Published:Updated:

மாஸ்டர் செஃப் - 14 | ஆர்த்தியின் `அறுசுவை வான்டன்’ அவ்வளவு மோசமா… எதனால் நிகழ்ந்தது எலிமினேஷன்?!

மாஸ்டர் செஃப் ( twitter.com/SunTV )

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-09-2021) ஒளிபரப்பான 14-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

Published:Updated:

மாஸ்டர் செஃப் - 14 | ஆர்த்தியின் `அறுசுவை வான்டன்’ அவ்வளவு மோசமா… எதனால் நிகழ்ந்தது எலிமினேஷன்?!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-09-2021) ஒளிபரப்பான 14-வது எபிசோடின் விமர்சனம் இங்கே!

மாஸ்டர் செஃப் ( twitter.com/SunTV )
'எதிரும் புதிரும்' என்கிற சவாலில் வெற்றி பெற்று நான்கு பேர் பால்கனிக்குச் சென்றார்கள் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். மீதமுள்ள ஆறு போட்டியாளர்கள் கறுப்பு ஏப்ரனை அணிந்து கொண்டு இன்று 'பிரஷர் டெஸ்ட்டை' எதிர்கொள்ளப் போகிறார்கள்.

'ஆறு' என்கிற எண்ணிக்கையைப் பார்த்ததும், உணவு தொடர்பாக உங்களுக்கு ஏதாவது சட்டென்று தோன்றுகிறதா... யெஸ் 'அறுசுவை' என்னும் விஷயம்தான் போட்டியாளர்கள் இன்று எதிர்கொள்ளப் போகிற சவால்.

'எதிரும் புதிரும்' சவாலில் இரண்டு முரணான சுவைகளை இணைத்து சமைக்க வேண்டியிருந்தது. ஆனால் அதையும் விட இந்த 'பிரஷர் டெஸ்ட்' உண்மையிலேயே அதிக பிரஷரைக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு விநோதமான ரணகள கலவையில் ingredients போட்டியாளர்களுக்கு கிடைத்தன. போட்டியாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதற்கு விடுகதைகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய சுவாரசியங்களும் நிகழ்ந்தன.

சமையலில் மட்டுமல்ல, தான் பேச வேண்டிய வார்த்தைகளில் கூட போட்டியாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருந்தது. அந்தளவுக்கு கறார்த்தனத்தை நீதிபதிகள் காட்டினார்கள். "பொருளைத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஆனா, நம்ம கைல என்ன இருக்கு" என்று அசால்ட்டாக தேவகி சொன்ன போது "உங்க 'கைலதான் எல்லாமே இருக்கு... அதை வெச்சுதான் சமைக்கப் போறீங்க" என்று கறாரான கவுன்ட்டர் வசனத்தை கெளஷிக் சொன்ன போது தேவகிக்கு தலை சுற்றியிருக்கும். (சாதாரணமா ஒரு வார்த்தை சொன்னது குத்தமாய்யா!).

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

இன்னொரு சமயத்தில் 'பெட்டரா சமைச்சிருக்கேன்' என்று சொன்னதும் ‘’பெட்டர் இல்ல.. பெஸ்ட்டாதான் இங்க சமைக்கணும்'’ என்று மறுபடியும் கெளஷிக்கிடம் மாட்டிக் கொண்டவர், இதே தேவகிதான்.

இப்படி சீரியஸூம் ஜாலியுமாக பயணித்த இந்த எபிசோடில் என்ன நடந்தது என விரிவாகப் பார்ப்போம்.

"இத்தனை பேரை கறுப்பு ஏப்ரன்ல பார்க்கிறது எனக்கே ஆனந்தமாக இருக்கு" என்று போட்டியாளர்களை தொடக்கத்திலேயே கலாய்த்து ஜாலியாக வெறுப்பேற்றினார் விஜய் சேதுபதி. 'இனிப்பு', துவர்ப்பு'... என்று ஆறு சுவைகளைக் கொண்ட தனித் தனி கவுன்ட்டர்கள் இருந்தன. ஆனால், போட்டியாளர்களின் விருப்பம் போல் சமையல் பொருட்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. அதற்கென்று விளையாட்டுடன் கூடிய விதிமுறைகள் இருந்தன.

