Published:Updated:

`மாஸ்டர் செஃப்’-ல் விஜய் சேதுபதியின் லுல்லுலாயி, எகிறிய நடுவர், வெளியேறிய போட்டியாளர்கள்!

மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி

'பிரஷர் டெஸ்ட்' ஆரம்பித்தது. இதற்கு தரப்பட்ட நேரம் 90 நிமிடம். குறிப்பிட்ட சமையலை எப்படிச் செய்வது என்பது தொடர்பாக ஹரீஷ் தந்திருந்த விளக்கமான குறிப்புகள் ஆறு பக்கத்துக்கு இருந்தன.

Published:Updated:

`மாஸ்டர் செஃப்’-ல் விஜய் சேதுபதியின் லுல்லுலாயி, எகிறிய நடுவர், வெளியேறிய போட்டியாளர்கள்!

'பிரஷர் டெஸ்ட்' ஆரம்பித்தது. இதற்கு தரப்பட்ட நேரம் 90 நிமிடம். குறிப்பிட்ட சமையலை எப்படிச் செய்வது என்பது தொடர்பாக ஹரீஷ் தந்திருந்த விளக்கமான குறிப்புகள் ஆறு பக்கத்துக்கு இருந்தன.

மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி
சுடுதண்ணீர் வைப்பது தவிர, சமையல் பற்றிய எந்தவொரு அறிவும் ஆர்வமும் துளி கூட இல்லாத எனக்கே, ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஞாயிற்றுகிழமை மாஸ்டர் செஃப் எபிசோட் தந்தது. அப்படியொரு பரபரப்பு; விறுவிறுப்பு; சுவாரஸ்யம்.
நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் தான் தந்த சவாலை சரியாக எதிர்கொள்ள முடியாத இரண்டு போட்டியாளர்களிடம் எகிறித் தள்ளிவிட்டார் செஃப் ஹரீஷ். 'Masterchef Tamil is not a Joke' என்று உரத்த குரலில் அவர் சொன்னது மாஸ் ஹீரோவின் 'பன்ச் டயலாக்'கிற்கு நிகராக இருந்தது.

தோற்று நின்ற போட்டியாளர்களைப் பார்க்க ஒருபக்கம் பரிதாபமாகவே இருந்தாலும், தன்னுடைய கடுமையான எதிர்வினையின் நியாயங்களையும் காரணங்களையும் செஃப் ஹரீஷ் அடுக்கிய போது சரியாகவே தோன்றியது. தன்னுடைய தொழிலை மிக சீரியஸாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் எடுத்துக் கொள்பவரிடமிருந்து வெளிப்படும் கடுமையாகவே அதைப் பார்க்க வேண்டும்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

மறுபடியும் அதேதான். 'சமையல் என்பது காமெடி இல்லை. சீரியஸான விஷயம்' என்பதை MCT திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சமையலை தீவிரமாக பின்பற்ற விரும்புவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் நிறைய பாடங்கள் இருக்கின்றன. சமையல் என்றல்ல, தான் சாாந்திருக்கும் எந்தவொரு துறையிலும் நூறு சதவிகித உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தர வேண்டும் என்கிற உத்வேக பாடம் ஒவ்வொருவருக்கும் இதில் கிடைக்கக்கூடும்.

ஹரீஷ் ராவின் கமென்ட்டுகளில் தீ பறக்கும் அளவுக்கு இன்றைய எபிசோடில் என்னதான் நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.

இதற்கு முந்தைய எபிசோடில் சிவப்பு அணி தோற்று விட்டதால் அதில் இருந்த ஆறு நபர்களும் இன்றைய நாளின் சவாலை எதிர்கொள்ள வேண்டும். (அதென்னமோ! சிவப்பு நிறத்துக்கும் மாஸ்டர் செஃப்புக்கும் ராசியில்லை. சிவப்பு நிற அணியில் வருகிறவர்கள் எல்லாம் danger zone-ல் வந்து நிற்கிறார்கள்!).

