
படங்கள்: கிரண் ஷா
படப்பிடிப்புகள் இல்லாததால், பழைய சீரியல்களைத் தூசுதட்டி ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்ற சேனல்கள், ஊரடங்கு எப்போது முடியுமெனக் காத்திருக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்து ஷூட்டிங் அனுமதி கிடைத்ததும், தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே காத்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஆம், மூன்று முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகவிருக்கும் மூன்று ரியாலிட்டி ஷோக்கள் இப்போதே ‘சபாஷ், சரியான போட்டி’ எனப் பேச வைத்துள்ளன. சன் டிவி, தமிழ்த் தொலைக்காட்சி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் ‘மாஸ்டர் செஃப்’, விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’, ஜீ தமிழ் சேனலில் ‘சர்வைவர்’ ஆகிய மூன்றும் ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. எனவே, எதைப் பார்ப்பது என ரசிகர்கள் குழம்பிப்போகலாம். டி.ஆர்.பி யுத்தத்தில் கமலும் விஜய் சேதுபதியும் மோதப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த மூன்றாவது நபர் யார் என அறிய ஆர்வமாக இருக்கிறீர்களா? அதைத் தெரிந்துகொள்ளும் முன், மூன்று நிகழ்ச்சிகள் குறித்தும் கொஞ்சம்...
பிக் பாஸ் சீசன் 5
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டைப் போலவே இந்த சீசனும் சற்றுத் தாமதமாகவே தொடங்கப்பட உள்ளது. முன்னதாக, கடந்த சீசனைப் போல் இல்லாமல் வழக்கமான மாதத்தில் தொடங்கிவிட வேண்டுமென முடிவுசெய்து ஆரம்பக்கட்ட வேலைகள் விறுவிறுவென நடந்தன. மழைக்காலத்தில் ஷூட்டிங் நடந்தால் சென்ற ஆண்டைப் போல் செட்டுக்குள் வெள்ளம் புகுந்து விடலாமெனக் கருதியதாலேயே வேகம் காட்டினார்கள். இப்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும், போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட சில வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
அதேபோல் கமல்ஹாசனே மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். கடந்த சீசன்களில் ‘பெரியதொரு அரசியல் பாய்ச்சலுக்கு பிக் பாஸ் மேடையைப் பயன்படுத்துகிறார்’ எனப் பேசப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் அவருமே அங்கங்கே அரசியல் பேசினார். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் அவராலேயே வெற்றி பெற முடியாமல் போய், கட்சி கலகலத்துக் கிடக்கிற சூழலில், ஐந்தாவது சீசனில் என்ன பேசுவார் என்பதே ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சீசன்களில் ஆளே இல்லாத கிரவுண்டில் அடித்து ஆடினார் பிக் பாஸ். இந்த ஆண்டு போட்டி சேனல்கள் இரண்டு டஃப் கொடுக்கிற வகையில் இரண்டு நிகழ்ச்சிகளை இறக்கவிருப்பதால், வரவிருக்கும் சீசன் சேனலுக்குமே சவால் நிறைந்ததாகவே இருக்கலாமெனத் தெரிகிறது.

சர்வைவர்
இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் ஒரேயொரு சீசன் ஒளிபரப்பாகியிருக்கிறது. இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழில் இதை அறிமுகப்படுத்துகிறது.
15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் ஒரு தனித்தீவில் தங்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் தீவுதானாம். உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும். போட்டியாளர்களுக்கு எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்பட மாட்டாது. அதேநேரம் நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் நிறைய உண்டு. டாஸ்க்குகளை எதிர்கொண்டு, எலிமினேட் ஆகாமல் கடைசி வரை சர்வவைல் செய்கிற ஒருவரே டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுகளுக்கிடையிலான விமானப் போக்குவரத்தில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்த பிறகே போட்டியாளர்கள் தங்கும் தீவை முடிவுசெய்ய இருக்கிறார்கள். போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை இங்குமே தொடங்கிவிட்டது.
சரி, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் ஆங்கர் யார்? இப்போதைக்கு நான்கு பேர் ரேஸில் இருக்கிறார்கள்; இவர்களில் சிம்பு முந்தி ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்தான் கமல், விஜய் சேதுபதியுடன் கம்பு சுற்றுவாரா எனத் தெரிய கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

மாஸ்டர் செஃப் தமிழ்
சுமார் 40 நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு சர்வதேச சமையல் கான்செப்ட்தான் ஷோ. விஜய் டிவியில் வெளுத்து வாங்கிய ‘குக்கு வித் கோமாளி’க்கெல்லாம் அண்ணன் என்று சொல்லலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வந்து பல சீசன்களைப் பார்த்துவிட்டாலும் தமிழுக்கு இப்போதுதான் முதன்முறை. தடுக்கி விழுந்தால் டிப்ஸ் தரும் சமையல் யூட்யூப் சேனல்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் இந்த நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதும் இன்னொரு ப்ளஸ்ஸாகப் பார்க்கப்படுகிறது. ஷோவுக்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி விட்ட நிலையில், போட்டியாளர்களைச் சல்லடை போடும் வேலைகள் அங்குமே தொடங்கிவிட்டதாகவே சொல்கிறார்கள்.