நீதிபதிகள் சமையல் தொடர்பான ஒரு விடுகதையைச் சொல்லுவார்கள். அதற்கு சரியாக பதில் சொல்பவர், முதலில் சென்று தனக்கு சாதகமான சமையல் பொருளை எடுத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்ல, இதர ஐந்து போட்டியாளர்களுக்கு எந்தப் பொருள் தரலாம் என்பதையும் அவரே தேர்வு செய்ய முடியும். இப்படிச் செய்வதின் மூலம் அவர் சக போட்டியாளர்களுக்கு நெருக்கடியைத் தந்து தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம்.

"சரி... போட்டியை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்ட விஜய் சேதுபதி, மணிகண்டனை அழைத்து 'பத்து புஷ்அப் எடுங்க பார்க்கலாம்" என்று சொல்ல, மணிகண்டனும் சீரியசாக அதைச் செய்து முடித்தார். 'மணிகண்டா... இது சும்மா ஜாலிக்கு.. போட்டிக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது" என்று விசே சொன்னதும் மணிகண்டனின் முகத்தில் சிரிப்புக்கு பதிலாக மெல்லிய கோபம்தான் வந்தது. பாவம், மணிகண்டன், ஏற்கெனவே நீதிபதிகள் இவரை 'எடுப்பார் கைப்பிள்ளையாக'த்தான் ஹேண்டில் செய்கிறார்கள். இப்போது விசேவும் இதில் இணைந்து விட்டார். ஆனால் மணிக்கு வாயும் சற்று அதிகம்தான்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

முதல் விடுகதை: 'தேடத் தேட வருவான் - தேடி முடித்தவன் அழுவான். அவன் யார்?' இதற்கு 'வெங்காயம்' என்கிற சரியான பதிலை முதலில் சொன்னார் தேவகி. 'கார்ப்பு' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் கவுன்ட்டரில் அவர் சென்று தனக்கு விருப்பமான சமையல் பொருளை எடுத்துக் கொள்ளலாம். 'கேட்ஸா' (?) என்கிற மராத்திய சட்னியை எடுத்துக் கொண்டார். இவரே மற்றவர்களுக்கும் தேர்வு செய்து தந்தார்.

இப்படியாக ஒவ்வொரு சுவை தொடர்பான விடுகதைக்கும் முதலில் சரியான விடையை சொல்பவர்கள், தங்களுக்கு வசதியான பொருளை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தேர்வு செய்து தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். இப்படிமற்றவர்களுக்கு பொருட்களைத் தேர்ந்தெடுத்து தரும்போது, பிடித்த போட்டியாளர், பிடிக்காதவர் என்கிற பாரபட்சங்களும் பாகுபாடுகளும் இருந்தனவா? இருந்திருக்கலாம். 'தனக்கு எதிரான பொருட்களையே தருகிறார்கள்' என்று பிறகு புகார் கூறினார் மணிகண்டன்.

இந்த எபிசோடில் வேறென்ன விடுகதைகள் சொல்லப்பட்டன என்கிற சுவாரஸ்யமான பட்டியலைப் பார்க்கலாம். ஒருவர் தவறான விடையைச் சொன்னால், அடுத்த சுற்றில் பங்கு பெற முடியாது.

'தாயோ கடல். தந்தையோ சூரியன். நிலத்தில் மின்னுவான், நீரில் கரைவான். அவன் யார்?' - இதற்கு 'உப்பு' என்கிற சரியான பதிலைச் சொன்னவர் சுனிதா.

'பழத்துக்கு மேலே மரம் மரத்துக்கு கீழே பழம்' - 'அன்னாசிபழம்' என்று சரியான விடையைச் சொல்லி மகிழ்ச்சியடைந்தவர் மணிகண்டன்.

'விருந்துக்கு போடாத இலை; மருந்துக்கு போடும் இலை. சுவையோ கசப்பு' - இந்த எளிமையான விடுகதைக்கு மணிகண்டன் மற்றும் ஆர்த்தி தவறான பதிலைச் சொன்னாலும் 'வேப்பிலை' என்கிற சரியான பதிலைச் சொல்லி இரண்டாவது வாய்ப்பைப் பெற்றார் சுனிதா.

