சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “ஆடிஷன் கூப்பிட்டதும் அதிர்ச்சியடைந்தேன்!”

அபிஷேக்
பிரீமியம் ஸ்டோரி
News
அபிஷேக்

‘சினிமா, டிவியில இவ்ளோ வருஷம் இருந்தவனை ஆடிஷன்னு கூப்பிடுறாங்களே’ன்னு ஒரு நிமிஷம் என்னவோ மாதிரி இருந்தது

நூறாவது எபிசோடைக் கடந்துள்ளது ‘புதுப்புது அர்த்தங்கள்.’ ‘‘தேவயானி, அபிஷேக் என்றாலே சீரியல் ரசிகர்கள் நினைவுக்கு வருவது ‘கோலங்கள்’தானே’’ என்றேன் அபிஷேக்கிடம்.

‘‘என்னை ‘மோகமுள்’ அடையாளம் காட்டி சரியா 25 வருஷம் முடிஞ்சிருக்கு. அந்தப்படம் எனக்கு நல்ல பெயரைத் தந்தது. இன்னைக்கு வரைக்கும் சினிமாவுல இருக்கேன். ஆனாலும் அதிகமான மக்கள் மத்தியில நான் ரீச் ஆனது ‘கோலங்க’ளுக்குப் பிறகுதான். அதனால அந்த சீரியல் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்.

அந்த சீரியலுக்குப் பிறகு நானா டிவியில இருந்து ஒதுங்கணும்னு நினைக்கலை. சூழல் அப்படி இருந்தது. இந்த நிலையிலதான் இயக்குநர் பிரியன் ‘புதுப்புது அர்த்தங்க’ளுக்குக் கேட்டார். (புதுப்புது அர்த்தங்களை ஆரம்பத்தில் இயக்கியவர்) பிரியனுக்கும் எனக்கும் நல்ல பந்தம் உண்டு. அவர் இயக்குநரா அறிமுகமான ‘தீர்க்க சுமங்கலி’ தொடர்ல நான் ஹீரோ. அதேபோல அவர் சீரியல் தயாரிப்பாளரா உயர்ந்து ‘மகராசி’ சீரியலை இயக்கினார். அதிலும் நான்தான் ஹீரோ.

விகடன் TV: “ஆடிஷன் கூப்பிட்டதும் அதிர்ச்சியடைந்தேன்!”

அதனால இப்ப, `ரீ என்ட்ரியும் அவர் மூலம் வரட்டும்’னு நினைச்சு சம்மதிச்சேன். ஓகே சொன்ன உடனே அடுத்த சர்ப்ரைஸா ‘தேவயானி மேடம் நடிக்கிறாங்க’ன்னு சொல்றார். ‘எனக்கு ரொம்பப் பிடிச்ச கோ ஆக்டர்’னு என்னைக் குறிப்பிட்டவங்க தேவயானி. அப்புறமென்ன, கண்ணை மூடிகிட்டு கமிட் ஆகிட்டேன்’’ என்றவர், ‘‘ஆனா அதுக்குப் பிறகுதான் எனக்கொரு ஷாக் காத்திருந்தது’’ என அந்த அனுபவத்தையும் விவரித்தார்...

‘‘வேற ஒண்ணுமில்லீங்க, ‘ஆடிஷன் வந்தா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. ‘சினிமா, டிவியில இவ்ளோ வருஷம் இருந்தவனை ஆடிஷன்னு கூப்பிடுறாங்களே’ன்னு ஒரு நிமிஷம் என்னவோ மாதிரி இருந்தது. ‘லுக் அண்ட் ஃபீல் பார்க்கணும். ஏன்னா, இது நீங்க இதுக்கு முன்னாடி பண்ணின கேரக்டர்கள் மாதிரி இருக்காது’ன்னு சொன்னாங்க. யோசிச்சுப் பார்த்ததுல நியாயமிருக்கற மாதிரி தெரிஞ்சது’’ என்கிறார்.

‘தொடர்ந்து சீரியல்களில் நடிப்பீர்களா?’ எனக் கேட்டேன்.

‘‘நேரம் இருக்குமான்னு தெரியலை. ஏன்னா இப்ப ‘அடங்காதே’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்குத் தயாரா இருக்கு. இன்னொரு பக்கம் ‘ஃபேமிலி மேன் 2’க்குப் பிறகு வெப்சீரிஸ் வாய்ப்புகளும் வருது. சரத்குமார் சாருக்கு வில்லனா ஒரு வெப் சீரிஸ்ல கமிட் ஆகியிருக்கேன். அதனால மாசத்துல 7 நாள் வரையே சீரியலுக்கு ஒதுக்க முடியுது. அதுவும் கார், வீட்டுக்குன்னு வாங்கின கடனுக்குத் தவணை கட்டணுமில்லையா, அந்த சர்வைவலுக்கு டிவிதான் கைகொடுக்குது’’ என்கிறார்.