Published:Updated:

மாஸ்டர் செஃப்: ஓர் எலுமிச்சம்பழத்தால் தேவகியின் வெற்றி கைகூடியதா? GRAND FINALE-வில் என்ன நடந்தது?

மாஸ்டர் செஃப்

இறுதிப்போட்டியை வென்ற தேவகிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு, செஃப்கோட், டிராஃபி போன்றவை வழங்கப்பட்டன. தங்கநிற பார்டர் கொண்ட கோட்டில் கம்பீரமாக நின்றார் தேவகி.

Published:Updated:

மாஸ்டர் செஃப்: ஓர் எலுமிச்சம்பழத்தால் தேவகியின் வெற்றி கைகூடியதா? GRAND FINALE-வில் என்ன நடந்தது?

இறுதிப்போட்டியை வென்ற தேவகிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு, செஃப்கோட், டிராஃபி போன்றவை வழங்கப்பட்டன. தங்கநிற பார்டர் கொண்ட கோட்டில் கம்பீரமாக நின்றார் தேவகி.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் ஒன்றின் இறுதி எபிசோட் இது (Grand Finale). ஆயிரக்கணக்கானவர்கள் ஆடிஷனில் கலந்து கொள்ள, அதிலிருந்து வடிகட்டப்பட்ட 24 நபர்கள் போட்டியில் நுழைந்தார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு எலிமினேஷன் நிகழ்ந்து, இறுதிப்போட்டியில் நான்கு போட்டியாளர்களைக் கொண்டதாக இந்தப் பட்டியல் சுருங்கியது. இந்த நால்வருமே பெண்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இத்தனை கட்ட நகர்வுகளுக்குப் பின் நடந்து முடிந்த இறுதிச் சுற்றில் வென்றவர் யார்? ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா…’ என்கிற நிரந்தர முகபாவத்துடன் இருப்பவர் தேவகி. நீதிபதிகள் இவரது உணவை பரிசோதனை செய்யும் போதெல்லாம் பின்பெஞ்ச் மாணவன் போல திகைத்து நிற்பார். ஆனால் பாராட்டுக்களை அள்ளிச் சென்று விடுவார். “இது நீங்க செஞ்சதுதானா? பக்கத்து டேபிள்ல இருந்து எடுத்துட்டு வந்த மாதிரியே முழிக்கறீங்க” என்று விஜய் சேதுபதியே இவரை ஒருமுறை கிண்டலடித்தார். பால் குடிக்குமா என்று நம்ப முடியாத இந்தப் பூனைதான் கடைசியில் பியரே குடித்துவிட்டது. ஆம், தேவகிதான் இந்தப் போட்டியின் வெற்றியாளர்.

செஃப் கெளஷிக், தேவகியை அழைக்கும் ஸ்டைலே தனியாக இருக்கும். ஏதோ திண்டுக்கல்பூட்டை திறக்கும் சாவி போல ‘தேவகி’ என அந்த ‘கீ’யை நன்றாக அழுத்தமாக உச்சரித்துதான் இவரை அழைப்பார். இந்த பிரமாண்ட போட்டியில் தேவகி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு எலுமிச்சம்பழம்.

“இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் லாரில இருக்கு. ஆனா எலுமிச்சம்பழத்துலதான் வண்டி ஓடுதுன்னு நம்பாளு நம்பறான்” என்று விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் கிண்டலடிப்பார். ஆனால் அந்த சிறிய எலுமிச்சைதான் தேவகிக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. ஆம், இந்த வுமனின் வெற்றிக்கு காரணம் ஒரு லெமன்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

இறுதிப் போட்டியில் (28வது எபிசோட்) என்ன நடந்தது?