'பழுத்தால் இனிப்பவன்; பிள்ளை பெறும் தாய்க்கு துணையாய் இருப்பவன்; கிளிமூக்கு உடையவன்' என்கிற எளிதான விடுகதைக்கு 'மாங்காய்' என்று மீண்டும் சரியான பதிலைச் சொன்னவர் சுனிதா.

'மூடி வைத்த செம்புக்குள் சிவப்பு முத்துகள்' என்கிற விடுகதைக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட பதில் சொல்லி விடும். 'மாதுளை' என்கிற சரியான பதிலைச் சொன்னவர் வின்னி.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஆறு சுவையை அடிப்படையாகக் கொண்ட ingredients கிடைத்ததுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதன் ரணகளமான காம்பினேஷனைப் பார்த்தால் நமக்கே தலையைச் சுற்றியது. இருப்பதிலேயே கடினமான காம்பினேஷன் வின்னிக்கு கிடைத்தது. மணிகண்டனே இதை ஒப்புக் கொண்டார்.

வின்னியின் கூடையில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்று பார்க்கலாமா? 'ஓமம், ஸ்மோக் ஃபிஷ், டிரை பிளம், பிளாக் சாக்லேட், தேங்காய் வினிகர், வெந்தயக் கீரை - இந்த ஆறு விநோதமான பொருட்களை வைத்துக் கொண்டு அவர் என்ன சமைக்க முடியும்? சிலருக்கு மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடித்தது. ஆர்த்தியை இதற்கு உதாரணம் சொல்லலாம். இது போல, அதிக முறை சரியான விடையைச் சொன்ன சுனிதா, தனக்கு சாதகமான பொருட்களை எடுத்துக் கொண்டார்.

அறுசுவை உணவுப் போட்டி ஆரம்பித்தது. இதற்காக தரப்பட்டிருந்தது 60 நிமிடங்கள். சும்மா சொல்லக்கூடாது. விநோதமான காம்பினேஷன்களில் அமைந்த ingredients கிடைத்தாலும் கூட அதை வைத்து என்ன செய்யலாம் என்று சமயோசிதமாக யோசித்து செயல்படுத்தும் போட்டியாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். பரபரப்பான அறுபது நிமிடங்கள் கழித்து இந்த அறுசுவை சமையல் முடிந்தது.

பரிசோதனை மேஜைக்கு முதலில் உணவைக் கொண்டு வந்தவர் சுனிதா. இவர் செய்திருந்த டிஷ் 'அறுசுவை கிராமத்து கருவாட்டு குழம்பு'. விஜய் சேதுபதி உள்ளிட்டு நீதிபதிகளும் இதற்கு பாசிட்டிவ் கமென்ட்களைத் தந்ததில் சுனிதா பயங்கர உற்சாகமாகி விட்டார். (விட்டால் 'வாட் எ கருவாட்... பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருப்பார் போல).

அடுத்து வந்த ஆர்த்தி செய்திருந்த உணவு 'அறுசுவை வான்டான்'. "ஐயோ.. எனக்கு வேண்டாம்" என்று அலறும்படியாக இதன் சுவை இருந்தது போல. நீதிபதிகளின் முகச்சுளிப்பு இதைத்தான் உணர்த்தியது. இத்தனைக்கும் ஆர்த்தி பிளேட்டிங் செய்திருந்த நேர்த்தி அத்தனை அட்டகாசமாக இருந்தது. ஆனால் சுவை இல்லாததால் நீதிபதிகளைக் கவர முடியவில்லை. "ஆறு ingredients-ஐ வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவாங்க?" என்கிற நெகட்டிவ் கமென்ட்டைக் கேட்டு முகம் வாடி திரும்பினார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

