சினிமா
Published:Updated:

விகடன் TV: 15 வருடக் கனா!

இர்ஃபான், பிளாக் பாண்டி, ஐயப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
இர்ஃபான், பிளாக் பாண்டி, ஐயப்பன்

அந்த சீரியல் நல்லாப் போயிட்டிருந்தப்பவே, சினிமாவுக்காக டிவியை விட்டு வெளியேறினேன்

பள்ளி வாழ்க்கையைப் படம்பிடித்து ஹிட் ஆன விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. விரைவில் அதே டைப்பில் மீண்டும் ஒரு தொடர் ஒளிபரப்பாகவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ‘கனா காணும் காலங்க’ளில் நடித்த இர்ஃபான், பிளாக் பாண்டி, ஐயப்பன் ஆகியோர் விகடனுக்காகப் பிரத்யேகமாகச் சந்தித்தனர்.

இர்ஃபானிடமிருந்தே உரையாடலைத் தொடங்கினேன்...

‘‘நான் ‘கனா காணும் காலங்க’ளில் நடிப்பேன்னு முதல்ல எனக்குத் தெரியாது. அந்த சீரியல்ல நடிக்க ஆள் தேடி நிறைய பள்ளிக்கூடங்களுக்குப் போய் ஒரு சர்வே எடுத்தாங்க. அந்த சர்வே டீம்ல தான் நான் இருந்தேன். தமிழ்நாடு முழுக்கப் போனோம். அப்பெல்லாம் தொடர்ல‌ நடிக்கிற ஐடியா எனக்கில்லை. ஆனா ரமணன் சார்தான் என்ன நினைச்சாரோ, திடீர்னு ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு ஆடிஷன்ல கலந்துக்கச் சொன்னார். அவர் சொன்னதால கலந்துகிட்டேன்.

ஆடிஷன்ல, பஸ்ல போறப்ப சக மாணவிகிட்ட கண் ஜாடையிலயே பேசற மாதிரி நடிச்சுக் காட்டச் சொன்னாங்க. அதுவரைக்கும் வாழ்க்கையில நான் பஸ்லயே போனது கிடையாது. அதனால எனக்குத் தெரிய சொதப்பலாதான் பண்ணினேன். ஆனா என்ன மேஜிக்கோ, செலக்ட் ஆகிட்டேன்.

அந்தவொரு தருணம், எனக்கு வாழ்க்கையில திருப்புமுனையா அமைஞ்சது. பிறகு ‘சரவணன் மீனாட்சி’யும் எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்தது. ஆனா, அந்த சீரியல் நல்லாப் போயிட்டிருந்தப்பவே, சினிமாவுக்காக டிவியை விட்டு வெளியேறினேன். சினிமா நான் எதிர்பார்த்தபடி அமையலை. அதனால ஃபேமிலி பிசினஸைக் கொஞ்ச நாள் கவனிச்சிட்டிருந்தேன். இப்ப மறுபடியும் டிவியில சில நல்ல வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. பயன்படுத்தலாம்னு இருக்கேன். சீக்கிரமே மறுபடியும் டிவியில என்னைப் பார்க்கலாம்’’ என இர்ஃபான் நிறுத்த, தொடர்ந்தார் ஐயப்பன்...

‘‘அப்பதான் நான் ஊட்டியில இருந்து சென்னைக்கு வந்திருந்தேன். அதனால சென்னையில எந்த இடமும் தெரியாது. அதனால பிளாக் பாண்டி ரூம்க்குப் போய் அவனோடதான் ஷூட்டிங் போவேன். ஆனா, அவன் பாருங்க... ஒருநாளும் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்துக்குக் கிளம்பவே மாட்டான். ஒருவழியா கிளம்பிப் போனா, நாங்கதான் கடைசி ஆளா இருப்போம்.

விகடன் TV: 15 வருடக் கனா!

ஆனாலும் ஷூட்டிங் ஸ்பாட் அப்படியொரு ஜாலியா இருக்கும். லேட் நைட்ல ஷூட்டிங் முடிஞ்சதும், எங்களுக்கு ரொம்பப் பசிக்கும். அந்த நேரத்துலயும் எங்களுக்குன்னு ஒரு பரோட்டாக் கடைக்காரர் திறந்து வெச்சிருப்பார். அங்க போய் அந்த மிட்நைட்ல சாப்பிட்டுட்டுப் போவோம். பாண்டியைக் கேட்டா, லேட்டுக்கு காரணமா இதைத்தான் சொல்வான்.

எப்படியோ முதல் நாள்ல இருந்தே செம ஜாலியாத்தான் இருந்தது. இருபது எபிசோடு வர்றதுக்குள்ளயே ஒருத்தருக்கொருத்தர் ஜெல் ஆகிட்டோம். சுருக்கமாச் சொல்லணும்னா, தலைப்புக்கு ஏத்த மாதிரியே எங்க எல்லாருக்குமே அது ஒரு கனாக் காலம்தான்’’ என்றார் ஐயப்பன்.

‘‘சோஷியல், டிஜிடல் மீடியா இன்னைக்கு இருக்கிற அளவுக்கு அப்ப இல்லை. அந்த நேரத்துலயே அந்த சீரியல் பயங்கர ஹிட். எங்களையெல்லாம் கூட்டி ஒரு ஃபேன் மீட் நடத்தினாங்க. அதுக்கு அவ்ளோ கூட்டம். எங்க ஒவ்வொருத்தருடைய கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூட்டம் ஆர்ப்பரிச்சப்ப எல்லாருக்கும் கண் கலங்கிடுச்சு. எனக் கெல்லாம் பயமும். ‘சீரியலோ, சினிமாவோ இதுக்குப் பிறகு என்ன பண்ணினாலும் இதைத் தாண்டி உழைக்க ணுமே’ங்கிற பயம்தான்” என்று சொல்லும்போதே ஃபிளாஷ்பேக் நினைவுகளில் மூழ்குகிறார் பிளாக் பாண்டி.

“தொடர் முடிஞ்ச பிறகும், எங்கள்ல பலர் தொடர்புலயேதான் இருக்கோம். சரியா பதினைஞ்சு வருசம் ஓடிடுச்சு. நாங்களே ஒரு ரீ யூனியன் நடத்தலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தோம். ஹேமா, ப்ரியா உட்பட எங்க கேர்ள்ஸ் டீம்கிட்டயும் பேசிட்டிருந்தோம். அதுக்குள் கொரோனா வந்து அந்த ஐடியாவைத் தள்ளிப் போட வச்சிடுச்சு. ஆனாலும் இப்ப விகடன் மூலமா நாங்க முணு பேர் சேர்ந்ததே பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுதான். ஏன்னா, சீரியல் அவ்ளோ ஹிட் அடிச்ச போதும் நாங்கெல்லாம் சேர்ந்து ஒரு வீடியோ இண்டர்வியூகூட அன்னைக்குக் கொடுத்ததா ஞாபகம் இல்லை. அதனால இப்படியொரு சந்திப்பை நிகழ்த்தியதற்காகவே விகடனுக்குப் பெரிய தேங்க்ஸ்’’ என்கிறார் பாண்டி.