சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஸ்ரீஜா கூட நடிக்கிறது பெரிய சேலஞ்ச்!”

மிர்ச்சி செந்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
மிர்ச்சி செந்தில்

படங்கள்: விக்னேஷ்

``மதுரையில் படிச்சிருக்கேன்... கோயம்புத்தூரில் வேலை பார்த்திருக்கேன்... சென்னை பிறந்து வளர்ந்த ஊருங்கிறதனால சென்னை ஸ்லாங் சரளமா பேசுவேன். ஆனா, திருச்செந்தூர் இதுவரைக்கும் நான் போகாத ஊர். அந்த ஊர் ஸ்லாங் எனக்கு சுத்தமா தெரியாது. இப்ப நான் நடிக்கிற சீரியல் கதைக்களம் திருச்செந்தூரை மையப்படுத்தியது. அந்த ஸ்லாங் செமையா இருக்கு. கொஞ்ச கொஞ்சமா கத்துட்டிருக்கேன்’’ என்றவாறு திருச்செந்தூர் மண்மணத்துடன் நம்மை வரவேற்றார் மிர்ச்சி செந்தில்.

‘‘அண்ணன்-தங்கை கான்செப்ட் எல்லாருக்கும் பழக்கப்பட்டது. படங்கள், சீரியல்னு எல்லாருக்கும் அது சார்ந்த ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். நானே `நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் அண்ணனாகத்தான் நடிச்சிருந்தேன். அதுல இருந்தும், இதுக்கு முன்னாடி வந்த கதைகளில் இருந்தும் மாறுபட்டு நடிக்கணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். புதுசா ஒண்ணு பண்ணுறதைவிட ஏற்கெனவே கேள்விப்பட்ட, பார்த்த விஷயங்களிலிருந்து நாம புதுசா ஒண்ணு பண்ணுறதுலதான் சவால்கள் இருக்கு. அதனாலதான் ஜீ தமிழில் `அண்ணா' சீரியலின் கதையைக் கேட்டதும் சம்மதிச்சேன். இதுல என் தங்கச்சிகளாக நடிக்கிற நான்கு பேரும் இந்தக் கதைக்கு மிகப்பெரிய பிளஸ். சீரியலுடைய புரொமோ வந்ததும் எல்லாரும் ‘நீங்க பார்க்கிறதுக்கு ரியல் ஃபேமிலி மாதிரி இருக்கீங்க’ன்னு சொன்னாங்க. உண்மையாகவே செட்லயும் அப்படித்தான் இருப்போம்’’ என்றவரிடம் அவர் காஸ்ட்யூம் குறித்துக் கேட்கவும், சிரிக்கிறார்.

மிர்ச்சி செந்தில்.
மிர்ச்சி செந்தில்.