தனது உணவை 'நவ்சீன்' கொண்டு வரும்போது பால்கனியில் நின்றிருந்த சக போட்டியாளர்கள் கைத்தட்டி உற்சாக ஆதரவை அவருக்கு வழங்கினார்கள். நவ்சீன் செய்திருந்த டெஸர்ட்டின் பெயர் 'நண்பன்'. சாப்பிடும் போது அந்த உணவை நண்பனாக உணர்வோமாம். ஆனால் நீதிபதிகள் அப்படி உணரவில்லை. "நவ்சீன்... எப்பப் பார்த்தாலும் டெஸர்ட்டே பண்றீங்க. நீங்க அதுல ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்காக சேஃப் கேம் ஆடினா எப்படி?" என்கிற கண்டிப்பை நவ்சீன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் அவருடைய உருவாக்கம் பாராட்டைப் பெற்றது. 'am proud of you' என்பது போல் செஃப் கெளஷிக் சொன்ன போது அம்மணியின் 'ஆர்ட் ஃபிலிம்' முகத்தில் அப்படியொரு மலர்ச்சியான புன்னகை.

"நவ்சீன் 'நண்பன்'ன்னு பேரு வெச்சிருந்தாங்க.. நீ என்ன தலைப்பு வெச்சிருக்கே..? 'எதிரியா'" என்று கலாய்த்தபடியே அடுத்த போட்டியாளரான மணிகண்டனை வரவேற்றார் விஜய் சேதுபதி. மணி தயார் செய்திருந்த டிஷ்ஷின் பெயர் 'விருந்தோம்பல்'. தட்டை வைத்து விட்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் நின்றார் மணி. நீதிபதிகள் உணவைச் சுவைத்த பிறகு அவர்களின் முகங்களில் திருப்தியில்லை. 'சிந்தனை, தோற்றம் ஓகே. ஆனா சுவை..? நீங்க வீட்டுக்குப் போய் இன்னமும் நல்லா கத்துக்கிட்டு வாங்க. இன்டர்நேஷனல் உணவையும் இந்தியன் உணவையும் இப்படியா மிக்ஸ் பண்றது?!" என்று கெளஷிக் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னதும் மணிகண்டனின் முகம் இருண்டு போனது. அடுத்த நொடியில் அழப்போகிறவர் போல் பரிதாபமாக இருந்தார். (விருந்தோம்பலுக்கு இப்படியா பதில் மரியாதை தர்றது?!).

'என் அறுசுவை பொருத்தம்' - இதுதான் வின்னி செய்திருந்த உணவின் பெயர். இவருக்குத்தான் இருப்பதிலேயே கடினமான காம்பினேஷன் கிடைத்தது. கொழுக்கட்டை + சாஸ் செய்திருந்தார். "இப்படியொரு டேஸ்ட்ல நான் சாப்பிட்டதேயில்லை" என்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார் விசே. 'சாஸ் மட்டும் சற்று காரமாக இருந்ததாம்'. 'தோற்றம் மற்றும் சுவை ஓகே' என்று நீதிபதிகளும் பாராட்டினார்கள்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

தேவகி அடுத்ததாக வந்தார். இவர் செய்திருந்தது 'அறுசுவை இடியாப்பம்'. இவர் பிளேட்டிங் செய்திருந்த நேர்த்தியை நீதிபதிகள் மிகவும் பாராட்டினார்கள். 'மேலே கொஞ்சம் கசப்பு, உள்ளே காரம்னு வித்தியாசமாத்தான் இருக்குது. ஆனா திருப்தியா இல்ல" என்று விசே முகத்தைச் சுளித்தார். (ஹரீஷ் கூட சேர்ந்து விஜய் சேதுபதியும் ரொம்ப கெட்டுப் போயிட்டார் போல). "நீங்கதான் பிளேட்டிங்கை முதல்ல முடிச்சீங்க.. அவ்ளோ சீக்கிரம் முடிக்கறதுக்கு இன்னமும் சில அயிட்டங்களை யோசிச்சிருக்கலாம் இல்லையா?" என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியதும் இடியாப்பம் செய்த தேவகி, தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியுடன் திரும்பினார்.