அட்டகாசமான உடையில் இருந்த விஜய்சேதுபதி நீதிபதிகளுக்கு நன்றி கூறி இறுதிப்போட்டி நிகழ்ச்சியை புன்னகையுடன் ஆரம்பித்தார். “சமையல் கலை என்பது மனித இனத்தின் சொத்து. இது என்றும் அழியாது. நெருப்பைக் கண்டுபிடித்து அதைக் கையாளக் கற்றுக் கொண்டதுதான் மனித இனத்தின் முக்கியமான விஷயம். சமையலுக்குப் பிறகு மனிதனின் உடல் சுருங்கி மூளை வளர ஆரம்பித்தது என்கிறார்கள்" என்று முன்னுரை வழங்கினார். “இன்றைய போட்டியில் வெல்பவருக்கு செஃப் கோட், டிராஃபி ஆகியவற்றோடு பரிசுத் தொகையாக 25 லட்சம் கிடைக்கும். அதை வெல்லப் போகிறவர் யார்?” என்று அவர் சொன்னதும் செஃப் கோட் அணிந்த நான்கு பெண்களும் கம்பீரமாக அரங்கினுள் நுழைந்தார்கள்.

“பார்க்கறதுக்கே எனக்கு அத்தனை சந்தோஷமா இருக்கு. பெண்களில் இத்தனை செஃப்களை பார்க்கறது அபூர்வம். கிச்சன்ல அதிசயமா ஒண்ணோ... ரெண்டோதான் இருப்பாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்று நெகிழ்ந்தார் செஃப் ஆர்த்தி. “இந்த இறுதிப் போட்டி 2 பாகங்களாக நடைபெறும். இரண்டிற்கும் தனித்தனியா மதிப்பெண்கள் வழங்கப்படும். யார் அதிக ஸ்கோர் எடுக்கறாங்களோ அவங்கதான் டைட்டில் வின்னர்” என்று தெரிவித்தார் கெளஷிக்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“ஓகே. முதல் போட்டி என்னன்னு பார்த்திடலாமா?” என்ற கெளஷிக், “பட்லர்” என்று அழைக்க, தங்கநிறத்தில் மின்னும் மூடியைக் கொண்ட பாத்திரத்தை ஒரு பணியாளர் எடுத்து வந்தார். ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு கெளஷிக் அதைத் திறந்தார். அதை நிச்சயம் உணவு என்று சொல்ல முடியாது. ‘ஓவியம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். அத்தனை வசீகரமாக, நேர்த்தியாக, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு உணவுப்பண்டம் தட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தது. “வெற்றியின் விருந்து’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த உணவில் (Main Course) சிக்கன், காளான், வாத்து, 3 வகையான சாஸ் என்று பதினோரு வகையான பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். “எப்படி இருக்கு?” என்று நீதிபதிகள் விசாரிக்க “அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது” என்பது போல் போட்டியாளர்கள் ஆசையாகவும் திகிலாகவும் அதை பார்த்தார்கள். ஏனெனில் போட்டி என்பது அதை வைத்துத்தான் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“இதில வாத்தோட breast-ஐ சமைக்கறது கஷ்டம்” என்ற நீதிபதிகள் அதற்கான டிப்ஸை தந்தனர். இந்த உணவின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று, ஃ.பில்டர் காபி டிகாக்ஷனை பயன்படுத்தி glaze-ஆக வைத்திருந்தனர். சாப்பிடும்போது காபியின் சுவை வருமாம். “இது மேற்கத்திய ஸ்டைலில் நம் பாரம்பரிய பொருள்களை வைத்து தயாரித்த உணவு. நீங்கள் இந்த உணவை அப்படியே நகலெடுத்தால் போதும். இதற்கான நேரம் 120 நிமிஷம். செய்முறை விளக்கம் உங்க டேபிள்ல இருக்கு. அதற்கான பொருள்களும் இருக்கு. ஆரம்பியுங்க” என்று நீதிபதிகள் பச்சைக் கொடி காட்டி போட்டியைத் துவக்கி வைத்தார்கள்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
“நீங்க சமைச்சிக்கிட்டே இருங்க. நான் ஒரு சர்ப்ரைஸ்ஸோட வரேன்” என்று விசே இந்தச் சமயத்தில் நைசாக கழன்று கொண்டார். ஒரு சிறப்பான ஓவியம் போல் தோற்றமளித்த ‘வெற்றியின் விருந்தை’ அப்படியே நகலெடுப்பது அத்தனை எளிதான விஷயமில்லை என்பது போட்டியாளர்களுக்குத் தெரியும். இது இறுதிப் போட்டி என்பதால் நூறு சதவீத உழைப்பைத் தந்து விட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் நான்கு போட்டியாளர்களும் பம்பரம் போல் இயங்கத் துவங்கினார்கள்.

“இதுவரைக்கும் நான் வாத்து சமைச்சதில்லை. இருந்தாலும் ஒரு கை பார்த்துடுவேன்” என்று ஆர்வமானார் வின்னி. “சமைக்கறதுக்கு முன்னாடி ரெசிப்பியை ஒருமுறை கவனமா படிச்சிடுங்க” என்று எச்சரித்தார் ஹரீஷ். போட்டி ஆரம்பித்து சில நிமிடங்கள் கடந்தும் வின்னியால் தன் பிளானை சரியாக முடிக்க முடியவில்லை. “நீங்க ரொம்ப பின்தங்கியிருக்கீங்க. கவனம்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றார் கெளஷிக். கடைசி நேரத்தில் உணவின் ஒரு பகுதியான அச்சுமுறுக்கு தயாரிக்க விட்டுப் போனதை எண்ணி கதிகலங்கி நின்றார் கிருத்திகா.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

போட்டி நேரம் முடிந்து உணவுகள் பரிசோதனை மேஜைக்கு வர வேண்டிய நேரம். இந்த முதல் பாகத்தில் பெறும் மதிப்பெண்கள்தான் இவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் அஸ்திவாரமாக அமையும். முதலில் அழைக்கப்பட்ட கிருத்திகா, அச்சுமுறுக்கு பகுதி விடுபட்டதால் தயக்கத்துடன் வந்தார். “நீங்க எத்தனை சதவிகிதம் ஒரிஜினலை செஞ்சிருக்கீங்க?” என்று கெளஷிக் கேட்டதும் “95 சதவீதம்” என்று பதிலளித்த கிருத்திகா, விடுபட்ட உணவின் பகுதியைச் சொல்லும் போதே முடிக்க முடியாமல் கண்கலங்கினார். ஆனால் அந்த ஒரு விஷயத்தைத் தவிர இதர அனைத்து விஷயங்களுக்காக கிருத்திகாவிற்கு பாசிட்டிவ்வான கமெண்ட்டுகள் கிடைத்தன.

அடுத்ததாக வந்த நித்யா “நூறு சதவீதம் என் உழைப்பைத் தந்திருக்கிறேன்” என்று புன்னகையுடன் சொல்ல. உணவை மர்மமான புன்னகையுடன் சாப்பிட்ட கெளஷிக், “ஓகே... ஒத்துக்கறேன்… நூறு சதவீதம் உழைச்சிருக்கீங்க” என்று நற்சான்றிதழ் தரவும் நித்யாவிற்கு மகிழ்ச்சியில் கண்கலங்கியது. “உங்க பிளேட்டிங் இன்னமும் பெட்டரா இருந்திருக்கலாம். வாத்தோட திக்னஸ் ஈவனா இல்லை. மத்தபடி டேஸ்ட் செமயா இருக்கு” என்று குறைகளோடு நிறையும் சேர்த்து செஃப் ஆர்த்தி சொல்ல மனநிறைவோடு திரும்பினார் நித்யா.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அடுத்த வந்து தேவகி “நான் இரண்டு எலிமெண்ட்டுகளை விட்டுட்டேன். மரவள்ளி மசியல் + லெமன் சாறு ஆகிய இரண்டையும் செஞ்சேன். பிளேட்டிங் பண்றதுக்குள்ள டைம் ஆயிடுச்சு” என்று வாக்குமூலம் தந்துவிட்டு வழக்கமான திருதிரு பார்வையுடன் நின்றார். தேவகி தயாரித்த சாஸ் வகைகளை தனியான பிளேட்டில் இட்டு டெஸ்ட் செய்த ஹரீஷ் “இதோட டெக்ஸ்ஷர்... செம! டேஸ்ட் பக்காவா இருக்கு” என்று புன்னகைத்தவுடன் தேவகியின் திகைப்பு நீங்கி முகத்தில் மலர்ச்சி வந்தது. “விட்டுப் போன அந்த ரெண்டு அயிட்டங்களும் இருந்திருந்தா... உங்க ஸ்கோர் எங்கயோ போயிருக்கும்” என்று கெளஷிக் சொன்னதும் தன்னிச்சையாக தலையில் அடித்துக் கொண்டார் தேவகி. “உங்க பிளேட்டிங் நல்லாயிருக்கு” என்று பாராட்டினார் ஆர்த்தி.

