Published:Updated:

``அந்த நடிகராலதான் திரும்பவும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன்!" - `மெட்டி ஒலி' சாந்தி

மெட்டி ஒலி சாந்தி
மெட்டி ஒலி சாந்தி

"குரூப் டான்ஸர் ஏரியாங்கிறது ஒரு மாதிரிதான். ஒரு லேடி டான்ஸர் சினிமாவுல சாதிக்கணும்னா, நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்குங்கிறதுதான் யதார்த்தம். எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்கேன்." - `மெட்டி ஒலி' சாந்தி

`சித்தி' சீரியலுக்கு புதிதாக டைட்டில் சாங் ரெடியாகி, ஷூட்டெல்லாம் முடிந்த நிலையில், அது திருப்தி தராததையடுத்து, `பழைய கண்ணின் மணியே இருக்கட்டும்' என முடிவெடுத்தார்களாம். இருபது வருடங்கள் கடந்தும், அன்றைய `சித்தி' டைட்டில் சாங்'கின் மவுசு குறையாததையே இது காட்டுகிறது.

ஏறக்குறைய இதேபோன்றதுதான். அதேகாலகட்டத்தில் ஒளிபரப்பான `மெட்டி ஒலி'யின் டைட்டில் சாங்கான `அம்மி அம்மி அம்மி மிதித்து' பாடலும். இந்தப் பாடல் காட்சியில் ஆடிய சாந்தியின் நடனத்திற்காகவே இந்த சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம். `மெட்டி ஒலி'க்குப் பிறகு வேறெந்த சீரியலிலும் தோன்றாத சாந்தியை,`சித்தி -2'க்கும் நடனமாட கேட்டிருக்கிறார்கள்.

மெட்டி ஒலி சாந்தி
மெட்டி ஒலி சாந்தி

" 'சித்தி 2'ல அப்படி ஒரு வாய்ப்பு வந்ததும் சந்தோஷமா இருந்தது. நானும் ஷூட்டுக்கு ரெடியாகிட்டேன். ஆனா, துரதிர்ஷ்டவசமா அது நடக்காமப் போயிடுச்சு. ஒருவேளை, `சித்தி 2'க்குப் புது டைட்டில் சாங் ஓகே ஆகியிருந்தா, திரும்பவும் ஒரு ரவுண்டு வந்திருப்பேனோ என்னவோ'' என்று பேச ஆரம்பித்தார் சாந்தி.

"என்னுடைய அக்கா குரூப் டான்ஸரா இருந்தாங்க. இந்த நிலையிலதான், 13 வயசுல டான்ஸ் பக்கம் வந்தேன். ஆனா, முறைப்படி கத்துக்கிறதுக்கு வசதியில்லாத குடும்பச் சூழல். அப்போ தூர்தர்ஷன்ல ஒளிபரப்பான `ஒளியும் ஒலியும்' பார்த்துதான் டான்ஸ் ஆட கத்துக்கிட்டேன். `கிழக்கு வாசல்' படத்துல குரூப்ல ஒருத்தரா என்னோட சினிமாப் பயணம் தொடங்குச்சு. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு எல்லா மொழிகள்லேயும் சேர்த்து 3000 பாடல்களுக்கு மேல ஆடியிருக்கேன்.

``திருமண கனவிலிருந்த என்னை தர்ஷன் ஏமாற்றிவிட்டார்!''- நடிகை சனம் ஷெட்டியின் 5 பக்க புகார்

ஒரு கட்டத்துல மணிரத்னம் சார், `ஆயுத எழுத்து' படத்துல `டான்ஸ் மாஸ்டர்'ங்கிற லெவலுக்கு என்னை உயர்த்தினார். ரஜினி, விஜய், அஜித்னு டாப் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணியிருக்கேன். ஆனாலும், இப்போவரைக்கும் என்னோட அடையாளம் `மெட்டி ஒலி' சாந்திதான்."

"அந்தப் பாட்டுக்கு ஆட கேட்டப்போ `சீரியலுக்கா...'னு குறைச்சு மதிப்பிட்டவதான் நான். ஆனா, சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கின கொஞ்ச நாள்லயே என்னுடைய எண்ணத்தை மாத்திக்கிட்டேன். பத்தோடு பதினொண்ணா இருந்த என் முகத்தை எல்லாருக்கும் பரிச்சயமாக்கிவிட்ட பெருமை, `மெட்டி ஒலி' டைரக்டரைத்தான் சேரும். பிறகு, அவரே என்னை சில சீரியல்கள்லேயும் நடிக்கவெச்சார். அப்படியே சினிமாவும் நடிக்கக் கூப்பிட்டுச்சு. அரவிந்த் சாமி நடிச்சிருக்கிற ஒரு படத்துல வில்லி கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமே ரிலீஸாகும்'' என்றவரிடம், "இப்போது ஆடுவதை விட்டுவிட்டீர்களா?" என்றோம்.

சாந்தி
சாந்தி

"கல்யாணத்துப் பிறகு ப்ரேக் விட்டிருந்தேன். கணவர், பிள்ளைகள்னு குடும்பத்தைக் கவனிக்கவேண்டிய சூழல். மறுபடியும் ஒரு நடிகையா டி.வி-க்கு வந்ததால, எல்லாரும் நான் ஆடறதை விட்டுட்டேன்னு நினைச்சிட்டாங்க. டான்ஸ்ல பிசியா இருந்தப்பவே நானாபோய் வாய்ப்பு கேட்க விரும்புனதில்லை. தெலுங்கு சினிமா ஃபீல்டுல சந்திச்ச ஒரு மோசமான அனுபவமே அதுக்குக் காரணம். அங்க சூப்பர் ஸ்டாரா இருந்த அந்த நடிகரை ஒருமுறை வாய்ப்புக்காக சந்திச்சேன். அன்னைக்கு பெரிசா ஒரு அவமானம் நடந்தது. அந்த நடிகராலதான் திரும்பவும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன். `இனி எங்கேயும் போய் நிற்கக்கூடாது'னு முடிவெடுத்தேன். அதுக்கப்புறம் எனக்கு கிடைச்ச வாய்ப்பெல்லாமே அதுவா அமைஞ்சதுதான்.

குரூப் டான்ஸர் ஏரியாங்கிறது ஒரு மாதிரிதான். ஒரு லேடி டான்ஸர் சினிமாவுல சாதிக்கணும்னா, நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்குங்கிறதுதான் யதார்த்தம். எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்கேன்.

சினிமாவுல நான் நினைச்ச உயரத்துக்கு வரலைன்னாலும், ரஜினி, விஜய், அஜித்னு பெரிய ஸ்டார்ஸ்கிட்ட நான் ரெஜிஸ்டர் ஆகிட்டேன்னு நினைக்கும்போது மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கு. விஜய் படம் நியூஸிலாந்துல போயிட்டிருந்தப்போ, பிருந்தா மாஸ்டர்க்கு அசிஸ்டென்ட்டா வேலைபார்த்தேன். ஷூட் அப்போ, ரொம்ப நேரமா நான் பசியில இருந்தேன். இதை மாஸ்டர்கிட்டயும் சொன்னேன். இதைக் கவனிச்ச விஜய் சார், ப்ரேக்ல ஒரு பர்கர் வாங்கித் தந்து, `முதல்ல இதைச் சாப்பிடுங்க'ன்னு கொடுத்தார். அங்க இருந்த யாருமே இதை எதிர்பார்க்கலை."

'மெட்டி ஒலி' சாந்தி
'மெட்டி ஒலி' சாந்தி

"அஜித்தை ரொம்ப நாள் இடைவெளிவிட்டு `பில்லா 2' ஷூட்டிங் ஸ்பாட்லதான் பார்த்தேன். ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாம்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். தூரத்துல என்னைப் பார்த்தவர், ஷூட்டிங்கையே கொஞ்ச நேரம் நிறுத்தச் சொல்லிட்டு, என்கிட்ட பேசிட்டிருந்தார்.

ரஜினியின் ஆல் டைம் ஃபேவரைட்டான `பாட்ஷா'வுல `நான் ஆட்டோக்காரன்' பாடல்ல ஆடியிருந்தேன். பாட்டுல வரிசையா குரூப் டான்சர்களைக் கடந்து அவர் நடந்து போற மாதிரியான காட்சி. அவரைப் பார்த்த ஆச்சர்யத்துல மூவ்மென்டை மறந்துட்டேன். என் ரெண்டு கையையும் பிடிச்சு, `சாந்தி... இப்படி வைக்கணும்'னு சரி பண்ணார் ரஜினி'' என்று பூரிப்புடன் முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு