Published:Updated:

`படம் இயக்கினேன், புத்தகம் எழுதினேன்; ஆனா ரேடியோதான் கைகொடுத்தது’ - ஆர்.ஜேக்களின் ரேடியோ தினக் காதல்

மதுரையின் குரல்கள்
மதுரையின் குரல்கள்

`மற்றவர்களுக்குத்தான் பிப்ரவரி 13 ரேடியோ தினம். ஆனால், ரேடியோ ஜாக்கிகளுக்கு தினம் தினம் ரேடியோ தினம்தான்.’

உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த 4 ரேடியோ ஸ்டேஷன்களின் ஆர்ஜே-க்களான சேது, மணி, பரத், பிரவீன் ஆகியோருடன் உரையாடினோம்.

முதலில், மதுரை மக்களின் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்து, தனது சிரிப்பின்மூலம் அனைவரின் கவலையையும் மறக்கச்செய்து வரும் சூரியன் எஃப்எம் ரேடியோ ஜாக்கி சேட்டை சேது...

”மற்றவர்களுக்குத்தான் பிப்ரவரி 13 ரேடியோ தினம். ஆனால், ரேடியோ ஜாக்கிகளுக்கு தினம் தினம் ரேடியோ தினம்தான். ரேடியோ ஜாக்கியாகத்தான் உருவாக வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததில்லை. என்னால் முடிந்தவரை அனைவரையும் சந்தோஷப்படுத்த நினைப்பேன். எனவே, இந்த வேலைதான் அதற்குப் பொருத்தமாக உள்ளது. மதுரை மக்களின் வீட்டில் ஒருவராக என்னை நினைத்துவருகிறார்கள். வாழ்வில் இதைவிட வேறு சந்தோஷம் எனக்குக் கிடைத்துவிட முடியாது. ஆதிமனிதன், பச்சையாக உணவை உண்டுவந்தான். இப்போது நாம் சமைத்துச் சாப்பிடுகிறோம். உணவு மாறியுள்ளது. ஆனால், மனிதனின் சாப்பிடும் பழக்கம் மாறவில்லை அதுபோலத்தான் ரேடியோவும். அன்று ரேடியோவை வீட்டில் வைத்து கேட்டுவந்தார்கள், இப்போது ஆன்லைன் மூலமாகவே ரேடியோ கேட்டுவருகிறார்கள்."

சேட்ட சேது
சேட்ட சேது

``கேட்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை குறையவில்லை. சொல்லப்போனால், அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் ரேடியோ கேட்க முடியாது. ஆனால் இன்று, கார் ஓட்டும்போதும், வீட்டில் வேலை பார்த்துக்கொண்டும் மக்கள் ரேடியோவை கேட்டு வருகிறார்கள். எனவே, கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுதான் உள்ளது.

ரேடியோ ஜாக்கியாக, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றால், 2007-ம் ஆண்டு, முதன்முறையாக நான் ரேடியோவில் பேசிய தினத்தைச் சொல்வேன். ரசிகர்களிடமிருந்து பாராட்டும், அன்பும் என் மனதுக்கு அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. ரேடியோதான் எனக்கு வாழ்க்கை; வாழ்க்கைத் துணையையும் தீர்மானித்தது."

நாலு மணி ஆனவுடன் மதுரை மக்கள் ஆவலுடன் கேட்கும் மிகமுக்கியமான குரலின் சொந்தக்காரர், ஹலோ எஃப்எம் ரேடியோ ஜாக்கி மணி,

