Published:Updated:

ஜூனியர் பிக்பாஸ் அனிதா; ஆரி, பாலாஜி எனும் நரிகள்; வெளியேற்றப்படுவாரா அர்ச்சனா? பிக்பாஸ் – நாள் 76

பிக்பாஸ் – நாள் 76

“கோழியா இருந்த போது ஆரி பாதிக்கப்பட்டார்... ஆனா நரியா மாறிய போது அவரும் கூட்டத்துல சேந்துட்டார்" என்றார் ரியோ. "சரி. நரியோட பார்வைல இருந்து இதைப் பார்க்கலாம்" என்ற கமல் ‘ஹேராம்’ வசனத்தை உதாரணம் காட்டியது கனகச்சிதம். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 76

Published:Updated:

ஜூனியர் பிக்பாஸ் அனிதா; ஆரி, பாலாஜி எனும் நரிகள்; வெளியேற்றப்படுவாரா அர்ச்சனா? பிக்பாஸ் – நாள் 76

“கோழியா இருந்த போது ஆரி பாதிக்கப்பட்டார்... ஆனா நரியா மாறிய போது அவரும் கூட்டத்துல சேந்துட்டார்" என்றார் ரியோ. "சரி. நரியோட பார்வைல இருந்து இதைப் பார்க்கலாம்" என்ற கமல் ‘ஹேராம்’ வசனத்தை உதாரணம் காட்டியது கனகச்சிதம். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 76

பிக்பாஸ் – நாள் 76

இந்த வாரக் கட்டுரைகளில் நான் எழுதிய சில விஷயங்கள் இன்றைய விசாரணை நாளில் அப்படியே நடந்தேறின. கோழி டாஸ்க்கை கமல் மெல்ல விசாரிப்பதற்குள் ‘சேவல் கூவி பொழுது விடிந்து விடும்’ என்று சொல்லியிருந்தேன். நூல்கண்டின் சிக்கை அவிழ்ப்பது போல் கமல் ஒவ்வொன்றாக சிக்கெடுப்பதற்குள் நமக்குத்தான் பொறுமை போயிற்று.

கோழி டாஸ்க்கில் போட்டியாளர்கள் விதிமுறைகளை கன்னாபின்னாவென்று மீறிக் கொண்டிருந்தாலும் ரியோ மட்டும் அடக்கியே வாசித்தார். கமல் விசாரணையில் தாம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். இது பற்றியும் முன்னர் எழுதியிருந்தேன். இந்த டாஸ்க்கைப் பொறுத்தவரை ரியோவின் நேர்மை சிறப்பானது என்ற நேற்று கமல் பாராட்டி விட்டார்.

களத்தில் ஒரு நரி ஒரு கோழி இருந்தால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றும் எழுதியிருந்தேன். இன்னமும் கேட்டால் ஒருவகையில் விதிமுறையும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது. போட்டியாளர்கள் அதை செளகரியமாக மறந்து விட்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76
ஆனால், இதற்காக வீடே ஆரியை ஒட்டுமொத்தமாக வில்லன் போல பார்ப்பது முறையற்றது. ''ஒருவர் ஒருவராக விளையாடலாம்'’ என்பதை துவக்கத்திலிருந்தே ஆரியும் பாலாஜியும் வற்புறுத்தினார்கள். ஆனால் ‘நரின்னா கூட்டமாத்தானே வரும்’ என்ற லாஜிக்கை சொல்லி ஆட்டத்தின் போக்கை முதலில் மாற்றியவர் அர்ச்சனா. இதைப் போலவே கோழிதான் நரிகளுடன் ஒப்பந்தம் போட முடியும். நரிகளுக்கு உள்ளாகவே பேரங்கள் நடந்தன. இப்படி பல குளறுபடிகள்.

ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த ஆரி பின்பு ஜோதியில் ஐக்கியமாகி விட்டார். ரியோ போல ஒதுங்கி விட்டிருந்தால் அல்லது தன் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்திருந்தால் இன்று தப்பியிருப்பார். ஆரியை அந்த நெருக்கடிக்குள் தள்ளியவர்கள் இதர போட்டியாளர்கள்தான். குற்றம் செய்தவனை விடவும் குற்றம் செய்யத் தூண்டியவனைத்தான் சட்டமும் பிரதானமாக பார்க்கிறது.

