Published:Updated:

கிச்சன் ஏரியா அடிதடிகள்; தொடர்ந்த அழுவாச்சி டாஸ்க்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 3

பிக்பாஸ் - நாள் 3

"கடவுளே... இந்த எல்கேஜி பசங்களையா கூட்டிட்டு வந்தோம்” என்று நொந்து போய் பிக்பாஸ் உள்ளே தலையில் அடித்துக் கொண்டிருந்திருப்பார்.

Published:Updated:

கிச்சன் ஏரியா அடிதடிகள்; தொடர்ந்த அழுவாச்சி டாஸ்க்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 3

"கடவுளே... இந்த எல்கேஜி பசங்களையா கூட்டிட்டு வந்தோம்” என்று நொந்து போய் பிக்பாஸ் உள்ளே தலையில் அடித்துக் கொண்டிருந்திருப்பார்.

பிக்பாஸ் - நாள் 3
அனிதாவிற்கும் சுரேஷிற்கும் ஜாதகக் கட்டத்தில் ஏதோவொரு ‘விரோத மூலை’ இருக்கும் போல. அவர்களுக்கிடையில் உரசல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பிக்பாஸ் ப்ரோமோவிற்கு நல்ல கன்டென்ட் தருகிறார்கள். இன்றும் அனிதாவின் சிறுபிள்ளைத்தனம் வெளிப்பட்டது.

இதைப் போலவே வயதானவர்களின் சிடுசிடுப்பும் காம்ப்ளெக்ஸூம் சுரேஷிடம் இன்னொரு தருணத்தில் வெளிப்பட்டது.

என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

தனது ‘மிமிக்ரி’ திறமையை இன்றும் தொடர்ந்தார் அனிதா. யூடியூப் சேனல்காரர்கள் இழுத்து இழுத்து பேசும் பாணியை அப்படியே பேசிக் காட்டி அசத்தினார். சந்தடி சாக்கில் சோமையும் ரியோவையும் அவர் கலாய்த்தது சுவாரஸ்யம். அனைவரும் ரசித்து சிரித்தனர்.

கொஞ்சம் இனிப்பு... கொஞ்சம் உப்பு... வாழ்க்கையே 50-50 பிஸ்கெட் மாதிரிதான் என்கிற தத்துவத்தை தன் எடிட்டிங் திறமையின் மூலம் வெளிப்படுத்தியது பிக்பாஸ் டீம்.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

‘கடந்த வந்த பாதை’ என்கிற அழுகாச்சி டாஸ்க்கை சற்று காட்டி விட்டு நடுவில் இயல்பான காட்சிகளையும் காட்டினார்கள்.

அழுகாச்சி டாஸ்க்கில் அடுத்து பேச வந்தவர் கேப்ரில்லா. இவர் கதையை சொன்ன போது ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நமக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அனுபவித்துக் கடந்தவர்களுக்குத்தான் பிரச்னையின் தீவிரம் தெரியும்.

கேப்ரில்லா இளம் வயதில் மிக ஒல்லியாக இருப்பாராம். அதுவே அவருக்கு நிறைய கிண்டல்களையும் விமர்சனங்களையும் மனத்தடைகளையும் கொண்டு வந்ததாம். சில வாய்ப்புகளையும் தடுத்ததாம். எனவே ஜிம்மில் சேர்ந்து தற்போது உடல் எடையை சற்று கூட்டிக் கொண்டாராம். அவ்வளவுதான் மேட்டர். (பார்வையாளர்களை அத்தனை கலங்க வைக்கவில்லை என்பதால் இந்த டாஸ்க்கில் இவர் தோற்றுப் போக வாய்ப்புண்டு)

இன்னொரு கிச்சன் பஞ்சாயத்து. பிக்பாஸ் தந்த ஏதோவொரு அறிவிப்பை ஆரி சீரியஸாக படித்துக் கொண்டிருந்தார். போட்டியாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இது நமக்கு அவுட் ஆஃப் போகஸில்தான் தெரிந்தது. பிக்பாஸ் ஃபோகஸ் செய்தால் அது சண்டை நடக்குமிடம்தானே?