``ரேடியோ தினத்தை நாங்கள் அலுவலகத்தில் கொண்டாடுவதைவிட நேயர்களுடன் கொண்டாடும்போதுதான் திருப்தியாக இருக்கும். நான் வேலைபார்த்துக்கொண்டேதான் பள்ளியில் படித்தேன். 7-ம் வகுப்பு படிக்கும்போது, ஹோட்டலில் ரேடியோ கேட்டுக்கொண்டுதான் வேலைபார்ப்பேன். அன்றிலிருந்து ரேடியோமீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பு இன்றுவரை சிறிதளவுகூட குறையவில்லை. கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும்போது, ரேடியோ ஜாக்கியாகச் சேர வேண்டும் என முயற்சி எடுத்தேன். மதுரையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டித் தெரிந்துகொண்டேன். அந்தத் தேடல்தான் இன்று மதுரை மக்களின் மத்தியில் எனக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியது. ரேடியோமூலம் என் பேச்சை மக்களின் மனத்தில் காட்சிப்படுத்த முடிகிறது. ஃபேஸ்புக்கில் மதுரைச் செய்திகளை வீடியோவாகப் பதிவிட்டுவருகிறேன். வீடியோவில் என்னை அறிமுகம் செய்வதைவிட, ரேடியோ ஜாக்கியாக என்னை அடையாளப்படுத்துவதில்தான் நான் பெருமைப்படுகிறேன்."

வாலு மணி
வாலு மணி

``அனைவரும், மதுரையைவிட சென்னை ரேடியோவில் பணியாற்ற ஆசைப்படுவார்கள். ஆனால், எனக்கு மதுரை மக்களோடு மதுரை பாஷையில் உரையாடுவதே பிடித்திருக்கிறது. நேயர்கள் பலர் தினமும் என்னுடன் பேசி வருகிறார்கள். அப்படி ஒரு நேயர் சிந்தாமணியைச் சேர்ந்தவர். ஒருநாள், அவர் வீட்டிலிருந்து கால் வந்தது. தினமும் என்னுடன் நிகழ்ச்சியில் பேசிய அந்த அண்ணனின் மனைவி பேசினார். ’அவர் இறந்துட்டார், உங்களைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டார், கடைசிவரை பார்க்க முடியாமல் போயிடுச்சு' என்றார். அந்த தினத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மீடியாவின் வெர்ஷன் அதிகமாக உள்ளது. இருந்தாலும் ரேடியோ தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. என்றும் தனக்கென உள்ள இடத்தில்தான் இருக்கும்"என்றார்.

மதுரை மக்களிடம் எப்போதும் காரசாரமாக செய்திகளைப் பகிர்ந்துகொள்வதில் ரேடியோ மிர்ச்சிக்கும், பரத்துக்கும் தனி இடம் உள்ளது. பரத் ரேடியோவில் பேசுவதைப் போலவே தனது அனுபவங்களையும் உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்,

``இந்த வேலை, நாலு சுவர்களுக்குள் இருந்து பேசுவதுபோல் தெரியும். ஆனால், ரேடியோ ஜாக்கிகளுக்கு மட்டுமே தெரியும், மதுரையில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் டீக்கடையிலும் அவர்களுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இருந்தாலும், ரேடியோ ஜாக்கிகளின் முகத்தைப் பார்க்காமல் தினமும் கால் பண்ணி நிகழ்ச்சியில் பேசுகிறவர்கள் அதிகம். என் ஆஃபீஸுக்கு, எட்டு பக்கங்களுடன் ஒரு கடிதம் வந்தது. அவர் வீட்டில் உள்ள கஷ்டங்கள், சூழ்நிலை என அனைத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். தனது குடும்பத்தில் ஒரு நபரிடமோ அல்லது நம்பிக்கைக்குரிய நபரிடம் மட்டும்தான் தனது மனநிலையைப் பகிர நினைப்போம். அந்தக் கடிதத்தின்மூலம் அவரின் வீட்டில் ஒரு நபராக என்னைப் பார்ப்பதை நான் உணர்ந்தேன். பார்வையற்ற நபர் ஒருவர் தொடர்ந்து என் நிகழ்ச்சியைக் கேட்டுவந்துள்ளார்."

