை அவர் கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

இந்த வரிசையில் இன்னொரு பரிமாணமாக புதிய திசையில் நடக்கத் துவங்கியதின் மூலம் அரசியலிலும் இறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சம்பளமாக பெற்றதை அங்கேயே அவர் முதலீடு செய்தததைப் போல மக்களிடமிருந்து பெற்ற அன்பிற்கு பிரதியுபகாரமாக மக்களுக்கான சேவையில் இறங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இப்படியொரு உன்னதமான கலைஞன் நம்மிடையே இருப்பதற்காக நாம் நிச்சயம் பெருமைப்படலாம்.

(ஆனால் என்னவொன்று பிறந்த நாள் டிரீட் கேட்டால் ‘அல்வா’ கொடுத்து விடுகிறார். இன்று பிக்பாஸிற்கு அதே மாதிரியான பல்புதான் கிடைத்தது).

ஓகே... 34-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம். இந்த நாள் கமலின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி போலவே அமைந்து விட்டது. ஒருவகையில் அதுவே இன்றைய நாளின் பலம் மற்றும் பலவீனம். கமல் கொண்டாட்ட மனநிலையில் இருந்ததாலோ என்னமோ விசாரணை சபையில் அத்தனை சூடும் சுவையும் இன்று இல்லை.

கமலிற்காக ஒரு ஸ்பெஷல் கேக்கை மக்கள் செய்து அனுப்பியிருந்தார்கள். "என் அன்பையும் இதனுடன் சேர்த்து திருப்பி அனுப்புகிறேன்... சாப்பிடுங்கள்" என்றார் கமல். (மக்கள் சிரமப்பட்டு செய்து அனுப்பிய கேக்கை அப்படி திருப்பி அனுப்பியது சற்று நெருடலாக இருந்தது.)

‘ஆஹா.... இதையே நமக்கு கொடுத்துட்டாரே’ என்று நினைத்த மக்கள்.. ‘சார். பிரியாணி’ என்று நினைவுப்படுத்த "அதுவும் உண்டு. வேறு சில பரிசுகளும் காத்திருக்கின்றன" என்று கமல் சொன்னதும் மக்கள் உற்சாகமானார்கள்.

"என் பிறந்தநாளில்தான் என் தகப்பனாரும் காலமானார்..." என்று அனிதா பாணியில் தன் பேச்சை ஆரம்பித்த கமல், "பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் என்ன சாதித்தேன் என்றால் சினிமா நடிகனானேன். சம்பளத்தோடு மக்களின் அன்பும் கிடைத்தது. அவர்கள் என்னை கொண்டாடும்படியாக என்னதான் செய்து விட்டேன் என்று யோசித்துப் பார்த்ததில் கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்" என்று தன் அரசியல் பயணத்தை சுட்டிக் காட்டினார் கமல்.

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

"சார்... ஒரு சின்ன சர்ப்ரைஸ்" என்று ஆரம்பித்த மக்கள், கமல் நடித்த திரைப்படங்களின் பாடல்களை ஆஜித் தலைமையில் பாடினார்கள். இடையிடையே ‘பஞ்ச்’ வசனங்களும் இருந்தன. ஆஜித் முன்னணியில் பாட, மற்றவர்கள் Acappella பாணியில் வாயினாலேயே இசை சப்தங்களை எழுப்பியது சிறப்பு. சோம் பின்னால் அமர்ந்தாலோ என்னமோ, பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்தார்.

"இந்தப் பாடல்களை கேட்கும் போது ராஜா மற்றும் பாலுவின் நினைவு வருகிறது" என்று கமல் சொன்னது உண்மை. பார்வையாளர்கள் பெரும்பாலோனோருக்கும் அதுவே தோன்றியிருக்கும். கடந்த பிறந்தநாளில் பாலு தனக்கு அனுப்பியிருந்த டிஜிட்டல் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை ஒலிபரப்பிய கமல் ‘அதுதான் தனக்கு கிடைத்த பொக்கிஷம்’ என்று ‘அண்ணைய்யா’விற்காக கண்கலங்கி அந்த நெகிழ்ச்சியை நமக்குள்ளும் கடத்தினார்.

**

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. இதில் பெரிதாக ஒன்றுமில்லை.

"சார்... உங்க கோபத்தை இந்த சின்னப் பொண்ணு மேல காண்பிக்கலாமா?” என்கிற நியாயமான கேள்வியை சுரேஷிடம் ரியோ கேட்க, “சில விஷயங்களை அந்தப் பொண்ணு செய்த வேலைதான் காண்பிச்சுக் கொடுத்தது. அதுக்கு நான் நன்றிதான் சொல்லணும்” என்று கமல் போலவே பேசினார் சுரேஷ். கேபியும் தாத்தாவும் மீண்டும் பாசத்துடன் இணைந்தாலும் சுரேஷ் அதிகம் ஒட்டாதது போலவே தெரிந்தது.

வீடு பெருக்கும் விஷயமாக மறுபடியும் ஒரு பஞ்சாயத்து. ஷிவானி தன்னுடைய பங்கை சரியாக செய்யாமல் டபாய்த்து விட்டார் போலிருக்கிறது. எதிலும் பர்பெக்ஷன் எதிர்பார்க்கும் ஆரி, இதை வன்மையாக கண்டிக்க வாயைத் திறந்து பேசி வாக்குவாதம் செய்தார் ஷிவானி (அப்பாடா!)

எந்தவொரு குழுவிலும் ஒழுங்காக வேலை செய்யாத ஒருவர் அந்தக் குழுவில் பிரச்னையை உருவாக்குவர். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இவர்களுடன் மல்லுக்கட்டவே நேரம் சரியாக இருக்கும். "நான் உட்பட நம்ம டீம் இந்த வாரம் சரியா வேலை செய்யலை" என்று பழியை தானும் ஏற்றுக் கொண்டது ஆரியின் சிறப்பு.

**

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

கமல் எண்ட்ரி. "இருள் மூழ்கியிருக்கும் இந்த கொரானோ சூழலில் சில வெளிச்சங்களை ஏற்ற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சொன்னேன். அதில் இன்னொரு முயற்சியாக என்னுடைய சினிமா நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு. படத்தின் தலைப்பையே ஒரு டீஸர் வடிவில் தெரிவிக்கிறோம்” என்று அறிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் அனிருத்தையும் மேடைக்கு அழைத்தார்.

“சார்... வெளியே வெயிட் பண்ண நேரத்துல பேசிட்டு இருந்தோம். உங்க வயசுக்கு எத்தனை நேரம் நீங்க சினிமா செட்ல இருந்திருப்பீங்கன்னு கணக்குப் போட்டுப் பார்த்தா 40 வருஷம்-னு உத்தேசமா வருது. பிரமிப்பா இருக்கு சார்...” என்று இருவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

ஒரு துறையின் மூத்த கலைஞன், நான்காம் தலைமுறை இளைஞர்களுடன் இணைந்து பணிபுரிவது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கமல் அந்த அளவிற்கு update-ஆக இருக்கிறார். இன்னமும் வசீகரம் குறையாமல் ஃபீல்டில் இருக்கிறார் என்பதெல்லாம் நிச்சயம் ஒரு சாதனை.

"தயாரிப்பாளன் என்பதை விடவும் அடிப்படையில் நான் ஒரு சினிமா ரசிகன். அதனால்தான் ராஜ்கமல் நிறுவனம் உருவாயிற்று. நான் பார்த்து ரசித்த சினிமாக்களை தமிழ் மக்களும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று கமல் கூறியது சிறப்பு.

டீஸர் ரகளையாக இருந்தது. லோகேஷ் வளர்ந்து வரும் இயக்குநர்களில் முக்கியமானவர். ‘கைதி’ திரைப்படம் அதற்கு ஒரு நல்ல சான்று. ‘ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து காத்திருக்கிறது’ என்பதை காட்சி வடிவில் தெரிவித்து விட்டார்.

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

‘கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக கவனமாக மேற்கொண்டுதான் இதற்கான படப்பிடிப்பு நடந்தது’ என்று கமல் கூறினார். உண்மைதான் போல. வந்திருந்த வில்லன்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தார்கள். இயந்திரத் துப்பாக்கி உள்ளிட்ட அத்தனை ஆயுதங்களை விட்டு விட்டு கமல் ஏன் கோடரியை எடுத்தார் என்று தெரியவில்லை. படம் வரும் போது தெரியும்.

‘விக்ரம்’ என்பது இந்தப் புதிய திரைப்படத்தின் பெயர். 1986-ல் இதே தலைப்பில் ஒரு கமல் படம் வெளியானது. இது அதனுடைய prequel ஆக இருக்கலாம் என்று ஒரு யூகம் சமூக வலைதளங்களில் அடிபடுகிறது. ‘கமல் எப்படி உளவுத்துறை அதிகாரியானார்’ என்பது போல் இருக்கலாமாம். ஆனால், அப்படி இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவுதான்.

பழைய திரைப்படங்களின் அதே தலைப்பை புதிய திரைப்படங்களுக்கு வைப்பதில் சில அனுகூலங்கள் தயாரிப்பாளருக்கு இருந்தாலும் ஒரு பார்வையாளனாக எனக்கு சில ஆட்சேபங்கள் இருக்கின்றன. தலைப்பிற்கா பஞ்சம்?

“உங்க பிறந்த நாளுக்காக என்ன பண்ணலாம்-னு யோசிச்சப்ப இந்த டீஸர் ஐடியா வந்தது. இதை விட சிறந்த பரிசு எங்களால கொடுக்க முடியுமான்னு தெரியல” என்று லோகேஷ் சொன்னதற்கு "இதை விட பெஸ்ட் கிஃப்ட் படத்தை சிறப்பா எடுத்து தர்றதுதான்” என்ற போது கமலின் உள்ளே இருந்த ‘தயாரிப்பாளர்’ சாதுர்யமாக வெளியே வந்தார்.

"மக்கள் எனக்கு கேக்லாம் கொடுத்தாங்க. ரிட்டன் கிஃப்ட்டா அவங்களுக்கு இந்த டீஸரை போட்டுக் காண்பிக்கிறேன்" என்று சொல்லி இருவரையும் வழியனுப்பி வைத்தார். அவர்களையும் மேடையில் வைத்துக் கொண்டே போட்டிருக்கலாமோ என்று தோன்றியது. ‘டீஸர் ஒளிபரப்பாகும் போது உங்கள் முகங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று பிக்பாஸ் மக்களிடம் சொன்னார் கமல். அதே ஆர்வம் இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருந்திருக்குமே! டீஸருக்காக ஒரு ஸ்பெஷல் விசிலை போட்டார் ரம்யா.

**

ஓர் ஆச்சர்ய திருப்பமாக திடீரென்று நாகார்ஜூனா திரையில் வந்தார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர். தொழில்நுட்பம் தரும் சாத்தியத்தால் இரு மேடைகளும் சங்கமித்தன.

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

பிறந்த நாள் வாழ்த்து கூறிய போது கமல் மீது வைத்திருக்கும் மரியாதை நாகார்ஜூனாவின் உடல்மொழியில் தெரிந்தது. ‘போட்டியாளர்களில் ஒருவரைக் காப்பாற்றும் வேலையை’ கமலிடம் அவர் கொடுத்தார். "ஆந்திராவும் தமிழகமும் கைகுலுக்கிக் கொண்ட தருணம் இது" என்று பிறகு வர்ணித்தார் கமல். இரண்டு பிக்பாஸ் குடும்பங்களையும் சற்று அளவளாவ விட்டிருக்கலாம்.

திடீர் திடீரென கமலின் குடும்ப உறுப்பினர்களும் திரையில் வந்து சர்ப்ரைஸ் தந்தார்கள். "இவர்தான் உங்க அண்ணா. இவங்கதான் உங்க அக்கா" என்று சுஹாசினி அறிமுகப்படுத்தியது சற்று விநோதமாக இருந்தது. ஒருவேளை பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்று சொன்னாரோ... என்னமோ! ஆனால், சாருஹாசனை பலருக்கும் தெரியுமே?!

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

"ஓகே... சம்பளம் வாங்கினதுக்கு வேலையும் செய்யணும்" என்று அவர்களை அனுப்பி விட்டு கமல் தயாராகி நிற்க, "இலைல சோத்தைப் பரிமாறிட்டு வெச்சு செய்யப் போறீங்கன்னு தெரியுது” என்று ஆரி சரியான பாயிண்டைப் பிடித்தார்.

முதலில் ‘த……… லை’ மேட்டர். "இத்தனை கேமராக்கு முன்னாடி நம்மளோட புறஅழகை கவனமாக பராமரிக்கிறா மாதிரி நாம் சொல்லும் வார்த்தைகளும் அழகா இருக்க வேண்டாமா? குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க... இல்லையா..?" என்று பாலாஜியை நோக்கி கமல் சொன்னது ‘நச்’ கமெண்ட்.

மன்னிப்பு தோரணையில் விளக்கம் அளிக்க ஆரம்பித்த பாலாஜி "சும்மா ஜாலி மூட்லதான் சார் சொன்னேன். சனம் அதை ஊதி பெரிசாக்கிட்டாங்க. நான் வளர்ந்த சூழல்ல அது இயல்பான வார்த்தை சார்... அதான் எனக்கு தெரியலை" என்ற பாலாஜியின் விளக்கம் ஒருவகையில் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் "இன்னிக்கு காலைல கூட அந்த வார்த்தையை வெச்சு பாட்டு பாடினார்" என்று சனம் சொன்ன போது பாலாஜிக்குள் இருந்த விஷமம் புரிந்தது.

ஒரு வார்த்தை மற்றவர்களை புண்படுத்துகிறது, சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்றால் அதை கைவிட்டு விடுவதுதான் முறையானது. அதையே சொல்லி மீண்டும் மீண்டும் வெறுப்பேற்றுவது சிறுபிள்ளைத்தனம். ‘பாலாஜி சும்மாதான் பாடினார்’ என்று ரமேஷ் சாட்சி சொன்னது அபத்தமானது.

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

இதற்கு ஆவேசத்துடன் சனம் விளக்கம் அளிக்கும் போது சர்ச்சையான வார்த்தையை மறுபடி மறுபடி சொல்ல, ‘நானும் சுரேஷூம் அந்த வார்த்தையை சபைல சொல்ல வேண்டாம்னு பார்த்தோம். சரி... அதை நாலு வாட்டி சொல்லிடுவோம்’ என்று அந்த வார்த்தைக்கு இசையே அமைத்து காண்பித்து விட்டார் கமல்.

**

அடுத்த ஸ்கீரின் சர்ப்ரைஸ், ஸ்ருதி மற்றும் அக்ஷராவிடமிருந்து. ஒரு தந்தையின் பெருமை கமலின் முகத்தில் வழிந்தது. அதே பெருமையையும் மகிழ்ச்சியையும் வாரிசுகள் தங்களின் பாசமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்கள்.

அடுத்ததாக வண்டியை சம்யுக்தா பக்கம் திருப்பினார் கமல். போட்டியாளர்களின் சறுக்கல்களை நாசூக்காகவும் வலிக்காமலும் சுட்டிக் காட்டுவதுதான் கமலின் பொதுவான வழக்கம். ஆனால் சம்யுக்தாவின் விவகாரத்தில் ‘பாலாஜியின் கைப்பாவையாக செயல்பட்டீர்கள். அவருடைய ஆதாயத்திற்கு நீங்கள் பலியாகி விட்டீர்கள்’ என்று கமல் நேரடியாகவே குற்றம் சாட்ட ‘உண்மைதான் சார்’ என்று சாம் விளக்கம் அளிக்க ஆரம்பிக்க, பாலாஜி ஜெர்க் ஆனார்.

"பாலாஜியின் விரோதிகள் எல்லாம் மெல்ல மெல்ல உங்களின் விரோதிகளாகி விட்டார்கள். கவனித்தீர்களா?" என்று கமல் பிடித்தது சரியான பாயிண்ட்.

‘சம்யுக்தாவின் கேப்டன்சி திருப்திகரமாக இல்லை’ என்று ரியோவும் ஆரியும் சுரேஷூம் சாட்சி சொல்ல சொல்ல சாமின் முகம் தொங்கிப் போனது.

