Published:Updated:

மாஸ்டர் செஃப் பாயாசத்துக்குள் பூ வாசம்... விஜய் சேதுபதியின் பேரு வெச்சியே சோறு வெச்சியா மொமன்ட்ஸ்!

மாஸ்டர் செஃப்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (09-10-2021) ஒளிபரப்பான 19-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

மாஸ்டர் செஃப் பாயாசத்துக்குள் பூ வாசம்... விஜய் சேதுபதியின் பேரு வெச்சியே சோறு வெச்சியா மொமன்ட்ஸ்!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (09-10-2021) ஒளிபரப்பான 19-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப்

‘'இந்த சமையல் மேட்டர் எல்லாம் எனக்கு ரொம்ப ஈஸி. ப்பூ... ன்னு ஊதித் தள்ளிடுவேன்’' என்று அலட்டலாக பேசுபவர்கள் கூட மாஸ்டர்செஃப்பின் இந்த எபிசோடைக் கண்டால் திகைத்துப் போவார்கள். ஆம்… 'பூ'வை சமைத்து வைக்க வேண்டும்' என்பதுதான் இதில் வெளிப்பட்ட சவால். ஆனால் அது வாழைப்பூ, வேப்பம்பூ எல்லாம் இல்லை. மல்லி, ரோஸ், சாமந்தி என்று தலையில் வைக்கும் சமாச்சாரங்கள். ஆனால் போட்டியாளர்கள் இதிலும் தங்களின் திறமையைக் காட்டி அசத்தினார்கள்.

ஓகே... கடந்த சனிக்கிழமை (09-10-2021) ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் 19-வது எபிசோடில் என்ன நடந்தது?

'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' காயத்ரியுடன் விறுவிறுவென அரங்கத்துக்குள் நுழைந்தார் விஜய் சேதுபதி. (காயத்ரியின் டிரஸ்ஸிலும் சில பக்கங்களைக் காணோம்). காயத்ரிக்கு அரங்கத்தைச் சுற்றிக் காட்டி விட்டு 'இது என்னுடைய அன்பு பரிசு' என்று அங்கு அழகாக வைக்கப்பட்டிருந்த மலர்களைக் காட்டினார் விஜய் சேதுபதி. ஆக. மலரை வைத்துதான் இன்றைய சமையல் போட்டி என்பது அப்போதே நமக்குப் புரிந்து விட்டது. 'தேங்கால குருமா வைக்கலாம்… பாம் வைக்கலாமா?’’ என்கிற காமெடி போல, பூவை தலையில் வைக்கலாம். இலையில் வைக்க முடியுமோ?!

மாஸ்டர் செஃப் காயத்ரி
மாஸ்டர் செஃப் காயத்ரி
காயத்ரி, விசேவை 'விஜய்காரு' என்றுதான் அழைப்பாராம். 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்திற்குப் பிறகு ஏற்பட்ட பழக்கமாம் இது. விசே பதிலுக்கு 'பங்காரம்' என்றுதான் காயத்ரியை அழைக்கிறார். இதற்கும் சமையலுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் கேட்கக்கூடாது. இந்த trivia-க்களை ஒரு பக்கம் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் நிற கோட் மற்றும் ஷூவில் அட்டகாசமாக வந்த செஃப் ஹரீஷை 'இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்' என்று காயத்ரியிடம் அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி. பின்னாலேயே செஃப்கள் ஆர்த்தியும் கெளஷிக்கும் வந்தார்கள். "எனக்காக ஒருமுறை 'ப்பா...' சொல்லுங்களேன்" என்று ஹரீஷ் வேண்டிக் கொள்ள புகழ்பெற்ற அந்த சத்தத்தை வெளிப்படுத்தினார் விசே. "இப்ப சந்தோஷமா?" என்று ஹரீஷிடம் புன்னகைத்தார் காயத்ரி.

"எல்லாப்பூக்களும் உண்ணத் தக்கதல்ல. ஆனால் செம்பருத்தி, சாமந்தி, ரோஜா, குண்டுமல்லி, துலுக்க சாமந்தி, நஸ்டார்சியம், Dianthus போன்ற மலர்களை வைத்து சமைக்க முடியும்" என்றார் ஆர்த்தி. இந்தப் பூக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இதை வைத்து டெஸர்ட் செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய சவால்.

போட்டியாளர்களில் யாருக்கு எந்த பூ என்பதை ஒரு விளையாட்டின் மூலம் தேர்வு செய்தார்கள். பூவை வரியாகக் கொண்டிருக்கும் சினிமாப் பாடல்களை போட்டியாளர்கள் பாட வேண்டும். யார் அதிகப் பாடல்களை பாடுகிறார்களோ, அந்த வரிசையில் தேர்வில் முன்னுரிமை கிடைக்கும். ‘’பூ பூக்கும் ஓசை… அதைக் கேட்கத்தான் ஆசை’' முதற்கொண்டு ‘’மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’' போன்ற பாடல்கள் வரை பல சினிமாப் பாடல்கள் இறைபட்டன.நன்றாக சமைக்கத் தெரிந்தவர்களுக்கு பாடத் தெரியவில்லை. எனவே சிரித்துக் கொண்டே வசனம் போல் பேசினார்கள்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அதிக பாடல்களைப் பாடிய கிருத்திகாவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அவர் செம்பருத்தியை தேர்ந்தெடுத்தார். நித்யா (ரோஜா), சுனிதா (செவ்வந்தி), வின்னி (மல்லி), சுமித்ரா ( நஸ்டார்சியம்), தேவகி ( Dianthus), மணி (துலுக்க சாமந்தி) போன்ற மலர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். செம்பருத்திக்கும் ரோஜாவுக்கும் அதிக டிமாண்ட் இருந்தது. சிலருக்கு அது என்ன பூ என்று தெரியாவிட்டாலும் அதன் அழகுக்காகவே எடுத்தார்கள். "டேஸ்ட் பண்ணிப் பாருங்க" என்றார் கெளஷிக். சில பூக்கள் மென் கசப்பாகவும் வேறு சில பூக்கள் சற்று இனிப்பாகவும் இருந்தன.

"வின்னி… உங்க பூ கசப்பா இருக்குன்னு சொன்னீங்க இல்லையா… அதுல ‘’….’’ பிரெளன் சுகரைப் போடுங்க. சமன் ஆயிடும்'’ என்று ஸ்பான்சரின் பிராடக்ட்டை சாமர்த்தியமாக செருகினார் கெளஷிக்.

"இந்த டெஸர்ட்டை செய்ய உங்களுக்கு தரப்படும் நேரம் 60 நிமிடம். Pantry டைம் 2 நிமிடம். நீங்க எடுத்திருக்கிற பூ-தான் உங்க டிஷ்ஷோட ஹீரோவா இருக்கணும் " என்று போட்டியை ஆரம்பித்து வைத்தார்கள். இந்தப் போட்டியில் ஜெயிக்கும் 4 பேர் பால்கனிக்கு செல்வார்கள். மீதமுள்ள மூன்று பேர் எலிமினேஷன் ரவுண்டுக்குச் செல்வார்கள்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

"பிளேட்டு கிளாஸா இருக்கணும்... மனசு மாஸா இருக்கணும்.. டேஸ்ட்டு பாஸா இருக்கணும்" என்று டிஆர் மொழியில் பேசி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார் கெளஷிக். கட்டக் கடைசி நொடியில் Pantry அறையில் இருந்து வெளியே வந்து நம்மைத் திகிலூட்டினார் சுமித்ரா. (இப்படி யாராவது உள்ளே மாட்டிக் கொண்டால் என்னவாகும்?!).

"இந்த எபிஸோடை பார்த்ததும், "சாமந்தி பூ அரைகிலோ வாங்கி வந்திருக்கேன். மல்லி கால் கிலோ இருக்கு... சமைச்சு வெச்சுடுன்னு எந்த ஹஸ்பண்டாவது வீட்ல சொல்லப் போறாங்க" என்று ஜோக் அடித்தார் விஜய் சேதுபதி. (எந்தக் கணவராவது அப்படிச் சொன்னால் அவருக்கு மலர் வளையம் வைக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்!).

பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சமையலில் ஒவ்வொவரும் விதம் விதமான உத்திகளைப் பயன்படுத்தினார்கள். செஃப் ஆர்த்தி மணிகண்டனிடம் வந்து விசாரிக்கும் போது அவருக்கே சொல்லித் தரும் வகையில் கெத்தாக பேசினார் மணிகண்டன். (இந்தாள் எப்படியோ வாரா வாரம் தப்பிச்சிடறாரே?!).

போட்டி நேரம் முடிந்து ஒவ்வொருவரும் தங்களின் உணவைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். முதலில் வந்தவர் கிருத்திகா. இவர் கொண்டு வந்திருந்த உணவின் பெயர் 'சுவீட்டான செம்பருத்தி'. ஜெல்லி, சாக்லேட் சாய்ல் எல்லாம் போட்டு இவர் சமைத்திருந்த இனிப்பு வரவேற்பைப் பெற்றது. 'பட்டையைக் கிளப்பிட்டீங்க" என்று ஹரீஷ் சொல்ல, அவர் வழக்கம் போல் திட்டுகிறார் போல என்று நினைத்து பயந்த கிருத்திகா, பிறகு அதைச் சரியாகக் கேட்டதும் மனம் குளிர்ந்து வாய் விட்டு சிரித்து "சார்... அதை சிரிச்சிக்கிட்டே சொல்லக்கூடாதா?" என்று ஆசுவாசமானார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அடுத்த வந்து தேவகிக்கு தாமதமாக அறிமுக வீடியோ காட்டப்பட்டது. (லேட்டரா ஷூட் பண்ணாங்க போல). இளமையிலிருந்தே சமையலில் ஆர்வமுள்ள தேவகிக்கு ஒரு பேக்கரி வைக்க வேண்டுமென்று கொள்ளை ஆசை. ஆனால் அவரது தந்தை ஒப்புக் கொள்ளவில்லையாம். பிறகு தேவகிக்கு திருமணமாகி சொந்தக்காலில் நின்ற பிறகு ஒரு சிறிய பேக்கரி ஆரம்பித்து அதில் வெற்றிக்கான வெளிச்சம் தென்பட ஆரம்பித்ததாம். உடனே ஓடி வந்து அவருக்கு பல உதவிகளைச் செய்தவர் வேறு யாருமில்லை.. தேவகியின் அப்பாதானாம். "ஒரு உணவு நல்லா இருந்ததாதான் அவரு ஒப்புக் கொள்வார்" என்றார் தேவகி (மாஸ்டர்செஃப்ல நீதிபதியா போட்டிருக்கலாம்!).

தேவகி கொண்டு வந்திருந்த உணவின் தலைப்பு ' Dianthus Pootharekalu' (இது ஆந்திரா இனிப்பு வகையாம்). "இப்பத்தான் முதன்முறையா பூ வாசனையோட ஒரு ஸ்வீட் சாப்பிடறேன்" என்று மகிழ்ந்தார் விசே. நாடகத்தனமாக பாராட்டுவதில் ஹரீஷை மிஞ்ச முடியாது. கமென்ட் எதுவும் சொல்லாமல் நேராக வந்து தேவகியுடன் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து விட்டார். அதாவது தேவகியின் சமையல் அத்தனை அட்டகாசமாக இருக்கிறதாம். "அப்புறம் என்ன… பால்கனிக்கு ஓடுங்க..." என்று தேவகியை உடனே பாஸாக்கி அனுப்பி வைத்தார் விசே. (என்னவொரு மொமன்ட்?!).

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

மல்லியை வைத்து சமைத்திருந்த வின்னி கொண்டு வந்த உணவின் தலைப்பு 'பூரிப்பு'. (ப்பா... பூ பெயர் வரும்படி டைட்டில் வெச்சிருக்காங்க!). "எனக்கு மல்லிப்பூ பிடிக்கவே பிடிக்காது. என் கல்யாணத்துக்கு நான் போட்ட கண்டிஷன் கூட இதுதான்" என்று கெளஷிக் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. '’மல்லிகை… என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'’ன்னு பாட்டு கூட இருக்கே?!. வின்னியின் உணவு பாராட்டைப் பெறவில்லையென்றாலும் மோசம் என்கிற திட்டையும் வாங்கவில்லை.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அடுத்ததாக வந்தாரய்யா. நம்ம மணிகண்டன். இவர் உணவை திட்டமிட்டிருந்த விதம் உண்மையிலேயே அசத்தல். மணிக்கு சற்று வாய்க்கொழுப்பு இருந்தாலும் உண்மையிலேயே செயல் வீரர். கோயிலுக்கு எடுத்துச் செல்லும் அர்ச்சனைத் தட்டு போலவே 'பிளேட்டிங்' செய்து அசத்தியிருந்தார். உங்க சிந்தனை சூப்பர்' என்று கௌஷிக் பாராட்டியது மணிக்கு கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு. (போன வாரம்தான் அப்படியொரு திட்டு வாங்கியிருந்தார்). பனகோட்டா + பழம்பொரியை வைத்து மணி தயாரித்திருந்த உணவு சுவையில் முன்னே பின்னே இருந்தாலும் அந்த டிசைனுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக வந்த டாக்டர் நித்யா, தனது உணவுக்கு 'Rosy Experience' என்று பெயர் சூட்டியிருந்தார். ரோஸ் + பிஸ்தா வைத்து இவர் செய்திருந்த டக்வா நெகட்டிவ் கமென்ட்டகளைப் பெற்றது. "ரொம்ப திகட்டுது. இது டக்வா கிடையாது" என்று முகத்தைச் சுளித்தார் ஆர்த்தி. 'அய்யோ.. மறுபடியும் கறுப்பு ஏப்ரனா?" என்று மனம் சோர்ந்து திரும்பினார் நித்யா.

'நஸ்டார்சியம் சீஸ் கேக்' - இதுதான் சுமித்ரா கொண்டு வந்திருந்த உணவு. 'சீஸ் கேக் கொழ கொழன்னு இருக்கே" என்கிற நெகட்டிவ்வான கமென்ட்டைக் கேட்டபடி திரும்பினார் இவர்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

கடைசியாக வந்த சுனிதா கொண்டு வந்திருந்த உணவின் பெயர் 'அப்பாவின் அன்பு' (அடடே!) மற்றவர்கள் இன்டர்நேனஷல் உணவை யோசிக்கும் போது சுனிதா 'நம்ம ஊர்' பாயாசத்தை வித்தியாசமாக யோசித்திருக்கிறார். இது இவருடைய அப்பாவுக்கு பிடித்த உணவாம். ஆனால் உணவை சர்வ் செய்யும் விதத்தில் இவருக்கு நெகட்டிவ் பாயின்ட் கிடைத்தது.

"நான் உங்களுக்கு ஒரு சேலன்ஞ் சொல்றேன்" என்று விசேவிடம் சொன்ன காயத்ரி "நான் சில வார்த்தைகளைச் சொல்வேன். அதற்கு மனதில் பட்டதை உடனே நீங்க சொல்லணும்" என்று ஆரம்பித்தார். காயத்ரி சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார் விசே. 'பொறாமை' என்றதற்கு 'வரக்கூடாத உணர்வு… ஆனா வந்துடுது" என்று வெளிப்படையாக விசே சொன்னது சிறப்பு. " ‘மாமனிதன்’ படத்துல காயத்ரி என் கூட நடிச்சிருக்காங்க… ‘சில சீன்ல உங்களையே தூக்கிச் சாப்பிட்டிருக்காங்க'ன்னு டைரக்டரே என் கிட்ட பாராட்டினார்" என்று காயத்ரிக்கு நற்சான்றிதழ் தந்தார் விசே.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

போட்டியின் முடிவுகள் வரத் தொடங்கின. ‘’கறுப்பு ஏப்ரன் அணியக்கூடாது" என்று ஒவ்வொரு போட்டியாளரும் பதைபதைப்பாக நின்று கொண்டிருந்தார்கள். டாப் 2-ல் வந்தவர் கிருத்திகா. அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் வின்னி. மணிகண்டனின் செய்திருந்த 'அர்ச்சனைத் தட்டு' அவரைக் காப்பாற்றியதை தெய்வ அருள் என்றே சொல்ல வேண்டும். டாப் 4-ல் வந்து அவரும் பால்கனிக்குச் சென்றார்.

ஆக மீதமிருந்த சுனிதா, சுமித்ரா மற்றும் நித்யா ஆகியோர் அடுத்து வரவிருக்கும் எலிமினேஷனைச் சந்தித்தாக வேண்டும். என்ன ஆகும்?

காத்திருந்து சுவைப்போம்!