மிர்ச்சி பரத்
மிர்ச்சி பரத்

``ஒருநாள் அலுவலகத்திற்கே என்னைத் தேடிவந்தார். சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும், பார்வையற்ற ஒரு நபர் பயணித்து என்னைத் தேடி வந்தார் என்பதை உணர மட்டுமே முடியும். அவரைக் கௌரவிக்க ஆசைப்பட்டேன். எனவே, லைவாக அவரை ரேடியோவில் பேசவைத்தேன். ரேடியோவின் நிலை மாறிவருகிறது. ஆனால், ரேடியோவிற்கு என்றும் அழிவு கிடையாது. பள்ளிப் பருவத்திலிருந்தே ரேடியோமீது ஆர்வம் அதிகம். இப்போது உள்ள இடத்தில்தான் அப்போதும் ஆபீஸ் இருந்தது. இந்த வழியாக நடந்துபோகும்போதெல்லாம் ஆர்வத்துடனும், ஒருநாள் இதில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் கடந்து செல்வேன். நானும் எல்லாத் துறைக்கும் போயிட்டு வந்துட்டேன். என்னுடன் இன்றுவரை கைகொடுப்பது ரேடியோ ஜாக்கிதான். ரேடியோவில் பின்னடைவு என்றால், ஒரு நிகழ்ச்சியை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு தொகுத்து வழங்கலாம். ஆனால், அலுவலகத்தையே ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செயல்படுத்துவது பின்னடைவாக நான் கருதுகிறேன்" என்றார்.

'ரேடியோ சிட்டி' பிரவீன், தீராக்காதல்கொண்ட ரேடியோவைப் பற்றி பேசுகையில்,

"ரேடியோமீது எனக்கு ஒரு தீராத காதல் உண்டு. காதலர் தினம் என்றால் பிப்ரவரி14. ஆனால், எங்களுக்கு பிப்ரவரி 13 தான் காதலர் தினம். எல்லாத் துறைகளிலும் பணியாற்றினேன். படம் இயக்கினேன், ரிப்போர்ட்டராக இருந்தேன், புத்தகம் எழுதத் தொடங்கினேன். ஆனால், ரேடியோதான் எனக்கு இறுதிவரை கைகொடுத்தது, கைகொடுத்துவருகிறது. ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள்காட்டி, தற்கொலை செய்துகொள்வது தவறு என்பது குறித்து சிறிது நேரம் ஷோவில் பேசினேன். ஒருவர் போனில் அடித்துச் சொன்னார், `நான் தற்கொலை செய்துகொள்ளத் தயாராக இருந்தேன்' ஆனால், நீங்க பேசியது என்னை மாற்றியது” என்றார்.

ரேடியோ சிட்டி பிரவீன்
ரேடியோ சிட்டி பிரவீன்

"இதை என் வீட்டில் பெற்றோர்களிடம் சொன்னேன். அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த போன் கால், எனக்கு பொறுப்பு இருப்பதை உணர்த்தியது. நான் பேசும் வார்த்தை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியது. சமூகத்தில் ஒரு சிறு மாற்றம், என்னால் என்று வருகிறதோ அன்றுதான் நான் பெருமைப்படும் நாள். ரேடியோ ஜாக்கி ஆவதற்கு தகுதி என்னவென்றால், நல்லா பேசத் தெரியணும். அந்தப் பேச்சு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கணும். சிவகார்த்திகேயனைப் பார்த்துதான் எனக்கு மீடியா மீது ஆர்வம் வந்தது. ஒருமுறை அவரை இன்டர்வியூ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்டர்வியூவின் முடிவில் `நல்லா பண்றீங்க பிரதர்' என்றார்."

``நான் யாரைப் பார்த்து மீடியாவிற்கு வந்தேனோ அவரை என்னை பாராட்டியது மறக்க முடியாத தினமானது. இவன் என்ன சாதிக்கப் போறான்னு சொன்ன எல்லாரையும் வாயடைக்க வைத்தது இந்த ரேடியோதான். எனவே ரேடியோ மீது எனக்குள்ள தீராக்காதல் தொடரும்” என்றார்.

ரேடியோ லவ்
ரேடியோ லவ்

காற்றின் அலை மூலம் மதுரை எங்கும் பரவிக்கிடக்கும் இவர்களின் குரல்களுடன் தூங்காநகரமும் இன்று உலக ரேடியோ தினத்தை கொண்டாடி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு