சினிமா
Published:Updated:

நொறுக்க முடியாதவர்கள் நாங்கள்!

V - Unbeatable குழு
பிரீமியம் ஸ்டோரி
News
V - Unbeatable குழு

மும்பையில் பைந்தர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் இயங்குகிறது V - Unbeatable’ குழு.

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டர் அரங்கம். ‘America’s Got Talent’ என்ற ரியாலிட்டி ஷோ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான்காயிரம் பார்வையாளர்கள் குழுமியிருக் கிறார்கள். எங்கும் ஒளிக்கோளம். திடீரென ஒலிக்கிறது, ‘மாஸு மரணம்... டஃப்பு தரணும்...’ பாடல். வெறித்தனமாய் நடனம் ஆடுகின்றனர் ‘V - Unbeatable’ குழுவினர். பாடல் முடிந்ததும் நடுவர்கள் எழுந்து நின்று கைதட்டி வெற்றிச் செய்தியை அறிவிக்க, கலங்கிய கண்களுடன் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடு கின்றனர் அந்த மும்பை இளைஞர்கள். ரன்வீர் சிங் உட்பட பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகள் சொல்ல, வைரல் ஆனது, அந்த ‘மாஸு மரணம்’ நடன வீடியோ.

V - Unbeatable குழு
V - Unbeatable குழு

மும்பையில் பைந்தர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் இயங்குகிறது V - Unbeatable’ குழு. 13 வயது முதல் 24 வயது வரையிலான 35 பேர் குழுவில் இருக்கிறார்கள்.

இன்று உலகமே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது மும்பை ‘V - Unbeatable’ குழுவினரை. இந்தக் குழுவை உருவாக்கிய விபி, வாழ்த்துகளில் மிதந்துகொண்டி ருக்கிறார். பெரிய பூங்கொத்தைக் கொடுத்து வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு உரையாடலைத் தொடங்கினேன்.

“கைதட்டல்களும் பாராட்டுகளும் எங்களோட பல வருஷக் கனவு. எங்க வெற்றியை இன்னைக்கு இந்தியாவே பெருமையா பார்க்குது. ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னாடி எத்தனையோ கேலி, கிண்டல்கள் நிறைஞ்சிருக்கு...” - நெகிழ்ச்சியில் கண் கலங்குகிறது விபிக்கு.

“ ‘உங்களால முடியாது’, ‘டான்ஸ் சோறு போடாது’, ‘டான்ஸை நம்பி வாழ்க்கையைத் தொலைக்கப்போறீங்க...’ - இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் இத்தனை வருஷமா கேட்டுக்கிட்டிருந்தோம். எங்க வீட்டுலயேகூட ஆதரவான வார்த்தைகள் கிடைச்சதில்ல. ஆனால் அடுத்தவங்களோட நம்பிக்கையைவிட நம்ம கனவுகளுக்கு சக்தி அதிகம்னு நிரூபிக்க எட்டு வருஷம் போராடியிருக்கோம். மத்தவங்களைப் பொறுத்தவரை இது ஏழு கோடி ரூபாய் வெற்றி. ஆனா, சின்னச் சின்னப் பாராட்டுகளுக்காக ஏங்குன எங்களுக்கு, இந்த உலகமே கைதட்டின மாதிரியான மிகப்பெரிய அங்கீகாரம் இது” - உணர்ச்சிவசப்படுகிறார் விபி.

“எங்கள் குழுவில் நான்கு பெண்கள் இருக்காங்க. எங்க குடும்பத்துக்கெல்லாம் நிரந்தர வருமானம்னு எதுவும் கிடையாது. கிடைக்குற வேலையைப் பார்ப்பாங்க. அவங்களைப் பொறுத்தவரை எங்களைப் படிக்க வைக்கிறதே பெரிய விஷயம். நாங்க படிச்சு வேலைக்குப் போகணுங்கிறது அவங்க ஆசை. குடும்பம் வேற வேறயா இருந்தாலும் நாங்க எல்லாரும் ஒரு விஷயத்தில் இணைஞ்சிருந்தோம்... அந்த ஒரு விஷயம் டான்ஸ்... அதுதான் எங்க எல்லாருக்குமான கனவு.

