சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் TV: இதுவும் குடும்பக்கதைதான்!

கன்யா , கவிதா பாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
கன்யா , கவிதா பாரதி

டிவி விகடன் தொகுப்பு: அய்யனார் ராஜன்

டிவியும் சீரியலும் நமக்கெல்லாம் பொழுதுபோக்கு. ஆனால், இவற்றின் ஊடாகக் காதலித்து, குடும்பமானவர்களுக்கு?

‘இதுல என்னங்க இருக்கு... சீரியல்ங்கிறது ஒரு தொழில்தானே’ன்னு கடந்து போயிட முடியாது. சமயங்களில் வீட்டுல சுவர்ல மாட்டியிருக்கிற டிவியைப் பார்க்கிறப்ப இந்த வாழ்க்கையே நீ தந்ததுதானே’ன்னு சொல்லத் தோணும்’ என்கிறார்கள். இந்தப் பகுதியில் அப்படிச் சொல்கிறவர்களுக்குச் செவி கொடுக்கலாமா?

‘’முதல் சந்திப்புலேயே கண் துடிக்கும்; மனசுல பட்டாம்பூச்சி பறக்கும்; திரும்பத் திரும்ப ஒருத்தருக்கொருத்தர் பார்த்துப்போம்னெல்லாம் சில சினிமாவுல சொல்றாங்களே அப்படியெல்லாம் எனக்கு எதுவும் நிகழலை. கன்யாவை முதன் முதலாச் சந்திச்சது நான் இயக்கிய ‘நீலவானம்’ தொடருக்கான ஹீரோயின் ஆடிஷனில். நிறைய பேர் ஆடிஷன் வந்திருந்தாங்க. அதுல மேடம் செலக்ட் ஆனாங்க. ‘ஓகே, ஷூட்டிங் திருவையாறு. கிளம்பி வந்துடுங்க’ன்னு சொல்லிட்டுப் போயிட்டேன்.அடுத்த வாரமே ஷூட்டிங் தொடங்கிடுச்சு. எங்களுக்குள்ள சண்டையும்தான்.

சில ஹீரோயின்கள் வழக்கமா பண்ணுற அதே பிரச்னைதான். ரூம் சரியில்லை; சாப்பாடு சரியில்லை... தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரிதானே ஏற்பாடு செய்ய முடியும். ஆனா காச்மூச்னெல்லாம் நான் கத்தலை. கோவிச்சுட்டுக் கிளம்பிட்டா என்ன செய்யறது? அதனால‌ பக்கத்துல இல்லாத நேரமாப்பாத்து உதவி இயக்குநர்கள்கிட்ட கத்திட்டு நிறுத்திக்கிடுவேன். இப்படியே கொஞ்ச நாள் முறைப்புலேயே கழிஞ்சது.’’

‘`ஷூட்டிங்ல நைன் டூ நைன் பெண்டு எடுக்கிறாங்களே, அதுக்குப் பழி வாங்க வேண்டாம்? அதுவும் போக அந்த ஓட்டல் சுமார்தான். இன்னிக்கும் அந்த அனுபவம் மறக்க முடியலைன்னா பாருங்க. புரொடியூசர்கிட்ட டைரக்டர்தானே எடுத்துச் சொல்லணும்’’ - கன்யா பாரதி இடைமறித்துக் கவுன்டர் கொடுக்க, தொடர்ந்தார் கவிதா பாரதி.

“ஷூட்டிங் போயிட்டே இருந்திச்சு கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்னு சொல்றாங்களே அதெல்லாம் எப்படி நடந்திச்சுன்னு விளக்கத் தெரியலை. ஷூட்டிங் ஸ்பாட்டுல துறுதுறுன்னு திரிஞ்சிட்டிருந்தவங்க மேல திடீர்னு ஒருவித அக்கறை. என்னால அதை பீல் பண்ண மட்டுமே முடிஞ்சது. கல்யாணம் பத்தின ஐடியாவே இல்லாம இருந்தவனுக்கு இவங்ககூட வாழ்ந்தா என்னன்னு தோணுச்சு. ‘டக்’னு முடிவு பண்ணிட்டேன். திடீர்னு ஓப்பன் பண்ண தயக்கம். முறைப்பைத் தூக்கி ஓரமா வெச்சுட்டு முதல்ல கூல் செய்துக்கலாம்னு ‘உங்ககிட்ட ஒரு மேட்டர் பேச வேண்டியிருக்கு; பிறகு பேசறேன்’னு சொல்லிட்டே வந்தேன். முதல்ல சீரியஸா எடுத்துக்காதவங்க, ஒருநாள் ‘இப்ப சொல்லியே ஆகணும்’னு வந்து நின்னாங்க. மெதுவா காதுகிட்டப் போய் ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லிட்டு முகத்தைப் பார்த்தேன். ‘அடப் போங்க சார்’னு சொல்லிட்டுக் கிளம்பிப் போயிட்டாங்க.

