Published:Updated:

மிடில் கிளாஸ் பொண்ணு டு மீடியா ஸ்டார்... சித்ரா ஜெயித்தது எப்படி?

VJ Chithra
VJ Chithra

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், ரியாலிட்டி ஷோக்களில் ஆங்கரிங் செய்யக் கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு இரவு, பகலாக உழைத்த சித்ரா தன் ஈர்ப்பான பேச்சாலும் ஆட்டிட்யூடாலும் மக்களிடையே தொகுப்பாளினியாகப் பிரபலமடையத் தொடங்கினார்.

விஜய் டிவியின் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் `முல்லை'யாக தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த விஜே சித்ராவின் தற்கொலை, மக்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது. `என்னக்கா சொல்லுறீய..?' என்று `முல்லை'யாக அவர் பேசும்போது, A girl next door என்பதுபோல, ஏதோ நம் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி நம் மக்களிடம் சித்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் இயல்பான நெருக்கம்தான் அதற்குக் காரணம்.

VJ Chithra
VJ Chithra

̀ஜீரோவிலிருந்து தொடங்கினேன்', `பின்புலமே இல்லாமல் ஜெயித்தேன்' என்பார்களே... சித்ராவும் அப்படி ஒரு சுயம்புதான். 28 வயதே ஆகும் வெற்றியாளர். சென்னைப் பெண். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, சித்ரா என்று மிடில் க்ளாஸ் குடும்பம்.

``எங்க வீட்டுலேயே நான்தான் கடைக்குட்டி. என் அண்ணனும், என் அக்காவும் என்னைவிட ரொம்ப வயசு மூத்தவங்க. எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது இன்னொரு குழந்தை வேண்டாம்னு மருந்துலாம் சாப்பிட்டாங்களாம். ஆனாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் பிறந்துட்டேன்!" - தன் பிறப்பே ஒரு போராட்டம்தான் என்பதை, விகடனுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சித்ரா.

சென்னையில் குடிசை வீட்டில் தங்கியிருந்த சித்ராவின் குடும்பம், பிறகு அரசு கட்டிக்கொடுத்த குடிசை மாற்று வாரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளது. சித்ராவின் அப்பா காவல்துறையில் பணிபுரிந்தாலும், அந்த வருமானம் ஐந்து பேர்கொண்ட இந்தக் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போதுமானதாக இல்லை. அதனால் சித்ராவின் அண்ணனும், அக்காவும் கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லை. சித்ராவையும் அவர் பெற்றோர்களால் படிக்கவைக்க முடியவில்லை. என்றாலும், பார்ட் டைம் வேலை செய்துகொண்டே படித்து, தன் கல்லூரிப் படிப்பை பார்த்துக்கொண்டார் சித்ரா. எம்.எஸ்சி சைக்காலஜி முடித்துள்ள சித்து யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர். முதல் தலைமுறை பட்டதாரி.

மீடியா துறையில் ஆர்வமிருந்த சித்ராவுக்கு வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. மீடியாவில் வேலைக்குச் செல்ல வீட்டிலும் கடும் எதிர்ப்பு. பல அவமானங்கள், கஷ்டங்களைக் கடந்தவருக்கு அவரது விடாமுயற்சியால் 2013-ல் `மக்கள் டிவி'யில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தன் மீடியா பயணத்தை இங்கிருந்தே தொடங்கினார். ஆரம்பத்தில் குடும்பத்தினர் சித்ராவின் மீடியா வேலையை எதிர்த்தாலும், பின்பு அவர்களே இந்தப் பயணத்தில் சித்ராவுக்கு உறுதுணையாக இருக்கத் தொடங்கியுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், ரியாலிட்டி ஷோக்களில் ஆங்கரிங் செய்யக் கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு இரவு, பகலாக உழைத்த சித்ரா தன் ஈர்ப்பான பேச்சாலும் ஆட்டிட்யூடாலும் மக்களிடையே தொகுப்பாளினியாகப் பிரபலமடையத் தொடங்கினார்.

