Published:Updated:

''ஷூட்டிங் போக முடியல... செத்து போனதா காட்டிட்டாங்க'' - 'கனா காணும் காலங்கள்' மோனிஷா

மோனிஷா
மோனிஷா

''எங்க வீட்ல எல்லோருமே டாக்டர்ஸ். அதனால அம்மா, அப்பாவுக்கு நான் டாக்டராகணும்னுதான் ஆசை. 'நடிக்கப் போறேன்'னு சொன்னதும் வீட்ல சம்மதிக்கலை.''

சமீபத்தில் நடந்த 'கனா காணும் காலங்கள்' ரீ யூனியனில் பலரும் தேடியது, 'சங்கவி' கேரக்டரில் நடித்த மோனிஷாவைத்தான். இப்போது அவர் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீண்ட முயற்சிக்குப் பிறகு துபாயில் இருந்தவரை லைனில் பிடித்தேன்.

''என்னுடைய திருமணம் காதல் திருமணம். எங்களுக்கு அஞ்சு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. திருமணமானதும் டொரான்ட்டோவில் செட்டில் ஆனோம். அங்கே போன பிறகும் கூட சில விளம்பரங்கள்ல‌ நடிச்சேன். ஆனாலும், பல் டாக்டராகணும்கிறது என்னுடைய கனவா இருந்ததால கடந்த அஞ்சு வருஷமா நான் ஃபுல்டைம் டாக்டர். இப்போ என்னுடைய வேலை விஷயமா துபாய்ல‌ இருக்கேன்'' என்றவரிடம், க.கா.கா. பற்றிக் கேட்கத் தொடங்கியதும், உற்சாகமானார்.

மோனிஷா
மோனிஷா

''ஜாலி, கேலி, கிண்டல், கலாய்னு அது ஒரு பொற்காலம். ஷூட்டிங் நடந்த நாட்களோட நினைவுகள் இன்னைக்கும் என மனசுல பசுமையா இருக்கு. அப்பப்ப நினைவுல வந்து போகும். இப்போ ரீ யூனியன் நடந்ததால, மறுபடி எல்லோரும் 'கனா'வை பத்திப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. 'சங்கவி'யா சுமார் 150 எபிசோடுகளுக்கு மேல நடிச்சேன். அது ஒரு 'செம'யான அனுபவம்.

டொரான்ட்டோவில் கூட என்னை அடையாளம் கண்டுபிடிக்கிறவங்க 'சங்கவி' கேரக்டர் பத்தித்தான் பேசுவாங்க. சென்னையில‌ தியேட்டர் ஆர்ட்டிஸ்டா ஸ்டேஜ் புரோகிராம் பண்ணிட்டிருந்தவளுக்கு யதேச்சையாதான் அந்த சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எங்க வீட்ல எல்லோருமே டாக்டர்ஸ். அதனால அம்மா, அப்பாவுக்கு நான் டாக்டராகணும்னுதான் ஆசை. 'நடிக்கப் போறேன்'னு சொன்னதும் வீட்ல சம்மதிக்கலை. 'படிப்பையும் நடிப்பையும் பேலன்ஸ் செஞ்சுக்குவேன்'னு சொன்ன பிறகே சம்மதிச்சாங்க.

சங்கவி கேரக்டரைப் பொறுத்தவரை, கோபம் தூக்கலா இருக்கிற பொண்ணு. எப்பவும் ராகவி கூட சண்டை போட்டுட்டே இருப்பா. ஆனா நிஜத்துல நான் அப்படியே தலைகீழ். அதனால எனக்கு அந்த கேரக்டர் ரொம்பவே சவாலா இருந்துச்சு. ஒருகட்டத்துல எனக்கு மெடிக்கல் கிளாஸ் ஆரம்பிச்சிட்டதால என்னால தொடர்ந்து ஷூட் வர முடியலை. வேற வழி இல்லாமத்தான் செத்துப்போன மாதிரி காட்டிட்டாங்க'' என்றவரிடம் மறக்க முடியாத அனுபவம் குறித்துக் கேட்டேன்.

''ஷூட்டிங் போக முடியல... செத்து போனதா காட்டிட்டாங்க'' - 'கனா காணும் காலங்கள்' மோனிஷா

''நான் இறந்து போன எபிசோடு ஒளிபரப்பான அடுத்த சில தினங்கள்ல ரசிகர்கள் சிலர் எங்க வீட்டைக் கண்டுபிடிச்சு வந்துட்டாங்க. அவங்களைச் சந்திச்சு நாலு வார்த்தை பேசின பிறகே திரும்பிப் போனாங்க. அதே போல நிறைய பேர் ஏதாச்சும் பரிசுப் பொருட்களை வாங்கிட்டு வந்து எங்க வீட்டு கேட்டுக்கு முன்னாடி வச்சிட்டுப் போயிருக்காங்க. சினிமா நட்சத்திரங்களுக்கு நிகரா நமக்கும் ரசிகர்கள் இருக்காங்களேனு நினைச்சுப் பார்த்தா, அப்படியே பூரிப்பா இருக்கும்'' என்றவருக்கு, தற்போதும் சீரியல் வாய்ப்புகள் வந்தபடியேதான் இருக்கின்றனவாம்.

மோனிஷா
மோனிஷா

''ரீ யூனியன்ல கலந்துக்கச் சொல்லி என்கிட்டயும் கேட்டாங்க. இர்ஃபான், பாண்டி உட்பட சிலர் தொடர்புலதான் இருக்காங்க. எனக்குமே கலந்துக்கணும்னு ரொம்பவே ஆசையாத்தான் இருந்துச்சு. ஆனா வருஷத்துக்கு இரண்டு தடவை சென்னைக்கு வருவேன். கடந்த பிப்ரவரியில்தான் கடைசியா வந்துட்டுத் திரும்பினேன். அதனாலதான் நிகழ்ச்சியில் என்னால கலந்துக்க முடியலை. எல்லாரும் என்னை மிஸ் பண்ணதுபோலவே நானும் அவங்களை மிஸ் பண்ணினேன். மத்தபடி ரீ என்ட்ரி குறித்து காலம், சூழல்தான் தீர்மானிக்கும்' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு