Published:Updated:

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் வித்தியாசம் தெரியுதோ இல்லையோ `மாஸ்டர் செஃப்’ல் நல்லாவே தெரியுது!

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (18-09-2021) ஒளிபரப்பான 13-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் வித்தியாசம் தெரியுதோ இல்லையோ `மாஸ்டர் செஃப்’ல் நல்லாவே தெரியுது!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (18-09-2021) ஒளிபரப்பான 13-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

கவனித்திருக்கிறீர்களா..? சிலருக்கு உணவை விநோதமான காம்பினேஷன்களில் சாப்பிடுகிற பழக்கம் இருக்கும். ரவா உப்புமாவில் ரசத்தை ஊற்றிச் சாப்பிடுபவர்கள் உண்டு. சோற்றில் தேங்காய் சட்டினியைக் கலந்து அடிப்பவர்களும் உண்டு. பிஸ்கெட்டை உப்பு தொட்டு சாப்பிட்ட ஓர் ஆசாமியைப் பார்த்து நான் திகைத்துப் போயிருக்கிறேன்.

இப்படியாக இட்லியில் பியரை ஊற்றிப் பிசைந்து சாப்பிடும் ‘சாமி’ விக்ரமைப் போல் எகனை மொகனையான காம்பினேஷன்களில் சமைக்க வேண்டியிருந்ததுதான் ‘மாஸ்டர் செஃப்’ கடந்த சனிக்கிழமை (18-09-2021) ஒளிபரப்பான ‘எதிரும் புதிரும்’ சவால்.

‘‘ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்பதைப் போன்று விஜய்சேதுபதியின் ஹேர்ஸ்டைல் இருந்தது’’ என்று கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன். அது விசே-வின் காதில் விழுந்து விட்டதோ, என்னமோ, அவருடைய சாதாரண ஸ்டைலில் இடது வலமாக வகிடெடுத்து ஸ்மார்ட்டாக இருந்தார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் செஃப் கெளஷிக்கை பார்த்துதான் அனைவரும் மிரண்டார்கள். ஆனால், இப்போதெல்லாம் செஃப் ஹரீஷ் ராவைப் பார்த்தால்தான் போட்டியாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. பார்ப்பதற்கு சைவப்பூனை போல் இருந்தாலும் தெலுங்குப்பட வில்லன் போல் சைலன்ட்டாக வயலென்ஸ் செய்கிறார்.

இவர் ஜென்நிலையில் கண்களை மூடி உணவைப் பரிசோதிக்கும் போது ‘ஆசாமி என்ன சொல்வாரோ’ என்று போட்டியாளர்கள் பதற்றத்தில் தவிக்கிறார்கள். சில சமயங்களில் இவர் செய்யும் டிராமாவும் ரசிக்க வைக்கிறது. உணவை நன்றாக செய்திருப்பவரை அதிருப்தியுடன் பார்த்து நெகட்டிவாக சொல்வது போல் ஆரம்பிப்பார். பிறகு ஒரு சஸ்பென்ஸ் தந்து அவர்கள் வெற்றி பெற்ற செய்தியைச் சொல்லும் போது போட்டியாளருக்கு திகைப்பு விலகி டபுள் சந்தோஷம் ஏற்படும்.

“கோடம்பாக்கத்து கோமான்களே நோட் பண்ணுங்கப்பா.... நோட் பண்ணுங்கப்பா... இங்க ஒரு சிறந்த நடிகன் இருக்காரு” என்று ஹரீஷ் குறித்து விசேவே கலாய்க்கும் அளவுக்கு அவருடைய பெர்ஃபாமன்ஸ் கொடி கட்டிப் பறக்கிறது. சமையல் மன்னனுக்குள் ஒரு நடிப்புத் திலகம்.

