Published:Updated:

`வெற்றிபெறவேண்டும் என்கிற எண்ணத்தோடு இங்கு வரக் கூடாது!’ #WorldOfDance

இது முழுக்க முழுக்க நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நிகழ்ச்சி. நடனத்தை முழு மூச்சாய் நினைக்கும் நபர்களுக்கு மட்டுமே இதில் இடம் உண்டு.

The Kings team, India
The Kings team, India

2008-ம் ஆண்டு, தெற்கு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட World of Dance (WOD) எனும் நடனம் மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர், தற்போது உலகளவில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நடன பொழுதுபோக்கு நிறுவனமான இந்த WOD, கிராமம் மற்றும் நகர்ப்புற நடனக் கலைஞர்களின் திறமையை உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. 2017-ல் 'வேர்ல்டு ஆப் டான்ஸ் டிஜிட்டல் லேப்' என்று நடனத்திற்கென பிரத்யேகமான ஆய்வகக் கூடம் ஒன்றையும் முதல் முதலாக இந்நிறுவனம் திறந்தது.

2017-ம் ஆண்டு, பிரபல அமெரிக்கப் பாடகி ஜெனிஃபர் லோபெஸ் இந்த நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இணைய,10 பகுதிகள் கொண்ட மாபெரும் நடனப் போட்டி நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.

இதில், உலகளவிலிருந்து ஏராளமான நடனக் கலைஞர்கள் பங்குபெற்றனர். அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று வரை மொத்தம் மூன்று சீஸன்கள் நிறைவடைந்திருக்கின்றன. இப்போட்டியின் நடுவர்களாக ஜெனிஃபர் லோபஸ், Ne -Yo மற்றும் டெரெக் ஹாக் செயல்பட்டு வருகிறார்கள். மூன்றாம் சீஸனின் வெற்றியாளர்கள் இந்தியாவைச் சேர்ந்த 'The Kings' குழு. தற்போது நான்காவது சீஸனுக்கான ஆடிஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும், இந்நிகழ்ச்சியின் இந்திய ஒருங்கிணைப்பாளர் நடாஷாவிடம் உரையாடினோம்.

"WOD-ல் மொத்தம் எத்தனை சுற்றுகள் உள்ளன?"

Jenifer Lopez
Jenifer Lopez

"இதில், உலகளவில் 25 நாடுகளிலிருந்து நடனக் கலைஞர்கள் பங்குபெறுவார்கள். அதன் முதல் கட்டத் தேர்வு, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும். ஆன்லைன் போர்ட்டலில் நடனக் கலைஞர்கள் பதிவு செய்யும் காணொலியிலிருந்து, திறமையானவர்கள் தகுதி போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தகுதிப் போட்டியில் எண்பது மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் குழு, அமெரிக்காவில் நடைபெறும் தகுதிப் போட்டிக்குச் செல்வார்கள்.

இதைத் தொடர்ந்து, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும். இந்த அனைத்துப் படிகளையும் கடந்து, வெற்றிபெறும் குழுவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். ஜூனியர், சீனியர், சோலோ என்று இதில் மூன்று கேட்டகிரி உள்ளன. உலகளவிலிருந்து பல நடுவர்கள் இதில் கலந்துகொண்டு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து காலிறுதிப் போட்டிக்கு அனுப்புவார்கள்."

"இந்தியாவில் எந்தெந்த இடங்களில் இந்தாண்டின் தகுதித் தேர்வு நடைபெறுகிறது?"

World of Dance
World of Dance

"சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொச்சின் மற்றும் கொல்கத்தா அல்லது கோவா ஆகிய நகரங்களில் இதன் முதல்கட்ட தகுதித் தேர்வு நடைபெறவிருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் இதன் அனைத்து முதற்கட்ட போட்டிகளும் நடைபெறும். சென்ற ஆண்டு சென்னையிலிருந்து ஒரு குழு இந்தத் தகுதிப் போட்டியில் வெற்றிபெற்றது. அவர்களுக்காக, தமிழ்நாடு அரசு 35 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தது. அவர்களால் இறுதிவரை செல்லமுடியவில்லை. ஆனால், கடந்த சீசனில் இந்தியாவைச் சேர்ந்த 'The Kings' குழுதான் வெற்றிபெற்றது. அவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெற்றிபெற்றதோடு, தற்போது அவர்களின் வெற்றிப்பயணத்தை திரைப்படமாக்கும் முயற்சியிலும் சில இயக்குநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்"

"ரியாலிட்டி ஷோ என்றாலே ஏமாற்றுவேலை என்கிற பிம்பம் இருக்கிறது. தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற போட்டிகளில் முன்னுரிமை உண்டு. திறமைக்கு அல்ல என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்து. அந்த வகையில் WOD எப்படிச் செயல்பட்டு வருகிறது?"

"WOD-ல் கலந்துகொள்ள போகிறவர்கள் யார் என்ற தகவல் அங்கிருக்கும் யாருக்குமே தெரியாது. சென்னை போட்டியின் நடுவர், மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளாமல்கூட போகலாம். மும்பை நடுவர்கள் சென்னை போட்டிக்கு வந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படி நிர்ணயமற்ற திறமையான நடுவர்கள்தான் இந்தப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, இதில் பாரபட்சம் பார்ப்பதற்கு இடமேயில்லை. மேலும், வேற்றுமொழி நடுவர்கள்தான் இந்த நிகழ்ச்சியில் அதிகம் என்றாலும், நடன மொழிதான் இங்கு சத்தமாகப் பேசும்!"

"இந்நிகழ்ச்சியின் கோட்பாடுகள் என்னென்ன?"

வைரலாகும் ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ!

"இதில் கலந்துகொள்பவர்கள் யாரும் வெற்றிபெறவேண்டும் என்கிற எண்ணத்தோடு வரக்கூடாது என்பதுதான் இந்த ஷோவின் ரூல். இது முழுக்க முழுக்க நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நிகழ்ச்சி. எனவே, நடனத்தை முழு மூச்சாய் நினைக்கும் நபர்களுக்கு மட்டுமே இதில் இடமுண்டு!"