Published:Updated:

“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி

மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
மமதி சாரி

சாட்டிலைட் சேனல் களின் ஆரம்பகாலத்திலேயே முன்னணித் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் இவர்.

“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி

சாட்டிலைட் சேனல் களின் ஆரம்பகாலத்திலேயே முன்னணித் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் இவர்.

Published:Updated:
மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
மமதி சாரி

மமதி சாரி... பெயரைக் கேட்டதும் பலருக்கும் விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். ஆனால் சாட்டிலைட் சேனல் களின் ஆரம்பகாலத்திலேயே முன்னணித் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் இவர். இடையில் காணாமல் போவதும் மீண்டும் வருவதுமாக இருப்பவர், இப்போது தனியார் நிறுவனமொன்றில் ஹெச்.ஆராக வேலை பார்க்கிறார். ‘தி மேக்கிங் ஆஃப் ஹீரோஸ்: தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸோயி அண்ட் ஸ்க்ரஃபி (The Making of Heroes: The Adventures of Zoe and Scruffy’) என்ற புத்தகத்தின் மூலம் எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

காணாமல்போன காரணம் தொடங்கி, எழுத்தாளர் அவதாரம் எடுத்த கதை வரை பேசும் மமதியின் பேட்டி யில் அவ்வளவு சுவாரஸ்யம்.

‘`93-ம் வருஷம் ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோது பொழுதுபோக்கா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். அத்தனை முன்னணி சேனல்கள்லயும் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்திருக்கேன். பிக் எஃப்.எம்ல ஆர்.ஜேவாகவும் இருந்திருக்கேன். இப்படிப் பரபரப்பா போயிட்டிருந்த பயணத்தை இடையில கொஞ்சம் நிறுத்தி இளைப்பாற வேண்டிய கட்டாயம்... பல பெண்களுக்கும் வரக்கூடிய குடும்ப பிரச்னைதான் எனக்கும்.

ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு அதை யெல்லாம் சரி செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, அந்த அவகாசம் பலனளிக்கலை. எங்களுக்கு விவாகரத்தாயிடுச்சு. சட்ட ரீதியான என் முன்னாள் கணவரை நான் அளவுகடந்து நேசிச்சேன், இப்பவும் நேசிக்கி றேன். பிரிவால ஏற்பட்ட மன அழுத்தத்து லேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங் களாச்சு. என்னால எந்த வேலையையும் செய்ய முடியலை...’’ வார்த்தைகளை முந்தும் வலியை சிரிப்பால் மறைத்து தொடர்கிறார் மமதி.

“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி

``இடைவெளிக்குப் பிறகு மறுபடி வேலையைத் தொடர்வதுங்கிறது ரொம்பவே கஷ்டம். இந்தச் சவால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். மறுபடி வேலை செய்யணும்ங்கிற கட்டாயம் எனக்கு. ஆனா மன அழுத்தத்துல இருக்கும்போது முகமும் சிந்தனையும் தெளிவா இருக்காது. தொலைக்காட்சி வேலைக்கு மேக்கப் போட்டுட்டு சிரிச்சுட்டு நின்னா மட்டும் போதாது. சொல்ல விஷயம் இருக்கணும். நான் அப்போ அந்த நிலையில் இல்லை. மறுபடி தொலைக்காட்சிக்கு வர்றதுல இடைவெளி ஏற்பட இதுதான் காரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிக் பாஸ்’ வாய்ப்பு வந்தது. நான் மறுபடி வந்துட்டேன்னு சொல்ற ஓர் அறிவிப்பாதான் அந்த நிகழ்ச்சி யைப் பார்த்தேன்’’ என்பவர் `பிக் பாஸ்' வீட்டிலிருந்து விரைவாக வெளியேறினார். வந்த வேகத்தில் வேறு சேனல்களில் நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்கினார். மீண்டும் காணாமல் போனார்.

``இந்த முறை காணாமப் போனேன்னு சொல்ல முடியாது. ஆனா, எனக்கேற்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காக காத்திட்டிருக்கேன்னு வேணா சொல்லலாம்...’’ என்பவர், புத்தகத்துக் கான விதை விழுந்த ஃப்ளாஷ்பேக் பகிர்கிறார்.

‘`நானும் என் முன்னாள் கணவரும் 12 ஆண்டுகள் ஒண்ணா இருந்தோம். சின்னதும் பெரிசுமா பிரச்னைகள் வந்தபோது, அதை யெல்லாம் சரிசெய்ய என்னால முடிஞ்ச எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். அந்த உறவுலேருந்து வெளியே வந்தபோதும் மனசு முழுக்க அன்பையும் காதலையும் எடுத்துட்டு தான் வந்தேன். என் முன்னாள் கணவருக்கு எனக்கு முன்பே திருமணமாகி, விவாகரத்தாகி யிருந்தது. அந்தத் திருமணம் மூலமா அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. வார இறுதி உட்பட எல்லா விடுமுறைகள்லயும் பாப்பா என்கூட வந்து இருப்பா. ஒருநாள் அவகூட உட்கார்ந்து அவளுக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.