'தங்களுக்கு இன்று என்ன சவால் காத்திருக்கிறதோ?' என்கிற பதைபதைப்பில் போட்டியாளர்கள் நின்று கொண்டிருந்த போது "இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்" என்று கிளம்பினார் செஃப் ஹரீஷ். அவரை ஜாலியாக கிண்டலடிப்பது போல் செயல்பட்ட விஜய் சேதுபதி "சரி... நானும் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்று பழிக்குப் பழியாக அவரும் கிளம்பினார். (வெவ்வவ்வே!)

இருவரும் தனித்தனியான சவால்களை கொண்டு வரப்போகிறார்களோ என்று போட்டியாளர்களுக்குள் பீதி பரவ, அதுவேதான் நிகழ்ந்தது. இருவருமே பிளேட் கவர் வைத்து எதையோ மூடிக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஒரு சிறிய சஸ்பென்ஸுக்குப் பிறகு தான் கொண்டு வந்திருந்ததை திறந்து காட்டினார் ஹரீஷ். அது அவருடைய 'Signature dish'. 'ருசியான ரகசியம்' என்பது அதன் பெயர். நாற்பது விதமான சமையல் பொருட்களைக் கொண்டு அது தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். பர்கர் போன்று காட்சியளித்த அந்த அயிட்டம், ஒரு தேர்ந்த ஓவியம் போல் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே மிக நேர்த்தியாக இருந்தது.

'’அய்யோ... இதையா செய்ய வேண்டும். நம்மால் முடிகிற காரியமா இது?" என்று ஆறு போட்டியாளர்களும் மனதிற்குள் அலறிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் போட்டி அது இல்லையாம்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

'Taste Challenge'. ஹரீஷ் தயார் செய்திருக்கும் உணவை முகர்ந்தோ, கையால் ஆராய்ந்தோ அதில் என்னவிதமான சமையல் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒவ்வொருவராக வரிசையில் வந்து சொல்ல வேண்டும்.

இதில் முதலில் தவறு செய்யும் மூன்று நபர்கள், அடுத்து நிகழும் 'Pressure test'-ஐ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் பின்தங்குபவர், எலிமினேட் ஆவார். இந்த பிரஷர் டெஸ்ட்டில் இவர்கள் விஜய் சேதுபதி கொண்டு வந்திருக்கும் சவாலையும் கூடுதலாக ஏற்க வேண்டுமாம்.

"நவ்ஸீன்... நீங்கதானே ரெட் டீம் கேப்டன். யாரு முதல்ல 'Taste Challenge'-க்கு வரப் போறாங்கன்றதை நீங்களே முடிவு பண்ணுங்க" என்று நவ்ஸீனிடமே அந்தப் பொறுப்பை செஃப் ஹரீஷ் ஒப்படைத்தார். வரிசையில் முதலில் வருபவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். ஏனெனில் எளிதாக யூகிக்க முடிகிற பொருட்களை 'டக்'கென்று சொல்லி தப்பிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்.

படு சாமர்த்தியமாக இருந்த நவ்ஸீன் "நான் முதல்ல வர்றேன். அதன் பிறகு தாரா, கிருத்திகா, நித்யா, சுனிதா, ஷாஜியா என்கிற ஆர்டர் இருக்கட்டும்" என்று வரிசையை முடிவு செய்தார். இந்த முடிவில் சக போட்டியாளர்களின் மீது அவருக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் கலந்திருக்கலாம். அல்லது அப்போதைய டென்ஷனில் எதையாவது சொல்லியிருக்கலாம். நவ்ஸீன் தன்னை பின்னுக்குத் தள்ளி விட்டதில் நித்யாவுக்கு சற்று வருத்தம்.

'டேஸ்ட் சேலன்ஞ்' ஆரம்பித்தது. முதலில் வந்த நவ்ஸீன் உணவை முகர்ந்து பார்த்து 'எள்' என்கிற பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதை தெரிவித்தார். அது சரியான விடை. இப்படியே வரிசையாக வந்து ஒவ்வொருவரும் சரியான விடையைச் சொன்னாலும், யார் முதலில் தவறு செய்வார் என்கிற பதைபதைப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது. செஃப் ஹரீஷ் வேறு தனது முடிவை உடனே சொல்லாமல், சிலருக்கு டென்ஷனை ஏற்றிய பிறகுதான் 'சரியான விடை' என்றார்.