இதைப்போலவே, பிக்பாஸூம் போட்டியாளர்களின் இடையில் புகுந்து விதிகளை நினைவுப்படுத்தியிருக்கலாம். ‘மைக் மாட்டாமல் இருப்பது’ போன்று பல விஷயங்களை நினைவுப்படுத்தும் அவர் இதையும் சொல்லியிருக்கலாம். ஆனால் சந்தில் மறைந்திருந்து ‘ஒன்வே’யில் வரும் இருசக்கர வாகன ஓட்டுநரை ‘கப்’பென்று பிடித்து அபராதம் விதிக்கும் டிராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி குற்றம் நிகழும் வரை காத்திருந்து இன்று விசாரணையில் பிடிக்கிறார்கள். போட்டியாளர்களின் நடத்தைகளில் தலையிடுவது பிக்பாஸின் வேலையல்லதான். ஆனால், போட்டி விதிகளை மீறும் போது தலையிடலாம்.

ஓகே. இதையெல்லாம் விட்டு விடலாம். இதெல்லாம் பிக்பாஸ் விளையாட்டு தொடர்பான சிறிய விஷயம். ஆனால் இதன் மையப்புள்ளியாக கமல் குறிப்பிட்டுச் சொன்ன விஷயம் நம் சமூகத்திற்கும் பொருந்தும்.

எந்தவொரு சட்டமும் விதிமுறையும் சமூகத்தின் பொதுநலனுக்காகத்தான் இடப்படுகின்றன. ஆனால் முதலில் ஒரு தனிநபர் அதை மீற ஆரம்பிக்கும் போது ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து எதிர்க்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. ‘அட இது நல்லாயிருக்கே?!’ என்று முதலில் மீறுபவரைப் பார்த்து இன்னொருவரும் பின்தொடர, பிறகு பெரும்பாலான சமூகமே அந்த விதிமுறை மீறலை நிகழ்த்துகிறது. அதைத் தண்டிப்பது சிரமம்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

உதாரணத்திற்கு தண்டவாளத்தை தாண்டிச் செல்வது ரயில்வே சட்டத்தின் படி குற்றம். ஆனால் பல ரயில் நிலையங்களில் நடைபாலம் இருந்தாலும் கூட மக்கள் தண்டவாளங்களைச் தாண்டிச் செல்கிறார்கள். இது பெரும்பான்மை என்பதால் நிர்வாகமும் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது. கமல் சொன்ன இந்தச் செய்திதான் இன்று முக்கியமான குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

ஓகே 76-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘போட்டி என்பது வாழ்க்கையின் அங்கம். ஆனால் அதை நேர்மையாகவும் சுயமரியாதையுடன் விளையாட வேண்டும்’ என்கிற முன்னுரையுடன் உள்ளே வந்தார் கமல். "வாங்க... இதை பிக்பாஸ் குழந்தைகளுக்கு கற்றுத்தரலாம்" என்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.

‘டெராடெரா டெரா பைட்டா காதல் இருக்கு’ என்கிற அட்டகாசமான பாடலுடன் பொழுது விடிந்தது. அன்று கேபி பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தினார்கள். "ஆமால்ல. மறந்தே போச்சு" என்று எவரோ சொல்ல, "அடப்பாவிகளா. நைட்டு 12 மணிக்குத்தானே கேக்கை மொக்கினீங்க" என்பது கேபியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்.

"நீ ரியோ கூட சேர்ந்துட்ட போலயே" என்று அனிதாவை விசாரித்தார் ஆரி. "அவருக்கு இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு (?!) எனக்குத் தெரியாது" என்றார் அனிதா. (டிரெய்லர் எபெக்ஃட்) “அவ்ளோ சேட்டை பண்ண பாலாஜியே உங்க கிட்ட ஸாரி சொல்லி ஒட்டிக்க வர்றான்... நானும் ரியோவும் ஆரம்பத்துல ‘கிழக்குச் சீமையிலே’ விஜயகுமார் –ராதிகா மாதிரி பாசமா இருந்த அண்ணன் –தங்கச்சி... இப்ப நாங்க மறுபடியும் சேரக்கூடாதா" என்று அனிதா பதில் சொல்ல "நல்ல விஷயம்தாம்மா. சேருங்க... சேருங்க" என்றார் ஆரி.

உணவுகளில் சுவை சேர்க்கும் ஒரு பொருளைப் பற்றிய விளம்பரதாரர் நிகழ்ச்சி. "சம்பந்தப்பட்ட பொருளை வீட்டின் கேப்டன் எடுத்துக் கொண்டு சாவியை மறுபடியும் ஒப்படைக்கவும்" என்கிற குறிப்பை ரம்யா சிரித்துக் கொண்டே படிக்கும் போது ‘பச்சைக்கிளிக்கு புல்லட் வாங்கித்தரவும். அவரை நன்றாக பார்த்துக் கொள்ளவும்’ என்று வடிவேலு கடிதத்தில் எக்ஸ்ட்ரா பிட்டை போட்டு படிப்பது போல் ரம்யாவும் விளையாட்டுக்கு வாசிக்கிறாரோ என்று தோன்றியது. அப்படியில்லை. நிஜம்தான். இதர போட்டியாளர்கள் ரம்யாவின் மீது இதற்காக ஜாலியாக காண்டானார்கள்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

"மாற்ற முடியாதது என்று எதுவுமில்லை. பிக்பாஸ் வீட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வாருங்கள்... பாராட்டுவோம்" என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்றார் கமல். இன்று அவர் அணிந்திருந்த கோட் வித்தியாசமாக இருந்தது. மேடையின் லைட்டிங் சரியில்லையா... அல்லது உடையின் கீழ்பகுதியில் தண்ணீர் கொட்டி சரியாக காயாமல் அப்படியே அவசரத்தில் வந்து விட்டாரா என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது.

அந்த சஸ்பென்ஸை கமலே பிறகு உடைத்தார். அது காதியில் தயாரிக்கப்பட்ட ஆடையாம். அருமையான விஷயம். இளைஞர்களுக்கும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் ‘காதிக்கு ஆதரவு தாருங்கள்’ என்று கமல் வேண்டுகோள் வைத்தது சிறப்பு. (காதிக்கு நடுவில் ‘ந்’ சேர்த்தால் காந்தி என்றாகி விடுகிறது பாருங்கள்...) தன் தந்தையார் இறுதிவரை காதி உடை அணிந்திருந்த கொள்கைப் பிடிவாதத்தை கமல் உதாரணச் சம்பவங்களுடன் விளக்கியது நெகிழ்வை ஏற்படுத்தியது.

"Best performer... Boring performer... தேர்வுகளில் ஒரே அடிதடி பாலிட்டிக்ஸ் நடக்கும். நான் சொன்ன அறிவுரையைக் கேட்டு இந்த முறை சமர்த்தா நடந்துக்கிட்டிங்க. பாராட்டுக்கள்" என்ற கமல், "இந்த முறை நாமினேஷன் பிராசஸ் வெளிப்படையா. வித்தியாசமா நடந்தது. அதைப் பத்தி சொல்லுங்க" என்றார்.

பெரும்பாலேனோர் இந்த நடைமுறை பிடித்திருந்தது என்றார்கள். "ஃபிராங்க்கா பேசினாங்க சார்" என்று சொல்லி கேபி சிரித்த போது, "இங்கயே ஃபிராங்க்கா பேசறாங்கன்னு சொன்னா ‘உள்ள’ எப்படியெல்லாம் பேசியிருப்பாங்க" என்று கமல் சர்காஸ்டிக்காக கிண்டல் செய்த போது சபை கலகலத்தது.

"நான் நாமினேட் ஆகலை... அதனால நல்லா இருந்தது" என்று வித்தியாச கிணடலுடன் சொன்னார் பாலாஜி. "இதில் வெளிப்பட்ட அபிப்ராயங்கள் வெளிப்படையா இருந்தது. ஒகே... ஆனா என்னால ஏத்துக்க முடியலை" என்று நேர்மையான கருத்தைச் சொன்னார் ஆஜீத். "நான் கேப்டன்றதால என்னைப் பத்தி இவங்க பேசலை... ஆனா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு" என்றார் ரம்யா. (தெரிஞ்சா தாங்க மாட்டீங்கம்மா!). அவங்க ஆசையை கமல் நிறைவேற்றியிருக்கலாம்.

"பிக்பாஸூக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே" என்று அனிதாவைப் பாராட்டினார் கமல். (முந்திரிக்கொட்டைன்னு நேரடியா திட்டாம இப்படியும் சொல்லலாம் போல).

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

ஓப்பன் நாமினேஷன் முடிந்ததும் அர்ச்சனா, ரியோ, சோம் ஆகிய மூவரும் கார்டன் ஏரியாவில் மல்லாக்க படுத்துக் கொண்டு ‘எதிரணியினர் நம்பர் கேம் ஆடுகிறார்கள்’ என்று பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிற்கு வருகிறதா? அதைப் பற்றி கமல் அர்ச்சனாவிடம் விசாரித்தார். அதென்னமோ கமல் முன்பு மட்டும் இன்னொரு முகத்தை அர்ச்சனா மாட்டிக் கொள்கிறார். ‘எனக்குத் தெரியாதுப்பா’ என்கிற மாதிரி அப்பாவி முகத்துடனும் அதே சமயத்தில் சாமர்த்தியமான விளக்கத்துடனும் எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இந்தச் சமயத்திலும் அதே போல் விளக்கம் தந்து "நாங்க சும்மாதான் பேசிட்டிருந்தோம்" என்று அப்பாவியாக சொன்னார் அர்ச்சனா. "ஆடியன்ஸூம் நம்பர் கேம் விளையாடறாங்க. ஞாபகம் வெச்சுக்கங்க" என்று கமல் சொன்னதும் அர்ச்சனாவின் முகத்தில் மெல்லிய சலனம் வந்து போனது.

