ஒரு சிறிய ஆச்சரியத்தோடு துவங்குவோம். போட்டியாளர்களுக்கு பொதுவாக pantry டைம் இரண்டு நிமிடங்கள்தான் வழங்கப்படும். பிறகு கதவு மூடிக் கொள்ளும். இந்த நேரத்திற்குள் தங்களுக்கான சமையல் பொருள்களை போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும். சில போட்டியாளர்கள் இறுதி நொடியில்தான் பாய்ந்து வெளியே வருவார்கள். 'யாராவது குறித்த நேரத்திற்குள் வரத்தவறி கதவு மூடிக் கொண்டால் என்னவாகும்?' என்று கடந்த வாரம்தான் அபசகுனமாகக் கேட்டிருந்தேன்.
நான் கேட்டது தேவகி மற்றும் சுமித்ராவின் காதுகளில் விழுந்து விட்டதுபோல. என் ஆசையை நிறைவேற்றுவதுபோல இந்த முறை அவர்கள் pantry அறைக்குள் மாட்டிக் கொண்டார்கள். "சார்.. சார்.. இந்த முறை மன்னிச்சிடுங்க சார்" என்று ஸ்கூல் பிள்ளைகள் போல் அவர்கள் கெஞ்ச, "இதுதான் கடைசி. இனிமே இப்படிப் பண்ணாதீங்க" என்று அவர்களுக்கு பாவ மன்னிப்பு தந்து ரிலீஸ் செய்தார் கெளஷிக்.
ஓகே... மாஸ்டர் செஃப் 21 வது எபிசோடில் என்ன நடந்தது?
'இனிமே சின்ராசுவை கையில் பிடிக்க முடியாது' என்பது மாதிரி, ஏதாவது ஒரு பண்டிகை வந்தாலே ரியாலிட்டி ஷோக்கள் உற்சாகமாகி விடும். இதைப் போல மாஸ்டர் செஃப்பிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் சுருக்கமாக நிகழ்ந்தது. ஆடை விளம்பரங்களில் வருவது போல நீதிபதிகள் வண்ணமயமான உடைகளில் இருந்தார்கள். அதிலும் செஃப் ஆர்த்தி அணிந்திருந்த ஆடையும் ஒப்பனையும் அம்சமாக இருந்தது.
"ஆரம்பத்துல 16 போட்டியாளர்கள் இருந்தாங்க. இப்ப அது சுருங்கி டாப் 6-ல நீங்க வந்திருக்கீங்க. வாழ்த்துகள்" என்ற நீதிபதிகள், "ஒரு செஃப் ஆவறதுக்கு உங்ககிட்ட இருக்கற சிறப்புத் தகுதியா எதை நினைக்கறீங்க?" என்று கேட்டார்கள். 'சமையலின் மீதுள்ள passion' என்பது முதல் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.
"உங்களைத் தாண்டி ஃபைனல் வரைக்கும் போகவிருக்கும் கடுமையான போட்டியாளரா யாரை நினைக்கறீங்க?" என்கிற அடுத்த கேள்விக்கு மணியின் பெயர் ஆச்சர்யமாக பலமுறை அடிபட்டது. கிருத்திகா, தேவகி, மற்றும் வின்னி ஆகியோர் 'மணிகண்டனை' கடுமையான போட்டியாளராகக் கருதுகிறார்கள். "அவர் ஒரு ஆல்ரவுண்டர் சார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை" என்று சர்காஸ்டிக்கான குரலில் சொன்னார் கிருத்திகா. நித்யா, வின்னியையும் சுமித்ரா நித்யாவையும் குறிப்பிட்டார்கள்.
தெலுங்குப்பட படப்பிடிப்பில் இருந்து திரும்பியது போன்ற கெட்டப்பில் அரங்கத்திற்குள் நுழைந்தார் விஜய்சேதுபதி. பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்ச்சியாக இருந்தால் கூட மாஸ்டர் செஃப்பில் ஏதாவது உள்குத்து வைக்கிறார்கள். கையில் லட்டுடன் நுழைந்த விசே, போட்டியாளர்களிடம் அதை வழங்கினார். அதில் மூன்று வகையான லட்டுகள் இருந்ததைப் பார்த்தவுடன் 'இதில் ஏதாவது சூட்சுமம் இருக்குமோ?' என்று நித்யா மட்டுமே சந்தேகப்பட்டார். மற்றவர்களுக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் நித்யாவின் சந்தேகம் பிறகு உண்மையாயிற்று.
"ஆயுதபூஜைன்னா உங்களுக்கு உடனே நினைவுக்கு வர்ற விஷயம் என்ன? வண்டிகளை நல்லா கழுவி பூ பொட்டு வெச்சு பூஜை பண்றதுதான் என் நினைவுக்கு வரும்" என்றார் விசே. "அன்னிக்கு வேலை நிறைய இருக்கும் சார்... அதனால எங்க பாட்டி வீட்டுக்கு எஸ்கேப் ஆயிடுவேன்" என்று சொல்லி அரங்கத்தைச் சிரிக்க வைத்தார் மணிகண்டன். தேவகியின் குடும்பத்திற்குச் சொந்தமாக ஹோட்டல் இருப்பதால் பூஜை விசேஷமாக நடக்குமாம்.
"இதுதான் என் ஆயுசு முழுக்க சேர்த்த சொத்து" என்ற கெளஷிக், விதம் விதமாக இருந்த சமையல் கத்திகளைக் காட்டினார். "இது அழிக்கிற கத்தி இல்ல. சமையலை உருவாக்க உதவுகிற ஆயுதம்" என்று தொழில்பக்தியோடு சொன்னார்.
"ஓகே... இந்த வாரம் நீங்க அணியா பிரிஞ்சு போட்டியை எதிர்கொள்ளணும். ஆனா நீங்களாகவே எப்பவோ டீமா பிரிஞ்சுட்டீங்க. அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?" என்று விசே சொல்ல, போட்டியாளர்கள் புரியாமல் திகைத்துப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தரப்பட்டிருந்த லட்டுகள் மூன்று வகைகளில் இருந்தன. ஒரே வகையான லட்டை எடுத்தவர்கள் டீம் பார்ட்னராம். (ஒரு லட்டை கூட நிம்மதியா திங்க விடறீங்களா?!).
இதன்படி மணி - சுமித்ரா, நித்யா -வின்னி, கிருத்திகா - தேவகி என்பதாக அணிகள் அமைந்தன. ட்விஸ்ட் இத்தோடு முடியவில்லை. இன்னமும் தொடர்ந்தது. இந்த ட்விஸ்ட்கள்தான் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் அடிப்படையான சுவாரஸ்யத்துக்கு காரணம். 'பஸ்ஸர்' போன்று அமைக்கப்பட்டிருந்ததை விசே அழுத்தப் போக "அதை அழுத்தாதீங்க" என்று எச்சரித்தார் ஆர்த்தி. "ஓகே. இதைப் பற்றி அப்புறம் சொல்வோம்" என்று போட்டியாளர்களுக்கு பீதியைக் கிளப்பினார் விசே.
"இப்ப உங்க அணில இருந்து ஒருத்தர் வெளியே போய் காத்திருங்க" என்ற நீதிபதிகள், மிச்சமிருந்த மூவருக்கும் மூடப்பட்ட தட்டில் இருந்து மூன்று சமையல் பொருள்களை எடுத்து வெளியில் காட்டினார்கள். மரவள்ளி கிழங்கு, பப்ளிமாஸ் மற்றும் பரங்கிக்காய் ஆகியவை இருந்தன. "பப்ளிமாஸ்-ன்னு கிண்டல் பண்றதைக் கேட்டிருக்கேன். இன்னிக்குத்தான் இந்த அயிட்டத்தைப் பார்க்கறேன்" என்றார் விசே.
பரங்கிக்காய்க்கு அதிக டிமாண்ட் இருந்தது. வின்னியும் கிருத்திகாவும் அதைக் கேட்டு அடம்பிடிக்க "ஓகே... நான் மரவள்ளிக் கிழங்கை எடுத்துக்கறேன்" என்று கெத்து காட்டினார் ஆல்ரவுண்டர் மணி. "அப்படின்னா மத்தவங்களுக்கு என்ன தரலாம்-ன்றதை நீங்களே முடிவு பண்ணுங்க" என்று நீதிபதிகள் பர்மிஷன் கொடுக்க, "கத்தரிக்கா பேரு வர்ற சினிமாப் பாட்டை பாடினா தரேன்" என்று திடீர் போட்டியை மணி உருவாக்க, 'கத்தரிக்கா... குண்டு கத்தரிக்கா' என்று கிருத்திகா பாடி பரங்கிக்காயை வென்றார். எனவே பப்ளிமாஸை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வின்னிக்கு ஏற்பட்டது. "இந்த வஸ்துவை நான் இப்பத்தான் பார்க்கிறேன். என்ன செய்யப் போறேனோ?" என்கிற தவிப்பு அவருக்குள் ஏற்பட்டது.
"இப்ப வெளிய காத்துக் கொண்டிருக்கிற உங்க டீம் மேட்களை கூப்பிடப் போறோம். நீங்க அவங்ககிட்ட எதுவும் பேசக்கூடாது" என்ற நீதிபதிகள், அவர்களை அழைக்க 'உள்ளே என்ன நடந்தது?' என்று தெரியாத திகைப்புடன் அவர்கள் வந்தார்கள். இப்போது அவர்களுக்கு மூன்று ரகசிய பெட்டிகள் காட்டப்பட்டன. அதில் கரி அடுப்பு, Air Fryer, Electric Tandoor ஆகிய மூன்று சமையல் உபகரணங்கள் இருந்தன. (ஆயுத பூஜையைக் கொண்டாடுகிறார்களாம்!).
தங்கள் டீம் மேட் என்ன பொருளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரியாத நிலையில் புதிதாக உள்ளே வந்தவர்கள், எந்த அடுப்பில் சமைக்கவிருக்கிறோம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நித்யா கரி அடுப்பைத் தேர்ந்தெடுக்க, தேவகி ஏர் பிரையரை தேர்ந்தெடுத்தார். (சமர்த்துடி நீ... இதை வெச்சு எப்படி சமைக்கறது?! என்று அந்தப்பக்கம் மைண்ட் வாய்ஸில் அலறினார் இவரின் டீம்மேட் கிருத்திகா). மீதமிருந்த Electric Tandoor சுமித்ராவிற்கு வந்தது.
ஆக... பப்ளிமாஸ் + கரி அடுப்பு, மரவள்ளிக்கிழங்கு + Electric Tandoor, பரங்கிக்காய் + Air Fryer என்கிற ரணகளமான காம்பினேஷன் முறையில் இவர்கள் சமைக்க வேண்டும். பொறுங்கள்! இன்னமும் டிவிஸ்ட் முடியவில்லை. இதைவிடவும் 'ஸ்பெஷல் அயிட்டம்' இன்னும் ஒண்ணு பேலன்ஸ் இருக்கு!
சமைப்பதற்கு 60 நிமிடங்கள், Pantry Time - 2 நிமிடம், ஒரு ஜோடி மட்டும்தான் பால்கனிக்குச் செல்வார்கள் ஆகிய அறிவிப்புகளோடு போட்டி துவங்கியது. மணி தனக்கான பொருள்களை எடுத்துக் கொண்டு pantry-ல் இருந்து வேகமாக வெளியே வந்துவிட தேவகியும் சுமித்ராவும் அறைக்குள் மாட்டிக் கொண்ட சம்பவம்தான் துவக்கத்தில் விவரிக்கப்பட்டது. சமையல் பொருள்கள் இல்லாமல், இவர்களின் டீம் மேட்கள் எதை வைத்து சமைப்பார்கள்? நினைத்துப் பார்க்கவே பீதியாக இருக்கிறது. நல்ல வேளையாக அவர்களை வார்னிங் தந்து வெளியே அனுப்பி வைத்தார் கெளஷிக்.
போட்டி ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கடந்தன. "ஸ்டாப் பண்ணுங்க..." என்றார் விசே. ஒரு ரகசிய பஸ்ஸர் இருந்ததல்லவா? அதை அவர் அழுத்தினார். லாக்கரின் உள்ளே வைரம் வைத்திருப்பதுபோல ஒரு கண்ணாடிப் பெட்டியில் மெகா சைஸ் மிளகாய் இருந்தது. அதன் பெயர் ராஜ மிளகாயாம். ஒரு மிளகாய், நூறு பச்சைமிளகாய்களின் காரத்திற்குச் சமமானதாம்.
சரி... இப்போது இந்த விவரங்கள் எதற்கு? போட்டியாளர்கள் செய்து கொண்டிருக்கும் சமையலில் இதைச் சேர்க்க வேண்டுமாம். 'என்னய்யா அநியாயம், திடீரென்று எப்படி மிளகாயைச் சேர்க்க முடியும்...? அதிலும் ராஜ மிளகாயை?' என்றெல்லாம் கேட்க முடியாது. அதுதான் சவாலே! "இந்த மிளகாயை ஜாக்கிரதையாக ஹாண்டில் பண்ணனும். கிளவுஸ் போட்டுத்தான் தொடணும். வெறும் கையில் தொட்டால் கை எரிய ஆரம்பிச்சுடும். கண்ணு, மூக்குல கை பட்டுச்சுன்னா... அவ்வளவுதான்" என்று கெளஷிக் இதை விளக்க, பார்த்துக் கொண்டிருந்த நமக்கே காரம் பரவ ஆரம்பித்தது.
கரி அடுப்பில் அத்தனை பழக்கமில்லாத வின்னி அதனுடன் போராடிக் கொண்டிருக்க, கெளஷிக் அருகில் வந்து டிப்ஸ் தந்தார். 'மரவள்ளிக் கிழங்கை குக்கரில் போட்டு ஒரு வேக்காட்டில் எடுத்துவிடலாம்' என்று சுமித்ரா தந்த ஐடியாவை ரிஜக்ட் செய்தார் மணி. (ஆனால் இதற்காக பின்னர் சுமித்ரா தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருந்தது).
விதம் விதமான அடுப்பு + விதம்விதமான சமையல் பொருள் + அதனுடன் ராஜமிளகாய் என்கிற டெடரான காம்பினேஷில் தயாரான உணவு வகைகள் பரிசோதனை மேடைக்கு வர ஆரம்பித்தன.
முதலில் வந்த அணி தேவகி + கிருத்திகா. இவர்கள் தயார் செய்து கொண்டு வந்த உணவு 'சுண்டல் டிவிஸ்ட்'. பரங்கிக்காய் தோலையே தட்டு மாதிரி உபயோகித்திருந்தார்கள். (பார்க்க செருப்பு மாதிரி இருந்தது) இது சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. "ஹெல்த்தை மனசுல வெச்சு தயார் செய்தோம்" என்று இந்த அணி சொன்னாலும் "உப்பு கம்மியா இருக்கு... கடலை சரியா வேகலை" என்கிற நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தததால், சுண்டல் எடுத்துக் கொண்டு வந்தவர்கள், கிண்டல் செய்யப்பட்டவர்களைப் போல சோர்ந்து போய் தங்களின் இடத்திற்குத் திரும்பினார்கள்.
"உங்க கான்செப்ட் பிடிச்சிருக்கு. ஆனா பரங்கிக்காய் சரியா வேகலை. அப்படின்னா டேஸ்ட் வராது" என்கிற டிப்ஸை இவர்களுக்குத் தந்தார் ஆர்த்தி. "வாடிக்கையாளர்களுக்கு எப்படி சர்வ் பண்ணுவீங்க... அதையும் மனசுல முக்கியமாக வெச்சுக்கணும்... இப்படியே பரங்கித் தோல்லயா தருவீங்க?" என்கிற முக்கியமான பாயிண்ட்டை இந்த அணிக்கு உபதேசம் செய்தார் கெளஷிக்.
அடுத்ததாக வந்த அணி, மணி + சுமித்ரா. 'ராஜா ராணி மந்திரி' என்கிற சுவாரஸ்யமான பெயரைச் சூட்டியிருந்தார்கள். மிளகாய் ராஜாவாம்; கிழங்கு ராணியாம்; அடுப்பு மந்திரியாம். (சூப்பர்ல!). ரொட்டி + கிழங்கு மசாலா போன்ற காம்பினேஷனை இவர்கள் முயற்சி செய்திருந்தார்கள். "யார் யார் என்னென்ன வேலை பண்ணீங்க. சொல்லுங்க பார்க்கலாம்?" என்று இவர்களை விசாரணை செய்யத் துவங்கினார் கெளஷிக். மணியின் பங்கு என்னவாக இருந்தது என்பதை அறிவதே அவரின் நோக்கம் என்பதாகத் தெரிந்தது. மணி ஏதேதோ சொல்ல ஆரம்பிக்க "சுமித்ரா நீங்க மட்டும் பேசுங்க" என்று மணியை வெட்டினார்.
"உங்க மெனுல கிழங்குல பச்சை வாசனை வந்தது. சிந்தனை ஓகே. ஆனா நிறைய டெக்னிக்கல் பிரச்னை இருந்தது" என்றார் ஆர்த்தி. "கிழங்கை குக்கரில் போட்டு வேக வைக்கலாம். என்று அப்பவே சொன்னேன். மணி பேச்சை கேட்டிருக்கக்கூடாது" என்று நொந்து போய் சொன்னார் சுமித்ரா. (மணி செய்த தவறினால் இவரும் பாதிக்கப்படலாம்... பாவம்!).
அடுத்து வந்த அணி வின்னி + நித்யா. இவர்கள் 'பப்ளிமாஸின் சுவையில்' என்று நாவலுக்குத் தலைப்பு சூட்டுவது போல் சூட்டியிருந்தார்கள். கரி அடுப்பை வைத்துக் கொண்டு பப்ளிமாஸில் 'டிக்கா' முயற்சி செய்த விதம் நீதிபதிகளைக் கவர்ந்துவிட்டது. 'பப்ளிமாஸ் டேஸ்ட் நல்லா வந்திருக்கு" என்று பாராட்டினார் கெளஷிக்.
இத்தனை சிக்கலான காம்பினேஷன்களில் இந்த மூன்று அணிகளும் பேராடியதன் முடிவுதான் என்ன? இதில் சஸ்பென்ஸ் வைத்துவிட்டு எபிசோடை முடித்துவிட்டார்கள். முடிவு தெரியாமல் மிளகாய் கடித்தது போல் நாம்தான் அல்லாட வேண்டும்.
எந்த ஜோடி ஜெயித்திருக்கும்?
காத்திருந்து சுவைப்போம்.