Published:Updated:

மாஸ்டர் செஃப் கடந்துவந்த பாதையும், நெகிழ்ச்சித் தருணங்களை விவரித்த விஜய் சேதுபதியும்!

மாஸ்டர் செஃப்

இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கும் தேவகி, நித்யா, கிருத்திகா, வின்னி ஆகிய நால்வரும் தங்களின் பயண அனுபவங்களையும் சக போட்டியாளர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

Published:Updated:

மாஸ்டர் செஃப் கடந்துவந்த பாதையும், நெகிழ்ச்சித் தருணங்களை விவரித்த விஜய் சேதுபதியும்!

இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கும் தேவகி, நித்யா, கிருத்திகா, வின்னி ஆகிய நால்வரும் தங்களின் பயண அனுபவங்களையும் சக போட்டியாளர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மாஸ்டர் செஃப்

வீட்டு பீரோவில் இருந்து எதையோ எடுக்கச் செல்லும்போது பாதுகாப்பாக வைத்திருந்த பழைய புகைப்பட ஆல்பம் தற்செயலாகக் கண்ணில் படும். வந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அதை எடுத்துப் புரட்டத் துவங்குவோம். அதில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். சில புகைப்படங்கள் புன்னகைக்க வைக்கும்; சில புகைப்படங்கள் கலங்க வைக்கும்; சில புகைப்படங்கள் நெகிழ வைக்கும்.

இறுதிப்போட்டிக்கு முன்னர், ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் எபிசோடு, இத்தகைய நாஸ்டால்ஜியா உணர்வைத்தான் அளித்தது. இந்த சீசனை முதலில் இருந்து தவறாமல் பார்த்தவர்களுக்கு இந்த ‘போனஸ் எபிசோட்’ நிச்சயம் ஒரு நல்ல மலரும் நினைவாக அமையும்.

எத்தனை காட்சிகள்?! எத்தனை உணர்வுகள்?! எத்தனை அனுபவங்கள்?!

எபிசோடு 27-ல் என்ன நடந்தது?

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அட்டகாசமான உடையில் இருந்த விஜய் சேதுபதி புன்னகையுடன் நம்மை வரவேற்றார். அரங்கில் நீதிபதிகளோ, போட்டியாளர்களோ எவருமில்லை. இந்த எபிசோடு முழுவதும் அவர் மட்டுமே நிகழ்ச்சிகளை நமக்கு விவரித்தார். “இந்த மாஸ்டர் செஃப் போட்டி 24 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பித்தது. இந்த நான்கு நிறங்களில் உள்ள ஏப்ரன்களுக்குப் பின்னால் நிறைய கதைகள் உள்ளன. போட்டியாளர்களின் மனநிலைக்கு ஏற்ப இந்த ஏப்ரனின் வண்ணங்களும் மாறும்” என்று அழகாக பேசினார் விசே.

மிஸ்டரி பாக்ஸ், இம்யூனிட்டி பின், பாத்திர மூடிகளுக்குப் பின்னுள்ள சுவாரஸ்யங்கள்... என்று மாஸ்டர் செஃப் அரங்கில் இவை அனைத்துமே ஒரு பாத்திரமாகவே இருந்தன. குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியே வராமல் Pantry-க்குள் மாட்டிக் கொண்டு திகைத்த தேவகி மற்றும் வின்னி சம்பந்தப்பட்ட காட்சிகள், அவசரத்தில் கையை வெட்டிக் கொண்ட ஆர்த்தி மற்றும் வின்னி, தேவகி செய்த உணவை மிரட்டுவது போல் கமென்ட் செய்து விட்டு பின்பு அவருடன் ஹரீஷ் செல்ஃபி எடுத்துக் கொண்ட 'ஸ்வீட் சர்ப்ரைஸ் மோமெண்ட்’ என்று ஒவ்வொரு காட்சியும் நம்மை புன்னகைக்க வைத்தன.

பால் பொங்கி வழியும் காட்சி, சமைக்கப்பட்ட உணவு ஏறத்தாழ கீழே விழுந்து போட்டியாளர்களால் பிடிக்கப்படும் தருணங்கள், ‘குபீர்’ என்று அடுப்பு பற்றி பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சி போன்றவை திகைப்பை ஏற்படுத்தின. கெளஷிக்கிற்கும் மணிகண்டனிற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அவர் சொல்வதைக் கேட்காமல் ஏதாவது சவடால் விட்டுவிட்டு பின்பு அவரிடம் திட்டு வாங்கும் மணிகண்டன் தொடர்பான காட்சிகள் சிரிக்க வைத்தன.

‘அண்ணாமலை’ ரஜினி போல் பால்டின்களுடன் சைக்களில் தந்த என்ட்ரி முதல் விஜய் சேதுபதி விதம் விதமாக என்ட்ரி தந்த காட்சிகள் ரசிக்க வைத்தன. விதம் விதமான லுக்குகளில் அவர் இருந்தார். “ஒரு புள்ளி விவரம் சொல்லட்டுமா?” என்று ஆரம்பித்து விசே சொன்ன விவரம் ஆச்சரியப்பட வைத்தது. 500-க்கும் மேலான சமையல் பொருள்கள் மாஸ்டர் செஃப் தமிழில் இதுவரை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 1800 நிமிடங்களுக்கும் மேலான சமையல் நேரம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 100-க்கும் மேலான உபகரணங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. கடைசியாக... 150-க்கும் மேலான விதம் விதமான ருசிகர உணவு வகைகள் இங்கு சமைக்கப்பட்டிருக்கின்றன.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
இவை தவிர சில குறும்பான தருணங்களையும் விசே பகிர்ந்து கொண்டார். தான் தயார் செய்த பானத்தை தானே குடித்துத் தீர்த்து நீதிபதிகளுக்கு கொஞ்ஞூண்டு தந்து அழிச்சாட்டியம் செய்த ஷாஜியா, ‘டெஸர்ட் குயின்’ என்கிற பட்டத்தை வாங்கினாலும் அதற்காகவே நீதிபதிகளால் விமர்சிக்கப்பட்ட நவ்சீன்... தொடர்பான காட்சிகள் வந்தன.

போட்டியாளர்களின் ‘நாஸ்டால்ஜியா’ அனுபவங்களை இனிய ஆச்சர்யமாக தட்டி எழுப்பிய எபிசோடு உண்மையிலேயே நெகிழ வைக்கும் அனுபவமாக இருந்தது. “நாங்க இங்க இன்னமும் ஜாலியா இருக்கோம்” என்று கடிதத்தில் குறும்பு செய்திருந்த தேவகியின் கணவர், தினம் ஒரு கடிதம் என்று வருடத்திற்கு 365 கடிதங்களை தன் ‘அத்தானுக்கு’ எழுதி தபால்காரரையே காண்டாக்கிய கிருத்திகா, தன் தாலியை விற்று மாஸ்டர் செஃப் போட்டிக்குக் கணவரை அனுப்பிய மணிகண்டனின் மனைவி… என்று எத்தனை நெகிழ்வான அனுபவங்கள்?!

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ரம்யா நம்பீசன், நிக்கி கல்ராணி, பார்வதி போன்றோரும் இந்த சீசனை வண்ணமயமாக மாற்றினார்கள். விசேவும் நிக்கி கல்ராணியும் இணைந்து சமைத்த ‘பாண்டிச்சேரி ஆம்லேட்’ சம்பந்தப்பட்ட பகுதிகள் அத்தனை சுவாரஸ்யம்.

“மத்த ஹோம்குக்ஸ் கோச்சுக்காதீங்க” என்று ஆரம்பித்து மணிகண்டனைப் பற்றியே பல நிமிடங்கள் செலவழித்து பேசினார் விசே. மணிகண்டன் விசேவின் செல்லப் பிள்ளை. விசே பல சமயங்களில் இவரைக் கிண்டல் செய்வார். அதே சமயத்தில் கண்டிக்கவும் செய்வார். “இந்த மாதவரம் மாஸ்டர்செஃப் மணிகண்டன் இருக்காரே... குழப்பமான ஆசாமியா, தெளிவான ஆசாமியா, ரெண்டும் கலந்த ஆசாமியான்னு அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது” என்று விசே சொன்னவுடன், தான் சமைத்திருந்த உணவிற்கு விதம் விதமான பெயர்களை மாற்றிச் மாற்றிச் சொன்ன மணிகண்டன் தொடர்பான காட்சி சிரிக்க வைத்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“மூங்கில் குருத்து handbeat cake... இல்லல்ல.. மஃப்பின் கேக்” என்று மாற்றிச் சொல்லி ஹரீஷை காண்டாக்கினார் மணி. “அவர் குழப்பமா இருந்தாலும் அவர் செய்யற உணவுகள் மிகச் சுவையா இருக்கும்” என்று பாராட்டினார் விசே. மணிகண்டன் செய்த விசில் கச்சேரி, சரியான நேரத்தில் விசிலடிக்காமல் தடுமாறியது போன்ற காட்சிகள் புன்னகைக்க வைத்தன.

“ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு சோதனையான நாள். உங்களுக்கெல்லாம் மறுநாள் அலுவலகம், பள்ளி போறதுக்கு ஏற்படற மூட் மாதிரி எங்களுக்கும் அது சோர்வான நாள். ஆம். எலிமினேஷன். ஒவ்வொரு போட்டியாளரும் இங்கே இருந்து வெளியே போகும் போது எங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும்” என்று நெகிழ்ந்தார் விசே.

“Can I have a hug?” என்று விசேவே கேட்டு வழியனுப்பி வைத்த தாரா, சசியம்மாளின் எலிமினேஷன் நாளில் கண்ணீர் விட்ட செஃப் ஆர்த்தி, போட்டியாளர் ஆர்த்தியை வாசல்வரை சென்று வழியனுப்பிய செஃப் ஆர்த்தி, கண்ணீருடன் வெளியேறிய நவ்சீன் போன்ற காட்சிகளின் தொகுப்பு நிச்சயம் நம்மையே கலங்க வைக்கும்.

இனிமையான மாடுலேஷனில் பேசிய சுனிதா, விசேவின் கையால் ஏப்ரனை பரிசாகப் பெற்று வெளியேறிய கிருதாஜ், நிரந்தர புன்னகையுடன் இருந்த சசி ஆனந்த்... என்று எத்தனை விதமான மனிதர்கள்?! முதன் முதலில் கையாண்டாலும் வாத்துக்கறியை சிறப்பாகச் சமைத்திருந்த சுமித்ரா, "மாஸ்டர்செஃப் லோகோதான் என் இதயம்” என்று எலிமினேஷனில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் சொன்ன மணிகண்டன்... என்று இந்த எபிசோடு பல சுவையான நினைவுகளால் நிறைந்திருந்தது.

இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கும் தேவகி, நித்யா, கிருத்திகா, வின்னி ஆகிய நால்வரும் தங்களின் பயண அனுபவங்களையும் சக போட்டியாளர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள். “ஃபைனல்ல நாலு பேருமே பெண்கள் என்பது எங்களுக்கு பெருமிதமா இருக்கு. இத்தனை தூரம் டிராவல் ஆகி வருவேன்னு நான் எதிர்பார்க்கலை” என்பதை திகில் மாறாத கண்களுடன் சொன்னார் தேவகி.

மிக வசீகரமாகவும் நேர்த்தியாகவும் இருந்த செஃப் கோட்டின் பின்னால் நின்றிருந்த விசே “இந்த கோட்டையும் டிராஃபியையும் யார் வெல்லப் போகிறார்கள்? உங்களைப் போலவே நானும் அதைக் காண ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன். இறுதிப் போட்டியில் சந்திப்போம்” என்றபடி விடைபெற்றார்.

சமையல் என்பதைத் தாண்டி இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பல்வேறு படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. நீதிபதிகளின் கறார்த்தனம் நெருடலாக தோன்றினாலும், அந்தக் கண்டிப்புதான் போட்டியாளர்களை புடம் போட்ட தங்கமாக மாற்றியிருக்கிறது எனலாம்.

இறுதிப் போட்டியில் வெல்லப் போகிறவர் யார்?

காத்திருந்து சுவைப்போம்.