அந்தப் பக்கம் மீட்டிங் நடந்து கொண்டிருந்ததால், கிச்சன் ஏரியாவில், “வெங்காயத்தை படுக்க வெச்சு வெட்டணுமா. நிக்க வெச்சு வெட்டணுமா?” என்று ரேகாவிடம் பேசிக் கொண்டிருந்தார் அனிதா. ‘உஸ்... உஸ்... அமைதியா இரு... அவங்க பேசறது எனக்கு கேட்கலை” என்பது போல் சுரேஷ் சொன்னார் “ஏண்டா கோவாலு.. ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு.. ஏண்டா கைய பிடிச்சு இழுத்தே” கதையாக இது ஆகிப் போனது. சுரேஷின் ஆட்சேபத்தை இடது கையால் உதறிய அனிதா, பேக் பெஞ்ச் மாணவன் மாதிரி மீண்டும் தாழ்ந்த குரலில் ரேகாவிடம் பேச்சைத் தொடர சுரேஷ் காண்டானது தெளிவாகத் தெரிந்தது.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

“உங்களுக்கு வேணுமின்னா அங்க போய் உக்காந்து கேளுங்க.. நான் செய்தி வாசிச்சிட்டேதான் இருப்பேன்... அதுதான் என் தொழில்" என்று அனிதாவும் பதிலுக்கு மல்லுக்கட்டினார். சமயங்களில் இவர் அனிதா சம்பத்தா... இல்லை நாஞ்சில் சம்பத்தா என்று சந்தேகம் வந்து விடுகிறது.

அனிதாவின் எதிர்வினையை வயதில் பெரியவர்களுக்கே உரிய காம்ப்ளெக்ஸோடு கையாண்டார் சுரேஷ். “நீ உருளைக் கிழங்கை ஒண்ணும் வெட்ட வேண்டாம். நானே செஞ்சுக்கறேன்” என்று சில மாமியார்கள் செய்யும் அதே உத்தியை கையாண்டார். தானே அனைத்து வேலைகளையும் முனகிக் கொண்டே வீறாப்பாக செய்து எதிர் தரப்பை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தும் ஆதிகாலத்து டெக்னிக்.

அடங்கிய குரலில் இருவருக்கும் பஞ்சாயத்து தொடர, "இவனுங்க மறுபடியும் ஏழரையைக் கூட்ட ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே.. இப்ப நம்மள வேற கூப்பிடுவாங்களே” என்று தூரத்திலிருந்து கவலையான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ‘கேப்டன்’ ரம்யா. அனிதா உருளைக் கிழங்கை வெட்ட முயல... அதைப் பிடுங்கி தானே வெட்டினார் சுரேஷ். இந்த ரோதனையைப் பார்த்து யாரும் வெட்டாமலேயே தானே தற்கொலை செய்து கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு.

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்று சூடாக சுரேஷ் பேசிக் கொண்டிருக்க, ‘அங்கு என்ன பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது’ என்று தெரியாமலேயே அங்கு வந்த பாலா "நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னா. எருமை மாட்டுக்கு என்ன சூடு... ஹிஹி...?” என்று போகிற போக்கில் ரணமொக்கையான கமெண்ட்டை வீசி விட்டுப் போனார்.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

"அந்தப் பொண்ணுக்கு பெரியவங்களை எதிர்த்து பேசற வியாதி இருக்கு போல. இதுக்கு க்ரெம்னேஷியா உலேட்டான்னு பேரு...” என்று ரேகாவிடம் கோபத்துடன் சொன்னார் சுரேஷ்.

பிறகு ரம்யா எதிர்பார்த்தபடியே "ஏம்மா நீதானே கேப்டன்... இங்க வா” என்றார். "நான் பாட்டுக்கு மொட்டை மாடி போட்டோ ஷீட் நடத்திட்டு இருந்தேன். என் கெரகம்... இங்கு வந்து இந்த சில்லறை பஞ்சாயத்தெல்லாம் செய்ய வேண்டியிருக்கே” என்கிற மைண்ட் வாய்ஸூடன் வந்தார் நாட்டாமை.

நடந்த விஷயத்தை சுரேஷ் பிராதாக ரம்யாவிடம் எழுதிக் கொடுக்க, “ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சு பேசட்டுமா?” என்று ஒரு டிப்பிக்கல் நாட்டாமை கேள்வியை ரம்யா கேட்க, “என்னத்த பஞ்சாயத்து பண்ற நீ... ரெண்டு பேருக்கும்தான் ஆவலைல்ல… நீ அப்புறமா அவங்க கிட்ட பேசு” என்று அதற்கும் சுரேஷ் கட்டையைப் போட, “இனிமே என் வாழ்க்கைல உருளைக்கிழங்கே சாப்பிட மாட்டேன். ஆளை விடுங்கடா சாமி” என்று நொந்து போனார் ரம்யா.

இதற்கு நடுவில் ‘இது ஜெனரேஷன் கேப்' என்று சனம் கொளுத்திப் போட... “ஏம்மா.. நீயும்தானே சின்னப் பொண்ணு.. நாம நல்லாதானே பேசறோம்.. நீ என்ன கிழவியா?” என்று சுரேஷ் எகிற... "இன்னிக்கு மேக்கப் சரியா போடலையோ. என்ன இவரு கிழவியான்றாரு…” என்று சனத்தின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.

இரவு. விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட ஆரம்பிக்க... “ஹேய்... இப்ப பிக்பாஸ் அங்கிள் ஒரு மேஜிக்... காட்டுவார்ல. வாடி... சீக்கிரம் போய்ப் பார்க்கலாம்” என்று கைகோத்துக் கொண்டு கிளம்பினார்கள் ஷிவானியும் ரம்யாவும்... வீட்டின் வெளிப்புறத்தில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படும் காட்சியை, கலங்கரை விளக்கத்தை வேடிக்கை பார்க்கிற மாதிரி ‘ஆவென்று’ இருவரும் வேடிக்கை பார்த்தார்கள். "ஹை.. பார்த்துட்டம்ல”.

"கடவுளே.. இந்த எல்கேஜி பசங்களையா கூட்டிட்டு வந்தோம்” என்று நொந்து போய் பிக்பாஸ் உள்ளே தலையில் அடித்துக் கொண்டிருந்திருப்பார்.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

நாள் 3 விடிந்தது. ‘சில் ப்ரோ’ என்கிற குத்துப்பாடலை பிக்பாஸ் அலற விட, மக்கள் ரகளையாக ஆட ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் மரண ஊர்வலத்திற்கு ஆடுவது போல் நிஷாவும் அனிதாவும் கொலைவெறியுடன் ஆட, “ஏய் கேமரா... என்னைப் பார். என் அழகைப் பார்” என்று தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார் ஷிவானி.

மீண்டும் அழுகாச்சி டாஸ்க். இந்த முறை மாட்டியவர் ‘கடலோரக் கவிதை’.

“எனக்கு சினிமான்னா என்னன்னு தெரியாது. அப்படிப்பட்ட என்னை விதி பாரதிராஜாவிடம் கொண்டு போய் சேர்த்தது. ‘உனக்கு இளையராஜா யாருன்னு தெரியுமா’-ன்னு கேட்டார். ‘தெரியாது’ன்னு சொன்னேன்.. (ராஜா ஆர்மிக்காரவுக காதுல இது விழாம இருக்கணும்).

"என் படங்களைப் பார்த்திருக்கியா”ன்னு கேட்டார். நான் ‘இல்லை’ன்னு சொன்னேன்... ‘அப்ப நீதான் என் படத்து ஹீரோயின்’-ன்னு அட்வான்ஸைக் கொடுத்துட்டார். (என்ன கொடுமைடா இது?!). அதுக்கப்புறம் இளையராஜா இசைல மட்டுமே நாற்பது படங்களுக்கு மேல நடிச்சேன். எனக்கு கிடைச்ச சிறந்த டெக்னிஷயன்ஸ் மூலம்தான் வளர்ந்தேன். சிலந்தி பூச்சி மாதிரி நானேதான் மேலே ஏறி வந்தேன். கமல் சார் தந்த கடலை உருண்டை ரொம்ப நல்லா இருக்கும். இப்ப ஒண்ணு அனுப்புங்க சார்... ஆனா நிஷாவிற்கு கொடுக்காதீங்க... என் பொண்ணுதான் என் குலதெய்வம்!”

