Published:Updated:

மாஸ்டர் செஃப்: மணிகண்டன் ஏலத்தில் சிக்ஸர், சமையலில்..? அடுத்தடுத்த பைனலிஸ்ட்ஸ் யார் யார்?

மாஸ்டர் செஃப் - 25

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (06-11-2021) ஒளிபரப்பான 25-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

மாஸ்டர் செஃப்: மணிகண்டன் ஏலத்தில் சிக்ஸர், சமையலில்..? அடுத்தடுத்த பைனலிஸ்ட்ஸ் யார் யார்?

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (06-11-2021) ஒளிபரப்பான 25-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் - 25
நான் எப்போதும் சொல்வதுதான். சமையல் போட்டியை விடவும் அதற்கான கான்செப்ட்டுகளை உருவாக்குவதில்தான் மாஸ்டர்செஃப் எப்போதும் ரகளை செய்கிறது. இந்த எபிசோடிலும் அந்த சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.

‘ஸ்மார்ட்டாக விளையாடுகிறேன் பேர்வழி' என்று நரித்தந்திரமாக செயல்பட்ட மணிகண்டன், மண்ணைக் கவ்வியதுதான் மிச்சம். "சாதுர்யத்திற்கு தந்த முன்னுரிமையை சமையலுக்குத் தந்திருக்கலாம்” என்று இதை சரியான வார்த்தைகளில் சொன்னார் செஃப் கெளஷிக்

25-வது எபிசோடில் நடந்தது என்ன?

கிருத்திகா செஃப் கோட்டை வென்று முதல் இறுதிப் போட்டியாளராக பால்கனிக்குச் சென்றார். அதன் பிறகு வந்த வாரத்தில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. ஆகவே 25வது எபிசோட், 06-11-2021 அன்று ஒளிபரப்பாகியது.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

இரண்டாவது Finalist யார் என்பதை முடிவு செய்யப் போகும் எபிசோடு இது. சமையல் பொருள்களை Pantry-ல் இருந்து போட்டியாளர்கள் இஷ்டம்போல் எடுத்துக் கொள்ளலாம். இதுவரையான நடைமுறை இதுதான். இந்த நிகழ்ச்சியில் அதற்கொரு செக்மேட் வைத்தார்கள். போட்டியாளர்கள் ஏலத்தில் கலந்து கொள்வதின் மூலமே தங்களுக்கான பொருள்களைப் பெற முடியும். ஏலத்தில் கலந்து கொள்வதென்றால் அதற்குப் பணம் தர வேண்டுமே? அதுதான் இல்லை. போட்டிக்கான நேரத்தை வைத்துதான் போட்டியாளர்கள் ஏலம் கேட்க வேண்டும்.

இந்தப் போட்டிக்கான சமையல் நேரம் 120 நிமிடம் என்பது முதலில் முடிவு செய்யப்பட்டது. மூன்று வகையான பிரதான சமையல் பொருள்கள் ஏலத்தில் வைக்கப்பட்டிருந்தன. 1) ப்ரோட்டீன்ஸ், (சிக்கன், இறால், மட்டன், சைவ புரோட்டின் போன்றவை) 2) துணைப் பொருள்கள் (பலசரக்கு, காய்கறிகள், பால் பொருள்கள், நட்ஸ் & சீட்ஸ்), 3) சுவையூட்டும் பொருள்கள் (மசாலா, இனிப்பூட்டிகள், மூலிகைகள் மற்றும் பழங்கள்).

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25
ஏலத்திற்கான விதிமுறைகளை விளக்கினார் விஜய்சேதுபதி. ஒரு போட்டியாளர் ஏலத்தில் எவ்வளவு நேரத்தை தந்து பொருள்களை எடுக்கிறாரோ, அதன் மிச்சமுள்ள நேரத்தில்தான் சமைக்க முடியும். ஏலம் கேட்காத நபருக்கு ஐந்து நிமிடங்களைப் பிடித்துக் கொண்டு மீதமுள்ள பொருள் வழங்கப்படும். ஒரு சுற்றில் ஏலம் கேட்டவர் மீண்டும் கேட்க முடியாது.