இப்போதெல்லாம் விஜய்சேதுபதியிடமும் மாற்றத்தைக் காண முடிகிறது. அவர் நடிக்கும் சினிமாக்களில் மாற்றம் தெரிகிறதோ இல்லையோ மாஸ்டர் செஃப்பில் நிச்சயம் தெரிகிறது. பொதுவாக விஜய் சேதுபதி குறைகளைச் சொல்லாமல், எந்த உணவாக இருந்தாலும் ‘சிறப்பு, அருமை, நல்லா இருந்தது’ என்றே பாராட்டுவார். கடுமையாக விமர்சிக்கும் செஃப்களின் வார்த்தைகளைக் கேட்டு நொந்து போயிருக்கும் போட்டியாளர்களுக்கு விஜய்சேதுபதியின் பாராட்டு மருந்தாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஆனால், இந்த எபிசோடில் விசே-வும் தன்னுடைய வெளிப்படையான விமர்சனத்தை வைக்கத் தொடங்கியிருக்கிறார். (நான் வளர்கிறேனே மம்மி!).

இன்னொன்று, சமையல் பொருட்களுக்கு சிக்கலான வெஸ்டர்ன் பெயர் இருந்தால் ‘லோக்கல்’ மொழியில் அதை எளிமையாக டிரான்ஸ்லேட் செய்து பெயர் மாற்றும் விசேவின் ஸ்டைல் ‘இவன் நம்மாளுயா... பேசும் போது காது ஆடுது பாத்தியா’ என்கிற தோழமையான உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

ஓகே... இந்த பதிமூன்றாவது எபிசோடில் என்னவெல்லாம் நடந்தது?

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி
மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

நிகழ்ச்சி தொடங்கிபோது அரங்கில் தனியாக நின்று கொண்டிருந்த விஜய் சேதுபதி எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பின்னாலேயே வந்த நீதிபதிகள் இது பற்றி விசாரித்தபோது ‘தோசைக்கு மோர் தொட்டு சாப்பிட்டிருக்கீங்களா? இனிப்பைத் தொட்டுக் கொண்டு டீ சாப்பிட்டிருக்கீங்களா? என்று கேட்டு செஃப்களை மிரள வைத்தார்.

ஆக... இரண்டு எதிரெதிர் சுவைகளைக் கொண்ட காம்பினேஷன்களைக் கொண்ட சமையல்தான் இன்று போட்டியாக இருக்கப் போகிறது என்பது தொடக்கத்தில் ரிஜிஸ்டர் ஆகி விட்டது.

போட்டியாளர்கள் அரங்கில் நுழைந்தார்கள். அவர்களின் முன்னால் விதவிதமான ingredients வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வருவதற்கான வரிசையை ‘கிளி ஜோசியத்தின்’ மூலம் விசே தீர்மானித்தார். இதற்கு கிருதாஜின் முதுகு பயன்பட்டது. வரிசையில் முதலில் வருபவர்களுக்கு ஒரு செளகரியம் உண்டு. அவர்கள் வசதியான பொருட்களை எடுத்து விடலாம். பின்னால் வருபவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

இப்படித்தான் போட்டியாளர்களும் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பொருளுடன் சேர்த்து சமைக்க வேண்டிய ரணகளமான லிஸ்ட் தனியாக இன்னொரு பக்கம் இருந்தது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான சுவையைக் கொண்டது. அந்த லிஸ்ட் என்னவென்று போட்டியாளர்களின் பெயர்களோடு விரிவாகப் பார்த்து விடுவோம்.

1. கிருத்திகா – கிரேப் ஃப்ரூட் + மொச்சைக் கொட்டை

2. மணிகண்டன் – மூங்கில் குருத்து + உலர்ந்த ரோஜா இதழ்கள்

3. சுமித்ரா – வொயிட் சாக்லேட் + பாகற்காய் (வாவ்! செம)

4. நவ்சீன் – வெண்ணிலா பீன் + பார்லி

5. தேவகி – ப்ளம் + கொள்ளு

6. கிருதாஜ் – நெல்லிக்காய் + சேனைக் கிழங்கு

7. வின்னி – தேயிலை + பர்வல் (ஒருவகையான கோவைக்காய்)

8. ஆர்த்தி – ஹலீம் விதை + கிளைகோஸ்

9. நித்யா - உலர்ந்த சோளம் + புளூ சீஸ்

10. சுனிதா – ராக்கெட் லீவ்ஸ் (அருகுல கீரை) + நார்த்தங்காய் பழம்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

மேற்கண்ட காம்பினேஷன் லிஸ்ட்டைப் பார்த்ததும் தலையைச் சுற்றுகிறதா? ஆம்... போட்டியாளர்களுக்கும் இதே அனுபவம்தான். இதில் புளூ சீஸின் வாசனை ‘கப்படிப்பதாக’ விசே சொன்னார். சுவைத்துப் பார்த்தால் உப்புச்சுவை அதிகமாக இருப்பதாக முகத்தைச் சுளித்தார். ஆனால் இதை சரியானபடி கையாண்டால் உணவில் சுவை கூடுமாம். இது நித்யாவுக்கு வந்த சோதனை. ஆனால் இதை சாதனையாக மாற்றுவதாக அவர் நம்பிக்கையுடன் சொன்னார்.

“இதில் இருப்பதிலேயே சமைப்பதற்கு கடினமான காம்பினேஷன் எது?” என்று விஜய் சேதுபதி செஃப்களிடம் கேட்ட போது ‘வொயிட் சாக்லேட் + பாகற்காய்” என்று சொன்னார்கள். எதிரெதிர் சுவைகளைக் கொண்டது. இது சுமித்ராவுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

போட்டி ஆரம்பித்தது. இதற்காக தரப்பட்டிருந்த நேரம் 60 நிமிடங்கள். இதில் தேர்வாகும் நான்கு நபர்கள் பால்கனிக்கு செல்வார்கள். மீதமுள்ள ஆறு நபர்கள் கறுப்பு ஏப்ரன் அணிந்து கொண்டு ‘பிரஷர் டெஸ்டுக்குத்’ தயாராக வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ‘கறுப்பு ஏப்ரன்’கள் வருவது இதுவே முதன்முறை.

விநோத காம்பினேஷன் சமையல் ரணகளமாக ஆரம்பித்தது. சிக்கனைத் தேடிய சுனிதா, அது இல்லாததால் பன்னீரை வைத்து சமாளிக்க ஆரம்பித்தார். தாறுமாறான கலவைகளை வைத்துக் கொண்டு இவர்கள் ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் போது “அப்புறம்... என்ன விசேஷம்?” என்று போட்டியாளர்களின் அருகில் சென்று பேசி அலப்பறை தந்து கொண்டிருந்தார் விசே.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“எப்படி மணிகண்டா... இவ்ள அறிவா பேசறே?” என்று அவரைக் கலாய்த்து விட்டு “நீங்க புளூ சீஸ்ல செஞ்சதை நான் டேஸ்ட் பண்ண மாட்டேன். ஒரே நாத்தம்” என்று நித்யாவிடம் கலாட்டா செய்தார். “நீங்க சாப்பிடற மாதிரி செய்து காட்டுவேன். பாருங்க சார்” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் நித்யா.

‘பட்டர் கிரீமை’ மேஜையில் வைத்து கையால் மணிகண்டன் அடித்துக் கொண்டிருக்கும் போது “இந்த மணிகண்டன் திருந்தவே மாட்டாரு” என்று கமென்ட் அடித்தார் செஃப் ஆர்த்தி. அப்படிச் செய்தால் திரிந்து விட வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் ‘அப்படியும் செய்யலாம்’ என்றார் ஹரீஷ். மணிகண்டன், விசேவிற்கு செல்லப்பிள்ளையாக இருப்பதால் செஃப்கள் மணிகண்டனை இடது கையால் ஹேண்டில் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

வின்னி ஓவனில் வைத்திருந்த ஒரு அயிட்டம் சரியாக வராததால் டென்ஷனுடன் காணப்பட்டார். சுனிதா வைத்திருந்த பால் பொங்கி வழிந்தது. தேவகி மட்டும் சரியான நேரத்தில் ‘பிளேட்டிங்’கை ஆரம்பிக்க, மற்ற போட்டியாளர்கள் கடைசி நொடி வரை உணவு தயாரிப்பில் இருந்து அவசர அவசரமாக தட்டில் வைத்து அலங்கரித்தார்கள். இப்படி ஏகப்பட்ட களேபரங்களுடன் போட்டி நேரம் முடிந்தது.

பலி பீடத்துக்கு முதலில் வந்தவர் மணிகண்டன். மூங்கில் குருத்தையும் உலர்ந்த ரோஜா இதழ்களையும் வைத்து ‘கேக்’ செய்திருந்தார். ‘’உங்க டிஷ்ஷோட பேரு என்ன?” என்று ஹரீஷ் கேட்டபோது சரியாக சொல்லத் தெரியாமல் பலமுறை தடுமாறினார் மணிகண்டன். “சோறு வெச்சியே. பேரு வெச்சியா?” காமெடி மாதிரி ஆனது.. “நான் ஸ்கூல்ல கூட இப்படி பயந்ததில்லை.. ஆனால் செஃப் ஹரீஷை பார்த்தா அப்படி பயமாயிருக்கு” என்ற மணிகண்டனுக்கு நெகட்டிவ் கமென்ட்களே கிடைத்தன. விசே கூட இவரை கை விட்டு விட்டார்.

அடுத்த வந்த கிருதாஜ் செய்திருந்தது ‘My Comfort Food’. ‘’என்னோட வசதிக்கு செஞ்சிருக்கேன்... நீ சாப்பிட்டா சாப்பிடு’ என்று அர்த்தம் போல. கருணைக்கிழங்கிற்குள் சோறு வைத்து கூட நெல்லிக்காய் ரசம் வைத்திருந்தார். இவர் வைத்திருந்த ரசத்தை விரும்பிச் சாப்பிட்டார் விசே.

வின்னி செய்திருந்த அயிட்டத்தின் பெயர் ‘டீ டைம்’. தேயிலையையும் கோவைக்காயையும் வைத்து இவர் செய்திருந்த உணவு செஃப்களை கவரவேயில்லை. வாடிய முகத்துடன் திரும்பினார் வின்னி.

‘இருப்பதிலேயே கடினமான காம்பினேஷன்’ கிடைத்த சுமித்ரா செய்திருந்த அயிட்டத்தின் பெயரைக் கேட்டதும் அரங்கமே சிரித்தது. ‘பாவம் மூஸ்’ என்பது அதன் பெயர். பாவக்காயை செல்லமாக சுருக்கி விட்டாராம். ‘’சாப்பிட்ட நாங்க பாவமா?” என்று கிண்டலடித்தார் விசே. இதில் பாவக்காய் பெரிய பீஸ்களாக இருந்ததால் சாப்பிட முடியவில்லை என்பது அவரின் கருத்து.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

‘கீஷ் ஃபார் நியூ மாம்ஸ்’ – இது ஆர்த்தி செய்திருந்த டிஷ்ஷின் பெயர். தட்டு மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இது நீதிபதிகளைக் கவரவில்லை. ‘பேஸ்ட்ரி’ டிரையாக இருந்ததாம்.

தேவகி தயார் செய்திருந்த அயிட்டம் ‘கொள்ளு கேக் பிளம் கம்ஃபர்ட். இதை செஃப் கெளஷிக் சுவைப்பதற்காக வாயில் எடுத்துச் சென்ற போது, குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மா மாதிரியே தேவகியும் ‘ஆ’வென்று வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். “உங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து மேலும் சில விஷயங்களைச் செய்திருக்கலாம். ஏன் எல்லோருமே சேஃப் கேம் ஆடுகிறீர்கள்?” என்பது கெளஷிக்கின் கறாரான கேள்வியாக இருந்தது. “நேர நெருக்கடி” என்று தேவகி பதில் அளித்தாலும் நீதிபதிகள் சொன்னதை மறுக்கவில்லை.

‘நார்த்தங்காய் பன்னீர் சாலட்’ – இதுதான் சுனிதா செய்திருந்த உணவின் பெயர். இது நீதிபதிகளைக் கவர்ந்து விட்டது. ‘நார்த்தாங்காயை வெச்சு இப்படி பண்ண முடியும்னு காட்டிட்டீங்க. புது ஹீரோவை அறிமுகப்படுத்திட்டீங்க” என்று பாசிட்டிவ் கமென்ட் வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தார் சுனிதா.

அடுத்த வந்த நவ்சீன் கொண்டு வந்தது ‘வெனிலா வெடி’. கேக் செய்வதில் நவ்சீன் எப்போதுமே எக்ஸ்பர்ட். ஆனால் இம்முறை அவர் கொண்டு வந்த வெடி, ஆயிரம் வாலாவாக வெடிக்காமல் ‘புஸ்’ ஆகிப் போனது. ‘ரொம்பவும் திகட்டுது” என்றார் விஜய் சேதுபதி. எப்போதும் சலனமே இல்லாமல் இருக்கும் நவ்சீனின் முகத்தில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து வந்தவர் நித்யா. உண்மையில் அவருக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த ‘சோளம் கீஷ்’ என்கிற அயிட்டத்தைச் சாப்பிட்ட கெளஷிக்கும் ஆர்த்தியும் ‘நோ கமென்ட்ஸ்’ என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னார்கள். இதனால் நித்யாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

பிறகு வந்த ஹரீஷூம் இந்த நாடகத்தைத் தொடர்ந்தார். ‘வேற வழியே இல்ல.. உங்களுக்கு கறுப்பு ஏப்ரன்…’ என்று சொல்லி சற்று சஸ்பென்ஸ் விட்டு “கிடையாது... நீங்க நேரா பால்கனிக்கு போங்க” என்றார். அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடிக்காமல் நித்யாவின் உணவு உடனடியாக தேர்வு செய்யப்பட்டதில் அவருக்கு ஒரே குஷி. “தட்டை வெச்சுட்டு போங்க... நாங்க சாப்பிடணும்” என்று செஃப்கள் சொன்னது ஜாலியான ஆனால் சிறப்பான காம்ப்ளிமென்ட். ‘it was brilliant’ என்று கெளஷிக் பாராட்டியதை நித்யா வாழ்நாள் முழுவதும் நினைவு வைத்துக் கொண்டிருக்கக்கூடும்.

கெட்ட வாடையைக் கொண்ட ‘புளூ சீஸை’ வைத்து அதை சாமர்த்தியமாக பயன்படுத்திய நித்யாவின் திறமை பாராட்டத்தக்கது. கடைசியாக வந்தவர் கிருத்திகா. இவர் கொண்டு வந்த ‘பட்டர் பீன்ஸ் ஃபஜிடாஸ்’. இந்த உணவும் பாராட்டைப் பெற்றது. “கிருத்திகா செய்ததை விட தேவகியின் உணவு பார்க்க பெட்டராக இருந்தது” என்று மணிகண்டன் இந்தச் சமயத்தில் அடித்த கமென்ட் அநாவசியம். (நாமே ஃபெயில் ஆயிட்டோம் நமக்கு இந்த கிளுகிளுப்பு தேவையா?!).

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். நித்யா ஏற்கெனவே முதல் வகுப்பில் பாஸாகி பால்கனிக்கு சென்று விட்டார். மீதமுள்ளவர்களில் மூன்று பேர் மட்டுமே பால்கனிக்கு செல்ல முடியும்.

இந்த வரிசையில் டாப் 2 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுமித்ரா. வொயிட் சாக்லேட் + பாகற்காய் என்னும் கடினமான காம்பினேஷனை கையாண்டதால் இந்த தேர்வு. டாப் 3-ல் வந்தவர் கிருதாஜ். “நான்தான் ரெக்கமண்ட் பண்ணி பாஸ் பண்ண வெச்சேன்’’ என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் விசே. டாப் 4-ல் வந்தவர் கிருத்திகா.

ஆக மீதமுள்ள ஆறு போட்டியாளர்களும் கறுப்பு ஏப்ரனை அணிந்து கொண்டு அடுத்த எபிசோடின் ‘பிரஷர் டெஸ்ட்டை’ எதிர்கொள்ள வேண்டும்.அந்த பிரஷர் டெஸ்ட் என்னவாக இருக்கும்? இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறவர் யார்?

கட்டுண்டோம், காத்திருப்போம்!