சிங்கத்தின் குகைக்கே சென்று அதைச் சந்திப்பது போல, மாஸ்டர் செஃப் தமிழின் பதினோறாவது எபிசோடில் அடுத்தக் கட்ட முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ஆம், இதுவரை அரங்கத்துக்குள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று சமைக்க வேண்டும். அது மட்டுமல்ல, அவர்களின் சமையலை சாப்பிட்டு மதிப்பிட விருந்தினர்களும் வருவார்கள்.
“அடுப்புல இருக்கறவன், கடுப்புல இருக்கக்கூடாது” என்கிற காமெடி காட்சி மாதிரி இரு அணிகளாகச் செயல்பட்ட போட்டியாளர்களுக்குள் சிறிய முட்டல், மோதல்களும் ஏற்பட்டன. மாஸ்டர் செஃப்பில் லைட்டாக ‘பிக்பாஸ்’ தீய்ந்த வாசனை வந்த தருணம் இது.
சிங்கத்தின் குகைக்குச் சென்றவர்கள், அதை துணிச்சலாக எதிர்கொண்டார்களா அல்லது சிங்கத்தையே அசிங்கமாக்கினார்களா என்பதை விரிவாகப் பார்ப்போம்.

விஜய் சேதுபதியின் காஸ்ட்யூம் அட்டகாசமாக இருந்தது. பளபளப்பான நீல நிற கோட் மற்றும் சூட்டில் பிரகாசமாக இருந்தார். என்னவொன்று, ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்பதைப் போன்ற அந்த ஹேர்ஸ்டைலை மட்டும் சற்று மாற்றிக் கொள்ளலாம். இதைப் போலவே செஃப்களின் ஆடைகளும் பார்க்க வசீகரமாக இருந்தன. குறிப்பாக தனது ஆடை நிறங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஹரீஷ் ராவ் எப்போதுமே ஸ்பெஷல். இன்றும் அப்படியே பச்சை நிற கோட்டில் பார்ப்பதற்கு பாந்தமாக இருந்தார்.
J W Marriott ஹோட்டலின் ஆடம்பரமான பின்னணியில் நின்று நீதிபதிகளை வாழ்த்தி வரவேற்றார் விஜய் சேதுபதி. இதன் பிறகு கார்களில் போட்டியாளர்கள் வந்து இறங்கினார்கள்.
“உங்க யாருக்கெல்லாம் இந்த மாதிரி ஹோட்டல் ஆரம்பிக்கணும்... இல்ல செஃப் ஆகணும்.. அந்த மாதிரி ஆசைல்லாம் இருக்கு?” – இப்படியொரு கேள்வியை போட்டியாளர்களை நோக்கி விஜய் சேதுபதி வீசினார். “ஒரு கஃபே ஆரம்பிக்கணும்னு ஆசை இருக்கு சார். ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய உணவுகளையும் தரணும்னு ஒரு ஐடியா இருக்கு” என்றார் கிருதாஜ்.
“ஆன்-ஸ்பாட் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு ஆசையிருக்கு சார்... நாங்க பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் தந்துடுவோம். வருகிற வாடிக்கையாளர்கள் சமைச்சு சாப்பிடணும்” என்று ஷாஜியா ஆர்வத்துடன் சொல்ல “என்னது பாத்திரங்கள் மட்டும் தருவீங்களா... ஓ சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு தர்ற கடையைச் சொல்றீங்களா?” என்று ஜாலியாக கேட்டு அவரை பங்கப்படுத்தினார் விசே.
‘தீம் உணவுகளை’ தரும் ஆர்வம் நித்யாவுக்கு இருக்கிறதாம். முதலில் ஆர்வமாக கை தூக்கிய மணிகண்டன், பிறகு அமைதியாக இருக்க “ஹலோ மணி... என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?” என்று விசே அவரை ஜாலியாக அதட்டினார். “ ‘தொலைந்த ரகசியங்கள்’ன்ற பேர்ல நம்ம பாரம்பரிய சமையல் வகைகளை மறுபடியும் கொண்டு வரணும்னு ஆசையிருக்கு” என்று ஏதோ இலுமினாட்டி சதி போல சொன்னார் மணிகண்டன். “பேக்கரி ஆரம்பிச்சு போயிட்டிருக்கு” என்று தேவகி சொல்ல “ஓ...பேக்கரி ஓனரம்மாவா?’’ என்று அவரை கிண்டலடித்தார் விசே.

பதினோறாவது எபிசோடில் போட்டியின் சூடு மெல்ல ஆரம்பித்தது. பாம்புப் புற்றில் கையை விடுவது போல ஒரு பெட்டிக்குள் போட்டியாளர்கள் கையை விட்டு ‘எதையோ’ எடுக்க வேண்டும். பெட்டிக்குள் இருந்தது நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்த ‘Chef hat’.
அதேதான். யாருக்கு என்ன நிறம் வருகிறதோ, அவர்கள் ஓர் அணியாக இணைய வேண்டும் என்பது அப்போதே தெரிந்து விட்டது. இதன்படி நீல நிற அணியில் கிருதாஜ், மணிகண்டன், தேவகி, வின்னி, ஆர்த்தி மற்றும் சுமித்ரா ஆகியோர் இருந்தார்கள். சிவப்பு நிற அணியில் கிருத்திகா, ஷாஜியா, தாரா, நித்யா, சுனிதா மற்றும் நவ்ஸீன் ஆகியோர் வந்து சேர்ந்தார்கள்.
அணி என்று வந்து விட்டால் அதற்கு தலைவர் வேண்டுமல்லவா? இந்தப் பொறுப்பை அந்தந்த அணியிடமே விட்டு விட, அவர்கள் கூடிப்பேசி தங்களின் தலைவரை தேர்ந்தெடுத்தார்கள்.
இதன்படி சிவப்பு அணி நவ்ஸீனை ‘தலைவி’யாக தேர்ந்தெடுத்தது. அவர் ‘தோனி’ போல அமைதியாகவும் கூலாகவும் இருந்து வேலை வாங்குவாராம். நீல அணி ‘ஆர்த்தி’யை தலைவியாக தேர்ந்தெடுத்தது. இதுவரை அவர் ‘Danger Zone’ –க்கு செல்லாமல் சிறப்பாக விளையாடுகிறாராம்.
ஆட்டம் ஆரம்பித்தது. இந்த இரு அணிகளும் தலா ஒரு ஸ்டார்ட்டர், ஒரு மெயின் கோர்ஸ், ஒருடெஸர்ட் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். இதற்கு தரப்படும் நேரம் 90 நிமிடம் மட்டுமே. (அடப்பாவமே!).

“கவனம் இருக்கட்டும். விருந்தினர்கள் வந்து உங்கள் உணவு வகைகளைச் சுவைத்துப் பார்ப்பார்கள். மதிப்பிடுவார்கள். எனவே நீங்கள் மெனு வரிசையை யோசித்து உருவாக்க வேண்டும். பட்லர்கள் ஆர்டர் எடுத்து வந்து KOT-ஐ கிச்சனில் தருவார்கள். (Kitchen Order Ticket). அதன்படி நீங்கள் உணவுகளை உடனுக்குடன் சப்ளை செய்ய வேண்டும்” என்று தனது வழக்கமான கறார் குரலில் விதிகளை தெளிவாக செஃப் கெளஷிக் எடுத்துரைக்க, அந்த ஏஸியிலும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் வியர்த்திருக்கும்.
‘‘இதில் வெற்றி பெறப் போகிற அணி பால்கனிக்கு செல்வார்கள். தோற்கும் அணி அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்” என்று அவர்களின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்தார் கெளஷிக்.
இதுவரை அரங்கத்தில் சமைத்தது வேறு. உண்மையாகவே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கிச்சனில் நின்று சமைப்பது வேறு. நீதிபதிகள் பரிசோதிப்பது மட்டுமல்லாமல் விருந்தினர்களும் இதை சுவைத்து மதிப்பிடப் போகிறார்கள் என்றதும் போட்டியாளர்களுக்குள் பதற்றம் கூடியது.
‘சாப்பிட வாங்க. சந்தோஷமா போங்க’ என்று இந்த டாஸ்க்குக்கு பெயர் வைத்து மகிழ்ந்தார் விசே.
“நான் செஃப் ஆவறதுக்கு முன்னால் சுமார் மூன்று வருடங்கள் மாவு அரைக்கும் பணியில் மட்டுமே இருந்தேன். கிச்சன் பர்னர் பக்கம் செல்லும் போதெல்லாம் அந் ஏரியாவை ஏக்கத்துடன் பார்ப்பேன். ‘நமக்கு இதில் சமைக்க எப்போது வாய்ப்பு வரும் என்று’. நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். இந்த வாய்ப்பு வெகு எளிதில் உங்களுக்கு கிடைத்து விட்டது’ என்று ஹரீஷ் ராவ் சொன்னது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘அந்தக் காலத்தில பார்த்தீங்கன்னா’ என்கிற தொனி வந்தாலும் அவர் சொல்வது முற்றிலும் உண்மை. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் கடுமையான உழைப்பும் காத்திருப்பும் இருக்கிறது.