`சித்ராவுக்கு சில ஆசைகள், கனவுகள் இருந்தது... ஆனா, இப்ப?!" - மறைவால் கலங்கும் பிரபலங்கள்

அப்படித்தான், அவள் விகடன் வழங்கிய பெண்களுக்கான `ஜாலி டே' நிகழ்ச்சிகளிலும் ஆங்கரிங் செய்தார் சித்ரா. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெண்களுக்காக நடத்தப்படும் இந்தப் பிரத்யேக நிகழ்ச்சியில், ஆயிரம் பெண்கள் நிறைந்திருக்கும் அரங்கையும் ஒரு தொகுப்பாளராக அழகாகக் கையாள்வார் சித்ரா. தன் கலகல பேச்சால் மொத்த கூட்டத்துக்கும் உற்சாகம் கொடுத்துக்கொண்டே இருப்பார். நிகழ்ச்சிக்கு வரும் பெண்கள் எல்லோரும் அவரிடம் `நம்ம வீட்டுப் பொண்ணு சித்ரா' என்ற பாசத்தோடு பேசுவார்கள், போட்டோ எடுப்பார்கள், டான்ஸ் ஆடுவார்கள். ஒரு நாள் முழுக்க நடக்கும் அந்த நிகழ்ச்சியில், சித்ரா முகத்தில் அந்தச் சிரிப்பும் உற்சாகமும் அகலவே அகலாது.

தொகுப்பாளினியாக இருந்த சித்ரா டிவி சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். பல சேனல்களில் வெவ்வேறு தொடர்களில் நடித்தாலும், இவருக்கான தனி அடையாளத்தை வழங்கியது விஜய் டிவியின் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர். இதில் இவர் நடித்த கிராமத்துக் குடும்ப பெண்ணான `முல்லை' கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தன் ரசிகர்களின் பிறந்தநாளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சித்து, தன குடும்பத்தின் மீதி அதிக பிரியம் கொண்டவர். ஒரு முறை சித்து விகடனுக்கு அளித்த பேட்டியில் தன் குடும்பம் பற்றி குறிப்பிட்டிருந்த விஷயங்கள், நெகிழ்ச்சி.

``எங்க வீடு பெட்டி சைஸ்லதான் இருக்கும். எனக்குன்னு தனி பெட்ரூம் வசதியெல்லாம் கிடையாது. நான் காலேஜ் படிக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குலாம் போகும்போது அவங்களுடைய பெட்ரூம்ல உட்கார்ந்து கதை பேசியிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்கன்னா கொஞ்சம் சங்கடமா இருக்கும்.

ஆரம்பத்திலிருந்தே எனக்காக என் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களை ராஜா, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். கிடைக்கிற பணத்தைக் குருவி சேர்க்கிற மாதிரி சேத்து வைச்சேன். எந்த ஈவன்ட்க்கு கூப்பிட்டாலும் பேசப் போயிடுவேன்.

இது சின்ன நிகழ்ச்சி, நாம இப்போ ஹீரோயின்னு எல்லாம் யோசிக்க மாட்டேன். ராத்திரி, பகலா வேலைபார்த்து காசு சேமிச்சேன். முதல்ல சொந்தமா கார் வாங்கினேன். ஈவன்ட்க்கு மதுரை வரைக்கும்கூட நானே டிரைவ் பண்ணிட்டு போயிருக்கேன். டிரைவர் வெச்சா காசு செலவாகும், நாமே ஓட்டிட்டுப் போயிடலாம்னு எல்லாம் சிக்கனமா இருந்துருக்கேன். இப்படி மூணு வருஷம் சேமிச்சு இப்போ எங்க அம்மா, அப்பாவுக்காக ஒரு வீடுகட்டிக் கொடுத்திருக்கேன்.

VJ Chithra
VJ Chithra

கூடவே, எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே ரெண்டு சின்ன வீடுகள் கட்டினேன். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வெச்சு அப்பா, அம்மா உட்கார்ந்து சாப்பிட ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க!"

வறுமை, மீடியா விருப்பத்துக்கு எதிர்ப்பு, வெற்றிக்கான போராட்டம் என்று அனைத்தையும் தாண்டி, வாழ்க்கையை அதன் போக்கில் சென்று வசப்படுத்திய சித்ரா, தற்கொலை முடிவெடுக்கும் அளவுக்கு பலவீனமானவரா என்று அவருடைய நெருங்கிய வட்டத்திலேயே அதிர்ச்சியாகியிருக்கிறார்கள்.

உதிர்ந்த இந்த முல்லையின் சிரித்த முகம் ஒரு சித்திரம். சிலரின் புன்னகைதான் எத்தனை துயரங்களை மறைத்துக்கொள்கிறது?!

அடுத்த கட்டுரைக்கு