Published:Updated:

``குடும்பத்துக்காக சமைக்கிற பெண்கள்தான் என் இன்ஸ்பிரேஷன்; ஏன்னா..?!" - `மாஸ்டர் செஃப்' வின்னர் தேவகி

பேக்கிங் மீது கொண்ட ஆர்வத்தால் குடும்பத்தினருக்கு கேக் செய்ய ஆரம்பித்து, பின்னர் வீட்டில் இருந்தபடியே, கேட்பவர்களுக்கு ஆர்டரின் பேரில் கேக் செய்து கொடுக்க ஆரம்பித்துள்ளார் தேவகி. இப்போது `மாஸ்டர் செஃப்'பில் வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளார்.

உலக அளவில் மிகவும் பிரபலமானது, `மாஸ்டர் செஃப்' தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் மொழியிலும் `மாஸ்டர் செஃப்' சன் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி, கடந்த ஞாயிறன்று முடிந்தது. ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத், கௌசிக் எஸ் ஆகியோர் நடுவர்களாக இருக்க மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த ரியாலிட்டி ஷோவின் இறுதிச் சுற்றில், திருச்சியைச் சேர்ந்த தேவகி வெற்றி பெற்று `மாஸ்டர் செஃப்' பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த சமையல் நிகழ்ச்சி, ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான நடுவர்கள், கடினமான சவால்கள், போட்டியாளர்களின் புதிது புதிதான யோசனையிலான உணவுகள் எனப் பரபரப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமே இல்லாமல் நம்மை பொழுதுபோக்க வைத்தது. அதில் வெற்றிவாகை சூடியிருக்கும் தேவகியிடம் பேசினோம்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப் கடந்துவந்த பாதையும், நெகிழ்ச்சித் தருணங்களை விவரித்த விஜய் சேதுபதியும்!

தேவகி, திருச்சியைச் சேர்ந்தவர், சமையலின் மீதும் பேக்கிங் மீதும் ஆர்வம் கொண்டவர். திருமணம் முடிந்து, ஒரு குழந்தைக்குத் தாயான தேவகி, பேக்கிங் மீது கொண்ட ஆர்வத்தால் குடும்பத்தினருக்கு கேக் செய்ய ஆரம்பித்து, பின்னர் வீட்டில் இருந்தபடியே, கேட்பவர்களுக்கு ஆர்டரின் பேரில் கேக் செய்து கொடுக்க ஆரம்பித்துள்ளார். இப்போது `மாஸ்டர் செஃப்'பில் வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளார்.

`மாஸ்டர் செஃப்'பாக தேவகி அறிவிக்கப்பட்ட அந்த நொடியை எப்படி உணர்ந்தீர்கள்?

``அந்த நிமிஷத்தை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது. ஆனாலும், `மாஸ்டர் செஃப்'ல எல்லா நாளுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். நான் கலந்துகிட்ட எபிஸோட்ல எல்லாம் என்னால முடிஞ்ச பெஸ்ட்டை கொடுக்கணும்னு நினைப்பேன். அதனால, ஒவ்வொரு முறை சமைக்கும்போதும் ரொம்ப பெஸ்டா இருக்கணும்னு மெனக்கெடுவேன். அதற்கான அங்கீகாரம்தான் வெற்றி. ரொம்பப் பெருமையா இருக்கு. அரையிறுதில ஜெயிச்சப்போ செஃப் கோட் கொடுத்தபோதே அளவிட முடியாத சந்தோசம். `மாஸ்டர் செஃப்'னு அறிவிச்சதும்... பறந்துட்டேன்!"

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்: "ஒரு டிஸ்கவரி சேனலே செத்துக் கிடக்கு!"- `பஞ்சதந்திரம்' மூலம் பைனலிஸ்ட்டான கிருத்திகா!

குடும்பம்..?

``கணவர் தனியார் நிறுவனத்துல பணிபுரியுறார். மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு. `மாஸ்டர் செஃப்'ல கலந்துக்கிட்ட இந்தப் பயணத்துல, என் குடும்பம் எனக்கு ரொம்ப ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. என்னோட பெற்றோர் எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க. குழந்தையைப் பார்த்துக்கிற பொறுப்பை அவங்க எடுத்துக்கிட்டதால, அந்தக் கவலை இல்லாம நான் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினேன். நான் டைட்டில் வின் பண்ணினதுல என் குடும்பத்தோட பங்கும் இருக்கு."

நீங்க ஃபைனலிஸ்ட்டா செலக்ட் ஆகி எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தப்போ, உங்களுக்கு எப்படி இருந்தது?

`` `நானா, நானா..?'னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு ரொம்ப ஆச்சர்யப்பட்ட தருணம் அது. அந்த டாஸ்க்ல எனக்குக் கொஞ்சமாதான் நேரம் இருந்தது. அதுக்குள்ள, என்கிட்ட இருந்த மீனை வெச்சு வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதனால மெடிட்டரேனியன், கான்டினென்டல், சௌத் இந்தியன்னு மூணு ஸ்டைலும் கலந்து வித்தியாசமா செய்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதை டேஸ்ட் பார்த்துட்டு ஜட்ஜஸ் எல்லாரும் சொன்ன கமென்ட் உற்சாகமா இருந்தது. என் பேரையும் பைனலிஸ்ட்டா அறிவிச்சப்போ, நம்பவே முடியல. எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு.

`மாஸ்டர் செஃப்'க்கு போட்டியாளரா தேர்வானது எப்படி?

``சின்ன வயசுல இருந்தே சமையல் பிடிக்கும். கொரானா ஊரடங்கு நேரத்துல உலகமே வீட்டுல கேக் செய்ய ஆரம்பிச்சப்போ, நானும் அதைத்தான் செஞ்சேன். அதைச் சமூக வலைதளத்தில் பதிவிட, ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்

அப்படி ஆரம்பிச்ச பயணம் நல்லா போயிட்டு இருந்தப்போதான், `மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிக்கான ஆடிஷன் மதுரைல நடக்குதுன்னு கேள்விப்பட்டு, அதுல கலந்துகிட்டேன். நிகழ்ச்சியில கலந்துக்கத் தேர்வானேன். ஆடிஷன்ல ஆரம்பிச்சு ஃபைனல்ஸ் வரைக்கும், ரொம்பவே புதுமையான அனுபவம். அழகான, சுவாரஸ்யமான, நெகிழ்வான தருணங்கள்.

முதன்முதலா விஜய் சேதுபதி சாரை பார்த்தப்போ, அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அப்புறம் ஒவ்வொரு எபிஸோட்லயும் அந்த சந்தோஷம் கூடிட்டேதான் இருந்தது. மேலும் ஜட்ஜஸ், சக போட்டியாளர்கள்னு இவங்க கூடயெல்லாம் பழகினது அவ்ளோ உற்சாகமான நாள்கள். அடுத்தடுத்த போட்டிகள் மிகவும் கஷ்டமா இருந்தாலும், நம்மளால முடிஞ்ச பெஸ்ட்டை கொடுக்கணும்னு நினைச்சேன். அதுக்காக புதுசு புதுசா நிறைய கத்துக்கிட்டேன்.

குறிப்பா, ஒவ்வொரு ரெசிப்பிக்கும் அதோட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு சமைப்பேன். நடுவர்கள் எல்லாருமே ரொம்ப ஸ்ட்ரிக்ட். நீங்க ஷோவுல பாக்குறதவிட நிறைய விஷயங்களை ரொம்ப உன்னிப்பா பார்ப்பாங்க என்பதால நிறைய உழைக்கணும். அதுதான் போட்டியாளர்களை மெருகேற்றுச்சு."

கடினமான போட்டியாளரா யாரைச் சொல்வீங்க?

``எல்லாருமே எனக்கு கடினமான போட்டியாளர்கள்தான். ஒவ்வொரு சுற்றுலயும், ஒவ்வொரு டிஷ்க்கும்னு ஒவ்வொருத்தரும் டஃப் கொடுத்துட்டேதான் இருப்பாங்க. எல்லாருமே அவ்ளோ அருமையா சமைப்பாங்க. அதனால யார் எலிமினேட் ஆனாலும், `இவங்களே போறாங்கன்னா அப்போ நாமயெல்லாம் அவ்ளோதான்'னு தோணும். அந்தளவுக்கு எல்லாருமே திறமையானவங்க."

தேவகி
தேவகி

உங்களோட இன்ஸ்பிரேஷன்?

``வீட்ல குழந்தைகளுக்காக, தங்களோட குடும்பத்துக்காக சமைக்குற பெண்கள், ஆண்கள்... இவங்கதாங்க எனக்கு இன்ஸ்பிரேஷன். பொறுமை, சமையலில் கலக்கும் அன்புனு அவங்ககிட்ட கத்துக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு."

அடுத்து என்ன?

``என்னோட பேக்கிங் ஆர்வத்தையும் தொழிலையும் விரிவுபடுத்தணும். குக்கரி கிளாஸ் எடுக்கணும். சமையல்லயும் சாதிக்கலாம்னு சக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்குற ஒரு மனுஷியா இருக்கணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு