Published:Updated:

பட்டாசுக் கடையான வீக்கெண்டு பஞ்சாயத்து; கமல் கையில் எடுத்தது பிரம்பா மயிலிறகா? பிக்பாஸ் – நாள் 41

பிக்பாஸ் – நாள் 41

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது போல ஒருபக்கம் லக்ஸரி பட்ஜெட்டை பிடுங்கி விட்டாலும் இன்னொரு பக்கம் அதற்கு நிகரான பொருட்களைத் தந்து சந்தோஷப்படுத்தினார் பிக்பாஸ். மட்டன், பாசுமதி அரிசி என்று பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வந்தன. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 41

Published:Updated:

பட்டாசுக் கடையான வீக்கெண்டு பஞ்சாயத்து; கமல் கையில் எடுத்தது பிரம்பா மயிலிறகா? பிக்பாஸ் – நாள் 41

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது போல ஒருபக்கம் லக்ஸரி பட்ஜெட்டை பிடுங்கி விட்டாலும் இன்னொரு பக்கம் அதற்கு நிகரான பொருட்களைத் தந்து சந்தோஷப்படுத்தினார் பிக்பாஸ். மட்டன், பாசுமதி அரிசி என்று பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வந்தன. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 41

பிக்பாஸ் – நாள் 41
பொதுவாகவே போட்டியாளர்களை மயிலிறகு கொண்டு தடவித்தான் கமல் விசாரிப்பார். இன்று பண்டிகை தினம் வேறு. எனவே அதையும் கீழே வைத்து விட்டார். மேலும் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை. பெரிய பரபரப்பான சம்பவங்களும் நடக்கவில்லை. ‘பாசிப்பருப்பு, ‘எலுமிச்சம்’ போன்ற உதிரியான சில்லறை விவகாரங்கள் மட்டுமே. லக்ஸரி பட்ஜெட்டை இழக்கச் செய்த பாலாஜி மீது தனி விசாரணை மேற்கொள்ளலாம்தான். ஆனால் அவர் பாவனையாக சாரி கேட்டு தப்பித்து விட்டார்.

ஆகவே, ‘வாங்க மக்களே... வெளில வந்து உக்காருங்க... காத்தாட பேசிட்டிருப்போம்’ என்று ஈஸிசேரில் அமர்ந்து அழைக்கும் பெரியப்பா மாதிரி கமல் அழைக்க ஒரு மாதிரியாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது. (இதற்கு 2 மணி நேரமெல்லாம் ஓவர்).

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

வழக்கம் போல் விநோதமான பாணியில் தைக்கப்பட்ட சட்டை (கறுப்பு நிறம் என்ன குறியீடோ?!) அதற்குப் பொருத்தமான கரையுடன் கூடிய வேட்டி என்று பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார் கமல்.

என்னதான் ஒப்பனையிட்டாலும் சில நடிகர்களுக்கு வயது காரணமாக முகத்திலுள்ள சுருக்கங்கள், மேடு பள்ளங்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இந்த வயதிலும் கமல் தனது இளமையை தக்க வைத்திருப்பது ஆச்சர்யம். இதே வயதில் உள்ள சில நடிகர்களின் முகங்களில் முதுமை அப்பட்டமாக தெரிந்து விடுகிறது.

ஓகே... 41-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

"பெருந்தொற்று காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள்தான். கொண்டாடுவோம். சரியான காரணங்களுக்கு மட்டும் வெடிப்போம்" என்கிற முன்னுரையுடன் உள்ளே வந்த கமல், "இது பிக்பாஸ் கொண்டாடும் முதல் தீபாவளி. சீஸன் நடக்கும்போதே பண்டிகையும் கூட வந்திருக்கிறது" என்று மகிழ்ந்தார். நேருவின் பிறந்தநாள் என்பதால் குழந்தைகள் தினமும் கூட (ஆமால்ல!) என்று நினைவுகூர்ந்தவர், கூடவே ‘இன்று நீரிழவு நாள்’ என்பதையும் நினைவுப்படுத்தி, எக்ஸ்ட்ரா இனிப்புகளை சாப்பிட்டவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. ‘தெற்கு சீமையிலே என்னைப் பத்தி கேளு’ என்று நான் இதுவரை கேட்டே இராத பாடல் ஒலித்தது. அதன் வரிகளின் இடையில் ‘தல தீபாவளி’ என்கிற வார்த்தைகள் வந்ததுதான் அந்தப் பாட்டை ஒலித்த காரணம்போல!

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

அடுத்த வாரம் கேப்டனாக பொறுப்பேற்கவுள்ள ஆஜித்தை தயார் செய்து கொண்டிருந்தார் சாம். "யாருன்னுலாம் பார்க்காத... உன்னோட பவரை முழுமையா யூஸ் பண்ணு” என்பது போல் ஆலோசனை தந்து கொண்டிருந்தார். ‘என்னமோ சொல்றீங்க பார்க்கலாம்’ என்பது மாதிரியே அமர்ந்திருந்தார் ஆஜித். பாவம் சின்னப்பையனை என்ன பாடு படுத்தப் போறாங்களோ...

“அன்பால சிலரைத் திருத்தணும்னுதான் இந்த ஷோவுக்குள்ள வந்தேன். பாலாஜி மூலமாக ‘ஆபரேஷன் அன்பு’ வெற்றிகரமாக முடிஞ்சது. இனி் நான் போட்டியாளர். உக்கிரமா செயல்படப்போறேன்" என்பது போல் நிஷாவிடம் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘வீட்டுக்குப் போகணும்’ என்று சிணுங்கிக் கொண்டிருந்த அர்ச்சனா, இப்போது ஜோதியில் ஐக்கியமாகி உக்கிரமான போராளியாக மாறிக் கொண்டிருப்பது சந்தோஷம்.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது போல ஒருபக்கம் லக்ஸரி பட்ஜெட்டை பிடுங்கி விட்டாலும் இன்னொரு பக்கம் அதற்கு நிகரான பொருட்களைத் தந்து சந்தோஷப்படுத்தினார் பிக்பாஸ். மட்டன், பாசுமதி அரிசி என்று பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வந்தன.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அர்ச்சனாவின் இடுப்பின் மீது அனிதா, சுச்சி, நிஷா போன்றோர்கள் ஏறி அமர்ந்து பீதியை ஏற்படுத்தினார்கள். ‘அன்னை அர்ச்சனா’ என்கிற பிம்பத்தை உறுதிப்படுத்த இப்படியெல்லாம் செய்துதான் நிரூபிக்க வேண்டுமா என்ன? அதிலும் சுச்சி ‘அப்பா... அப்பா... பாருப்பா... நான் ஆனை மேல ஏறிட்டேன்’ என்பது மாதிரியே பாலாஜியை அழைத்து தான் அர்ச்சனாவின் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்ததை காட்டினார். (இன்னமும் என்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!)

"மட்டன், பாசுமதின்னு பிக்பாஸ் அள்ளிக் கொடுத்தாரு, சரி. ஆனா நம்ம ஐயிட்டம் வரலையே குமாரு” என்று ஃபீலிங்ஸ்ஸில் மூழ்கினார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

கிச்சன் ஏரியாவில் ஆரியும் சனமும் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். "இந்த அனிதா பொண்ணு ஹர்ட் ஆயிடுமோன்னு நாம பார்த்து பார்த்து பேசிட்டிருக்கோம். ஆனா அது வம்படியா தேடி வந்து ஹர்ட் ஆகுது... அப்புறம் அரைமணி நேரம் அதுவா பேசி நம்மள ஹர்ட் பண்ணுது" என்பது போல் சனம் அனத்தினார்.

“இன்னிக்கு ஒரு விஷயத்தைப் பேச அவங்களை கூப்பிட்டிருக்கேன். இதுவரைக்கும் வரலை. ஏன்னா வார இறுதி. கமல் வர்ற நேரம். ஏதாவது பஞ்சாயத்து பெரிசாச்சின்னா. அதைப் பத்தி விசாரணை வரும்-னு அவங்களுக்கு தெரியும். ரொம்ப ஸ்மார்ட்... இப்ப பாருங்க... திங்கட்கிழமை வந்து கேப்பாங்க” என்று இன்னொரு பக்கம் ஆரி அனத்திக் கொண்டிருந்தார்.

“வாய் பேசறவங்களுக்குத்தான் இந்த வீட்ல மதிப்பு. அவங்க பக்கம்தான் கவனம் திரும்புது. நாம என்னக்கா செய்யறது” என்பது போல் ஷிவானியும் சாமும் வருத்தப்பட்டு பரஸ்பரம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘இதுவே இங்கிலீஷ் பிக்பாஸா இருந்தா கலக்கியிருப்பேன்’ என்றார் சாம்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41
Introvert-ஆக இருப்பது ஒரு குற்றம் அல்ல. ஆனால் தன்னை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் கூட மெளனம் சாதிப்பது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சாம் இதில் சற்று முன்னேறி ஜோதியில் கலக்கத் துவங்கி விட்டார். ஷிவானி இப்போதுதான் முதல் படிக்கட்டில் காலெடுத்து வைத்திருக்கிறார்.

‘மூக்குத்தி அம்மன்’ டிரெய்லர் மற்றும் போஸ்ட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாட் ஸ்டாரில் பார்க்கும் போது ஏற்கெனவே இந்தப் படத்தின் டிரைய்லர் விளம்பரம் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கும். இப்போது நிகழ்ச்சிக்கு உள்ளேயும் அது வரும் போது சற்று குழப்பமாகி விடுகிறது. மரத்தில் மறைந்தது மாமதயானை என்பது போல.

‘அமெரிக்க ரிட்டர்ன் பெரியப்பா’ மாதிரி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த கமல், “பட்டாசால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்தைப் பற்றி பேசினோம். இந்த வருஷம் சத்தம் குறைஞ்ச மாதிரிதான் இருக்கு. நன்றி” என்று சொல்லி அவரே ஆறுதல்பட்டுக் கொண்டார்.

அகம் டிவி. "இந்த வாரம் கொஞ்சம் அன்பான வாரமா இருந்துச்சு இல்லையா?” என்று சர்காஸ்டிக்காக கமல் கேட்க ‘இந்தாளு என்ன பொடி வெப்பாருன்னே. தெரியாதே’ என்பது போல் சிரித்து மழுப்பினார்கள் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

அங்கு வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகளை தேர்ந்தெடுத்து, கூடிப் பேசி ஒவ்வொரு போட்டியாளர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டுமாம். ஏதோ போட்டியாளர்களுக்கு பட்டாசு பற்றி ஒன்றுமே தெரியாதது போலவும் கமல் பட்டாசு கடை ஓனர் போலவும் "இந்தப் பட்டாசு எப்படிங்க...” என்று பெரும்பாலோனோர் விசாரிக்க, கமல் அதற்கு தன் பாணியில் விளக்கம் கூறிக் கொண்டிருந்தார்.

“எனக்கு துப்பாக்கிதான் வேணும். முதல்லயே சொல்லிட்டேன்" என்று சுச்சி ஆரம்பித்திலேயே அடம்பிடித்தும் மக்கள் அதை கண்டுகொள்ளவில்லை. நிஷா துப்பாக்கியை எடுக்கும்போது ‘எனக்கு கொடுங்க’ என்று வாய்விட்டும் கேட்டார் சுச்சி. அப்போதும் கிடைக்கவில்லை. எனவே ‘பாம்பு மாத்திரை’ வழங்கப்பட்ட போது பாம்பு போன்ற சீறலுடன் வாங்கி வைத்துக் கொண்டார். அதிலும் அது கேபியால் வழங்கப்பட்டது அவரின் கோபத்திற்குக் கூடுதல் காரணமாக இருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

சரவெடி அனிதாவிற்கு கிடைத்தது சாலப்பொருத்தம். இருப்பதிலேயே அதிக ஆபத்துகள் இல்லாதது கம்பி மத்தாப்புதான். குழந்தைகள் ஆசையாக கையில் சுற்றி வெடிப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அப்புறப்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தீக்காயத்தை ஏற்படுத்தி விடும். எனவே இது ரம்யாவிற்கு வழங்கப்பட்டதும் மிகப் பொருத்தமே.

தனக்கு வழங்கப்பட்ட ஊசி வெடியை ‘கடமையே’ என்று வாங்கி வைத்துக் கொண்ட ஷிவானியை கிண்டலடித்தார் கமல். சுச்சி வெறுப்பாக அமர்ந்திருந்தாலோ என்னமோ அவரை கூல் செய்யும் விதமாக “அவங்க மட்டும்தான் மத்தவங்க கருத்துக்களை கரெக்ட்டா கேட்டாங்க” என்றார் கமல்.