‘‘முன்னாடி `மாயன்' கேரக்டர் பண்ணும்போது டபுள் கலர் வேஷ்டி அறிமுகப்படுத்தினோம். சில கடைகளில் `மாயன்' வேஷ்டின்னே வித்தாங்க. இந்தக் கேரக்டருக்கும் வேஷ்டி - சட்டைன்னு சொன்னதும் இதுல என்ன புதுமை பண்ணலாம்னு யோசிச்சோம். முருக பக்தன் கேரக்டர்ங்கிறதனால முருகனை வச்சு ஏதாவது பண்ணலாமான்னு யோசிச்சோம். காஸ்ட்யூம் டிசைனர் சுகன்யா, ஷர்ட் காலரில் ரெண்டு பக்கத்திலும் ஓம் போட்டு அதுல வேலுடன் சேர்த்து எம்ப்ராய்டரி போட்டாங்க. நாலு தங்கச்சிங்கங்கிறதனால நாலு பாக்கெட் வச்சிருக்கோம். மளிகைக்கடை வச்சிருக்கார்ங்கிறதால பேனாவும் பாக்கெட்ல கண்டிப்பா இருக்கும். மாயன் வேஷ்டி பிரபலமானது மாதிரி `சண்முகம்' சட்டை வேணும்னு கடைகளில் மக்கள் கேட்டு வாங்கணும். அதுதான் என் ஆசை’’ என்றவர் ஷூட்டிங் லொகேஷனை நமக்குச் சுற்றிக் காட்டிக்கொண்டே அவருடைய பர்சனல் பக்கங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ரேடியோ மிகப்பெரிய போதை. எனக்கு இன்னமும் அந்த போதை தெளியவே இல்ல. இன்னைக்குக்கூட ரேடியோவில் ஷோ முடிச்சிட்டுதான் ஷூட்டிங் வந்தேன். என்னோட ஃபர்ஸ்ட் லவ் ரேடியோதான். தொடர்ந்து எத்தனை பேர் கேட்குறாங்கன்னெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, என் ஷோவை ஒருத்தர் கேட்டாலும் அவருடைய பொழுதை நான் ஆரோக்கியமா ஆக்கணும்ங்கிறதுல ரொம்ப கவனமா இருக்கேன். நான் ஆர்ஜேவை வேலையா நினைக்கல... விரும்பிப் பண்ணுறேன்! அதேமாதிரி டெலிவிஷனில் நிறையவே கத்துக்கிட்டேன். படங்களில் நடிக்கும்போதுகூட டெலிவிஷனில் நடிச்சிருந்தது எனக்கு உதவியா இருந்துச்சு. தாய் செல்வம் சாருடைய இயக்கத்தில் ஐந்து ஆண்டுகளாக டபுள் ஆக்‌ஷனில் நடிச்சேன். அது மிகப்பெரிய அனுபவத்தையும் கற்பித்தலையும் கொடுத்துச்சு’’ என்றவரிடம், ‘`ப்ரோ, ஸ்ரீஜா பற்றி எதுவும் சொல்லலையே’’ என்றேன்.

மிர்ச்சி செந்தில்
மிர்ச்சி செந்தில்

‘‘அவங்களைப் பற்றிச் சொல்லாமலா? நீங்க கேட்கலைன்னாலும் நானே சொல்லியிருப்பேங்க! பலரும் ‘ஸ்ரீஜா ஏன் நடிக்க மாட்டேன்றாங்க’ன்னு தொடர்ந்து கேட்டுட்டே இருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சுப் பண்ணுறேன்னு சொல்லியிருக்காங்க. இப்போ வேண்டாங்கிறதுக்கு அவங்ககிட்ட சில பர்சனல் காரணங்கள் இருக்கு. அதை நானும் மதிக்கிறேன். அதுவரைக்கும் அவங்களுடன் சேர்ந்து குட்டி குட்டியா ஏதாவது பண்ணலாம்னுதான் யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். அதுலேயும் கொஞ்ச நாளாக ஆக்டிவா இல்லை. இனிமேல்தான் நிறைய செய்யணும். ஸ்ரீஜா கூட நடிக்கிறது பெரிய சேலஞ்சிங்கான விஷயம். அவங்க நல்ல நடிகை. எல்லார் மாதிரியும் ஒரு ரசிகனா அவங்களை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க நானும் காத்துட்டு இருக்கேன்’’ என்றவரிடம், அவருடைய மகன் குறித்துக் கேட்டோம்.

‘பையன் பெயர்கூட சொல்லல, இன்னமும் நீங்க அவனை எங்ககிட்ட காட்டலைன்னு ‘நிறைய பேர் கேட்டுட்டே இருக்காங்க. சீக்கிரமே காட்டுறோம். முதன்முறையா என் பையன் பெயரை இங்க சொல்றேன். எங்க குழந்தைக்கு `ஸ்ரீ வல்லப் தேவ்'னு பெயர் வச்சிருக்கோம். ஸ்ரீஜாவில் முதல் எழுத்து ஸ்ரீயையும், அவன் பிறந்த ஊர் திருவல்லா என்பதால அந்த ஊர்ப் பெயரையும் இணைத்து வச்சிருக்கோம். எங்க வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான தருணம்னா அவன் வந்ததுதான். இத்தனை நாள்கள் கேள்விதான் பட்டிருக்கோம். இப்ப அதை நாங்க அனுபவிக்கும்போது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. நாங்க ரெண்டு பேருமே அவனுடன் சேர்ந்து இப்ப என்ஜாய் பண்ணிட்டிருக்கோம்’’ என நெகிழ்ந்தவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.