‘உற்சாகம் தருவதில் அர்ச்சனா பாரபட்சம் காட்டுகிறார்’ என்கிற பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு, "ரமேஷ், நிஷா, ஷிவானி... ஆகிய மூவருக்குமே ஒரே மாதிரியாகத்தான் பேசி உற்சாகம் தந்தேன்" என்று விளக்கம் தந்தார் அர்ச்சனா. "2 பேர் சொல்லிட்டாலே ஒருத்தர் இங்க நாமினேஷன் லிஸ்ட்ல வந்துட முடியும். அதை வெச்சு இவங்க கேம் ஆடற மாதிரி தெரியுது" என்று பிக்பாஸ் ஜூனியர் அனிதா சொல்ல, "இதெல்லாம் நாங்க யோசிக்கவே இல்லையே". என்று முனகினார் சோம். (நீங்க எதைத்தான் யோசிச்சிருக்கீங்க.. சோம்?!).

‘நான் பாதிக்கப்பட்டேன். இரண்டு குழுவாலும் பாதிக்கப்பட்டேன்... சாம் இருந்த காலத்தில் இருந்தே இதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் ’ என்று ஆவேசமாக விளக்கம் அளிக்க முன்வந்த ஆரி, "டீம் பிரிக்கும் சமயத்தில் பாலாஜி சட்டென்று அவர்களுக்குத் தோதானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டார். யாரையும் கலந்தாலோசிக்கவில்லை" என்று குற்றம் சாட்ட, "அப்படில்லாம் யோசிக்கலை... இன்னொரு டாஸ்க்ல ஆரிதான் எங்க அணில இருந்தாரு... அது மட்டும் என்னவாம்?" என்று சமாளித்தார் பாலாஜி.

"‘ஆம். நான் ஷிவானியை நாமினேட் செய்ய மாட்டேன். ஷிவானியும் என்னை நாமினேட் செய்ய மாட்டாங்க’ன்னு பாலாஜி வெளிப்படையாவே சொல்லியிருக்காரு" என்று ஆரி சொன்னதற்கு, "ஆம்... அதற்கு கில்ட்டியா ஃபீல் பண்றேன்" என்றார் பாலாஜி. (அப்ப உங்களுக்கு குரூப்பிஸம் பத்தி விமர்சனம் செய்ய தகுதியில்லையே பாலாஜி?!)

போட்டியாளர்கள் வாரம் முழுவதும் நடத்தும் அரசியலை நன்றாக நடத்தி விட்டு சனி, ஞாயிறுகளில் அத்தனையையும் பூசி மெழுகுகிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. "நான் எந்தக் குழுவிலும் இல்லை... நம்பர் கேமிலும் ஈடுபடவில்லை" என்று நடுசென்ட்டராக பேசினார் ரம்யா. (கழுவுற நீர்ல நழுவற மீன்). "யாரை நாமினேட் பண்ணனும்னு நாங்க பேசினதே இல்லை. நீங்க முழு ஃபுட்டேஜை செக் பண்ணிக்கலாம்" என்று ஆணித்தரமாக பேசினார் அர்ச்சனா. அதையே பாலாஜியும் வழிமொழிந்தார்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

“வெளிப்படையா பேசலை... சரி... அந்த மாதிரி புரிதல் உங்களுக்குள்ள இருக்கலாம்... இல்லையா?” என்று கமல் நமட்டுச் சிரிப்புடன் கேட்டதை "இருக்கலாம்" என்று ஆமோதித்தார் பாலாஜி.

"பசித்திரு, தனித்திரு, விழித்திருன்னு வள்ளலார் சொல்லியிருக்கார். நீங்க மத்ததையெல்லாம் கரெக்ட்டா செஞ்சுட்டு... இந்த ‘தனித்திரு’வை மட்டும் விட்டுடறீங்க" என்று ஆன்மிகத்தை கலந்து போட்டியாளர்களுக்கு குட்டு வைத்தார் கமல்.