“யாரையும் தவறா எடை போடாதீங்க... கீழே இறக்கிப் பேசாதீங்க” என்று உரையின் கடைசி அயிட்டமாக ரேகா உபதேசம் சொல்ல ஆரம்பிக்க அதைக் கேட்டு சபையே விழுந்து விழுந்து சிரித்தது. “அதை நீங்க முதல்ல ஃபாலோ பண்ணுங்க மேடம்" என்பதே அதற்குப் பொருள்.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

“பாலா வேற என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டான்" என்று தன் பேச்சின் இடையே ரேகா ‘மேம்’ சிணுங்கி வைக்க “நான் உங்க பேச்சு பிடிக்கலைன்னுதான் சொன்னேன்... உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லல” என்றார் பாலா. (நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா... இவன் வருங்காலத்துல தமிழ் சினிமால நல்ல வசனகர்த்தாவா வருவான் போல.)

“என்னாதிது... கதை பேசற டாஸ்க்கா இருக்கு. போரடிக்குது” என்று பிறகு ரம்யாவிடம் அலுத்துக் கொண்டார் ஷிவானி. (ஆமாம். பெரிய டாஸ்க் கொடுத்தா... இவர் அப்படியே அறுத்துத் தள்ளிடுவாரு). “ரேகா மேம் இன்னிக்கு தன்னோட கதையை சொன்னாங்கள்ல... பிக்பாஸ் வீட்ல பொட்டியை இறக்கி வெச்சதுல இருந்து அதைத்தான் சொல்லிட்டு இருக்காங்க” என்று ஷிவானி சொல்லி சிரிக்க, “அப்படியா.. செம காமெடி" என்று பின்பாட்டு பாடினார் ரம்யா. பாவம் ரேகா மேம்.. இதைக் கேட்டிருந்தால் ‘அடப்பாதகத்திங்களா…' என்று மேக்கப் கலைய அழுதிருப்பார்.

அழுகாச்சி டாஸ்க்கில் அடுத்த ஒப்பாரியை வைக்க வந்தவர் சம்யுக்தா. “நான் மாடல்தான். ஆனா என்னை ‘சூப்பர் மாடல்’னு சொல்லிக்க மாட்டேன்” என்று ஆரம்பத்திலேயே திரியைக் கொளுத்தினார். (இது யாருக்கு? யாருக்கோ...)

“மத்த பொண்ணுங்களுக்கெல்லாம் வெளிலதான் தடைகள் இருக்கும். ஆனா எனக்கு வீட்டுக்குள்ளேயே இருந்தது. எங்க அப்பா ரொம்ப கோபக்காரர்... ஆனா நல்லவர். நான் மாடலிங் பண்றது அவருக்குப் பிடிக்கலை. எனவே அவருக்குத் தெரியாமதான் பண்ணேன். லவ் மேரேஜ் ஆச்சு. ஹஸ்பண்ட் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கவே மாட்டார். ஒரு முறை என் குழந்தைக்கு மூச்சு விடறதில சிரமம் இருந்துச்சு... மத்தவங்க யாரும் இதை நம்பலை. அப்புறம் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனா. அவன் ஒரு கேரட் துண்டை விழுங்கிட்டான். அது லங்க்ஸ் போய் மாட்டி பிரச்னையாயிடுச்சு” என்று நிஷாவின் பாணியில் எதையோ சொல்ல முயன்றவர்...

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

பிறகு தொடர்பேயில்லாமல், “ஜீன்ஸ் போட்டாலும் ஒரு பொண்ணு... பொண்ணுதான். பீன்ஸ் வெட்டினாலும் ஒரு பொண்ணு... பொண்ணுதான்" என்கிற அரிய செய்தியைச் சொல்லி புறப்பட்டார்.

காட்சி மாற்றம். ‘பப்பரப்பே’ என்று படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் சொன்னாலும் சுரேஷ் சொன்னது ஒரு நல்ல மெசேஜ். இவர் சம்யுக்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“உன் பையனுக்கு ஒன்றரை வயசு வரைக்கும் தாய்ப்பால் கொடுத்தேன்னு சொன்னது நல்ல விஷயம். இப்பத்தி பொண்ணுங்க... யார் இதைச் செய்யறாங்க... அழகு போயிடும்னு நெனக்கறாங்க... மாடல்–னா இப்படித்தான் இருப்பாங்கன்னு ஊரு நெனக்குது... ஆனா உனக்குள்ள ஒரு நல்ல தாய் இருக்கா” என்று சொல்லி வெங்காயம் வெட்டாமலேயே சம்யுக்தாவைக் கலங்க வைத்தார் சுரேஷ்.

அடுத்து அழ வைக்க வந்தவர் ஆரி. தெளிவாகவும் நம்பிக்கையாகவும் பேசினாலும் சில இடங்களில தன்னிச்சையாக கலங்கினார்.

“என் ஊரு பழனி. அப்பா ஹோட்டல் பிஸ்னெஸ். கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் மத்த பசங்க நல்லாப் படிச்சாங்க. ஆனா... மெட்ரிகுலேஷன்ல படிச்சாலும் நான் சரியாப் படிக்கலை. (இதுல ஒரு மெசேஜ் இருக்கு). என் நச்சரிப்பு தாங்காம நகையை வித்து பத்தாயிரம் பணத்தை தந்த அப்பா ‘இனி உன் வாழ்க்கை உன் கையில்’ன்னு சொல்லிட்டாரு.

சென்னைக்கு வந்தவுடனேயே “ஆடும் கூத்து’–ன்ற படத்துல ஹீரோ சான்ஸ் கிடைச்சது. நல்ல படம். அவார்டுல்லாம் வாங்கிச்சு... ஆனா தியேட்டருக்கு வரலை. அதுக்குள்ள அப்பா இறந்துட்டாரு. எங்க அம்மாவோட தியாகத்துலதான் வளர்ந்தேன். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படம் மூலமாகத்தான் என் காதல் மனைவியை அடையாளம் கண்டு கொண்டேன்.”

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

“இதுக்கு நடுவுல பார்க்கின்சன் நோய் வந்து தலை குப்புற கீழே விழுந்து எங்க அம்மா இறந்துட்டாங்க. கடைசி நாள் ஷூட்டிங்ல இருந்தேன். ‘கிளம்புங்க’ன்னு தயாரிப்பாளர் சொன்னாலும் 'என்னால படத்துக்கு நஷ்டம் வரக்கூடாது’ன்னு அதை முடிச்ச பிறகுதான் கிளம்பினேன். கடனையெல்லாம் திருப்பித் தந்த பிறகுதான் கல்யாணம்-ன்றதுல உறுதியா இருந்தேன்.”

“மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் ஆபத்து பற்றி நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்தேன். கின்னஸ் சாதனை விருதுகூட கிடைச்சது. என் கரியர்ல என்னை அதிர்ஷ்டமில்லாதவங்கன்னு சொல்லியிருக்காங்க. ஒரு நடிகனா நான் தோத்துப் போயிருக்கலாம். ஆனால ஒரு சாதாரண மனுஷனா நான் ஜெயிச்சிருக்கேன்!”

பிக்பாஸ் வாய்ப்பு ஏற்கெனவே வந்தது. ஆனா இந்த நிகழ்ச்சி பற்றி அப்போ எனக்கு சரியா தெரியல. இந்த நிகழ்ச்சி மூலமா என் வருங்காலத்திற்கான வெளிச்சம் கிடைக்கும்னு நம்பறேன்... உங்களுக்கும் கூட சொல்றேன். இது ஒரு பொன்னான வாய்ப்பு. இது கிடைக்காம லட்சம் பேரு வெளில இருக்காங்க. சிறப்பா விளையாடுங்க. நேர்மையா விளையாடுங்க” என்று சொல்லி கைத்தட்டல்களைப் பெற்றார் ஆரி.

தனது பேச்சின் இடையே ஆரி சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. சினிமா வம்புகள் எழுதும் ஊடகத் துறையினர் கவனிக்க வேண்டியது.

“என்னால நஷ்டம் வரக்கூடாதுன்னு சூட்டிங் முடிச்சிட்டுதான் எங்க அம்மா செத்தததுக்கு கிளம்பினேன். ஆனால் ‘தாயின் மரணத்தில் வளர்ச்சியைத் தேடும் நடிகர்’ன்னு ஒருத்தர் எழுதினார்... மனது ரொம்ப வலித்தது” என்றார் ஆரி.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

அடுத்து வந்தவர் ரியோ, “நான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன். சாதாரண குடும்பம். நார்மலான ஸ்கூல்லதான் படிச்சேன். ‘யார் கிட்டயும் கடன் வாங்கக்கூடாது’ன்றதுதான் எங்க அம்மாவோட பாலிசி. ‘நானே சம்பாதிச்சாதான் தொடர்ந்து படிக்க முடியும்ன்ற நிலைமை. பார்ட் டைம் வேலை செஞ்சிட்டே படிச்சேன். ரொம்ப கஷ்டமான காலகட்டம் அது. அப்புறம் கம்ப்யூட்டர் சர்வீ’ஸ் வேலை பண்ணேன். சிறப்பா செஞ்சி கம்பெனி மாறினேன். 'உன் இடம் இது இல்லப்பா’ன்னு சில நல்ல நண்பர்கள் அட்வைஸ் பண்ணாங்க... கோயம்புத்தூர்ல ஒரு லோக்கல் சேனல்ல நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தேன்.”

அப்புறம் விஜய் டிவி ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். பெரிய சீரியல்ல நடிச்சேன். ஒரு முறை நடுத்தெருவுல நிக்கற சூழல். அந்த சேனலோட வாசல்ல (அது எந்த சேனல்?!) போய் காத்துக்கிட்டு இருப்பேன். அப்ப தற்செயலா ஒரு வாய்ப்பு. ஒரு நிகழ்ச்சியோட தொகுப்பாளர் வரலை. ‘நம்மளுக்கு எங்க கிடைக்கப் போகுதுன்னு’ கன்னா பின்னா–ன்னு அதைப் பண்ணோம். ஆனா அது கிளிக் ஆயிடுச்சு.. நான் தொகுப்பாளரா மாறிட்டேன்” (தமிழ்நாட்டு ஜனங்களுக்கு ‘கன்னா பின்னா’ன்னு செஞ்சாதான் பிடிக்கும்).

“உங்களை நல்லா தகுதிப்படுத்திக்கங்க... காத்திருங்க... கரெக்ட்டான நேரத்துல களத்துல இறங்குங்க. இதுதான் சமூகத்திற்கு நான் சொல்ற செய்தி” என்று புன்னகையோடு இறங்கினார் ரியோ. (இவர் பிக்பாஸில் கடைசி வரைக்கும் தாக்குப் பிடிப்பார் என்று தோன்றுகிறது).

மறுபடியும் கிச்சன் ஏரியா. வாஸ்து சரியில்லாத இடம் போல. எனவே மறுபடியும் பஞ்சாயத்து. “இங்க பாருங்க.. காய்கறில்லாம் வெட்டிட்டு அப்படியே விட்டுட்டு போயிருக்காங்க... அங்க பாருங்க.. சரியா துடைக்கலை... இப்ப எனக்கு உருளைக்கிழங்கு வேணும்... (அய்யோ... கருமம்... அந்த உருளைக்கிழங்கு). என்னால கீழே குனிய முடியாது. உடம்பு சரியில்ல தூக்கமில்ல” என்று ‘எனக்கென யாரும் இல்லையே.. உனக்கது தோன்றவில்லையே’ என்று பாடாத குறையாக கேப்டனிடம் அனத்தி பஞ்சாயத்து வைத்தார் சுரேஷ்.