ஆக, ஆறு போட்டியாளர்களும் தங்களின் உணவைச் சமர்ப்பித்து விட்டார்கள். போட்டியாளர்கள் செய்திருந்த குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள் சிறிய சஸ்பென்ஸூக்குப் பிறகு ரிசல்ட்டை சொல்ல ஆரம்பித்தார்கள். 'கருவாட்டுக் குழம்பு'தான் முதல் இடத்தைப் பிடித்தது. ஆம், கருவாடை சிறப்பாக ஹேண்டில் செய்த சுனிதாதான் முதலில் வெற்றி பெற்று பால்கனிக்கு சென்றார். 'நண்பனும்' வெற்றி பெற்றான். நவ்சீனின் டெஸர்ட் டாப் 2-ல் தேர்வாகி அவரும் பால்கனிக்கு சென்றார். டாப் 3 -ல் வந்தவர் வின்னி. (கடினமான காம்பினேஷன்).

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

மீதமிருந்த மணிகண்டன், ஆர்த்தி, மற்றும் தேவகி டென்ஷனுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே திட்டு வாங்கிய மணிகண்டன் கூடுதல் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தார். நான்காவது பெயராக அவருடைய பெயர் சொல்லப்பட்டவுடன் 'மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது போன்ற ஆசுவாசத்தை அடைந்தார். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் சரியான கலவையில் அவருடைய முகத்தில் பெருகியோடியது.

தான் பின்னால் தள்ளப்பட்டிருப்பதை ஆர்த்தியால் நம்பவே முடியவில்லை. (மணிகண்டன்லாம் ஜெயிச்சுட்டாரு. நம்ப நிலைமை இப்படியாகிடுச்சே!). மீதமிருந்த தேவகியும் ஆர்த்தியும் டென்ஷனின் உச்சிக்கே சென்று கொண்டிருந்த போது, ஓர் அபாரமான திருப்பமாக தேவகியின் பெயர் அறிவிக்கப்பட்டது. பின்னால் சோனியாக வந்து கொண்டிருந்த ஒரு குதிரை திடீரென மின்னல் வேகத்தில் வின்னிங் போஸ்ட்டை தாண்டிய ட்விஸ்ட் போல ஆகிப் போனது. தேவகியால் திகைப்பில் இருந்து மீள முடியவில்லை. சும்மாவே திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருவென விழிப்பார். இப்போதோ சொல்லவே வேண்டாம்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV

இப்போது ஆர்த்தியால் கண்கலங்குவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவர் பலமான போட்டியாளர்களுள் ஒருவர். எனவே, தான் எலிமினேட் ஆனதை நம்பவே முடியாமல் நின்று கொண்டிருந்தார். ஏதாவது திடீர் திருப்பம் நிகழும் என்ற நம்பிக்கை அவருக்கு இறுதி வரையில் இருந்தது. "நீங்க டீம் கேப்டனா வேற இருந்திருக்கீங்க இல்லையா?" என்று கெளஷிக் கேட்டதும், தாங்க முடியாமல் கலங்க ஆரம்பித்து விட்டார்.

"குக்கிங்தான் என் passion. 13 வருஷமா இந்தச் சமையலை மிக ஆர்வமா பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். என்னோட blog-ல நைட்டும் பகலுமா உழைச்சு நிறைய சமையல் குறிப்புகளை பதிவு செய்திருக்கேன். இங்க வந்து நிறைய கத்துக்கிட்டேன்... நண்பர்களும் கிடைச்சாங்க" என்று உணர்ச்சி ததும்பல்களுக்கிடையில் தன் ஃபேர்வெல் உரையை நிகழ்த்தி முடித்தார்.

மாஸ்டர் செஃப்
மாஸ்டர் செஃப்
twitter.com/SunTV
ஒரு பெண்ணின் தோல்வியை, அது போல் பல தோல்விகளைத் தாண்டி ஜெயித்துக் காட்டிய இன்னொரு பெண்ணால்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் இல்லையா? எனவே செஃப் ஆர்த்தி, போட்டியாளர் ஆர்த்தியை கதவு வரைக்கும் ஆறுதலாக அணைத்து அழைத்துச் சென்று பிரியாவிடை தந்தார்.

இரண்டு ஆர்த்திகளும் ஜெயித்த தருணம் அது.