இதிலுள்ள முக்கியமான விஷயம் என்னவெனில், தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கும் அதே சமயத்தில், சக போட்டியாளர்களுக்கு நெருக்கடியையும் தர வேண்டும். அவர்களுக்கு சிரமமான பொருள்கள் கிடைக்கும்படி செய்வது, ஏலத்தை இழுத்து அவர்களின் நேரத்தைக் குறைப்பது போன்ற வேலைகளைச் செய்யலாம். ஆக உத்தியைக் கையாள்வதும் இதில் முக்கியம். “இந்த விஷயத்துல நான் மாஸ்டர். எப்படி ஆடறேன் பாருங்க...” என்று அலட்டிக் கொண்ட மணிகண்டன், தனது இந்த சதி ஆப்ரேஷனுக்கு ‘நரித்தந்திரம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

முதல் சுற்றில் ஏலம் விடப்பட்ட கோழி இறைச்சி, வாத்து முட்டையை பத்து நிமிடங்கள் செலவு செய்து ஏலத்தில் எடுத்தார் மணிகண்டன். அடுத்த சுற்றில் இறால், வஞ்சிரமீன் ஏலத்திற்கு வந்தன. ‘Sea food’ சமைச்சா எப்படியும் ஃபைனல் போயிடுவேன்” என்று எண்ணிய தேவகி, அதிகபட்சமாக 25 நிமிடங்களை செலவு செய்து அவற்றை ஏலத்தில் எடுத்தார். (ரொம்ப தைரியம்தான்!). “ஆட்டு இறைச்சி, கொத்துக்கறி,.. என் கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கு. எப்படியும் தூக்கிடுவேன்” என்று திட்டமிட்ட நித்யா, இதற்காக பத்து நிமிடங்களை செலவு செய்தார். ஆக மீதமிருந்த பன்னீர் பொருள்களை வின்னிதான் எடுத்தாக வேண்டும். இதற்காக கம்பெனி அவரிடமிருந்து ஐந்து நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். (உருட்டு அப்படி!).

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

அடுத்த சுற்றில் பலசரக்கு ஏலம் கேட்டபோது தேவகி செய்த காரியம் மலைப்பை ஏற்படுத்தியது. அவர் 50 நிமிடங்களை இதற்காகச் செலவு செய்தார். கூட இருந்த மணிகண்டன் வேண்டுமென்றே தொடர்ந்து ஏலம் கேட்டு தேவகியின் நேரத்தை குறைப்பதற்கான சதியில் ஈடுபட்டார். பலசரக்கு இல்லாமல் தேவகியால் சமைக்க முடியாது. அவருக்கு வந்த காம்பினேஷன் அப்படி! அடுத்து வந்த வின்னி 55 நிமிடங்களை செலவு செய்து காற்கறிகளை எடுத்தார். அவர் பன்னீர் மட்டுமே வைத்திருப்பதால் காய்கறி அவசியம்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஏலம் கேட்டு முடித்தனர். சிலருக்கு அவர்கள் விரும்பிய பொருள்கள் கிடைத்தன. சிலருக்கு இருப்பதைக் கொண்டு எப்படியாவது சமாளிக்க வேண்டிய நிலைமை. எப்படியோ கையில் இருப்பதைக் கொண்டுதான் சமைத்தாக வேண்டும்.

இப்போது ஒவ்வொருவரும் ஏலத்தில் செலவழித்த நேரம் போக மீதமுள்ள போட்டி நேரம் எவ்வளவு என்பதைப் பார்ப்போம். மணி (85 நிமிடங்கள்), நித்யா (60 நிமிடங்கள்), வின்னி (55 நிமிடங்கள்), தேவகி (35 நிமிடங்கள்). ஆக... அதிகபட்ச நேரத்தை வைத்துள்ள மணிகண்டன் 85 நிமிடத்திலும், குறைந்த நேரத்தை வைத்துள்ள தேவகி 35 நிமிடத்திலும் சமைத்தாக வேண்டும். இதுதான் இந்த எபிசோடின் சுவாரஸ்யமே. மணி ஏல விளையாட்டில் சாமர்த்தியமாக ஆடி, குறைந்த நேரத்தை மட்டுமே செலவழித்துள்ளார். ஆனால்..?
மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

“நீங்க என்ன வேணா சமைக்கலாம். ஆனா ஏலத்தில் எடுத்த பொருள்கள் ஹீரோவா இருக்கணும். உங்களுக்கான Support Pantry உங்க கிச்சன் பக்கத்துலயே இருக்கு” என்ற கெளஷிக், மணியை முதலில் சமைக்க அழைத்தார். மற்றவர்கள் தங்களுக்கான நேரம் வரும்போது செல்ல வேண்டும்.

போட்டி ஆரம்பித்தது. மணிகண்டனிடம் சிக்கன், வாத்து முட்டை + நட்ஸ் + பழங்கள் என்கிற காம்பினேஷன் இருக்கிறது. நித்யாவிடம் மட்டன் + பால்பொருள்கள் இருக்கின்றன. வின்னி, பன்னீர் + இனிப்பு + காய்கறிகள் என்கிற காம்பினேஷனில் சமைத்தாக வேண்டும். இறால் + வஞ்சிரமீன் + ஹெர்ப்ஸ் என்கிற கலவையை வைத்துள்ளார் தேவகி. முதலில் இயங்கத் துவங்கிய மணிகண்டனை போட்டியாளர்கள் திகைப்புடன் பார்த்தார்கள். பரபரப்பாக இந்தப் போட்டி நடந்து முடிந்தது.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

பரிசோதனை மேடைக்கு முதலில் உணவு கொண்டு வந்தவர் மணிகண்டன். இவர் தனது மெனுவிற்கு மிகப் பொருத்தமாக ‘நரித்தந்திரம்’ என்று பெயர் வைத்திருந்தார். இதைக் கேட்டவுடன் விசே சிரித்து விட்டார். “என்னதிது கொட்டாங்குச்சி மாதிரி இருக்கு?” என்று விசே கேட்டவுடன் "சிக்கன் கீமா, நான்கு வகை பழங்களில் செய்த சட்னி” என்று தன் தயாரிப்பை விளக்கினார் மணி. “சிக்கனை தண்ணில வேக வெச்சீங்களா..? அந்த ஃப்ளேவர்லாம் தண்ணில போயி வெறும் சக்கையா இருக்கு” என்கிற நெகட்டிவ் கமென்ட்டை வழங்கினார் ஆர்த்தி. என்றாலும் "வாத்து முட்டை நல்லா வெந்திருக்கு” என்கிற சான்றிதழும் கூடவே கிடைத்தது. “ஏலத்தில் சாதுர்யம் காட்டினீங்க சரி, அதை சமையல்லயும் காட்டியிருக்கலாம்” என்று காட்டமாகச் சொன்னார் கெளஷிக். “நல்லாயிருக்கு” என்று ஆறுதல் அளித்தவர் விசே மட்டுமே.

‘Slices of Kashmir’ – இந்த மெனுவைத் தயாரித்துக் கொண்டு வந்தவர் நித்யா. பால் உபயோகப்படுத்தி கறி உருண்டையை காஷ்மீர் ஸ்டைலில் செய்திருக்கிறாராம். “அய்யோ... செம சூப்பரா இருக்கு. இன்னமும் சாப்பிடணும் போல இருக்கு. நீங்க வேற கம்மியா சமைச்சிருக்கீங்க...” என்று பாராட்டித் தள்ளிவிட்டார் விசே. “காஷ்மீர் உணவு ரொம்ப subtle-ஆ இருக்கும். அந்த ஃப்ளேவரை அப்படியே கொண்டு வந்துட்டீங்க. ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்” என்று மனம் திறந்து பாராட்டினார் ஆர்த்தி. இதைக் கேட்டவுடன் காஷ்மீருக்கே சென்றது மாதிரி மனம் குளிர்ந்தார் நித்யா. “ரொம்ப நல்லாயிருக்கு” என்று ஸ்ட்ரிக்ட் மாஸ்டரான ஹரிஷூம் சொன்னவுடன் அம்மணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

மூன்றாவதாக வந்த வின்னி, தனது உணவிற்கு ‘பன்னீரிஷியன்’ என்று வித்தியாசமாக பெயர் சூட்டியிருந்தார். பன்னீரை அடிப்படையாகக் கொண்டு செய்த உணவாம். “நீங்க என்ன சமைக்கப் போறீங்கன்றதை முன்னாடியே மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டீங்க போலிருக்கு. ஏலத்துல எடுக்கற பொருள் மாற மாற, அதுக்கேற்ப ரெசிப்பையும் நீங்க மாத்தியிருக்கணும்” என்று சூசகமான டிப்ஸ் தந்து வின்னியை வழியனுப்பி வைத்தனர்.

‘பேக்கட் ஃபிஷ் & இட்லி பொடி’ என்று வித்தியாசமான காம்பினேஷனில் பெயர் சூட்டியிருந்தார் கடைசியாக வந்த தேவகி. மசாலா பொருள்களை ஏலம் எடுக்க முடியாததால் இட்லி பொடியை வைத்து சமாளித்திருந்தாராம். “Mediterranean, Continental, South Indian... இந்த மூணு ஸ்டைலையும் கலந்து வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க. சிம்பிள் & டேஸ்டி” என்று பாராட்டினார் கெளஷிக். “மீனை நல்லா ஹாண்டில் பண்ணியிருக்கீங்க” என்று பாராட்டினார் ஹரீஷ். இவர் Sea food expert என்பதால் தேவகிக்கு பெரும் சந்தோஷம்.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம். ஒவ்வொருவரின் தயாரிப்பில் உள்ள நிறை மற்றும் குறைகளை செஃப்கள் விரிவாக அலசினார்கள். “ஓகே... இப்ப இரண்டாவது finalist யாருன்னு பார்த்துடலாமா?” என்கிற கேள்வி வந்ததும் ஒவ்வொரு போட்டியாளரும் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்து நின்றார்கள். ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு நித்யாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் நம்ப முடியாத மகிழ்ச்சியில் அவர் கண்கலங்கிவிட்டார்.

“சாமி கும்பிட்டுட்டே இருந்தீங்க போல. அதான் வரம் கிடைச்சிடுச்சு” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் விசே. “என்னோட உணவு பற்றிய தேடலுக்கான பயணம் என்பது மிக நீண்டது. அதற்கான அங்கீகாரமா இதை நினைக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார் நித்யா. “மட்டனை வெச்சு காஷ்மீர் ஸ்டைல்ல பண்றதுக்கு அனுபவம் உள்ள எங்களுக்கே 2 மணி நேரமாவது ஆகும். நீங்க 60 நிமிஷத்துல செஞ்சது ஆச்சர்யம்” என்று நீதிபதிகள் பாராட்டினர்.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25

விசே தனக்கு வழங்கிய செஃப் கோட்டை பெருமிதத்துடன் அணிந்து கொண்ட நித்யா, “எங்க அப்பா ஆசைப்பட்டார்ன்னு எம்.பி.பி.எஸ் படிச்சு முடிச்சப்புறம் டாக்டர் கோட் போடும்போது வந்த ஃபீல், 23 வருஷம் கழிச்சு இந்த செஃப் கோட்டை போடும் போது வருது” என்று தன் உணர்வுகளை சிறப்பாகச் சொன்னார் நித்யா. “டாக்டருக்காக படிச்சதை விட சமையலுக்காகத்தான் அவங்க நெறைய தேடிப் படிச்சிருப்பாங்க சார்” என்றார் பால்கனியில் இருந்த கிருத்திகா.

இரண்டாவது Finalist ஆக நித்யா தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள மூவரும் அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் மனதளவில் தயாராக நின்றபோது “ஒரு விஷயம் சொல்லணும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார் கெளஷிக். “இன்னொரு finalist-ஐ இப்பவே சொல்லிடணும்னு தோணுது. அவங்க செஞ்ச உணவு அப்படி” என்று கெளஷிக் சொன்னவுடன் அரங்கத்தில் பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. சோர்ந்து நின்றிருந்த போட்டியாளர்களின் கண்களில் மீண்டும் மலர்ச்சி. ‘அது யாராக இருக்கும்?’

அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் முடிவு தெரிவிக்கப்பட்டது. அது ‘தேவகி’. “நித்யாவோட உணவிற்கும் உங்களோட உணவிற்கும் போட்டி ரொம்ப நெருக்கமா இருந்தது” என்ற கெளஷிக், குறைந்த மூலப்பொருள்களை வைத்துக் கொண்டு மூன்று ஸ்டைல்களை கலந்து தயாரித்த உங்க சிந்தனை அற்புதம்” என்று கெளஷிக் பாராட்ட, இன்ப அதிர்ச்சியில் தேவகியின் கண்களில் நீர் வழிந்தது. “இவ்வளவு தூரம் வருவேன்னுல்லாம் எனக்கு ஆரம்பத்துல நம்பிக்கையே இல்ல. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் தேவகி.

மாஸ்டர் செஃப் - 25
மாஸ்டர் செஃப் - 25
ஆக... பாக்கியுள்ள வின்னியும் மணிகண்டனும் அடுத்தக் கட்ட சவாலை சந்திக்க வேண்டும். இரண்டு முறையும் தனது பெயர் வராததின் ஏமாற்றம் மணிகண்டனின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஏலத்தில் மணிகண்டன் கையாண்ட உத்திகளில் பிழையில்லை. அந்த சாமர்த்தியத்தை அவர் சமையலிலும் காட்டியிருக்க வேண்டும். ஓவர் நம்பிக்கை உடம்பிற்கு ஆகாது என்பதே அவரிடமிருந்து நாம் கற்ற பாடம்.