அடுத்ததாக ‘கடிதங்கள்’ பகுதி. பேனா பிடித்து எழுதுவது என்பது பெரியவர்களிடம் ஏறத்தாழ வழக்கொழிந்து போய் விட்டது. செக் புக்கில் கையெழுத்து போடும் குறைந்தபட்ச வாய்ப்பு கூட இப்போது மறைந்து விட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயம். இந்த விஷயத்தை மீட்டெடுத்து கொண்டு வந்ததற்காக பாராட்டினார் கமல்.

“ரியோ நீங்க என்ன எழுதினீங்க?” என்று கமல் விசாரிக்கும் போதே சபையில் சிரிப்பலை எழுந்தது. “ஆல்கஹால் விளம்பரங்களை நாம் ஏன் தவிர்க்கிறோம்-னா... சும்மா இருக்கறவங்களையும் சொறிந்து விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்” என்பது போல் கமல் மெல்லிய எச்சரிக்கை தர, “இல்ல. சார். எங்க வீட்ல அந்தப் பிரச்னை இருக்கு. அதை எடுத்துச் சொல்றதுக்குதான் இதைச் செஞ்சேன். பெண்கள் என்னை மன்னிக்கணும்” என்று சொல்லி கிரேட் எஸ்கேப் ஆனார் ரியோ. (இனிமே குமாரு சரக்கிற்காக வாயைத் திறக்க மாட்டான்!)

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

தீபாவளி வெடிச்சத்தத்தின் இடையில் மிருகங்கள் படும் அவதியைச் சொன்னார் கமல். மிருகங்கள் மட்டுமல்ல, என்னைப் போல் ‘சவுண்ட் அலர்ஜி’ உள்ளவர்கள் படும் பாடும் மிகக் கொடுமையானது. ஹைடெசிபல் பட்டாசு வாங்கும் கனவான்கள் இதைச் சற்று பரிசிலீக்க வேண்டும்.

"நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்பதையே மறக்கடித்து அனைத்து மதப் பண்டிகைகளையும் கொண்டாடும் சூழலை என் அம்மா ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்காக நான் கடிதம் எழுதினேன்”
என்று நெகிழ்ந்தார் நிஷா.

இதே விஷயம் கேப்ரியல்லாவிற்கும் ஆஜித்திற்கும் அமையவில்லை என்பதையும் அதை வருத்தத்துடன் அவர்கள் சொன்னார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நண்பர்களின் மூலம்தான் அவர்களுக்கு இதர பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் கிடைத்தன. தங்களின் மதம் சார்ந்த இறுக்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

‘கடந்த 2 ரெண்டு வருஷமா பிஸியா இருந்துட்டேன். அதனால குழந்தைக கூட பெஸ்டிவல் கொண்டாட முடியலை’ என்பது போல் ரமேஷ் சொன்ன போது சற்று ‘திக்’ என்றுதான் ஆகி விட்டது. செயலாக இருக்க வேண்டிய பிக்பாஸ் வீட்டிலேயே சும்மா இருக்கிறவர், கடந்த 2 வருடங்களாக அப்படியென்ன பிஸியாக இருந்திருப்பார்? என்னமோ!

‘காதல் திருமணம்தான் என்றாலும் இதுதான் என் மனைவிக்கு எழுதிய முதல் கடிதம்’ என்றார் ஆரி. அன்பை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு அதைச் சரியாக வெளிப்படுத்தாத கலாசாரம் நம்முடையது. தன் அப்பா தொடர்பான அனுபவத்தை இதனுடன் இணைத்து பகிர்ந்து கொண்டார் கமல்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

திருமணம் ஆன பின்பும் தனது மனைவிக்கு அவ்வப்போது காதல் கடிதம் எழுதுவாராம், ‘நடிகர்’ பார்த்திபன். மிக அழகான சமாச்சாரம். அனிதாவும் அது போல்தானாம். இதில் ஆறுதல் அடையக்கூடிய விஷயம் என்னவெனில் கடிதத்தை ‘சுருக்கமாக’ எழுத விரும்பினாராம். (அப்பாடா! கடிதமாவது சுருக்கா இருக்கட்டும்) ‘தன் அம்மாவிற்கு கடிதம் எழுதிய’ விஷயத்தைப் பற்றி பாலாஜி விவரித்த போது அர்ச்சனா தன்னிச்சையாக கண்கலங்கினார்.

