Published:Updated:

மகேஷ் பாபு ஃப்ரெண்ட்ஷிப்; தேவயானி கூட சண்டை! - `கோலங்கள்’ வில்லன் அஜய் கபூர் ஷேரிங்ஸ் 

அஜய் கபூர்
அஜய் கபூர்

''கோலங்கள் சீரியல் ஷூட் பண்ண ஒருமுறை திருச்சி போனோம். அங்க ஒரு 10 பெண்கள் என்னை அடிக்க வந்துட்டாங்க''

கோலங்கள் என்ற சின்னத்திரை நெடுந்தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி சாதனையும் படைத்தது. விகடன் யூ டியூப் சேனலில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் மீண்டும் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இன்றும் அந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் வந்த அபி, தொல்காப்பியன், உஷா, ஆதி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டன. கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடி, 1533 எபிஸோடுகளுடன் நிறைவடைந்தது. இந்த சாதனையை தற்போது வள்ளி சீரியல் முறியடித்துள்ளது. 1910 எபிஸோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோலங்கள் சீரியல் காட்சி
கோலங்கள் சீரியல் காட்சி

கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டரில் நடித்து சீரியல் வில்லன்கள் இப்படியும் இருக்கலாம் என்று புதிய இலக்கணம் எழுதிய அஜய் கபூர் தற்போது வள்ளி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இரண்டு ஹிட் சீரியல்களில் நடித்த அனுபவத்தைக் குறித்து அஜய் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

சீரியல் எண்ட்ரி பற்றிச் சொல்லுங்க?

``நான் பிறந்தது டெல்லி. வளர்ந்தது ஹைதராபாத். நான் பாலிவுட்டில்தான் முதன்முதலா என் திரைப்பயணத்தைத் தொடங்கினேன். இந்திப் படங்கள் மற்றும் சீரியல்கள் பண்ணிட்டு இருந்தேன். நான் பஞ்சாபியா இருந்தாலும் சென்னைதான் என் சொந்த ஊரென்று சொல்லுவேன். என் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்தது கோலங்கள் சீரியல்தான். அதன்பிறகு முழுக்க முழுக்க தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். கோலங்கள் சீரியல் முடிஞ்சி பல வருஷங்கள் ஆனாலும் மக்கள் இன்னமும் என்னைப் பார்த்து ஆதின்னுதான் சொல்றாங்க. இந்த அடையாளம் என்னோட வாழ்நாள் வெற்றியா பார்க்குறேன். இப்படி என் லைஃப் மாறும்னு நான் எதிர்பார்க்கல. இப்போ சன் டிவியில் வள்ளி சீரியல்ல லீட் ரோலில் நடிச்சிட்டு இருக்கேன். அதுவும் ஹிட் சீரியல்தான். ரெண்டு ஹிட் சீரியல்ல நானும் பகுதியா இருக்கிறது ஹேப்பியா இருக்கு.

அஜய் கபூர்
அஜய் கபூர்

மறக்க முடியாத நிகழ்வு?

கோலங்கள் சீரியல் ஷூட் பண்ணப்போ ஒருமுறை திருச்சி போனோம். அங்க ஒரு 10 பெண்கள் என்னை அடிக்க வந்துட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன் இவங்க இப்படி நடந்துக்கிறாங்கன்னு பதறிட்டேன். `எங்க பொண்ண ஏன் இப்படி கொடுமைப்படுத்துற’-ன்னு சொல்லி துரத்தினாங்க. அப்புறம்தான் புரிஞ்சிது இவங்க கோலங்கள் சீரியல் அபி, ஆதி பத்தி பேசுறாங்கன்னு. தேவயானியை அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டாங்க. அந்த அளவுக்கு கோலங்கள் மக்கள் மனசுல இடம்பிடிச்சிடுச்சு.

கோலங்கள் சீரியலில் ஒரு மறக்க முடியாத காட்சி இருக்கு. அபியோட எல்லா சொத்துகளையும் பறிச்சி, இந்த ஆபீஸ்ல இனி நீ இருக்கக் கூடாதுன்னு நான் துரத்திடுவேன். அந்தக் காட்சி ரொம்ப முக்கியமான காட்சி. 15 நிமிஷம் அபிக்கும் ஆதிக்கும் உரையாடல் நடக்கும். அந்தக் காட்சி ஷூட் பண்ணி முடிச்ச பிறகு ஒரு ரெண்டு நாள் என்கிட்ட தேவயானி மேடம் பேசவேயில்ல. தினமும் ரொம்ப நல்லா பேசுறவங்க, ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்குறாங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. தினமும் வா அஜய் சாப்பிடலாம்னு கூப்பிடுவாங்க. ஆனா அன்னைக்கு தனியா உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க. நான் திருசெல்வம் சார்கிட்ட இத பத்திச் சொன்னேன். மேடம்க்கு ஏதோ பெர்சனல் பிரச்னை போல, என்கிட்ட கூட சரியா பேசமாட்றாங்கன்னு சொன்னேன். நான் எந்தத் தப்புமே பண்ணலையேன்னு புலம்பினேன். அவர் சிரிச்சிட்டு, ``அஜய் உங்களுக்கு விஷயமே தெரியாதா.. அபி சொத்துகளை பறிச்ச மாதிரி ஒரு சீன் பண்ணீங்கல, மேடம் அந்த ஷூட் முடிஞ்சதுல இருந்து உங்க மேல ரொம்ப கோபவத்துல இருக்காங்க’’ அப்படின்னு சொன்னார்.

கோலங்கள்
கோலங்கள்

எனக்கு சிரிக்குறதா அழுறதா தெரியல. நான் உடனே அவங்கள சந்திச்சு, ``மேடம் நீங்க என் மேலக் கோபப்படக் கூடாது. இயக்குநர் மேலதான் கோபப்படணும் . திருச்செல்வம் சார் நடிக்கச் சொன்னதா நான் நடிச்சேன்.’’ அப்படின்னு சொன்னேன். அப்பயும் அவங்க சமாதானம் ஆகாம, ``இல்ல அஜய் நீ என்னை ரொம்ப புண்படுத்திட்ட’’ அப்படின்னு சொன்னாங்க. நான் அப்படியே அவங்க கால்ல விழுந்துட்டேன். என்ன மேடம் இப்படி பண்றீங்கன்னு. உடனே அவங்க சிரிச்சிட்டாங்க. அப்புறம் என்னை ஹக் பண்ணி நீ என் தம்பி மாதிரி.. சூப்பரா நடிச்ச. உண்மையாவே எனக்கு கோபம் வர அளவுக்கு நடிச்ச’’ அப்படின்னு பாராட்டினாங்க. என் லைஃப்ல அந்தப் பாராட்டையும் கோபத்தையும் மறக்கவே முடியாது. ஒருவாட்டி திருச்செல்வம் சார் போன் பண்ணி அஜய் கோலங்கள் பார்ட் 2 பண்ணணும்னு ஆசையா இருக்கு. அப்படி பண்ணா உன்னோட ரோல் இன்னும் ஸ்ட்ராங்க இருக்கும். நான் உடனே நீங்க எப்போ ஸ்டார்ட் பண்றீங்க சொல்லுங்க. எல்லாத்தையும் விட்டுட்டு வந்திட்றேன்னு சொன்னேன். கோலங்கள் பார்ட்2 வரணும். அப்படி வந்தா வேற லெவலா இருக்கும். அப்படி ஒண்ணு நடந்தா என் வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அங்க நடிக்கப் போய்டுவேன்.

ட்ரீம் ரோல்?

எனக்கு ரஜினி சார் பாட்ஷா படம் மாதிரி ஒரு செம கேரக்டர் பண்ணணும்னு ஆசை. அந்த ரோல் கிளாஸ் அண்ட் மாஸா இருக்கும். அதுதான் என் லைஃப்டைம் ட்ரீம் ரோல். `ரகுவரன் சார் கதாபாத்திரமும் என் ஃபேவரைட்.

அஜய் கபூர்
அஜய் கபூர்

ஃபிட்னஸ் சீக்ரெட்?

நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். நாம ரொம்ப மாசு நிறைந்த ஒரு உலகத்துல வாழுறோம். எல்லாப் பொருள்களிலும் ரசாயனம் கலக்குறாங்க. நான் ரொம்ப ஹெல்த் கான்சியஸ் உள்ள ஆளு. மலர், பழங்கள், இலைகள் போன்ற இயற்கைப் பொருள்களிலேயே நிறையா உடல் பிரச்னைகளை சரி செய்ய முடியும். அதற்கான படிப்பைதான் இரண்டு வருடம் படிச்சேன். மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க. நானும் என் மனைவியும் சேர்ந்து முழுக்க முழுக்க மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை மக்கள் மத்தியில் சேர்க்குறோம். ஃபிட்னஸ் சென்டரும் நடத்துறோம். தினமும் ஒரு ஒரு மணி நேரமாச்சு கண்டிப்பா உடற்பயிற்சி செய்யணும். இயற்கை உணவுகள் நிறையா சாப்பிடணும். நடிப்பைத் தாண்டி எனக்கு பிடிச்ச ஒரு விஷயம் இதுதான்.

ஆதியும் அந்தமும் படத்துக்குப் பிறகு ஏன் நீங்க சினிமாவில் தொடர்ந்து நடிக்கல?

அந்தப் படம் நான் சொந்தமா தயாரிச்சது. அதனால நிறையா பணக் கஷ்டம். மனக் கஷ்டம். படம் நல்லா போகல. அந்த நஷ்டத்துல இருந்து வெளியே வர ரொம்பக் காலம் எடுத்துச்சு. அது எனக்கு ஒரு பாடம். கண்டிப்பா இன்னும் இரண்டு வருஷத்துல புது படங்கள் எடுப்பேன். நான் ஸ்கிரீன் பிளே எழுத்தாளர் மகன். அப்பா மாதிரியே நானும் எழுதுவேன். நிறைய கதைகள் என் மனசுல வெச்சிருக்கேன். என்னைக்காச்சும் ஒரு நாள் கண்டிப்பா சாதிப்பேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு என் சிறுவயது நண்பன். நான் அவரிடம்தான் எல்லாத்தையும் பகிர்ந்துப்பேன். அவரும் நானும் சேர்ந்து நிறையா ப்ராஜக்ட் பத்தி பிளான் பண்ணியிருக்கோம். எல்லாமே ஃபியூச்சர்ல சக்சஸ் ஆகும்னு நம்புறேன்.

அடுத்த கட்டுரைக்கு