“பாலாஜி அவருக்கு வேண்டியவர்களை முன்னிலைப்படுத்துகிறார்” என்று உறியடி டாஸ்க்கை முன்னிட்டு குற்றம் சாட்டினார் அனிதா. ஆரி சொன்ன அதே விஷயம்தான். “நான் அப்படியெல்லாம் யோசிக்கலை. ஆஜீத் உறியடிக்கறதுல மாஸ்டரா என்ன?” என்று குத்தலான நகைச்சுவையுடன் பதில் சொன்னார் பாலாஜி.

"‘Best performer’-ல ஷிவானிக்கு வாக்களிச்சாரு பாலாஜி. ஆனா அவங்கதான் Worst perfomer கேட்டகிரில ஜெயிலுக்குப் போனாங்க" என்று தர்க்கபூர்வமாக ஆரி மடக்க முயல "கோழி டாஸ்க்கில் ஷிவானி ரூல்ஸ் எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணாங்க"என்று சமாளித்தார் பாலாஜி. விதிகளை சரியாகப் பின்பற்றி ஆடுவது வேறு. ஆடாமல் தேமேவென்று இருப்பது வேறு. இரண்டாவதை்தான் ஷிவானி அதிகம் செய்தார்.

"அனிதாவை பாலாஜி நாமினேட் செஞ்சதுல தனிப்பட்ட பழிவாங்கல் தெரிஞ்சது... அவங்க பாத்ரூம் கழுவலைன்னு சொன்னாரு" என்று ஆரி தன் புகார் பட்டியலைத் தொடர அனிதாவும் அதனுடன் இணைந்தார். இந்தச் சமயத்தில் ரம்யா அனிதாவிற்கு ஆதரவு தெரிவித்தார். "அதான் அனிதா ஜெயிலுக்குப் போகலை இல்லையா. அப்புறம் என்ன? இந்த கேஸ் செல்லாது" என்று படி பிரேக் விட்டுச் சென்றார் கமல். "இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அந்த ‘வள்ளலார்’ மேட்டரை நினைவு வெச்சுக்கங்க" என்று செல்வதற்கு முன்னால் நினைவுப்படுத்தினார் கமல்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமல், "நரி –கோழி விளையாட்டுல்லாம் சரி... இங்க அந்த மாதிரியான குணாதிசயம் கொண்ட நபர்களை அடையாளம் காட்டுங்க பார்க்கலாம்" என்றார். இதில் கோழிக்கு உதாரணமாக பெரும்பாலோனோர் அர்ச்சனாவையே குறிப்பிட்டார்கள். ‘வானத்தைப் போல’ திரைப்படத்தில் விஜயகாந்த் தன் தம்பிகளை மழையில் நனையாமல் காப்பாற்றும் ‘சென்டிமென்ட்’ காட்சி எல்லாம் இப்போது நினைவிற்கு வந்தது. அந்த அளவிற்கு பாசமுள்ள கோழியாக அர்ச்சனா இருக்கிறார். ஆனால் குஞ்சுகள் என்பது ரியோ மற்றும் சோம் மட்டும்தான். (நிஷா, ரமேஷ் ஆகிய குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து பறந்தோடிவிட்டன).

நரி என்கிற குணாதிசயத்திற்கு ஆரியும் பாலாஜியும் சம மதிப்பெண்கள் பெற்றார்கள். "மற்றவர்களின் பிழைகளை தோண்டியெடுத்து சொல்லி கேமராவின் முன் பதிவு செய்வதில் ஆரி கில்லாடி" என்று காரணம் சொன்னார் அனிதா. ரம்யா தன் கருத்தைச் சொன்ன போது "சிரிக்காம சொல்லிட்டாங்க" என்று கமல் ரம்யாவை செல்லமாக சீண்ட வெடித்து சிரித்தார் ரம்யா. (என்னவே நடக்குது இங்க?!) ஆனால் ரம்யாவின் கோபத்தையும் இன்று பார்க்க முடிந்தது.

“மீடியா துறையில் இருந்து வந்திருப்பதால் பாதுகாப்பு வியூகங்களை அனிதா பலமாக அமைத்திருக்கிறார். தன் குற்றங்களை மறைக்கும் அதே சமயத்தில் அடுத்தவர்களின் குற்றங்களை பதிவு செய்வதில் கில்லாடி" என்று குறிப்பிட்டு அனிதாவைப் பழிவாங்கினார் ஆரி. (மீடியா துறையையெல்லாம் இங்க இழுக்கக்கூடாது என்று பிறகு அர்ச்சனா கோபத்துடன் ஆதங்கப்பட்டது மிகவும் சரி! ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயத்தை அவர் பணியாற்றும் துறையோடு பொருத்திப் பார்ப்பது முறையல்ல).

"எனக்கு நரி பிடிக்கும்" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் ரம்யா. தந்திரம் என்பதை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். உண்மையில் மனிதர்கள் ஏற்றி வைக்கும் அளவிற்கு விலங்குகள் அத்தனை மோசமானவையல்ல. அவை இயற்கை நியதியின்படிதான் வாழ்கின்றன. இவை கதைகளில் உருவகங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நிஜமாகவே விலங்குகள் அப்படியிருக்கும் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. இதை கமல் தெளிவுப்படுத்தியிருக்கலாம். தாங்கள் நரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து ஆரி, பாலாஜி என இருவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது பாலாஜி இன்னொரு காந்தியாக மாறி விடுவார் போலிருக்கிறது. கமல் அடிக்கடி குறிப்பிடுவதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. கடும் குற்றவாளியாக சிறையில் இருக்கும் பாலாஜியை தன் அன்பாலும் நிதானத்தாலும் கமல் என்கிற ஜெயில் வார்டன் திருத்தியனுப்புவதைப் போலவே நமக்கு ஒரு ஃபீல் வருகிறது. பாலாஜியிடம் தெரியும் மாற்றத்தைப் பாராட்டினார் கமல்.

"கோழி டாஸ்க் விதிமுறைகளில் உங்களுக்குக் குழப்பம் இருந்ததா?" என்பது கமல் விசாரணையின் அடுத்த பகுதி. “ஆமாம் சார். படிச்சுக் காண்பிச்சது நான்தான். ஆனா இவங்களாவே அதிலிருந்து நெறய விஷயங்ளை டெலவப் பண்ணிட்டாங்க" என்றார் ரியோ. இந்த விளையாட்டில் நடந்த குழப்பங்களின் ஒட்டுமொத்தமான அவுட்லைனை சிறப்பாக தொகுத்து வழங்கினார் ஆரி. "அப்பப்ப ரூலை மாத்திட்டே இருந்தாங்க. ஒன் டூ ஒன் இருந்தா நல்லாயிருந்திருக்கும்" என்பது ஆரியின் ஆதங்கம். ஏறத்தாழ ஆரியின் கருத்தை எதிரொலித்தார் பாலாஜி. "Money Minded-ஆ மாறிட்டாங்க. யாரும் ரூல்ஸை ஃபாலோ பண்ணலை" என்கிற சரியான காரணத்தை முதலில் சொன்னார் ஷிவானி (ப்பா. வாயைத் திறந்து முதல்ல ஒரு முத்து உதிர்ந்திருக்கு).

"ரூல்ஸ்லாம் குழப்பமா இருந்தது. ஆளாளுக்கு ஒண்ணு சொன்னாங்க. நாங்க குழம்பிட்டோம் என்பது உண்மைதான்" என்றார் ரம்யா. ஷிவானியின் கருத்தை எதிரொலித்தார் அனிதா. பிக்பாஸ் கரன்ஸி அதிகம் வைத்திருப்பவர்களுக்கு ‘ஸ்பெஷல் பவர்’ என்கிற விதிதான் போட்டியாளர்களை செலுத்திய முதல் காரணி.

"ரூல்ஸ் எல்லாம் தெளிவாத்தானே இருக்கு. ஒழுங்கா படிச்சீங்களா இல்லையா?” என்ற கமல் அந்தப் புத்தகத்தை எடுத்து ‘ஒரு சமயத்தில் ஒரு நரிதான் கூட்டிற்குள் சென்று முட்டையைத் தொட முடியும்’ என்கிற விதியை அடிக்கோடிட்டு வாசித்துக் காண்பித்த பிறகு "இதுல என்ன குழப்பம்?” என்றார். (இதுவேதான் சம்பந்தப்பட்ட டாஸ்க் முழுக்க என் மனதில் ஓடிக் கொண்டிருந்த விஷயம்).

“'கோழி வட்டத்தை விட்டு வெளியே வந்தால் இன்னொரு நரியும் செல்லலாம்’னு பின்னாடி பிக்பாஸ் கிட்ட கேட்டு தெளிவுப்படுத்திக்கிட்டோம்" என்றார் அர்ச்சனா. (ஆனால் கோழி வட்டத்திற்குள் இருக்கும் போதும் சிலர் தொட்டார்கள். ரியோவின் முட்டையை பக்கத்திலேயே படுத்திருந்து பாலாஜி தொட்டது ஓர் உதாரணம்).