நான் சின்ன வயசுலேருந்தே நிறைய எழுதுவேன். அந்த ஆர்வத்துல, என் குழந்தை கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை ஒரு புத்தகமா எழுதி, முதல் பாகத்தை அவளுடைய எட்டாவது பிறந்தநாளைக்கு கிஃப்டா கொடுத்தேன். பத்தாவது பிறந்த நாளைக்கு இரண்டாவது பாகத்தையும் எழுதிக்கொடுத்தேன். ‘ஆன்ட்டி... இதை ஏன் நீங்க புத்தகமா பப்ளிஷ் பண்ணக்கூடாது’ன்னு கேட்டுட்டே இருந்தா. இடையில எனக்கும் என் முன்னாள் கணவருக்குமான பிரச்னைகள் நடந்திட்டிருந்ததால எதுலயும் கவனம் செலுத்த முடியலை. என் எழுத்தார்வம் தெரிஞ்ச நண்பரை எதேச்சையா சந்திச்சேன். ‘நீங்க எழுதினதைக் கொடுங்க, பப்ளிஷருக்கு அனுப்பறேன்’னு கேட்டார். என் வயித்துல பிறக்காத குழந்தைக்காக நான் எழுதின இரண்டு பாகங்களையும் இணைச்சு தான் ‘தி மேக்கிங் ஆஃப் ஹீரோஸ்’ புத்தகத்தை ரிலீஸ் பண்ணியிருக்கோம்.

சிந்தனைகளையும் நல்ல கருத்துகளையும் குழந்தைங்ககிட்ட திணிக்க முடியாது. அவங்க நம்மைப் பார்த்துதான் கத்துப்பாங்க. அப்படி நான் என் குழந்தைக்கு சொல்ல நினைச்ச எல்லாம் இந்தப் புத்தகத்துல இருக்கு...’’ நம்பிக்கை தருபவரின் பேச்சு, மீண்டும் மண வாழ்க்கை நோக்கித் திரும்புகிறது.

``கல்யாண உறவுலேருந்து பிரிஞ்சு வந்த போது தனியா என்ன செய்யப்போறோம்ங்கிற பயம் இருந்தது. ‘பயப்படாதே... என்னிக்கும் பட்டினி இருக்க மாட்டே’னு ஒரு நண்பர் சொன்னபோது கோபம் வந்தது. ‘அதை நினைச்சா எனக்கு பயம்... எத்தனை கனவுகள் வெச்சிருந்தேன்... ஒண்ணுமே இல்லையே'ன்னு யோசிச்சேன். போகப் போகத்தான் அவர் சொன்னதோட ஆழம் புரிஞ்சது. வேலை செய்ய ஆரம்பிச்சேன். வேலை செய்யச் செய்ய அழுத்தம் குறைஞ்சது. வாழ்க்கையில ஓரளவுக்கு சந்தோஷமா சிரிச்சிட்டு முன்னுக்கு வரடியும்னு புரிஞ்சது. அப்படிப்பட்ட ஒரு தருணத்துலதான் இந்தப் புத்தகம் வெளியே வந்தது.

“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி

கல்யாண உறவுல எடுத்தோம், கவிழ்த் தோம்னு முறிச்சுட்டு வெளியே வந்துடக் கூடாது. முடிஞ்சவரை அதைச் சரிசெய்ய முயற்சிகள் எடுத்து, அதையும் மீறி சரியா வரலைனா மட்டும்தான் வெளியே வரணும். அதே நேரம், தீர்க்கவே முடியாத பிரச்னையில, குழந்தைங்களுக்காக ஒண்ணா இருக்க நினைக்கிறதும் தவறான முடிவு. அப்பா-அம்மாவுக்கு இடையே நல்ல உறவு இல்லை, என்னிக்குமே வீடு போர்க்களமா இருக்குங்கிற சூழல்ல வளரும் குழந்தைங்க, பெரியவங்களாகி திருமண உறவுல இணையுறபோது, தான் பார்த்த சூழல்தான் இயல்பானதுனு நினைச்சுப் பாங்க. அதனால சரி செய்யவே முடியாத பிரச்னைகள் இருந்தா, குழந்தைங்களுக்காக பிரியறதுல தப்பே கிடையாது...’’ அவசிய அட்வைஸ் தருபவர், பெறாத குழந்தையை பல வருடங்களாக சந்திக்காத மனவலியில் இருக்கிறார்.

``எங்க பிரிவுக்குப் பிறகு குழந்தையை நான் சந்திக்கலை. நம்மூரைப் பொறுத்தவரை வளர்ப்புத்தாய்க்கு சட்டரீதியான எந்த உரிமைகளும் கிடையாது. பார்க்காததாலயோ, பிரிஞ்சிருந்தாலோ பாசம் குறைஞ்சிடுமா என்ன...’’ தாய்மைத் தவிப்புடன் கேட்பவருக்கு, கனவுகள் காத்திருக்கின்றன.

‘`நியூரோ சர்ஜனாகணும் அல்லது எழுத் தாளராகணும்ங்கிறது என் கனவு. முதல் கனவு நடக்கலை. இரண்டாவது கனவை நனவாக்க இதுதான் சரியான நேரம்னு தோணுது. பாதை தெளிவா தெரியுது. நான் எழுதின ஏழு புத்தகங்கள் ஒவ்வொண்ணா ரிலீசாகும். அடுத்து என்னுடைய முயற்சி ‘குறள் ஃபார் கிட்ஸ்’. குறள்கள் தமிழ்ல இருக்கும். குறளுக் கான விளக்கம் சுலபமா புரியக்கூடிய ஆங்கிலத் துல இருக்கும். தமிழ் தெரியாத குழந்தைகளுக் கும் குறளின் மகத்துவத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி இது. வலிகளை மறந்து வாழ எழுத்துங்கிற புதிய பயணம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு...’’ என்று முடிப்பவரிடம் வலி மறைத்த அதே புன்னகை.அவள் விகடன் சேனலில் வெளிவந்த மமதி சாரியின் முழு பேட்டியை

https://bit.ly/3JxqcNN இந்த லிங்க்கில் பார்க்கலாம்.

“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி
“விவாகரத்தால ஏற்பட்ட மன அழுத்தத்துலேருந்து வெளியே வர எனக்குப் பல வருஷங்களாச்சு!” - மமதி சாரி