‘முதல் முறையா லெட்டர் எழுதினேன்’ என்று ஷிவானி சிணுங்கிக் கொண்டே சொன்ன போது "எங்கப்பா எப்பவுமே போஸ்ட் கார்ட்லதான் எனக்கு எழுதுவாரு... ஓப்பனா இருக்கும்... ஏதாவது திட்டணும்னா இன்லென்ட் லெட்டர்ல எழுதுவாரு" என்று தன் அனுபவத்தை கமல் பகிர்ந்தது சுவாரஸ்யம்.

நேருவும் காந்தியும் ‘கடித இலக்கியம்’ என்னும் வகைமையை செழுமைப்படுத்தியவர்கள். மிக அற்புதமான கடிதங்களை ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்’ என்று கடிதம் எழுதுவதின் முக்கியத்துவத்தை கமல் விவரித்தது சிறப்பு. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மலைவாழ்மக்களுக்கு கடிதம் கொண்டு சேர்க்கும் சிவன் என்பவரின் நெடுங்கால சேவையை கமல் பாராட்டினார். பிறகு வீடியோவில் வந்த சிவன் “காட்டு வழில மிருகங்கள்லாம் இருக்கும். ஆரம்பத்துல பயமா இருந்துச்சு. அப்புறம் பழகிடுச்சு" என்றது சுவாரஸ்யம்.

“தான் சமூகத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம் என்பது முதலில் தனக்கே புரிய வேண்டும். அந்தச் சேவையைப் பயன்படுத்துகிறவர்களும் இதை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும்" என்று கமல் சொன்னது அடிக்கோடிட்டு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. சிவன் ஓய்வு பெற்ற போது மலைவாழ்மக்கள் கூடி அவருக்கு விழா எடுத்தார்களாம். அவர்களைப் போய் ‘நாகரிகம் இல்லாதவர்கள்’ என்று சிலர் கொண்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் செய்யும் சேவையையும் நினைவுகூர்ந்த கமல், ‘அவர்களுக்கு கூட நாம் கடிதம் எழுதி அன்பையும் நன்றியையும் தெரிவிக்கலாம்’ என்கிற ஆக்கப்பூர்வமான யோசனையை முன்வைத்தார்.

மறுபடியும் அகம் டிவிக்குள் வந்த கமல் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ பற்றி பேசுவோமா?’ என்று ஆரம்பிக்க மக்கள் சற்று பயந்து வாய்க்குள் முனகினார்கள். ‘தீபாவளி நாள்... சந்தோஷமான விஷயங்களை மட்டும் பேசுவோம்’ என்று அவர் சொன்னதும் ‘ஹப்பாடா’ என்று ஆறுதல் அடைந்தார்கள். குறிப்பாக பாலாஜிக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.

'கேரக்டரில் இருந்து துளி கூட வெளியே வராத’ அர்ச்சனாவின் நடிப்பை முதலில் பாராட்டினார் கமல். ரம்யாவை ‘Crime partner’ என்று குறிப்பிட்டது சிறப்பு. ‘நாகேஷூடன் தன்னை ஒப்பிட்டார்கள்’ என்று நிஷா சொன்ன போது ‘அது மிகப் பெருமையான விஷயம்’ என்றார் கமல். உண்மை. தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நகைச்சுவைக் கலைஞர்களின் வரிசையில் முதன்மைப் பட்டியலில் வரக்கூடியவர் நாகேஷ்.

அடுத்ததாக ‘பாசிப்பருப்பு’ சமாச்சாரம். ‘ரியோவை சாப்பிட மட்டும்தான் தெரியுமான்னு சொல்லிட்டீங்க. என்னைத்தான் சொன்னீங்களோன்னு எனக்கு கூட ஹர்ட் ஆயிடுச்சு’ என்று கமல் சொன்னது நல்ல குத்தலான கமெண்ட். ‘அனிதா மற்றவர்கள் சொல்வதையெல்லாம் தனக்கென்று எடுத்துக் கொள்கிறார்’ என்பதையே கமல் இப்படி ஜாடையாக சுட்டிக் காட்ட விரும்பினார். ஆனால் இந்த நையாண்டி அனிதாவிற்குச் சென்று சேரவில்லை.