ஸ்கூல், காலேஜ் முடிஞ்சு வந்து நியூஸ் பேப்பர் போடுறது, காய்கறி விற்கிறது, தெருக்களில் பழம் விற்கிறதுன்னு ஒவ்வொருத்தரும் ஒரு வேலை செய்றோம். படிப்பு, வேலையெல்லாம் முடிச்சு ராத்திரி பத்து மணிக்கு மேலதான் டான்ஸுக்காக நேரம் ஒதுக்க முடியும். நாங்க சந்தோஷமா இருக்கற நேரம்னா அதுதான். டிவியில காட்டுற மாதிரி, டான்ஸ் பழக எங்களுக்குக் கண்ணாடி வெச்ச ஸ்டூடியோவெல்லாம் இல்ல. நடுத்தெருவுல, மரத்தடியிலன்னு எங்க இடம் இருக்கோ அங்க ஆடிப்பழகுவோம். யாராவது கைதட்ட மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கோம். அன்றாடம் எத்தனையோ கேலி, கிண்டல்கள் எங்களைச் சுத்திக்கிட்டே இருக்கும். குடிசையில வாழ்ந்துகிட்டு டான்ஸ் தேவையான்னுகூட கிண்டல் பண்ணியிருக்காங்க.

எட்டு வருஷத்துக்கு முன்னாடி நானும் என் ஃபிரெண்ட் விகாஸும் சேர்ந்துதான் இந்த டான்ஸ் குரூப்பை ஆரம்பிச்சோம். எங்களை மாதிரியே டான்ஸை உயிரா நேசிக்கிற பசங்கள எங்க குப்பத்தில் தேடிச் சேர்த்தோம். வீட்டுல அவ்வளவு எளிதா விட மாட்டாங்க. மணிக்கணக்கில் வாசல்லயே நின்னு கூட்டிட்டு வருவோம். ஏதாவது ஒரு வாய்ப்பு வராதான்னு ஏங்கியிருக்கோம். 2013-ல அப்படியொரு பெரிய வாய்ப்பு வந்துச்சு. ரிகர்சல் எல்லாம் முடிச்சு, மறுநாள் விடியலுக்காகக் காத்திருந்த நேரம், விகாஸ்க்கு ஒரு ஆக்ஸிடென்ட். கடைசிவரை கைத்தட்டல்களைக் கேட்காமலே, எங்களை விட்டுட்டுப் போயிட்டான்...” வார்த்தைகள் உடைந்து கலங்குகிறார் விபி.

“ஜெயிக்கணுங்கிறது அவனோட லட்சியம். அதை நாங்க சாதிக்கணும்னு நினைச்சோம். எங்க டீமோட பேரை, விகாஸ் பெயரோட முதல் எழுத்தைச் சேர்த்து ‘ V - Unbeatable’ன்னு மாத்தினோம். அவன் இல்லைன்னாலும் எங்க ஒவ்வொருத்தருக்குள்ளும் அவனோட கனவு இருக்கு. அவன் குடும்பத்துக்கு நாங்க 34 பேர் இருக்கோம். எங்க எல்லாரோட டி-ஷர்ட்டிலும் எப்போதும் விகாஸ்ங்கிற பெயர் இருக்கும். கடந்த எட்டு வருஷத்துல நிறைய இடங்கள்ல வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கியிருக்கோம். வாய்ப்பு கிடைச்சதில்ல. நாங்களே வாய்ப்பை உருவாக்க நினைச்சு, டான்ஸ் ஆடி, வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். நிறைய பேர் எங்களோட வீடியோவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க.

வீடியோக்கள் ஹிட் அடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் ‘America’s Got Talent’ ஷோவிலிருந்து ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. இந்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் சந்தோஷமா சொன்னப்போ, ‘இங்க இருந்து அமெரிக்கா போக எவ்வளவு செலவு ஆகும்... அதெல்லாம் வேண்டாம்’னு சொன்னாங்க. தேடியலைஞ்சு ஸ்பான்ஸர் வாங்கிதான் ஆடிஷனுக்குப் போனோம். ஏழு லட்ச ரூபாய் வரை கடன் வாங்கிச் செலவு பண்ணினோம். இப்போ ஜெயிச்சுட்டோம்... இல்லேன்னா ஏழு லட்ச ரூபாய் கடனுக்கு வாழ்க்கை முழுக்க உழைக்க வேண்டியிருக்கும்...” -சிரிக்கிறார் விபி.

V - Unbeatable குழு
V - Unbeatable குழு

“அது சரி... இறுதிச்சுற்றில் ஏன் தமிழ்ப் பாடலைத் தேர்வு செஞ்சீங்க?”

“மும்பையில் வாழ்ந்தாலும் நாங்க ரஜினி ரசிகர்கள். அந்தப் பாட்டு எங்களோட ஹிப்பாப் டான்ஸுக்கு நல்ல எனர்ஜி கொடுக்கும்னு தோணுச்சு. அதனால்தான் அதைத் தேர்வு செய்தோம். ஜெயிச்சுட்டோம். அடுத்தடுத்து இப்போ நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருக்கு. ஊருக்கே கத்திச் சொல்லணும்போல இருக்கு...

`நாங்க ஜெயிச்சுட்டோம்!’ ” உற்சாகமாக சத்தம்போட்டுச் சொல்கிறார் விபி.