போட்டி சூடாக ஆரம்பித்தது. அந்தந்த அணிகளின் தலைவர்கள் ஆலோசித்து டீம் மெம்பர்களுக்கு பணிகளை பிரித்துத் தந்தார்கள். அவர்கள் செய்யவிருக்கும் மெனு என்னவென்று பார்க்கலாம்.
நீல அணி தங்களின் உணவுக்கு ‘இது நம்ம விருந்து’ என்று தலைப்பிட்டது. இதில் ‘சுட்ட மலாய் கோழி’ (Starter) ‘பாலாடை பொட்டலம்’ (Main Course), ‘சீதனம்’ (Dessert) என்கிற வகையில் அமைந்தது.
சிவப்பு அணி, ‘South Indian in Style’ என்று தங்கள் மெனுவுக்கு ஸ்டைலாக பெயரிட்டிருந்தார்கள். இதில் ‘கருவேப்பிலை மீன் வறுவல்’ என்பது ஸ்டார்ட்டராகவும் ‘அம்மாவின் அன்பு’ என்பது மெயின் கோர்ஸாகவும் ‘மெட்ராஸ் காபி பால் கேக்’ என்பதை டெஸர்ட் ஆகவும் திட்டமிட்டிருந்தார்கள். இதில் ‘அம்மாவின் அன்பு’ என்கிற மெயின் கோர்ஸில் சாம்பார் சாதத்துடன் சில அசைவ அயிட்டங்கள் இணைந்திருக்கும். (அம்மா உணவகத்தின் நினைவு யாருக்கோ வந்து விட்டது போல).
இவர்கள் இப்படி திட்டமிட்டதில் இருந்த ஒரு பெரிய பிழையை இறுதியில் செஃப் கௌஷிக் சுட்டிக் காட்டினார். அது என்ன என்பதை அந்தச் சமயத்தில் பார்க்கலாம்.
போட்டியாளர்கள் சமைத்துக் கொண்டிருந்த போதே ‘நாடோடிகள்’ பட பாணியில் மெனு கார்டுகள் சுடச்சுட அச்சடிக்கப்பட்டு டேபிளில் அலங்காரமாக வைக்கப்பட்டன. (என்னா ஸ்பீடு?!)

போட்டியாளர்கள் முதலில் தடுமாறியது அங்குள்ள பர்னர்களை எப்படி கையாள்வது என்பதில்தான். நம் வீடுகளில் உள்ள கேஸ் பர்னர்கள் வேறு. அதிக எண்ணிக்கையில் உள்ள நபர்களுக்கு சமைக்கும் ஹோட்டல்களில் உள்ள பர்னர்கள் வேறு. எனவே ‘அண்ணே... இதுவா மேன்ட்டில்... இதுல எப்படின்ணே லைட் எரியும்?” என்று செந்தில் மாதிரி இஷ்டத்துக்கு அதை திருப்பி எரிய விட்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
பர்னரில் மட்டுமல்ல, அணி உறுப்பினர்கள் திட்டமிடுதலில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
மெயின் கோர்ஸ் உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கிருத்திகா மற்றும் தாராவின் இடையில் ‘சாம்பார் சண்டை’ நிகழ்ந்தது. ‘சாம்பார் ரைஸ் வேண்டாமே?” என்கிற தாராவின் கருத்து கொடூரமாக நிராகரிக்கப்பட்டதாக அவர் வருந்தினார். அதை விடவும் கூடுதல் காமெடி என்னவென்றால் “சாம்பாரில் யாராவது தக்காளி போடுவார்களா?” என்று கிருத்திகா கேட்டு தடுத்திருப்பார் போலிருக்கிறது. இதைப் பகிரும் போது தாராவின் முகத்தில் அப்படியொரு வருத்தம்.
டெஸர்ட்டுக்காக பாலை சுண்ட வைக்கும் நோக்கத்தில் வைத்திருந்தார்கள். அது அதிக சூடாகி பாத்திரத்தின் மேலே உள்ள கண்ணாடி மூடி வெடித்து உடைந்து துண்டு துண்டானது. ‘கண்ணாடி துண்டுகள் பாலில் விழுந்திருக்கக்கூடும்’ என்கிற அச்சமும் தயக்கமும் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்டாலும் ‘இதை அப்படியே வடிகட்டி விடுவோம். ஒன்றும் பிரச்னையில்லை’ என்று கேப்டன் ஆர்த்தி ‘கூலாக’ சொன்னார். நேர நெருக்கடி காரணமாக அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.
ஆனால், அது மிக ஆபத்தான முடிவு. ஒரு சிறிய கண்ணாடி துண்டு கூட சாப்பிடுபவர்களின் வயிற்றில் போனால் பிரச்னைதான். தரத்தையும் விதிகளையும் கறாராக கடைப்பிடிக்கும் ஹோட்டலாக இருந்தால் அதை அப்படியே கீழே கொட்டி விடுவதுதான் சரியான செயலாக இருக்கும். ஆனால், இது போட்டி ஆயிற்றே? ஜெயிக்க வேண்டுமே என்கிற பதட்டம் போட்டியாளர்களுக்குள்.
“என்ன ஆச்சு... விருந்தினர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க.. இன்னமும் கொஞ்ச நேரம்தான் இருக்கு” என்று நீதிபதிகள் அவ்வப்போது எச்சரித்து டென்ஷனை கூட்டிக் கொண்டிருந்தார்கள்.
போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி ஒருவழியாக உணவு வகைகளை முடிக்கும் சமயத்திலேயே ஆர்டர்கள் வர ஆரம்பித்து விட்டன. முதலில் ஸ்டார்ட்டர்களை சர்வ் செய்ய வேண்டும். உணவை பாத்திரத்தின் உள்ளே எப்படி தாறுமாறாக கிளறினாலும் பரவாயில்லை, அதை தட்டில் அலங்காரமாக வைப்பதுதான் ஸ்டார் ஹோட்டல்களில் முக்கியம்.
வந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட ஆரம்பிக்க, போட்டியாளர்கள் மனதினுள் தங்களின் குலதெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்திருக்கலாம். (அய்யனாராப்பா.. உன் பிள்ளைய எப்படியாவது காப்பாத்திடு!).
இதில் விஜய் சேதுபதியின் நிலைதான் பரிதாபம். இதுவே அரங்கமாக இருந்தால், போட்டியாளர்கள் சமைக்கும் போதே ‘’எப்படி போயிட்டு இருக்கு?” என்று விசாரிக்கும் சாக்கில் அங்கிருந்த எதையாவது வாயில் போட்டு லபக்கி விடுவார். போலவே சமைத்து முடித்த பின்னரும் ஒவ்வொருவரின் உணவையும் உடனே வாங்கி ‘‘சிறப்பு சிறப்பு’’ என்றபடி முடித்து விடுவார். ஆனால், இது நட்சத்திர ஹோட்டல் என்பதால், நாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு “உணவு எப்படியிருக்குங்க?” என்று விருந்தினர்களை அவர் விசாரிக்க வேண்டியிருந்தது. கலவையான கமென்ட்டுகள் அவர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தன.

சாப்பிட்டவர்களிடம் பில்லுக்குப் பதிலாக ‘வோட்டிங் கார்டு’ தரப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் அவர்கள் மார்க் போட வேண்டும்.
ஹோட்டல் களேபரம் முடிந்து ஒருவழியாக அனைவரும் அரங்குக்கு திரும்பினார்கள். “ஹோட்டல்ல சமைச்சது பிடிச்சதா... இங்க சமைக்கறது பிடிக்குதா?” என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டதும், அனைவரும் ஒரே குரலில் ‘அரங்கத்துக்குள் சமைப்பதுதான் செளகரியமாக இருக்கிறது’ என்று கோரஸ் பாடினார்கள்.
சமைக்கும்போது போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதல்கள், தள்ளுமுள்ளுகள் பற்றிய பஞ்சாயத்து விசாரணை தொடங்கியது. ‘’எங்க டீம்ல எல்லோரும் நல்லா கோஆப்ரேட் பண்ணாங்க. மணிகண்டன் மட்டும் படபடப்பாக இருந்தார்” என்று நீல அணி கேப்டன் ஆர்த்தி சொல்ல, “அப்ஜெக்ஷன் மைலார்ட். அது படபடப்பு அல்ல. எனது சுறுசுறுப்பு’ என்று டிஆர் பாணியில் அடுக்கு மொழியில் பதிலுக்கு பொங்கினார் மணிகண்டன்.
நடந்த காட்சிகளை நாமும் பார்த்தோம். பர்னர்களைக் கையாள நீல அணி நிறைய தடுமாறிய போது அங்கு பல சமயங்களில் உதவியவர் மணிகண்டன்தான். “கேப்டனாகப்பட்டவர் என்னுடைய பங்களிப்பை மறைப்பது மட்டுமல்லாமல் என் மேலேயே குறை சொல்வது கோபத்தை ஏற்படுத்துகிறது’ என்றார் மணிகண்டன். பர்னர் சூட்டை கையாளத் தெரிந்தவருக்கு தன் மனச்சூட்டை ஹேண்டில் பண்ணுவதில் பிரச்னை.
ஆனால், மணிகண்டனின் கோபத்தில் நியாயமுள்ளது. ஓர் அணித் தலைவர் தன்னுடைய டீம் மெம்பர்களின் உழைப்புக்கு நியாயமான முறையில் கிரெடிட் தர வேண்டும். மணிகண்டனின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கூடவே ‘டென்ஷனைக் குறை’ என்று அறிவுறுத்தினார்கள்.
அடுத்தது சிவப்பு அணி பஞ்சாயத்து. ‘கிருத்திகா ரொம்ப டாமினேட் செய்தார்’ என்று ஷாஜியாவும், தாராவும் கூட்டணியாக இணைந்து பிராது சொன்னார்கள். ‘‘சாம்பார்ல போய் தக்காளி போட வேண்டாம்னு சொல்லிட்டாங்க சார்” என்று அழாத குறையாக சொன்னார் தாரா. “அவங்களோட இயலாமையை இப்படி மறைக்கறாங்க” என்று கிருத்திகா இதற்கு விளக்கம் அளித்தாலும் புகார் சொல்லப்படும் போது தலைகுனிந்தபடி நின்றிருந்தார்.
“டீமா வேலை செய்யும் போது ஒருத்தர் ஈகோவை தொடக்கூடாது. அது அப்படியே டீமுக்குள்ள பரவிடும்” என்கிற யதார்த்தமான உண்மையை விஜய்சேதுபதி சொன்னது திருவாசகம். “கிச்சன் சூட்டை விட உங்க சூடு அதிகமாக இருந்தது” என்று சொன்ன விசே, கிருத்திகாவுக்கும் அட்வைஸ் செய்ய தவறவில்லை.
இந்தப் பஞ்சாயத்துக்கள் முடிந்ததும் போட்டியின் முடிவுகள் வரத் தொடங்கின. போட்டியாளர்கள் சமைத்த உணவை நீதிபதிகளும் விசேவும் (ஹப்பாடா... இப்பவாவது சாப்பாட்டை கண்ல காட்டினாங்களே?!) சுவைத்து மதிப்பிட ஆரம்பித்தார்கள். ஸ்வீட் செய்யும் போது அதில் இனிப்புச் சுவை அதிகமாகி விட்டால் ஒரு சிட்டிகை உப்பு போட்டால் சமனாகி விடும்’ என்கிற டிப்ஸை நீதிபதிகள் சொன்னார்கள்.
சிவப்பு அணி 39 ஆர்டர்களும் நீல அணி 38 ஆர்டர்களும் பெற்று ஏறத்தாழ சமமான அளவில் இருந்தார்கள். ஸ்டார்ட்டர் செக்ஷனில் கூட இரு அணிகளும் ஏறத்தாழ சமமான மதிப்பெண்கள் பெற்றன. ஆனால் டெஸர்ட் செக்ஷனில், நீல அணி செய்திருந்த ‘மெட்ராஸ் காபி பால் கேக்’ அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தது.
‘மெயின் கோர்ஸில் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. இந்த வகையில் நீல அணி செய்திருந்த ‘பாலாடைப் பொட்டலம்’ பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருந்தது. இறுதியில் நீல அணி 48 வாக்குகள் பெற, சிவப்பு அணி 38 வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஆக சிவப்பு அணியில் உள்ள ஆறு நபர்களும் அடுத்த சுற்று சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதில் மூன்று நபர்கள் தேர்வாகி பால்கனிக்குச் செல்வார்கள். மீதமுள்ள மூவரும் ‘கறுப்பு ஏப்ரன்’ பெற்று அடுத்த சுற்றை சந்திக்க வேண்டும்.
“நீங்கள் செய்ததில் ஒரு மிகப்பெரிய பிழை இருந்தது” என்று செஃப் கெளஷிக் சொன்ன மேட்டர் என்ன தெரியுமா?
இரு அணியில் உள்ள போட்டியாளர்களும் தங்கள் மெயின் கோர்ஸை ‘அசைவ வகை’ உணவாக திட்டமிட்டு விட்டார்கள். எனவே ‘சைவ உணவுப் பழக்கம்’ உள்ள விருந்தினர்கள் வெறும் டெஸர்ட்டை மட்டுமே உண்டு விட்டுச் சென்றார்கள். இதனால் கூட போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறைந்திருக்கலாம்.
எத்தனை பெரிய பாடம் இது!