‘எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறீர்கள்’ என்று செய்தி வாசிப்பாளர்களின் இலக்கணத்தையெல்லாம் கமல் உதாரணம் காட்டியும் அனிதாவிற்குப் புரியவில்லை. தொடர்ந்து அடக்கிய குரலில் ரியோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ‘உங்க டைமை வேஸ்ட் பண்ண விரும்பலை’ என்று கமலை நோக்கி சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டார். (அப்ப கமலுக்கு டைம் இருந்தா... பத்து எபிஸோட் பேசுவீங்களாம்மா?! 'விக்ரம்' படத்தை அவர் எப்பத்தான் ஆரம்பிக்கறது?!).

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

‘சாப்பிடத் தெரியும்ல’ என்று அனிதா கேட்டு விட்டது இயல்பான தொனியில் என்பதாகவே இருக்கட்டும். ஆனால் அதை சாய்ஸில் விட்டு விட்டாலும் கூட, ஒரு சாதாரண விஷயத்தை ‘பிலுபிலு’வென்று பிடித்துக் கொண்டு அனத்தித் தள்ளி பிறகு அழுது மூக்கைச் சிந்துவது என்பது அனிதாவின் அடிப்படையான குணாதிசயமாக இருக்கிறது.

‘நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மனஉளைச்சல் மற்றவர்களுக்கும் பரவும்’ என்று கமல் சொன்னது உண்மை. இப்படியான உணர்ச்சிப்பிழம்புகள் இருக்கும் வீடுகளில் பெரும்பாலான சமயங்களில் அனல் பறந்து கொண்டே இருக்கும்.

ஓர் இடைவேளை விட்டு திரும்பிய கமல், ரியோ – அனிதா வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை ஜாலியாக ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கமலைத் திடீரென திரையில் பார்த்ததும் வேட்டியைத் தாழ்த்திக் கொண்டு சங்கடச் சிரிப்புடன் ‘குட் ஈவினிங் சார்’ என்று வணக்கம் வைப்பது போல் பணிந்து போனார் ரியோ. கமலின் இந்த நாடகத்திற்கு வெடித்து சிரித்தார் ரம்யா.

கமல் மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்கள் அத்தனை உபதேசம் செய்தாலும் அது அனிதாவின் மனதிற்குள் செல்லவில்லை. அவரே வெளியே வந்து அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்த்தால் ஒருவேளை புரியக்கூடும். ‘என்னை எப்பவும் கலாய்ச்சுக்கிட்டே இருக்கீங்க சார்’ என்று கமலிடம் குழந்தை போல் சிணுங்கினார் அனிதா. (இது இன்னொரு ரூபம். இப்படி உள்ளுக்குள் பல ரூபங்கள் இருக்கு போல!)

கமலுக்கு இன்று நிறைய டைம் இருந்தது போல. (விக்ரம் சூட்டிங் இல்லையா?!) "ஏதோ தீபாவளி நிகழ்ச்சின்னு சொன்னாங்க. பார்க்கலாமா?” என்று ஆரம்பிக்க சுச்சி எழுதி பாடிய ‘அமால் குமால்’ பாட்டை ரசித்து கேட்பது போன்ற பாவனையில் இருந்தார் கமல்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

தேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் போல நகைச்சுவையையும் சிந்தனையையும் இணைத்து கலந்தடித்தார் நிஷா. இது போன்ற சமயங்களில் நிஷாவின் வேறு ரூபத்தைக் காண முடிகிறது. என்றாலும் இது நாம் தொலைக்காட்சிகளில் நிறையப் பார்த்திருக்கும் அதே பேச்சுதான். சில நகைச்சுவைகளை நிஷா சொல்லும் பாணியில் அது சுவாரசியமாகிறது.

தனது பேச்சின் இடையே போட்டியாளர்களையும் போட்டுக் கொடுத்தது நிஷாவின் அட்டகாசமான குறும்பு. குறிப்பாக இரவு 2 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் ஷிவானியின் ராவடியை சுட்டிக் காட்டிய போது வேறு வழியில்லாமல் சிரித்து வைத்தார் ஷிவானி. லக்ஸரி பட்ஜெட்டை சுருட்டிய பாலாஜியையும் நிஷா விட்டு வைக்கவில்லை. நிஷாவின் சிறந்த பங்களிப்பிற்காக ஒரு ‘டிஜிட்டல் ஆரத்தழுவலை’ கமல் தந்ததற்கு நெகிழ்ந்து போனார் நிஷா.

காலையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் டான்ஸ் ஆடுவார்கள் என்பதை கேபி செய்து காட்டிய போது சபையே வெடித்து சிரித்தது. இதற்கு உதவி செய்தவர் ரமேஷாம். ஆசாமி அமைதியாக இருப்பது போல் தென்பட்டாலும் உள்ளுக்குள் குறும்புகளின் கூடாரத்தையே ஒளித்து வைத்திருக்கிறார் போல.
அடுத்ததாக ரியோ – அர்ச்சனா இணைந்து நிகழ்த்திய ‘நகைச்சுவை நாடகம்’ உண்மையில் நன்றாகவே இருந்தது. தன்னைப் பற்றிய கிண்டலாக இருந்தாலும் வெடித்து சிரித்தார் சுச்சி. என்னவொன்று அவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் பெரும்பாலும் மிகையாக இருக்கின்றன. சமயங்களில் பயமாக கூட இருக்கிறது.

இந்த நகைச்சுவையின் இடையே ‘எலுமிச்சம் பழ’ விவகாரத்தை தங்களுக்கு சார்பாக அர்ச்சனா குழு கிண்டல் அடித்ததை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அதாவது அர்ச்சனாவிற்கு மயக்கம் வருகிறதாம். அப்போது கூட ‘பர்மிஷன் கேட்டால்தான் எலுமிச்சம் தருவோம்’ என்று சொல்கிறார்களாம். ‘எனக்கும் மனசு இருக்கு’ என்று சனத்தைப் போலவே கத்தி கத்தி ரியோ அமர்ந்தது நல்ல நகைச்சுவை. அனிதாவின் பகுதி வந்த போது அதை அப்படியே நடனமாக மாற்றியதும் சுவாரஸ்யம். இதற்கு அனிதா வெடித்து ஸ்பேஸ் இல்லாமல் சிரித்தார்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41
கமல் நடித்த திரைப்படங்களில் இருந்து தங்களுக்குப் பிடித்தமான வசனத்தை போட்டியாளர்கள் கேட்கலாமாம்.

இங்கு ஒரு இடைச்செருகல். சிறந்த கலைஞர்களை நேர்காணல் என்கிற பெயரில் அழைத்து வந்து ‘அந்தப் படத்துல ஒரு வசனம் சிறப்பா இருந்தது. இப்ப செஞ்சிக் காட்டுங்களேன்’ என்று கேட்பதை இங்குள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இதை ஒரு மோசமான கலாசாரமாகப் பார்க்கிறேன்.

இது மட்டுமல்ல, பொதுவெளியில் நடிகர்களைப் பார்க்கும் பொதுமக்கள் கூட, "சார்... அந்தப் படத்துல அந்த அயிட்டம் சூப்பர்.. இப்ப ஒரே ஒரு முறை செஞ்சிக் காட்டறீங்களா?” என்று கேட்டு அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அனுமதியில்லாமல் செல்ஃபி எடுப்பதை விடவும் இது மோசமான விஷயம். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அப்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. Juke Box இயந்திரத்தை அழுத்தி நாம் விரும்பும் பாட்டைக் கேட்பது போல கலைஞர்களை நம் இஷ்டத்திற்கு இழுக்கக்கூடாது.

‘ஒரு பிரபல நடிகர், நான் சொன்ன விஷயத்தை செய்து விட்டார்’ என்கிற ஈகோதான் இந்த விஷயத்தில் ரசிகர்களிடம் அதிகமாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன். நடிகர் வேறு வழியின்றி சொல்லிக் காட்டும் வசனத்திற்கு இவர்கள் மிகையாக சிரிப்பார்கள். (பிக்பாஸ் வீட்டிலும் இதுதான் நடந்தது. குறிப்பாக ‘பீம்பாய்’ வசனத்தை கமல் சொன்னதும் சுச்சி விழுந்து புரண்டு சிரித்ததில் நாடகமே அதிகம் தெரிந்தது).