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

“அப்ப அவங்களை கூப்பிடட்டுமா...” என்று ரம்யா கேட்க.. “ம்ஹும். கூப்பிடாதீங்கம்மா... எதுக்குப் பிரச்னை. என் தலைதான் உருளும்” என்று சுரேஷ் அதற்கும் கட்டையைப் போட "வாதி, பிரதிவாதி இல்லாம நான் எப்படி நாட்டாமை பண்றது... என்ன இழவுடா இது” என்று நொந்து கொண்டார் ரம்யா.

பிறகு கிச்சன் டீமைச் சேர்ந்த ரேகா ‘மேம்’ மற்றும் அனிதாவை ரம்யா கூப்பிட இருவரும் ஆடி அசைந்து வந்தார்கள். ‘பஞ்சாயத்துடோவ்.. வாங்கடோவ்' என்று வேறு சிலரும் இணைந்து கொண்டார்கள். “இப்ப எதை வெட்டணும்... சொல்லுங்க..” என்று கறிகடையில் வேலை செய்பவர் போல உரத்த குரலில் அலுத்துக் கொண்டே வந்தார் பாலா.

எவர் பேசினாலும் அவர்களை இடைமறித்து, "யம்மா... நான் என்ன சொல்றன்னா..” என்று ஆரம்பித்து மூன்று எபிஸோடுகள் பேசுகிறார் சுரேஷ். ‘கல்கி’ என்கிற திரைப்படத்தில் தன் மனைவி எதைச் சொன்னாலும் இடக்கு மடக்காக... “நடுவுல என்னமோ சொன்னியே. என்னது அது... நடுவுல. நடுவுல" என்று இம்சை தருவார் பிரகாஷ்ராஜ். சுரேஷ் தரப்பில் நியாயம் இருந்தாலும் அவர் விஷயங்களைக் கையாள்வது இப்படித்தான் அவரை ‘இம்சை அரசனாக’ காட்டுகிறது.

(சுரேஷ் என்கிற பெயர் இருந்தாலே.. அவர்கள் பெரும்பாலும் இம்சைவாதிகளாகத்தான் இருப்பார்கள். உதாரணத்திற்கு, 'நீங்கள் எழுதும் கட்டுரை’ என்கிறார் என் நண்பரொருவர்).

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3

இதற்கு நடுவில், “கிச்சன் டீம்ல போட்டி போட்டிக்கிட்டுத்தான் செய்யறாங்க... ஆனா...” என்று சுரேஷ் கொடுத்த சான்றிதழை தவறாகப் புரிந்து கொண்ட சனம், "இதுல போட்டி என்ன இருக்கு?” என்று பஞ்சாயத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கூட்டி சுவாரஸ்யமாக்கினார். பிறகு 'போட்டி’ என்ற வார்த்தைக்கு அவரவர்களின் டிக்ஷனரியைப் புரட்டி ஆளாளுக்கு ஒரு விளக்கம் சொல்லி ஏழரையின் சூட்டை ரணகளமாக கிளப்பினார்கள்.

“நாங்க சின்ஸியராத்தான் வேலை செய்யறோம்” என்பது போல் பின்பெஞ்ச் ஸ்டூடண்ட் ‘அனிதா’ முணுமுணுத்த குரலில் சொல்ல இன்னமும் காண்டான ‘சுரேஷ்’ அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினார். (ரிசர்வ் வேலையை ரிசைன் பண்ணிட்டு போறார்ரோவ்... இவரு!).

பிக்பாஸ் - நாள் 3
பிக்பாஸ் - நாள் 3
சுரேஷ் தண்ணி குடிக்கப் போனாரா, அல்லது பஞ்சாயத்திலிருந்து விலகினாரா அல்லது திரும்பி வந்து உற்சாகத்துடன் பஞ்சாயத்தைத் தொடர்ந்தாரா என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை அறிந்து கொள்ள நாளை வரை காத்திருப்போம்.