கடைசியாக வந்த வின்னிக்கும் அதே பிரச்னை. அவரும் இரண்டு பொருள்களை தட்டில் வைக்கவில்லை. மரவள்ளி மசியல் மற்றும் ரசம் விடுபட்டிருந்தது. இதை அவர் வாக்குமூலமாக சொன்ன போது "இன்னொரு எலிமெண்ட்டும் இல்லை” என்பதை கண்டுபிடித்துச் சொன்னார் கெளஷிக். “நீங்க செஞ்ச சாஸ் பிரில்லியண்ட். சிக்கன் நல்லாயிருந்தது. ஆனா வாத்து... விழுங்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது” என்றார் கெளஷிக். செய்முறைக்குறிப்பில் தந்திருந்த படி 49 டிகிரி டெம்ப்பரேச்சர் வரும் வரை வின்னி மிக கவனமாக காத்திருந்துதான் வெளியே எடுத்தார். அப்படி மெனக்கெட்டும் இந்த நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் முகம் வாடினார். “வின்னி... நீங்க இன்னமும் பிளேட்டிங் குயின்தான்” என்று மனமார பாராட்டினார் ஆர்த்தி. “சிக்கன் கொத்துக்கறி, காளான்லாம் செமயா இருந்தது” என்கிற ஹரிஷீன் பாராட்டும் வின்னிக்குக் கிடைத்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
பரிசோதனை சடங்கு முடிந்ததும் விசே என்ட்ரி தந்தார். முதல் சுற்றின் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் நேரம். மொத்தமுள்ள 30 மதிப்பெண்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு எடுத்திருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நேரம். இதில் முதலிடத்தில் வந்தவர் தேவகி. அவர் முப்பதுக்கு 25 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ‘நெஜம்மாவா?” என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தார் தேவகி. 24 மதிப்பெண்கள் பெற்ற நித்யா இரண்டாமிடத்திலும், 21 மதிப்பெண்கள் பெற்ற கிருத்திகா மூன்றாமிடத்திலும் 18 மதிப்பெண்கள் எடுத்த வின்னி நான்காமிடத்திலும் வந்தார்கள்.

“ஒரு சர்ப்ரைஸ் தர்ரேன்னு சொன்னேன் இல்லையா... அது இதுதான்” என்று விசே சொன்னதும் தொலைக்காட்சியில் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து வாழ்த்து சொன்னார்கள். கிருத்திகாவின் மகள், “தோற்றம், சிந்தனை, சுவை மூன்றும் முக்கியம். என் முன்னாடி ஒரு டிஷ்ஷை கொண்டு வந்து வெக்கறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும்” என்று செஃப் கெளசிக் மாதிரியே பேசிக் காட்ட, "அச்சச்சசோ...” என்று வெட்கப்பட்டார் கிருத்திகா. இதைப் பார்த்து சந்தோஷமாக சிரித்தார் கெளஷிக்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“ஓகே... போட்டியோட ரெண்டாவது பாகத்துக்கு போகலாம். இது ‘சிக்னேச்சர் டிஷ் சேலன்ஞ்’. உங்க மனசுக்குப் பிடிச்ச எந்த உணவை வேணும்ன்னாலும் சமைக்கலாம். போட்டி நேரம் 90 நிமிடம். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குங்க” என்று அறிவித்த கெளஷிக், “இதுல உங்களோட சுயசிந்தனை, தோற்றம், சுவை இருக்கணும்” என்றார். “இதுதான் இந்த சீசனோட கடைசி சேலன்ஜ். பேரன்போட சமைங்க” என்று வாழ்த்தினார் விசே.

தேவகிக்கு வெற்றியை வாங்கித் தந்தது எலுமிச்சம் பழம் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா? ‘லெமன் போலவே தோற்றமளிக்கும் இனிப்பு வகையை (Mousse) செய்யலாம் என்று திட்டமிட்டார் அவர்.

தெய்வீகமாக செயல்பட்டு நடுவர்களை கவர்ந்து விடலாம் என்று திட்டமிட்டார் கிருத்திகா. பஞ்சாமிர்தம், திணை மாவு, தேன் ஆகியவற்றை வைத்து deconstruct செய்து இனிப்பு செய்யலாம் என்பது அவரது திட்டம். மறந்து போன நம் பாரம்பரிய இனிப்பை, நவீன தோற்றத்தில் செய்யலாம் என்கிற முடிவுடன் களத்தில் இறங்கினார் கிருத்திகா.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

வின்னியும் இனிப்பு வகையைத்தான் திட்டமிட்டார். நித்யா சேவரி வகையை செய்து கொண்டிருந்தார். வின்னி சமைத்து முடித்து தனது பிளேட்டிங்கை செய்து கொண்டிருக்கும் போது நம் கண்களையே நம்பமுடியவில்லை. ஒரு தங்க வளையல் போலவே ஓர் உணவை தயாரித்து வைத்திருந்தார். பார்ப்பதற்கே அத்தனை வசீகரமாக இருந்தது. போட்டியாளர்கள் சமைத்து தங்களின் உணவை பயபக்தியுடன் பரிசோதனை மேஜைக்கு கொண்டு வந்தனர்.

முதலில் வந்தவர் தேவகி. ‘மாயாஜாலம்’ என்று தனது தயாரிப்பிற்கு பெயர் சூட்டியிருந்த இவர், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி எலுமிச்சம் பழம் போலவே தோற்றமளிக்கும் ஓர் அழகான இனிப்பு வகையை (Mousse) செய்திருந்தார். பருத்திப்பால், செவ்வாழை + கருப்பட்டி ஐஸ்கிரீம் என்று துணை உணவுகள் இருந்தன. எதையும் சொல்லாமல் நின்று விட்டார் ஹரீஷ். “உங்க டிஷ் என்னை இம்ப்ரஸ் பண்ணலை” என்று கெளஷிக் ஜெர்க் தந்தவுடன் தேவகியின் வழக்கமான திருதிரு தோரணை வந்து விட்டது. “ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டேன்” என்று சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு கெளஷிக் சிரித்துக் கொண்டே சொன்னதும் உச்சி குளிர்ந்து போனார் தேவகி.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“ஷேப் ரொம்ப அழகா இருக்கு. லெமன் மேல இருக்கிற சின்னச்சின்ன புள்ளிகளைக் கூட கவனிச்சு பண்ணியிருக்கீங்க. எப்படி இதை சிந்திச்சீங்கன்னே எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்று செஃப் ஆர்த்தியும் சான்றிதழ் வழங்க அம்மணிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். “உங்க பிளேட்டிங் செம. நிச்சயமா இது ஃபினாலே டிஷ்தான்” என்று பாராட்டினார் ஹரீஷ்.

‘பிரசாதம்’ என்கிற தனது உணவை அடுத்து கொண்டு வந்தார் வின்னி. ஏற்கெனவே குறிப்பிட்டது போல அவர் உணவை நேர்த்தியாக அலங்கரித்திருந்த விதம் பிரமிப்பூட்டியது. “ஒவ்வொண்ணையும் பிரசாதம் ஸ்டைல்ல GASTRONOMY TECHNIQUE உபயோகிச்சு பண்ணியிருக்கேன்” என்று விளக்கினார் வின்னி. “Beautiful Execution” என்று பாராட்டினார் கெளஷிக். “இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த புளியோதரை. அது பொதுவா புளிப்பா இருக்கும். நீங்க ஸ்டாபெர்ரி ப்ரூட் யூஸ் பண்ணதால வித்தியாசமான டேஸ்ட் கிடைச்சிருக்கு” என்று குறிப்பாகச் சொல்லி பாராட்டினார் ஹரிஷ். அதுவரை ‘பிளேட்டிங் குயின்’ என்று பாராட்டப்பட்ட வின்னிக்கு ஆர்த்தியின் மூலம் பிரமோஷன் கிடைத்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
“வின்னி... நீங்க நெஜமாவே பிளேட்டிங் ஜீனியஸ். இவ்வளவு அழகியல் உணர்வோட பிளேட்டிங் பண்றது ரொம்ப கஷ்டம்” என்று மனமார பாராட்டினார் ஆர்த்தி. “வின்னி எனக்கு டெக்னிக்கலா எல்லாம் சொல்லத் தெரியாது. உங்க டிஷ்ல பிரசாத ஸ்மெல் வந்தது. சுவையும் இருந்தது. அற்புதம்” என்று விசே குறிப்பிட்டவுடன் மனம் குளிர்ந்தார் வின்னி. ஏனெனில் தனது உணவு கோயில் பிரசாதத்தை நினைவுப்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

அடுத்து வந்த நித்யா, தனது உணவைத் திட்டமிட்டிருந்தது புத்திசாலித்தனம். இறுதிப்போட்டியில் எதைச் செய்தால் நடுவர்களைக் கவர முடியும் என்கிற பிளானிங் அவரிடம் இருந்தது. ‘தமிழ் மாவட்ட கொண்டாட்டம்’ என்று தனது தயாரிப்பிற்கு பெயர் சூட்டியிருந்த நித்யா, ஒவ்வொரு மாவட்டத்தின் ஸ்பெஷல் உணவுகளையும் கலவையாக சமைத்திருந்தார். தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா, சேலம் தட்டுவட செட், செட்டிநாடு காளான், செட்டிநாடு சிக்கன் வெள்ளைக்குருமா, பீட்ரூட் + கறிவேப்பிலை பொடி, பூசணிக்குழம்பு, கீரை மசியல், கேழ்வரகு மோர்களி, மிளகாய்சட்னி… என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே நித்யாவின் தட்டில் கலவையாக உட்கார்ந்திருந்தது. “நவீன தோற்றமா இருந்தாலும் நம்ம ஊர் சுவையைக் கொண்டு வந்திருக்கேன்” என்று கூறி பெருமிதமாக நின்றார் நித்யா.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
“அந்த சிக்கன் வெள்ளைக்குருமா... செம” என்றார் கெளஷிக். “Am Speechless” என்று சுருக்கமாகவும் ஆழமாகவும் பாராட்டினார் ஆர்த்தி. “சிக்கனை நீங்க சமைச்ச விதம் பிரில்லியண்ட். நிச்சயமா இது பினாலே டிஷ்தான்” என்று பாராட்டினார் ஹரீஷ்.

கடைசியாக வந்தவர் கிருத்திகா. ‘திருவமுது’ என்று பக்திமணம் கமழ தன் உணவிற்கு பெயர் சூட்டியிருந்தார். இவரது தட்டு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. “எனக்குப் பிடிச்ச கடவுள் முருகன். எனவே பஞ்சாமிர்தம், தேன், திணைமாவு.. இ.த வெச்சு ஒரு நவீன தோற்றத்தில் டெஸர்ட் பண்ணியிருக்கேன்” என்று விளக்கினார் கிருத்திகா. “உங்க ஐஸ்கிரீம் டெக்ஸ்ஷர் கொஞ்சம் ஐஸியா இருக்கு. மத்தபடி வேற விஷயங்கள் எல்லாம் ஃபர்பெக்ட்” என்று பாராட்டினார் ஆர்த்தி. “உங்க பிளேட்டிங் சிறப்பு” என்றார் ஹரீஷ். “பஞ்சாமிர்தத்தை நீங்க deconstruct செஞ்ச விதம் அருமை” என்று பாராட்டினார் கெளஷிக்.

நான்கு இறுதிப் போட்டியாளர்களின் உணவும் பரிசோதிக்கப்பட்டு, அதன் நிறை, குறைகள் தெரிவிக்கப்பட்ட பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம் இது. போட்டியாளர்கள் ஆவலும் திகைப்புமாகக் காத்திருந்தனர். அவர்கள் இத்தனை வாரமும் பல சவால்களை எதிர்கொண்டு முட்டி மோதி, பரபரப்புடன் சமைத்து போராடியதெல்லாம் இந்த ஒரு கணத்திற்காகத்தான். எனவே போட்டியின் முடிவை அறிந்து கொள்ள டென்ஷனுடன் காத்திருந்தார்கள்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

“முடிவுகளை சொல்றது மட்டும்தான் என் வேலை” என்றபடி சேஃப் கேம் ஆடிய விஜய்சேதுபதி அவற்றை அறிவிக்கத் துவங்கினார். அதன்படி அறுபதுக்கு 43 மதிப்பெண்கள் பெற்று வின்னி நான்காம் இடத்தைப் பிடித்தார். இதைக் கேட்டதும் வின்னியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. “நான் கடைசியா?’ என்று அதிர்ந்து போனார். 3வது இடம் கிருத்திகாவிற்கு கிடைத்தது. அவர் அறுபதுக்கு 44 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஒரு மதிப்பெண்ணில் வின்னி பின்தங்கி விட்டார்.

அடுத்தாக வின்னர் மற்றும் ரன்னர் அறிவிக்கப்படும் நேரம். “ஒரு சிறப்பு விருந்தினரை கூப்பிடலாம்” என்று விசே அறிவித்தவுடன் இந்தப் போட்டியை ஸ்பான்சர் செய்த நிறுவனத்தின் சார்பில் ஓர் உயர் அதிகாரி வந்திருந்தார். வெற்றியாளர் அறிவிக்கப்பட வேண்டிய முக்கியமான நேரம். அறுபதுக்கு 54 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பெற்றவர் “தேவகி” என்று விசே அறிவித்தவுடன் தேவகியால் இதை நம்பவே முடியவில்லை. அவருடைய கண்களில் மகிழ்ச்சியும் கண்ணீரும் ஒருசேர வந்தது. இரண்டாம் இடத்தைப் பிடித்த நித்யா, 53 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆக... ஒரேயொரு மதிப்பெண்ணில் தேவகியின் வெற்றி அமைந்திருந்தது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

தேவகியின் ‘மாயாஜாலம்’ உணவை பரிசோதனை செய்தபோது “உங்க சிந்தனை பிரமாதம்” என்று கெளஷிக் பாராட்டினார். மற்றவர்களைப் போல் சம்பிரதாயமாக சிந்திக்காமல், ஒரு எலுமிச்சம்பழத்தின் வடிவத்தில் இனிப்பைத் திட்டமிட்டு, அதற்காக மிகவும் மெனக்கிட்ட தேவகியின் சிந்தனை மற்றும் உழைப்பிற்காக இந்த விருது கிடைத்திருக்க வேண்டும். “மாத்தி யோசி” என்பதற்கான சிறந்த உதாரணம், தேவகியின் வெற்றி.

“இங்க வரும்போது ஃபைனல் வருவேன்னுல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல. ஆனால் ஒவ்வொரு கட்டமா தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாம் செய்வதில் நாமே முதலில் நம்பிக்கை வைக்கணும்-ன்ற பாடத்தைக் மாஸ்டர் செஃப்ல கத்துக்கிட்டேன். ரொம்ப மகிழ்ச்சி” என்று நெகிழ்ந்தார் தேவகி.

இறுதிப்போட்டியை வென்ற தேவகிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு, செஃப்கோட், டிராஃபி போன்றவை வழங்கப்பட்டன. தங்கநிற பார்டர் கொண்ட கோட்டில் கம்பீரமாக நின்றார் தேவகி. இதுதவிர ஸ்பான்சர் நிறுவனத்தின் ரொக்கப் பரிசும், சமையல் பொருள்களும் போட்டியாளர்களுக்கு கிடைத்தன. தேவகி ரூ.1 லட்சம், நித்யா ரூ.75,000/-, கிருத்திகா – ரூ.50,000/-, வின்னி – ரூ.25,000/- ரொக்கப் பரிசு பெற்றனர்.
தேவகி
தேவகி

“இத்துடன் மாஸ்டர் செஃப் முதல் சீஸன் முடியுது. அடுத்த சீஸன்ல சந்திப்போம்” என்றபடி விஜய்சேதுபதியும் நடுவர்களும் விடைபெற்றனர். சமையலை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்ட ரியாலிட்டி ஷோ என்கிற வகையில் மாஸ்டர் செஃப் மிகத்தரமாகவும் அற்புதமாகவும் இருந்தது. சமகாலத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதர ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது அருமையானது என்று சொல்லிவிடலாம்.

இத்தனை வாரங்கள் இந்தக் கட்டுரைத் தொடரை ஆவலுடன் ருசித்து வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!