நிற்க... ரசிகர்களின் ஆர்வத்தை நான் குறை சொல்ல முயலவில்லை. கலைஞர்களை மதிக்க வேண்டியதும் அங்கீகாரம் தருவதும் நம் கடமை. ஆனால் அந்த ஆர்வம், ஆர்வக்கோளாறாக மாறி விடக்கூடாது என்கிற கவலையுடன் இதைச் சொல்கிறேன். நம்முடைய மிகையான ஆர்வம், கலைஞர்களை எந்த விதத்திலும் புண்படுத்தி விடவோ, சங்கடப்படுத்தி விடவோ கூடாது. அனுமதி கேட்காமல் பாய்ந்து செல்ஃபி எடுப்பதும். இந்த இம்சைகளின் இன்னொரு வடிவம். ஒரு சமூகம் எத்தனை நுண்ணுணர்வுடன் இயங்குகிறது என்பதைப் பிரதிபலிக்கும் அடையாளங்கள் இவை.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

அதே சமயத்தில் கலைஞர்கள் தாமாக முன்வந்தாலோ அல்லது அதற்கான இணக்கமான மனநிலையில் இருந்தாலோ அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்து விடும். அல்லாவிடில் ‘ஏதோ கேட்டீங்க... சரி, செய்யறேன்’ என்பதாகவே முடிந்து விடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இதை செய்கிறார் என்றாலும் கமல் போன்ற ஒரு உன்னதமான கலைஞன், ‘Juke box’ போல் பயன்படுத்தப்படும் போது பார்க்க சற்று சங்கடமாகத்தான் இருந்தது.

“கேட்கறபடி கேட்டா ஒரு கலைஞன் சந்தோஷமா செஞ்சுட்டுப் போயிடுவான். ஆனா ‘ஆட்றா ராமா... ஆட்றா ராமா’ன்னு கேட்டா பல்டி அடிக்க மாட்டான். நீங்க ரசிச்சு கேட்டதால எனக்கு சந்தோஷமாக இருந்தது” என்று இதே விஷயத்தை கமலும் இறுதியில் குறிப்பிட்டார்.

ஓகே... மக்கள் கேட்ட பெரும்பாலான வேண்டுகோள்களை இன்முகத்துடனோ, அல்லது அவ்வாறான பாவனையுடனோ கமல் செய்து காட்டினார். சிலவற்றை நாசூக்காக திசை திருப்பினார். ('மூன்றாம் பிறை'யும் ‘கண்மணி' லெட்டரும் அதற்கு உதாரணம்).

ஆனால் எப்போதோ நடித்த திரைப்படங்களின் வசனங்களை, அவற்றின் தொனியை, அந்தச் சூழலை டக்கென்று உள்வாங்கிக் கொண்டு சட்சட்டென்று மாறிப் பேசுவது கமல் மீதான பிரமிப்பை அதிகரிக்கிறது. அதிலும், 'வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தின் காட்சியை பாலாஜி வேண்டுகோளாக வைக்க அதன் தெலுங்கு வடிவடித்தில் எழுதப்பட்ட கவிதையையும், அதன் தமிழ் பொருளையும் கமல் சொன்ன போது அவரின் ஞாபகத்திறமையை வியக்க முடிந்தது.

‘தீபாவளிப் பரிசு உள்ளே காத்திருக்கிறது’ என்றார் கமல். பரிசாக வந்திருந்த பட்டுப்புடவைகளை ‘வாவ்... வாவ். சூப்பர்’ என்கிற வியப்புடன் பெண் போட்டியாளர்கள் பரஸ்பரம் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 41
பிக்பாஸ் – நாள் 41

ரயில், யானை, கடல் போன்றவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது, புதிதாகத் தோன்றும் என்பார்கள். பெண்களுக்கு அது பட்டுப்புடவை.

பிக்பாஸ் போன்ற நுட்பமான நிகழ்ச்சியை தொகுத்து தர கமலை விடவும் பொருத்தமான நபர் கிடைப்பது சிரமம் என்பது நமக்குத் தெரியும். என்றாலும் இந்த சீஸனை கமல் சுவையாக தொகுத்து தருகிறாரா? பிரம்பைக் கையில் எடுக்க வேண்டிய சமயங்களில் மயிலறகை எடுக்கிறாரா? தன் அரசியல் பரப்புரை மேடையாக பிக்பாஸை பயன்படுத்துவது இடைஞ்சலாகத் தெரிகிறதா?

இப்படி பல கேள்விகள் உங்களுக்குள்ளும் இருக்கலாம். கமெண்ட் பாக்ஸில் வந்து சொன்னால் நன்று.