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

“முதல்லயே இந்த விதிமீறல்கள் தடுக்கப்பட்டிருந்தால் குழப்பங்கள் நடந்திருக்காது” என்று ஆரி சொன்னதை வழிமொழிந்து சொன்னார் கமல். "ஒருத்தர் மீறியவுடன் மத்தவங்களும் மீறிட்டாங்க. சட்டத்தை தனிநபர் கையில் எடுத்து வளைக்கக்கூடாது” என்ற கமல், "ரியோவைப் பாராட்டலாம். அவர்தான் நினைவுப்படுத்திக்கிட்டே இருந்தார்" என்றார். "பாவம். அவருக்கு நெஜம்மாவே ‘முட்டை’ கரன்ஸிதான் கிடைச்சது" என்று கமல் சுட்டிக்காட்டியது அருமை. “நல்லவனுக்குக் கெடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கு கெடைக்குதே" என்று மகாநதி திரைப்படத்தில் கமல் குமறும் காட்சியை இங்கு நினைவுகூரலாம்.

"இனியாவது விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுங்கள்" என்று கமல் அறிவுறுத்தி விட்டு விலகியவுடன் ஆரியும் பாலாஜியும் குடுமிப்பிடிச் சண்டையில் இறங்கினார்கள். "என்னை மட்டும் தனியா குறை சொல்லாதீங்க. நரிகள் இணைந்துதான் அந்த விதிகளை உருவாக்கினோம்" என்று ஆரியிடம் வாதிட்டார் அர்ச்சனா. கூட ரம்யாவும் இணைந்து கொண்டார்.

"நீங்க மட்டும் ஒழுங்கா?” என்று பாலாஜி கேட்டதற்கு மிகவும் சூடானார் ஆரி. அவர் தன் தரப்பை அழுத்தமாகச் சொல்லலாம். தவறில்லை. ஆனால் ஏன் அத்தனை டென்ஷன் ஆகிறார் என்பதுதான் புரியவில்லை. அவர் சொல்லும் நியாயம் என்பது கோபத்தில் அடிபட்டு விடும்.

இவர்கள் போட்ட நீளமான சண்டையை சுருக்கிப் பார்த்தால் இப்படிப் புரிந்து கொள்ளலாம். “எங்களுக்கு விதிகள் குழப்பமா இருந்தது. மாத்திக்கிட்டோம். ஓகே... நீங்க ஏன் வந்து அதுல இணைஞ்சீங்க?” என்பது அர்ச்சனா மற்றும் ரம்யாவின் தரப்பு. “நான் முதல்ல இருந்து இதை ஆட்சேபணை செஞ்சிக்கிட்டுதான் இருந்தேன்" என்று ஆரி சொல்வது சரி. ஆனால் இதை ஆட்சேபித்து விட்டு ரியோ போல அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் தான் தோற்று விடுவோமோ என்கிற பயமும் ஆரிக்குள் எழுந்திருக்கலாம். எனவே ஜோதியில் ஐக்கியமாகி விட்டார். ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் எது எப்படி மாறும் என்பது யாருக்கும் தெரியாது.

திரைப்பட டிரெய்லர் முடிந்தவுடன் நேற்று ஆரியிடம் அத்தனை உருக்கமாக மன்னிப்பு கேட்ட பாலாஜி, இப்போதோ கடுமையாக சண்டை போடுவது, ‘அது வேற வாயி. .இது நாற வாயி’ நகைச்சுவையை நினைவுப்படுத்துகிறது. ‘அரிச்சந்திரனை இங்க பார்த்துட்டேன்’ என்று குத்தலான நகைச்சுவையை வெளிப்படுத்தினார் பாலாஜி. இருவரும் சிறுபிள்ளைகள் போல் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், "விதிமுறைகளை ஒருவர் மீற ஆரம்பிச்சு... அதையே நிறைய பேர் பின்பற்றினால் அது நியாயமில்லை. விதிமுறைகளை மன்றாடி நினைவுப்படுத்திய ரியோவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு பூஜ்ஜியம். நேர்மைக்கு பரிசா நஷ்டம் கிடைக்கக்கூடாது. அதுதான் என் பயமே" என்று சொன்னது திருவாசகம். அது பிக்பாஸிற்கு மட்டுமல்ல... சமூகத்திற்கும் பொருந்தும். ஆனால், இதையெல்லாம் கமல் அரசியல் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து தனக்கும் சாதகமாக இருப்பது போல் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். (டார்ச்லைட் போச்சே!).

‘ஆரியின் அணுகுமுறை உகந்ததல்ல’ என்று யார் நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்டார். உள்ளே நடந்த சண்டையை வெளியே வேடிக்கை பார்த்திருப்பார் போலிருக்கிறது. “ரூல்ஸை முதல்ல பிரேக் பண்ணது ஆரிதான் சார்... அனிதா கூடயே போய் முட்டையைத் தொட்டாரு. ஆனா ஒத்துக்க மாட்டேன்கறாரு" என்று சபையில் போட்டுக் கொடுத்தார் பாலாஜி. "தவறுல அவரும்தான் உடந்தை" என்று ரம்யாவும் கோபமானார். ரம்யா அதிகமாக கோபப்பட்டதை இன்றுதான் பார்க்க முடிந்தது.

“கோழியா இருந்த போது ஆரி பாதிக்கப்பட்டார்... ஆனா நரியா மாறிய போது அவரும் கூட்டத்துல சேந்துட்டார்" என்றார் ரியோ. "சரி. நரியோட பார்வைல இருந்து இதைப் பார்க்கலாம்" என்ற கமல் ‘ஹேராம்’ வசனத்தை உதாரணம் காட்டியது கனகச்சிதம். நல்ல டைமிங்கும் கூட.

என்றாலும் ஆரியைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து புகார்கள் வந்த போது, "அது பாதிக்கப்பட்டவரின் கோபமாக கூட இருக்கலாமே” என்று கமல் சொன்னது சரியானது. அதே சமயத்தில், "தான் பாதிக்கப்பட்டாலும் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதுதான் நேர்மை" என்று ஆரியைக் குட்டவும் கமல் தயங்கவில்லை.

‘திரும்பத் திரும்ப பேசற நீ’ காமெடியாக இந்த விவாதம் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த ரியோ டீம் தங்களின் பிரத்யேக முத்திரையின் மூலம் கிண்டலை வெளிப்படுத்த அதை விசாரித்தார் கமல். அதற்கு விளக்கம் அளித்த சோமிடம், "இந்தக் காமெடில்லாம் ஓகே தம்பி... ஆனா பேச வேண்டிய நேரத்துலயும் பேசணும்" என்று அவரை தலையில் குட்டியது சிறப்பு. "பிக்பாஸ் மேல சத்தியம் சார்... இனிமே ரூல் புக்கை வேதமா எடுத்துப்போம்" என்று சூளுரைத்தார் அன்னை அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76
ஆனால் அர்ச்சனாவின் அந்த சத்தியத்திற்கு அவசியமேயில்லை. ஏனெனில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவிருப்பவர் அர்ச்சனாதான் என்று ‘கோழி ஜோசியம்’ தகவல் சொல்கிறது. ("அன்பு ஜெயிக்கும்னு நம்பறியா?” - “தெரியலையே குமாரு!”)

எவிக்ஷன் லிஸ்ட்டில் இருந்தவர்களை தனியாக அமரச் சொன்ன கமல், ரியோ காப்பாற்றப்பட்ட செய்தியை முதலில் சொன்னார். நேர்மைக்கு பரிசு போல. வழக்கம் போல் திடுக்கிட்டுப் பார்த்து பிறகு புன்னகைத்தார் ரியோ. அடுத்ததாக ஆரி காப்பாற்றப்பட்டதை கைதட்டியபடியே கமல் சொன்னதில் குறியீடு இருந்திருக்கலாம். நேர்மையாக விளையாடுவதற்காக முதலில் போராடிய ஆரி, பிறகு தடுமாறி விழுந்தார் என்பதற்காக அந்தப் பாராட்டு இருக்கலாம்.

‘நேர்மையாக நடைபோடுங்கள்’ என்றபடி கமல் விடைபெற்றுச் செல்ல, வீட்டில் இருந்த ஒவ்வொருவரிடமும் ‘கடவுள் இருக்கானா குமாரு’ என்று சோகமான குரலில் விசாரித்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்’ என்று கமல் வசனத்தை (சொன்னது தொ.பரமசிவன்) காப்பிடியத்து ஷிவானி சொல்ல, "ச்சை. உன்னைப் போய் கேட்டேன் பாரு" என்று சலித்து விலகினார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 76
பிக்பாஸ் – நாள் 76
அர்ச்சனாவின் அந்தக் கேள்விக்கு, "கடவுள் இருக்கான் குமாரு.. அதனால்தான் நீங்க இந்த வாரம் போறீங்க" என்று பார்வையாளர்களில் பலர் நினைக்கலாம். ஆனால் முன்பே நான் சொல்லியதுதான். வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனாவும் விலகி விட்டால் ஆட்டத்தின் சுவாரஸ்யம் குன்றக்கூடும். அப்படி ஆகுமா... ஆகாதா... என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.