Published:Updated:

பணமோசடி... பொங்கிய மனோபாலா... உடைந்தது டிவி நடிகர் சங்கம்!

மனோபாலா
மனோபாலா

டிவி நடிகர் சங்க நிர்வாகிகளிடையே எழுந்துள்ள மோதலால் சங்கம் பிளவுபட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த புகைச்சல் மோதலாக வெடித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது துணைத்தலைவர் மனோபாலா மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்கள் சேர்ந்து பல்வேறு புகார்களை எழுப்பியுள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது சின்னத்திரை நடிகர் சங்கம். சங்கத்தின் தலைவராக நடிகர் ரவிவர்மா இருந்து வருகிறார். செயலாளராக 'ஆடுகளம்' நரேன் இருந்தார். கடந்த தேர்தலில் இவர்கள் இருவரும் ஒரே அணியிலிருந்துதான் தேர்வாகினர். எனினும் சங்கத்தில் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாக சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார் நரேன்.

‘ஆடுகளம்’ நரேன்
‘ஆடுகளம்’ நரேன்

இந்நிலையில், கடந்தாண்டு சங்கத்தின் சார்பில் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தக் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் தலைவர் ரவிவர்மா பெரும் ஆதாயம் அடைந்ததாகவும் அவருக்கு கமிஷனாக சில லட்சங்கள் கிடைத்ததாகவும் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் குரல் எழுப்ப அதன் தொடர்ச்சியாக சங்கம் இரண்டு கோஷ்டியாகச் செயல்படத் தொடங்கியது.

தொடர்ந்து சில மாதங்களில் நரேன் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார். தற்போது அந்தப் பதவிக்கு நடிகர் ரிஷியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அர்ச்சனா டு அனிதா சம்பத்... பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட்!

இந்நிலையில், தற்போது துணைத்தலைவர் மனோபாலா மற்றும் செயற்குழுவின் சில உறுப்பினர்கள் சேர்ந்து ரவிவர்மாவுக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

மனோபாலாவிடம் பேசிய போது,"ஒரே டென்ஷனா இருக்குங்க. தானும் ஒண்னும் செய்யாம, செய்ய நினைக்கிறவங்களையும் எதுவும் செய்ய விடாம, சங்கத்துல ஒட்டிக்கிட்டு... என்னங்க நியாயம்?" என்றார்.

ரவிவர்மா
ரவிவர்மா

ரவிவர்மா பதவி விலக வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ரவிவர்மா மற்றும் அவருக்கெதிரான அணி என இருதரப்பையுமே ஆதரிக்காமலும் சில உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களோ, "பணமோசடியில தலைவருக்கு நிர்வாகத்துல இருந்த சிலர் உடந்தையா இருந்தாங்களே, ராஜினாமா பண்ணணும்னா எல்லாருமே சேர்ந்துதான் செய்யணும்" என்றதுடன், "படம் தயாரிக்கறப்ப மட்டும் டிவி ஆட்களைத் தேட மாட்டார்; ஆனா சங்கத்துல பதவி மட்டும் வேணும் இவருக்கு" என மனோபாலா மீதும் பொறுமுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து ரவிவர்மாவிடம் கேட்டதற்கு, "ஷூட்டிங்ல இருக்கேன். பிறகு விரிவாப் பேசுறேன்" என முடித்துக் கொண்டார்.‌

அடுத்த கட்டுரைக்கு