'கலக்கப் போவது யாரு'வில் 'மொட்டை' சரத்தாக நமக்கு பரிச்சையமானவர், சரத். சரத்தும் அவருடைய காதல் மனைவி கிருத்திகாவும் தற்போது 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்கள். 'நவீன நாடகத்தின் தந்தை' இராமனுஜம் அவர்களின் பேத்திதான் கிருத்திகா என்பது கூடுதல் செய்தி! கிருத்திகா நியூட்ரிஷியன் மேனேஜராகவும், ஃப்ரீலான்சர் கிளினிக்கல் டயட்டீஷியனாகவும் இருக்கிறார். 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' அனுபவம் குறித்து கிருத்திகா சரத்திடம் பேசினோம்.

"நாங்க எந்த அளவுக்கு உழைச்சோமோ அதே அளவுக்குத்தான் போட்டியில் எல்லாருமே ஹார்ட்ஒர்க் பண்ணாங்க. முதலில் இருந்தே நாங்க எல்லாரும் ஃபேமிலி மாதிரி பழகிட்டதால யாரு ஜெயிச்சாலும் நம்மளோட ஃபேமிலியில் ஒருத்தர் ஜெயிக்கிற மொமண்ட்தான் எங்களுக்குள் இருந்துச்சு. நாங்க டைட்டில் வின் பண்ணின தருணம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல்!
சரத் இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடும் போது எனக்கு மீடியா அனுபவம் இல்லைன்னு கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. அவர்தான் உன்னால முடியும், உனக்கு அதுக்கான எல்லா தகுதியும் இருக்குன்னு சொல்லி என்னை என்கரேஜ் பண்ணாரு. சரத் இதுவரை எந்தப் போட்டியிலும் பைனல் வரைக்கும் போனதில்லை. அவருடைய நண்பர்கள் வெற்றி பெறுவதை கைத்தட்டி ரசிச்சுருக்காரு. ஆனா, அவர் வெற்றி அடைஞ்சதில்லை. ரொம்ப ஓடிட்டே இருப்பாரு. அவ்வளவு உழைப்பாரு. ஆனா, அவர் வெற்றியை பார்த்ததேயில்லை!

சரத், குழந்தை மாதிரி. அவனை தைரியமா என்கரேஜ் பண்ணி, உன்னால முடியும் என்கிற சப்போர்ட் கொடுத்தா அவன் ஜெயிச்சிடுவான். அதனாலேயே, ஒவ்வொரு போட்டியிலும் உன்னால முடியும் பாப்பா... சூப்பரா விளையாடுறேன்னு தொடர்ந்து அவரை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பேன். சரத்துக்கு வெற்றிக் கோப்பையை வாங்கிக் கொடுக்கணும். அதுக்காக என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணனும்னு நினைச்சேன். நினைச்சது இப்போ நிறைவேறியிருக்குன்னு ரொம்பவே சந்தோஷம்.
இந்த நிகழ்ச்சிக்காக ஷூட்டிங் டேட் கிளாஷ் ஆகுதுன்னு என் வேலையை விட்டுட்டேன். ரொம்ப வருஷம் வெற்றிக்காக ஏங்கியிருக்கோம். அந்த வெற்றி சாத்தியம் ஆனப்போ நெகிழ்ச்சியா இருந்துச்சு. இந்தப் போட்டியில் ஹாரர் சுற்றில் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணும்போது காலில் அடிபட்டுருச்சு. அதோட விளைவு இன்னைக்கு வரைக்கும் இருக்கு. பல நாள் முட்டிவலியை பொறுத்துகிட்டு டாஸ்க் பண்ணியிருக்கேன். சில சமயம் இவ்வளவு வலியை தாங்கிக்கிட்டு அப்படி இந்தப் போட்டியில் கலந்துக்கணுமான்னு தோணும்... அப்படித் தோணும்போதெல்லாம், சரத் இதுக்காக அவ்வளவு உழைச்சிருக்கான். இந்த சின்ன வலிக்காக அவன் உழைப்பை வீணாக்கிடக் கூடாதுன்னு எழுந்திருக்கேன்.

இந்த விருதை கொடுக்கும்போது, 'சரத் நீ காமெடியன் இல்லைடா... ஹீரோன்னு' ன்னு சொல்லி விருது கொடுத்தாங்க. அந்த மொமண்ட் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சரத், என்னோட அடையாளமே நீதான்னு சொன்னார். ஏன்னா, நான் வந்த பிறகுதான், 'குக்கு வித் கோமாளி', 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை', சீரியல்னு பிஸியா இருந்தார். இப்போ அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கார். நீ வந்த பிறகுதான் லைஃப்ல எல்லாமே கிடைச்சிருக்குன்னு சொல்லுவார். அவரோட சந்தோஷத்தை வேடிக்கை பார்க்கிறதை விட எனக்கு பெரிய சந்தோஷம் என்னவா இருக்க முடியும்.
எப்பவுமே சரத்துக்கு சப்போர்ட்டா இருப்பேன். தொடர்ந்து அவரோட வாழ்க்கையில் நிறைய விருதுகள் அவர் வாங்கணும்... அவர் விருது வாங்கிறதை பார்த்து நான் ரசிக்கணும். இது அதற்கான ஆரம்பம்னு நினைக்கிறேன்" என்றவரிடம் மறக்கமுடியாத பாராட்டு குறித்துக் கேட்டோம்.
"வெட்டிங் ரவுண்ட் நடந்துச்சு. அதில், பாடி ஷேமிங் பற்றி பேசினேன். வீட்டில் ஆரம்பிச்சு இந்த சமூகம் வரைக்கும் நான் பாடி ஷேமிங்கை எதிர் கொண்டிருக்கேன். நான் நல்லா படிக்கிற பொண்ணு. கோல்டு மெடலிஸ்ட். ஆனாலும், என்னோட படிப்பு சார்ந்து யாரும் என்னை பாராட்டினதில்லை. மாறாக, என் உடல் எடை குறித்து நிறைய கிண்டல் பண்ணி ரொம்ப கேவலமா பேசுனாங்க. மத்தவங்களை கஷ்டப்படுத்தி அதுல என்ன சந்தோஷம் உங்களுக்குலாம் கிடைக்கப் போகுதுன்னு நான் லைஃப்ல அனுபவிச்ச வலிகள் குறித்து பேசினேன். அந்த மேடையை பாடி ஷேமிங்கிற்கு எதிரா குரல் கொடுக்கிறதுக்காக பயன்படுத்திக்கிட்டேன். நான் முடிவு பண்ணாம நீங்க என்னை காயப்படுத்த முடியாதுன்னு அந்த ஷோவில் பேசியிருப்பேன். அந்த வீடியோ ரொம்ப வைரலாச்சு. பலரும் பர்சனலா எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. 'நாங்க தினமும் இது மாதிரியான கேலி, கிண்டல்களை எதிர் கொண்டு இருக்கிறோம். எங்களை அப்படி பேசுறவங்களுக்கு செருப்பால அடிக்கிற மாதிரி பதில் சொன்னீங்க'ன்னு சொன்னாங்க. முக்கியமான ஒரு மேடையில் என் கருத்தை சரியா பதிவு பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்.

இந்த எபிசோட் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் அண்ணா போன் பண்ணியிருந்தாங்க. 20 நிமிஷம் இது குறித்து என்கிட்ட பேசுனாங்க. 'நீங்க இது பற்றி பேசினது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்மா... பேசுறவங்க முன்னாடி நீங்க வாழ்ந்து காட்டியிருக்கீங்க... நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும்போது எங்களுக்கே கஷ்டமா இருக்கும். நீங்க பேசுனது ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு'ன்னு சொன்னார். அதே மாதிரி, செட்ல கோபி அண்ணா, தேவதர்ஷினி அக்கா ரெண்டு பேரும் ரொம்பவே என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க. எல்லாரோட அன்புதான் எங்க வெற்றிக்கு காரணம்" எனப் புன்னகைக்கிறார், கிருத்திகா.