எப்பவுமே எதையுமே விளையாட்டா எடுத்துக்கிடற டைப்ங்கிறதால பீல் ஆகலை. மறுபடி ஒருநாள் பிடிச்சு உக்கார வெச்சு சீரியஸா பேசுனதுல மேட்டர் க்ளியர் ஆயிடுச்சு.

கன்யா , கவிதா பாரதி
கன்யா , கவிதா பாரதி

ஒன்றரை வருஷம் காதலிச்சிருப்போம். ஒரு கிப்ட் கூட நான் வாங்கித் தந்ததில்லை. ‘வாங்கித் தரலாம்’னு ‘என்ன பிடிக்கும்’னு போய்க் கேட்டா, ‘இது எப்படி வந்திச்சு’ன்னு எங்கம்மா கேட்டா என்ன சொல்றதும்பாங்க. காசும் மிச்சமாச்சுன்னு விட்டுட்டேன். அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு கல்யாணத்துக்குப் பிறகு வாங்கிக்கிட்டாங்க. அவங்க எனக்குத் தந்த முதல் பரிசு வாட்ச்.

காதலிச்ச நாள்களில் ‘கவிஞர்ங்கிறீங்க, என்னைப் பத்தி ஒரு கவிதைகூட எழுத வர மாட்டேங்குதா’ன்னு கேட்டுட்டே இருந்தாங்க. நாம யாரை நினைச்சுக் கவிதை எழுதறோமோ அவங்கல்லாம் கூட வர மாட்டாங்க. கூட வர்றங்க மேல நமக்குக் கவிதை வராது. இதானே யதார்த்தம். இதை அவங்ககிட்ட அப்படியே சொல்ல முடியுமா? ‘எழுதறேன்மா’ன்னு இன்ன வரைக்கும் சொல்லிட்டே இருக்கேன். இன்னொரு விஷயம், நான் கவிதை எழுதினாலும் தமிழ் அவங்களுக்குப் படிக்க வராது. அவங்க தாய்மொழியான மலையாளத்துல நான் என்ன கவிதை எழுதறது?

``இப்ப எப்படியெல்லாம் லவ்வை வெளிப்படுத்திக்கறீங்க‌?’’

``பரஸ்பரம் பிடிச்ச விஷயங்கள், பொருள்கள் என்னங்கிறது தெரியும். அதைப் பண்ணுவோம். எனக்குப் பிடிச்ச எதையாச்சும் வாங்கிட்டு வந்து ‘இந்தாங்க, பிடிங்க’ன்னு கையில திணிச்சுட்டுப் போவாங்க. ரொமான்ஸ் எதிர்பார்த்தா, ‘நேத்துதான் லவ்வைச் சொன்னீங்களாக்கும்’ங்கிற பதிலே கிடைக்கும்’’ என்கிறார் கவிதா பாரதி.

``கன்யா என்ன சொல்கிறார்?’’

இன்னிக்கு காதல் சாட்டிங்ல தொடங்கி, டேட்டிங்னு போய் கடைசியில சீட்டிங்ல முடியுது. முன்னாடில்லாம் கவிதை எழுதி காதலிச்சது நடந்திச்சா இல்லையா? ஆனா ‘எனக்கும் எழுதறவர் வாய்ச்சிருக்காரே’ன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா என்னைப் புகழ்ந்து.. இல்ல வர்ணிச்சாவது ஒரு கவிதை எழுதியிருக்காரா இதுவரைக்கும்? ம்ஹூம்.’’ பொய்க் கோபம் காட்டிச் சிரிக்கிறார் கன்யா பாரதி.