Published:Updated:

மாஸ்டர் செஃப்: "ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக் கிடக்கு!"- `பஞ்சதந்திரம்' மூலம் பைனலிஸ்ட்டான கிருத்திகா!

மாஸ்டர் செஃப் - 24

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (24-10-2021) ஒளிபரப்பான 24-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

மாஸ்டர் செஃப்: "ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக் கிடக்கு!"- `பஞ்சதந்திரம்' மூலம் பைனலிஸ்ட்டான கிருத்திகா!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (24-10-2021) ஒளிபரப்பான 24-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் - 24
முன்கூட்டிய திட்டமிடல் என்பது வெற்றிக்கு எத்தனை முக்கியம் என்கிற பாடத்தை இந்த எபிசோடு கற்றுத் தந்தது. கடல் உணவுகளை சமைக்கும் டாஸ்க்கில் கிருத்திகாவிற்குப் போதிய அனுபவமில்லை. “ஆக்டோபஸ் சமைச்சிருக்கீங்களா?” என்று செப் ஹரீஷ் இவரிடம் கேட்டதற்கு “தூரமா நின்னு பார்த்திருக்கேன்” என்று சொல்லி சிரித்தார் கிருத்திகா. ஆனால் கடல் உணவுகளைச் சமைப்பதில் அனுபவம் இருந்த இதர போட்டியாளர்களை ஒப்பிடும்போது போதிய அனுபவம் இல்லாத கிருத்திகா ஓவர்டேக் செய்து வெற்றிபெற்று முதல் பைனலிஸ்ட் ஆகி சாதனை செய்ததில் ஒரு நீதி இருக்கிறது.

எபிசோட் 24-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘நாஸ்டால்ஜியா’ சமையல் உணவுகளின் மீதான பரிசோதனை சடங்கு இன்னமும் முடியவில்லை.

நான்காவதாக வந்தவர் மணிகண்டன். தனது மகளுக்காக சிக்கனை மீன் வடிவத்தில் இவர் செய்திருந்த முயற்சி பரவலான கவனத்தைப் பெற்றது. "பாராட்டுகள்” என்று வாழ்த்தினார் கெளஷிக். போட்டியாளர்களுக்கு ஆர்த்தி தரும் டிப்ஸ்கள் எப்போதுமே அருமை. “தவால ரெண்டு பக்கமும் சிக்கனை சூடு பண்ணி இருந்தா சிக்கனோட தண்ணி வெளியே வராம இருந்திருக்கும்” என்று மணிகண்டனுக்கு அறிவுரை வழங்கினார். "ரோட் சைட் தாபால சாப்பிட்ட ஃபீல் வருது” என்கிற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஹரீஷ்.

மாஸ்டர் செஃப் - 24
மாஸ்டர் செஃப் - 24

அடுத்ததாக வந்த வின்னி, தான் கொண்டு வந்திருந்த உணவிற்கு ‘ஞாபகங்கள்’ என்று தலைப்பிட்டிருந்தார். தனது பாட்டியின் நினைவாக சிரோட்டியும் பாதாம்பாலும் செய்திருந்தார் வின்னி. “உங்கள் நானிம்மா வாழ்க... அற்புதமா இருக்கு” என்று வாழ்த்தினார் விசே. "சிரோட்டி ரொம்ப க்ரன்ச்சியா இருக்கா. பேலன்ஸ்ஸா இருக்கு. சூப்பர்” என்று நற்சான்றிதழ் வாசித்தார் ஆர்த்தி. "நேரா செளகார்பேட்டைக்கு போயிட்ட ஃபீல் வருது” என்றார் ஹரீஷ். "ப்ரில்லியண்ட்" என்றார் கெளஷிக். இத்தனை பாராட்டுக்களைச் சுமக்க முடியாமல் மகிழ்ச்சியுடன் திரும்பினார் வின்னி.

‘நாலு மணி பலகாரம்’ – இதுதான் நித்யா தனது உணவிற்கு இட்ட தலைப்பு. “சாயந்திரம் ஆச்சுன்னா எங்க அப்பா டீயோட ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவார். அவருக்குப் பிடிச்ச உணவு இது. கோலா உருண்டை” என்று விளக்கம் தந்தார் நித்யா. செஃப் ஹரீஷ் குறிப்பிடும் உதாரணங்கள் எல்லாம் ரகளையாக இருக்கின்றன. “நான் முன்னல்லாம் மிலிட்டரி ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவேன். அந்த ஞாபகம் வந்துடுச்சு” என்று பாராட்டினார்.

“இதுல பட்டர் சாஸ் தேவையா... நீங்க யோசிக்கலையா? அது லைட் பிஷ் மாதிரியான அயிட்டங்களுக்குத்தான் மேட்ச் ஆகும்” என்கிற ஆர்த்தியின் கமெண்டைக் கேட்டதும் நித்யாவின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. “சாலட்டும் கோலா உருண்டையும் மேட்ச் ஆகலை” என்று மெல்லிய அதிருப்தியுடன் சொன்னார் கெளஷிக். ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும் இன்னொரு பக்கம் நெகட்டிவ் கமெண்ட் கிடைத்ததால் சோர்வாகத் திரும்பினார் நித்யா.

‘Memories on the plate’ முடிந்து முடிவுகள் வரத் துவங்கின. இந்த முடிவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் இதில் வென்று அடுத்தக் கட்டத்திற்கு செல்லப் போகிறவர், செஃப் கோட்டை வெல்வதோடு முதல் finalist ஆக இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்வார். எனவே ஒவ்வொரு போட்டியாளரும் செஃப் கோட் தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
மாஸ்டர் செஃப் - 24
மாஸ்டர் செஃப் - 24

ஆனால் நித்யாவும் மணியும் பால்கனிக்குச் செல்ல தேர்வானார்கள். பொதுவாக வெற்றிபெற்று மகிழ்ச்சியுடன் பால்கனிக்குச் செல்வதுதான் இதுவரையான பழக்கம். ஆனால் முதன்முறையாக அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் இருவரும் பால்கனிக்குச் செல்ல “கவலைப்படாதீங்க. அடுத்த வாரம் இன்னொரு வாய்ப்பு வரும்” என்று அவர்களை நீதிபதிகள் தேற்றினார்கள்.

ஆக... மீதமுள்ள போட்டியாளர்களில் டாப் ஒன்றில் வின்னி வந்தார். இவர் செய்திருந்த சிரோட்டியும் பாதாம் பாலும் வெகுவான பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக டாப் 2-ல் தேவகியும் டாப் 3-ல் கிருத்திகாவும் வந்தார்கள்.

முதல் மூன்று வரிசையில் தேர்வான இவர்கள் அடுத்தக் கட்ட சவாலை எதிர்கொள்ளப் போகிறார்கள். அது என்ன சவால்?

விசே கையைச் சொடுக்கியதும் மேஜிக்கின் மூலம் வலை போர்த்தப்பட்டிருந்த ஒரு பெரிய பெட்டி வந்து இறங்கியது. செஃப் ஹரீஷ் அதைத் திறந்து காட்டியவுடன் அதிர்ச்சியில் போட்டியாளர்கள் உறைந்தார்கள். ஆம், அங்கு விதம் விதமான கடல் உயிரினங்கள் வாயைப் பிளந்து கொண்டிருந்தன. விவேக் நகைச்சுவையில் வருவது போல் சொன்னால் "ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக் கிடக்குதடா” என்பது மாதிரி இருந்தது. இதில் சில மீன் வகைகள் போட்டியாளர்கள் அறியாதவை.

ஹரீஷ் அவற்றை விளக்கினார். சோல் ஃபிஷ் (மாந்தல் மீன் என்றும் சொல்கிறார்கள்), நண்டு, கணவாய், ஆக்டோபஸ், நெத்திலி, கொடுவா என்று ஆறு வகையான கடல் உணவுப் பொருள்கள் இருந்தன. ‘நெய்தல் விருந்து’ என்கிற இந்தச் சவாலை சமைப்பதற்கான நேரம் 90 நிமிடம். Pantry டைம் 2 நிமிடம்.

“நீங்கள் ஒரே மீனை வைத்து சமைக்கலாம். பல்வேறு மீன்களை வைத்து சமைக்கலாம். ஆனால் இது பல வெரைட்டிகளில் ஒரு அட்டகாசமான விருந்தா இருக்கணும். அதுதான் முக்கியம்” என்று நீதிபதிகள் போட்டிக்கான முக்கிய அம்சத்தை விவரித்தார்கள்.

மாஸ்டர் செஃப் - 24
மாஸ்டர் செஃப் - 24

ஆக்டோபஸை வைத்து டிக்கா செய்ய வின்னி தயார் ஆனார். சோல்ஃபிஷ்ஷை எப்படிச் சுத்தம் செய்வது என்கிற டிப்ஸை கிருத்திகாவிற்கு ஹரீஷ் வழங்கினார். மண் சட்டியில் குழம்பு வைத்தால் சுவையாக வரும் என்று முடிவு செய்தார் கிருத்திகா.

தேவகி ஆக்டோபஸை சுத்தம் செய்து குச்சியில் சுற்றி வைத்திருந்த விதத்தைப் பார்த்து, "அட... இப்படிக் கூட வெட்டலாமா? வெரி நைஸ்... நானும் இதைப் ஃபாலோ பண்றேன்” என்று ஆர்த்தி ஆச்சர்யப்பட்டார். எத்தனை உயரத்திற்குச் சென்றாலும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடக்கூடாது என்பதற்கு ஆர்த்தியின் இந்தச் செயல்பாடு உதாரணம்.

“இந்தப் போட்டியில் ஆறு வகை மீன்கள் இருக்கு. மூன்று போட்டியாளர்கள் சமைக்கறாங்க. அப்படின்னா நாம வகை வகையான உணவுகளை சாப்பிடப் போறோம். இப்பவே எனக்கு எக்சைட்டிங்கா இருக்கு” என்று மகிழ்ச்சியடைந்தார் கெளஷிக். “நான் என்ன முக்கியமா பார்க்கப் போறேன்னா... இவங்க எவ்வளவு வேஸ்ட் பண்றாங்க என்பதைத்தான். மீனோட செதிலைக் கூட சமைக்க முடியும். அது இவங்களுக்கு தெரியுமான்னு தெரியல” என்று முக்கியமான பாயிண்ட்டை சொல்லிக் கொண்டிருந்தார் ஹரீஷ்.

போட்டி நேரம் முடிந்து உணவுகள் மேஜைக்கு வரத் துவங்கின. முதலில் வந்த வின்னி தனது தயாரிப்பிற்கு ‘கடல் சுவை’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தார். நெத்திலி, நண்டு, ஆக்டோபஸ் ஆகியவற்றை வைத்து இவர் சமைத்திருந்தார் “நெத்திலி சூப்பர். பெர்பெக்ட்டா குக் ஆகியிருக்கு” என்று பாராட்டுப்பத்திரம் வாசித்தார் ஆர்த்தி. “நீங்க செஞ்சது இலைல ஒட்டக்கூடாது. அப்படின்னா சரியில்லைன்னு அர்த்தம்" என்று டிப்ஸ் தந்தார் ஹரீஷ். "மகிழ்ச்சி” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் கெளஷிக். கலவையான கமெண்ட்டுகள் வந்தாலும் கலவரப்படாமல் புன்னகையுடன் திரும்பினார் வின்னி.

‘என்னுடைய கடல் விருந்து’ என்கிற பெயரைச் சூட்டி புன்னகையும் திகைப்புமாக தன் உணவைக் கொண்டு வந்தார் தேவகி. நெத்திலி 65, ஆக்டோபஸ் கிரேவி, ஃபிஷ் கறி, கட்லா மீன் ஸ்டப்பிங் என்று அவர் அசத்தியிருந்தார். "மீன் குழம்பு நன்று” என்கிற கமெண்ட் ஹரீஷ் மற்றும் கெளஷிக்கிடமிருந்து வந்தது. "கொடுவாவோட கலர் இது இல்ல...“ என்றார் ஆர்த்தி.

மாஸ்டர் செஃப் - 24
மாஸ்டர் செஃப் - 24

அடுத்து வந்த கிருத்திகா, தான் கொண்டு வந்த உணவிற்கு ‘பஞ்ச தந்திரம்’ என்று பொருத்தமாக பெயர் சூட்டியிருந்தார். மற்றவர்களை விடவும் இவரின் தட்டு வித விதமான உணவுகளால் நிறைந்து கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. ஆர்த்தி இந்த விஷயத்தைப் பாராட்டினார். "என்னது? மீன் செதிலை சமைச்சீங்களா... அதைச் சாப்பிடலாமா?" என்று மெல்லிய அதிர்ச்சியுடன் விசே கேட்க, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் சாப்பிட முடியும் என்று விளக்கினார் கிருத்திகா. “நெத்திலி நல்லாயிருந்தது” என்று ஹரீஷ் சொல்ல “அஞ்சு அயிட்டங்களில் மூன்று சூப்பர்” என்று பாராட்டினார் கெளஷிக்.

முடிவுகள் வெளிப்படும் நேரம். “நான் ஃபெர்பெக்ட்டா மீன் வெட்டறதைக் கத்துக்கவே ஆறு மாசம் ஆச்சு. ஆனா போதிய அனுபவம் இல்லைன்னாலும் நீங்க ஒவ்வொருத்தரும் செஞ்சிருக்கிற விதம் பிரமிப்பை ஏற்படுத்துது” என்று ஆர்த்தி மனம் திறந்து பாராட்ட, “இவங்களை மாதிரி நான் பாராட்டப் போறதில்லை. நான் இன்னமும் கூட எதிர்பார்த்தேன். இது அந்த மாதிரியான மேடை. வேற லெவல்ல எதிர்பார்த்தேன். ஆனா ஓகே அளவில்தான் இருந்தது” என்றார் கெளஷிக்.

பால்கனியில் நின்றிருந்த நித்யாவும் மணியும் கடல் உணவுகளைச் சமைப்பதில் கைதேர்ந்தவர்களாம். “இந்தப் போட்டில உங்களால கலந்துக்க முடியலைன்னு ஏக்கமா இருந்துச்சுல்ல?” என்று விசே கேட்க, அங்கிருந்து சோகத்துடன் தலையாட்டினார்கள். "விட்டிருந்தா அவங்க ஒரு கை பார்த்திருப்பாங்க" என்று சிரித்தார் விசே.

மூன்று பேர்களுக்குள் நடந்த இந்த பரபரப்பான ‘நெய்தல் விருந்து’ சவாலில் யார் ஜெயித்து செஃப் கோட் அணிந்து முதல் பைனலிஸ்ட் ஆக தேர்வாவார்கள்? முடிவுகள் வெளியாகும் நேரம். ஆவலும் பதட்டமுமாக போட்டியாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு அந்தத் திறமைசாலியை அறிவித்தார்கள். அது ‘கிருத்திகா’ – தன் பெயர் உச்சரிக்கப்பட்டதை சில நொடிகளுக்கு நம்ப முடியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தார் கிருத்திகா.
மாஸ்டர் செஃப் - 24
மாஸ்டர் செஃப் - 24

“நீங்கதான் முதன்முறையா வொயிட் ஏப்ரன் வாங்கி பால்கனிக்கு போனீங்க இல்லையா.. இப்ப முதன்முறையா இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கீங்க... நீங்க இனி இரண்டு வாரத்திற்கு போட்டி டென்ஷன் இல்லாம கூலா இருக்கலாம்” என்று வாழ்த்திய நீதிபதிகள் வெள்ளை செஃப் கோட்டை பரிசாக அளிக்க, அதை மாஸ் ஹீரோவிற்குரிய ஸ்டைலுடன் கிருத்திகா கெத்தாக அணிந்து கொண்ட காட்சி சுவாரஸ்யமாக இருந்தது.

“சமையல் மேல இருக்கற லவ்தான் இந்த இடத்திற்கு உங்களைக் கொண்டு வந்தது... இல்லையா?” என்று விசே சம்பிரதாயமாக பாராட்ட “இல்லை... என் அத்தான் மேல இருந்தா லவ்தான். அதுதான் எனக்கு முக்கியம்” என்கிற ரொமாண்டிக்கான பதிலை கிருத்திகா சொல்ல, "நீங்க நெஜமாவே சூப்பர்ங்க” என்று மகிழ்ந்தார் விசே.

“செஃப் கோட் அப்படின்றது சாதாரண விஷயம் இல்ல. அது மேல துளி கறை கூட படக்கூடாது. ஒவ்வொரு தினமும் அதை எடுத்து அணியும் போது இதற்கு நான் தகுதியானவன்தானா–ன்னு கேட்டுக்குவேன்” என்று அந்த யூனிஃபார்மின் முக்கியத்துவத்தை கெளஷிக் விளக்கிய போது பயபக்தியுடன் கேட்டுக் கொண்டார் கிருத்திகா.

ஆக... இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் செல்லும் முதல் போட்டியாளர் கிருத்திகா. மீதமுள்ள ஐவரும் அடுத்தடுத்த சுற்றுகளில் கலந்துகொண்டு தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும்.

கடல் வகை உணவுகளை சமைப்பதில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் கிருத்திகா அனைத்து மீன்களையும் முதலில் பக்காவாக சுத்தம் செய்து வைத்துக் கொண்டார். இந்த பிளானிங்தான் சமையலை வேகமாக முடிக்க அவருக்கு உதவியது. இது மட்டுமல்ல, "நிறைய அயிட்டம் இருக்கணும்” என்று நீதிபதிகள் சொன்னதை வேதவாக்காக பின்பற்றி தட்டு நிறைய ஐந்து வகை மீன்களை கொண்டு வந்தவர் இவர் மட்டுமே. இந்த ‘பஞ்ச தந்திரம்’தான் கிருத்திகாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தது.

சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு என்பதுதான் வெற்றிக்கான பாதை என்பதற்கு கிருத்திகா உதாரணம். அடுத்த வாரத்தில் சவால்கள் எப்படி இருக்கும்? யார் அடுத்த பைனலிஸ்ட்?

காத்திருந்து சுவைப்போம்.