"பாலாஜிற்கும் சனத்திற்கும் இடையில் நிகழ்ந்த சண்டை தொடர்பாக நீங்கள் பாலாஜியை கண்டித்தது போலவே தெரியவில்லையே" என்று கமல் கேட்ட போது சம்யுக்தாவால் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை. ‘கண்டிச்சாங்க’ என்று பாலாஜி சாட்சி சொன்னார்

"ஆரி உங்களை நோக்கி சர்ச்சையான வார்த்தையை சொல்லி கத்திய போது நீங்கள் காயப்பட்டது மாதிரி சனமும் காயப்பட்டிருப்பார் இல்லையா... நீங்கள் ஏன் தடுக்கவில்லை?" என்று அடுத்த தூண்டிலையும் சரியாகப் போட்டார் கமல்.

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

அடுத்ததாக, பாலாஜி பல சமயங்களில் மைக் மாட்டாமல் இருந்த விவகாரம். இந்த விஷயத்தில் சாமிற்கு ஆதரவாக சாட்சி சொன்னார் சுரேஷ். “அவங்க பல தடவை நினைவுப்படுத்தினாங்க சார். நான் பார்த்தேன்”.

"இதுக்காக ஒரு ஆளையே (ஷிவானி) நான் நியமிச்சு இருந்தேன்" என்று விளக்கம் அளித்தார் சம்யுக்தா. இது புரியாத விஷயம். தேவையில்லாத ஆணியும் கூட. பாலாஜியும் மற்றவர்களைப் போல் ஒரு போட்டியாளர்தான். அவரை தினமும் காலையில் எழுப்பி, மைக்கை மாட்டிவிட்டு, பல்லைத் தேய்த்து விட ஒரு ஆள் வேண்டுமா என்ன? இதுவே ஒரு சலுகைதான். பாரபட்சம்தான்.

இந்த உரையாடலில், போட்டியாளர்களின் விளக்கங்களும் கமலும் கேள்விகளும் ஒரு தொடர்பில்லாமல் வளைந்து வளைந்து சென்று கொண்டிருப்பதைப் போல் தெரிந்தது. பிக்பாஸ் எடிட்டிங் டீமின் மீது, அவர்களின் அசாதாரணமான உழைப்பின் மீது எனக்கு மிகுந்த பிரமிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களால் கூட காப்பாற்ற முடியாத அளவிற்கு இந்த உரையாடல் ‘வழவழ’வென்று இருந்தது. இதற்கு கமலும் ஒருவகையில் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘நான் யாருக்கும் வார்னிங் தரலை’ என்று ஆரி மறுத்துக் கொண்டிருக்கும் போது ‘இதற்கான வீடியோ பதிவு இருக்கு’ என்று அவர் பாலாஜிக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒருவகையில் அது கமலுக்கான லீட். கமல் ‘குறும்படம்’ போட்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியிருக்கலாம். ‘விவாத மன்றத்தில் நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று தீவிரமாக மறுத்த பாலாஜிக்கு அந்த குறும்படம் சிறந்த மூக்கறுப்பாக இருந்திருக்கும். சமூகவலைத்தள மக்களே இது தொடர்பாக ஒரு குறும்படத்தை உருவாக்கி விட்டிருக்கும் போது பிக்பாஸ் டீம் அதைச் செய்யாமல் கோட்டை விட்டு விட்டார்கள்.

இதைப் போலவே, ‘கமல் முன்னாடி என் பஞ்சாயத்தை முடிச்சுக்கறேன்’ என்று சனம் அர்ச்சனாவின் சமாதானப் பேச்சை மறுத்த விவகாரமும் இன்று சபை விசாரணைக்கு வரவில்லை. (நாளைக்கு வருமோ... என்னவோ?!).

பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

“'வாயை மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்' என்று பாலாஜி சொன்னார். நான் என் வாயைத்தான், என் தன்னம்பிக்கையைத்தான் கொண்டு வந்திருக்கிறேன். மற்றவர்களை நம்பி வரவில்லை" என்று பாலாஜிக்கு ஆரி தந்த கவுன்ட்டர் டயலாக் சிறப்பு. “சரி... இந்த வாரம் சிறந்த கேப்டனாக நீங்கள் இருந்து காட்டுங்கள்" என்று ஆரிக்கு கமல் தந்த குறிப்புதான் ‘செதுக்கப்பட்ட விமர்சனம்’.

**

அடுத்ததாக எவிக்ஷன் பட்டியலுக்கு வந்தார் கமல். 'அவருடைய பிறந்த நாளையொட்டி இந்த வாரம் எவரும் வெளியே அனுப்பப்படமாட்டார்கள்’ என்கிற மாதிரியான நம்பிக்கை போட்டியாளர்களிடம் உலவ “காப்பாற்றப்படும் சடங்கை" நாளைக்கு ஒத்தி வைக்கிறேன் என்பதை குழப்பி குழப்பி சொன்னார் கமல். (அது கமலின் ஸ்ட்ராட்டஜியோ?!). ‘சேவ் பண்றது முக்கியமா... பிரியாணி முக்கியமா?’ என்கிற அதிமுக்கியமான கேள்வியை கமல் அப்போது முன்வைக்க ‘பிரியாணிதான் முக்கியம்’ என்கிற புத்திசாலித்தனமான முடிவுக்கு மக்கள் வந்தார்கள்.

ஒருவழியாக இந்த ‘வழவழ’ உரையாடல் நிறைவிற்கு வந்தது. திடீர் வீடியோவில் மோகன்லால் வந்து கமலுக்கு வாழ்த்துச் சொன்னது சிறப்பு. ‘மலையாள சினிமாதான் துவக்கத்தில் என்னை ஆதரித்து போஷித்தது’ என்று மகிழ்ந்த கமல், ‘கன்னடத்தைத்தான் விட்டுட்டோம்... சரி... அடுத்த முறை பிடிச்சிடலாம்’ என்றார். (ஆக... அடுத்த சீஸனில் ஒரு ‘பாரதவிலாஸ்’ பாட்டு காத்திருக்கிறது போல).

தன்னுடைய வளர்ச்சிக்கு ஆரம்பக்காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களை நினைவுகூர்ந்து நன்றி சொன்ன கமல் ‘இப்பல்லாம் அதை எதிர்பார்க்க முடியுமா? என்றார். “மூணு மாசத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். ஆனா இப்ப அதை எழுதாதீங்க” என்று கமல் வேண்டிக் கொள்ள, பத்திரிகையாளர்கள் அறத்துடன் அந்தச் செய்தியைக் காப்பாற்றி வைத்திருந்தார்களாம். (அப்ப எதுக்கு முன்னாடியே சொல்லணும்?!).

‘சமகால ஊடகம் ஒருவருக்கு திருமணமாகும் முன்பே அவரது குழந்தைக்கு பெயர் வைத்து விடுகிற’ அவசரத்தை நாசூக்காக சுட்டிக் காட்டினார் கமல்.

‘கமலின் பிறந்தநாள் காரணமாக இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது’ என்கிற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒருபக்கம் இருந்தாலும் ‘சுரேஷ் வெளியேற்றப்பட்டார்’ என்கிற ஒரு தகவலும் இன்னொரு பக்கம் உலவுகிறது.
பிக்பாஸ் – நாள் 34
பிக்பாஸ் – நாள் 34

இந்த சீஸனின் ஆரம்பத்திலிருந்து வீட்டை ஆக்கிரமித்து நிறைய கண்டென்ட் தந்து கொண்டிருந்த சுரேஷ், அர்ச்சனாவின் வரவிற்குப் பின்னால் சற்று சுருங்கிப் போனார். பிறகு பாலாஜியிடம் பகைமையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், இரண்டு குரூப்பிலும் சேர முடியாமல் தனிமைப்பட்டுப் போனார். வீண் பிடிவாதம் காரணமாக தன்னையே முடக்கிக் கொண்டார்.

இதுவே அவரது வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதும் அவர் பிக்பாஸில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ‘அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்’ போல இருக்கும் சிலரே அங்கிருந்து இன்னமும் வெளியேறாமல் இருக்கும் போது அவர்களுக்கு சுரேஷ் சளைத்தவர் அல்ல.

ஆனால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக்பாஸின் தாரக மந்திரம். என்ன வேண்டுமானாலும் ட்விஸ்ட் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.