இந்த வரிசையில் சுனிதா சொன்ன ஒரு பதிலை ஸ்மார்ட்டான மூவ் எனலாம். உப்பில்லாமல் எதையும் சமைக்க முடியாது.. எனவே 'உப்பு' என்கிற பாதுகாப்பான சாய்ஸை விடையாக முன்வைத்தார். 'இவ்ள நேரம் பார்த்துட்டு 'உப்பு'ன்னு சொல்றீங்க. ஓகே. கரெக்ட்டான ஆன்ஸர்' என்று அரைமனதாக அதை ஏற்றுக் கொண்டார் ஹரீஷ். சுனிதாவின் பதில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அசந்தர்ப்பமான சூழலில் சமயோசித உத்தியை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதுதான் சரியான விஷயம்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

தக்காளி, வெண்டைக்காய், ஸ்பிரிங் ஆனியன்... என்கிற சாதாரண பதில்களோடு புளிச்ச கீரை, வேர்க்கடலை என்கிற நுட்பமான விடைகளும் வந்து கொண்டிருந்தன. 'யார் முதலில் தவறு செய்வாரோ?' என்று நமக்கே டென்ஷன் ஆகத்தான் இருந்தது.

இந்த வகையில் மூன்றாவது சுற்றில் முதலாவதாக மாட்டியவர் நவ்ஸீன்தான். 'வினிகர்' என்று அவர் சொன்ன அயிட்டத்தை 'குறிப்பா... எந்த வினிகர்-ன்னு சொல்லுங்க" என்று தூண்டிலை இறுக்கினார் ஹரீஷ். 'பால்சமிக் வினிகர்' என்று நவ்ஸீன் சொன்னது தவறான விடை. எனவே தோற்ற வரிசையில் சென்று நிற்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

மறுபடியும் தொடர்ந்த ஆட்டத்தில் 'கடுகு எண்ணைய்' என்று தவறாகச் சொல்லி மாட்டிக் கொண்டார் தாரா. அடுத்த பிழையைச் செய்தவர் ஷாஜியா. அவர் சொன்னது 'முட்டை'. ஆனால் அது 'தேங்காய் க்ரீமாம்'.

ஆக... சரியான விடையைச் சொன்ன மற்றவர்கள் தப்பித்துக் கொள்ள, தவறான விடையைச் சொன்ன நவ்ஸீன், தாரா மற்றும் ஷாஜியா ஆகிய மூவரும் 'பிரஷர் டெஸ்டை' எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் இதில் ஒரு சிறிய திருப்பம் ஏற்பட்டது. 'Immunity pin'- ஐ ஏற்கெனவே நவ்ஸீன் வென்று கையில் வைத்திருக்கிறார். இப்போது அதைப் பயன்படுத்தி 'தன்னைக் காப்பாற்றிக் கொள்வாரா' என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது. இதையே செஃப் கௌஷிக் அதிகாரபூர்வமான கேள்வியாக கேட்டார்.

நவ்ஸீனுக்கு 'பிரஷர் டெஸ்ட்டை' ஏற்க மனமில்லை; துணிச்சலும் இல்லை. 'ஏன்... அவர் இந்த டெஸ்ட்டில் தேர்வாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே... எனில் இதை வென்று immunity pin-ஐ அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடியுமே?' என்ற கேள்வி எழுந்தாலும் அது நியாயமே. ஆனால் நவ்ஸீன் நீண்ட நேரம் யோசித்து செய்த முடிவு 'இம்யூனிட்டி பின்'-ஐ பயன்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே. ஆனால் அது எத்தனை சரியான முடிவு என்பது பின்னால் தெரிந்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

நவ்ஸீன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டதால் 'பிரஷர் டெஸ்ட்' என்பது தாரா மற்றும் ஷாஜியாவிற்கு இடையில் நடைபெறும். ஷாஜியாவை விடவும் தாரா சமையலில் எக்ஸ்பர்ட் என்பதால் ஷாஜியாவுக்கு அப்போதே சுரத்து குறைந்து விட்டது.

தான் செய்த 'சிக்னேச்சர் டிஷ்ஷில்' என்னெ்னன பொருட்களையெல்லாம் உபயோகப்படுத்தியிருக்கிறேன், அதை எப்படியெல்லாம் செய்தேன்... என்பதை ஹரீஷ் விளக்கிய போது கேட்கவே பிரமிப்பாக இருந்தது.

"இது நம்ம ஊரு வடைங்க... ஆனால் இதை வழக்கமான முறையில் தயாரிக்காமல் வித்தியாசமான சிந்தனையோடு உருவாக்கியிருக்கிறேன். வெண்டைக்காயை பொதுவாக பலர் சாப்பிட விரும்ப மாட்டார்கள். நான் அதன் நடுப்பகுதியை மட்டும் உருவி எண்ணையில் பொறித்து மொறு மொறுப்பாக வைத்திருக்கிறேன். நம்முடைய பாரம்பரிய கீரை வகையை உபயோகப்படுத்தியிருக்கிறேன்" இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார் ஹரீஷ்.

இப்போது தாரா மற்றும் ஷாஜியாவின் முன் உள்ள சவால் என்னவெனில், ஹரீஷ் ராவின் 'சிக்னேச்சர் டிஷ்'-ஐ அவர்கள் செய்ய வேண்டும். இதன் நடுவில் விஜய் சேதுபதியும் ஒரு சேலஞ் வைத்திருந்ததாக சொன்னார் அல்லவா? அது சும்மா ‘லுல்லுலாயி’'. அவர் மூடி கொண்டு வந்திருந்த தட்டில் பறவைப் பொம்மைகள் இருந்தன. அதைப் பார்த்ததும் அரங்கமே இறுக்கம் தளர்ந்து சிரித்தது. டென்ஷனில் நின்றிருந்த ஷாஜியாவும் தாராவும் கூட வாய் விட்டு சிரித்தார்கள்.

'பிரஷர் டெஸ்ட்' ஆரம்பித்தது. இதற்கு தரப்பட்ட நேரம் 90 நிமிடம். குறிப்பிட்ட சமையலை எப்படிச் செய்வது என்பது தொடர்பாக ஹரீஷ் தந்திருந்த விளக்கமான குறிப்புகள் ஆறு பக்கத்துக்கு இருந்தன. (யப்பாடியோவ்! மனுஷர் நிறைய அடிஷனல் ஷீட் வாங்கி எக்ஸாம்ல பாஸ் பண்ணவர் போலிருக்கு!).

ஷாஜியாவுக்கு உண்மையிலேயே இது 'பிரஷர்' டெஸ்ட்தான். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய அவர் ஆரம்பக்கட்டத்தில் நிறைய தடுமாறினார்; திகைத்து நின்றார். "ஷாஜியா.. டென்ஷன் ஆகாம பண்ணுங்க... வெற்றி உங்களுக்கே" என்று அவரை ஆற்றுப்படுத்தினார் விஜய் சேதுபதி.

"போன முறை கூட என்ன ஆச்சு? அரை மணி நேரம் அழுதீங்க. ஆனா பாக்கி அரை மணி நேரத்துல செஞ்சு முடிச்சு... ஜெயிச்சுட்டீங்க... அதனால இந்த முறையும் உங்களால முடியும். நிதானமா யோசிச்சு பண்ணுங்க" என்று ஹரீஷ் ராவும் ஷாஜியாவின் அருகில் வந்து ஆறுதல் சொன்னார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

ஷாஜியாவை விடவும் தாரா சற்று அதிக அனுபவமுள்ளவர் என்ற போதிலும் அவரும் கூட தடுமாறிக் கொண்டிருந்தார். பிட் அடிக்கும் மாணவன் மாதிரி, விளக்க குறிப்பை பார்த்து பார்த்து எதையோ செய்து கொண்டிருந்தார்.

"இதுல வடைதான் ஹீரோ. அதை குறிப்பா பாருங்க... மாவு பதம் செக் பண்ணிக்கங்க.. நீங்க தயார் பண்ணியிருக்கறது சரியான்னு தெரியல" என்று அவ்வப்போது ஹரீஷ் இருவரின் அருகில் வந்து எச்சரிக்கை டிப்ஸ் தந்து கொண்டிருந்தார்.

ஷாஜியா சுட்ட வடை, வட்டமான வஸ்துவாக தென்பட ஆரம்பித்த உடனேயே, பால்கனியில் இருந்த போட்டியாளர்கள் ஆதரவாக கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள். என்றாலும் வடை சரியாக வேகாததால் மறுபடியும் அதை எண்ணையில் போட்டு பொறித்துக் கொண்டிருந்தார் ஷாஜியா. (வட போச்சே!).

"இன்னமும் பத்து நிமிஷம்தான் இருக்கு.. இப்ப நீங்க பிளேட்டிங் செய்ய ஆரம்பிச்சிருக்கணும்" என்று உரத்த குரலில் செஃப் ஆர்த்தி அறிவிப்பு செய்த போது கூட வேலை முடியவில்லை. இருவருமே தடுமாற்றத்துடன் தாங்கள் செய்த வஸ்துவை தட்டில் போட்டு கந்தரகோலமாக அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். இறுதி நொடி வரை அவர்களின் தடுமாற்றம் தொடர்ந்தது. தாரா சற்று சமாளித்துக் கொண்டாலும் எல்கேஜி வகுப்புக்கு முதல் நாள் சென்ற குழந்தை மாதிரி ஷாஜியா கலங்கிக் கொண்டிருந்தார்.

அவர்கள் செய்த வஸ்து பரிசோதனை மேஜைக்கு வந்தது. ஹரீஷின் 'கையெழுத்து டிஷ்'தான் இருவரின் தலையெழுத்தையும் இன்று நிர்ணயிக்கப் போகிறது. ஷாஜியா தயாரித்திருந்ததில் 'தொட்டுக் கொள்ள சாஸ் இல்லை.... வெண்டைக்காயில் எண்ணைய் அதிகம்....' என்பது போன்ற நெகட்டிவ் கமென்ட்கள் ஏராளமாக வந்தன.

தாரா செய்தததில் பிளேட்டிங் ஒரளவுக்கு ஓகே என்றாலும் சுவை மிக மோசமாக இருந்தது. '’வடை சரியா வேகலை. தொண்டைல சிக்குது’' என்று முகஞ்சுளித்தார் செஃப் ஆர்த்தி. "என்னோட கையெழுத்தை இப்படி அலங்கோலமாக்குவாங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை" என்று உண்மையான வருத்தத்தோடு சொன்னார் ஹரீஷ். "அவங்க மேல நாம எதிர்பார்ப்பை அதிகம் வெக்கிறோம். ஆனா அவங்க அதை நிறைவேற்றலை' என்று அந்த வருத்தத்தை வழிமொழிந்தார் கெளஷிக்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

ஆக... இருவர் செய்திருந்த விதம் நீதிபதிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவர்களின் முகங்களில் அப்பட்டமான ஏமாற்றமாக பிரதிபலித்தது.

"தாரா... நீங்க குறிப்பு விளக்கத்தை சரியாவே படிக்கலை. ஒரு பக்கத்தையே மிஸ் பண்ணிட்டீங்க.. அதனால சில பொருட்கள் சமையல்ல சேர்க்கப்படலை. ஷாஜியா... நீங்க சூடான எண்ணெய்ல மறுபடியும் எண்ணெய் ஊத்தி அதில் வடையை வேக வைக்க ட்ரை பண்ணீங்க.. எப்படி சரியா வரும்,? உங்க எல்லோர் மேலயும் எங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. ஆனா, அந்த சீரியஸ்னஸ் உங்ககிட்ட சுத்தமா இல்ல. நாங்க மூணு பேரும் இன்டர்நேனஷல் செஃப் லெவல்ல வேலை செஞ்சு அந்த பிரதிநிதிகளா உங்க முன்னாடி நிக்கறோம். அதுக்கு நீங்க நியாயம் பண்ணவேயில்லை..." என்று ஆரம்பித்து செஃப் ஹரீஷ் இடது வலமாக போட்டியாளர்களை காய்ச்சித் தள்ளிய போது அரங்கமே மயான அமைதியில் ஆழ்ந்தது. "Masterchef Tamil is not a Joke.. என்று அவர் உரத்த குரலில் சொன்ன போது அவர் தன் தொழிலையும் இந்த நிகழ்ச்சியையும் எத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது போட்டியாளர்களுக்கு புரிந்திருக்கும்.

"என்னுடைய சிக்னேச்சர் டிஷ்-ன்றதால என் அனுபவத்துல நான் 45 நிமிஷத்துல பண்ணிடுவேன். ஆனா அது உங்களுக்கு சிரமம்றதால 90 நிமிடங்கள் தந்தோம். அது தவிர விரிவான குறிப்புகள் தந்திருக்கேன். ஆக... சிந்தனையை நான் தந்து விட்டேன். தோற்றம் கூட மேட்ச் ஆகலை. அது தவிர சுவை..? அது இன்னமும் மோசம். என்னோட டிஷ்ஷோட ஒப்பிடும் போது 70 அல்லது 60 சதவிகிதமாவது மேட்ச் பண்ணுவீங்கன்னு பார்த்தேன். ஆனா நீங்க ரெண்டு பேருமே 5% கூட வரலை" என்று சொன்ன ஹரீஷின் குரலில் கறார்த்தனத்துடன் ஏமாற்றமும் கலந்திருந்தது.

ஹரீஷ் அடுத்து செய்த விஷயம்தான் இன்னமும் அதிர்ச்சி. "இது மத்த போட்டியாளர்களுக்கும் ஒரு பாடமா இருக்கணும். இந்த நிகழ்ச்சியை ரொம்ப லேசா எடுத்துக்கறீங்க... ரூல் படி ஒரு எலிமினேஷன்தான் செய்யணும். ஆனா வேற வழியில்ல. இந்த வாரம் ரெண்டு எலிமினேஷன். நீங்க ரெண்டு பேருமே போட்டியில் இருந்து நீக்கப்படுறீங்க" என்று ஹரீஷ் சொன்னவுடன் தாரா மற்றும் ஷாஜியா ஆகியோரின் முகங்களில் சங்கடமும் குற்றவுணர்வும் தெரிந்தது. செஃப்களின் நியாயமான எதிர்பார்ப்பை தாங்கள் ஈடுகட்டவில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். தாங்கள் சொதப்பிய விஷயங்கள் அவர்களுக்கே நன்கு தெரிந்திருந்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

"உங்க கிட்ட passion இருக்கு. ஆனா அதை இன்னமும் நீங்க மேலே மேலே தகுதிப்படுத்திக்கணும்" என்று செஃப் கெளஷிக் தன் குரலில் கனிவை கூட்டி உபதேசம் செய்தார். "இங்க வந்து நிறைய கத்துக்கிட்டோம்" என்று நெகிழ்ந்தபடி சொன்ன தாராவும் ஷாஜியாவும் மெல்ல கதவை நோக்கி சோகமாக நகர்ந்தார்கள்.

அந்த இருவரையும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு வருத்தத்தை விடவும் இனி வரும் போட்டிகளை நாம் தீவிரமான உணர்வுடன் கையாள வேண்டும் என்கிற ஜாக்கிரதையுணர்வு அதிகமாகத் தெரிந்தது.

ஆக... இனி வரும் போட்டிகள் ரணகளமாகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடனும் இருக்கும் போலிருக்கிறது.