பிரீமியம் ஸ்டோரி

‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ‘மொட்டை’ சரத்தாக நமக்குப் பரிச்சயமானவர், சரத். இவரும் இவருடைய காதல் மனைவி கிருத்திகாவும் தற்போது ‘மிஸ்டர் & மிஸஸ்’ சின்னத்திரையில் போட்டியாளர்கள். ஒரு பொன்மாலைப் பொழுதில் அவர்களைச் சந்தித்தோம்.

‘`நவீன நாடக இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான இராமானுஜம்தான் இவங்களோட தாத்தான்னு தெரிஞ்ச பிறகுதான் இவங்ககிட்ட பேச ஆரம்பிச்சேன்'' எனத் தன் காதல் கதையைப் பகிரத் தொடங்கினார், சரத்.

``ஒரு நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிடுறதுக்காகத்தான் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்காங்க. ஆனா, அந்த சமயம் அவங்களோட மெசேஜை நான் பார்க்கலை. ஒரு மாசம் கழிச்சு அந்த மெசேஜ் பார்த்துட்டு, யாருன்னு தெரிஞ்சுக்க அவங்க புரொஃபைல் பார்த்தேன். அப்போதான் அவங்க இராமானுஜம் ஐயாவுடைய பேத்தின்னு தெரிஞ்சுது. உடனே அவங்களுக்கு பதில் அனுப்பினேன். அப்படியே இரண்டு பேரும் பேச ஆரம்பிச்சுட்டோம்.

எங்களுக்குள்ளே இருந்த காதலை இயல்பா ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்துக்கிட்டோம். அவங்க டாக்டருக்குப் படிச்சுக்கிட்டு இருந்தாங்க. நானும் மீடியாவில் சாதிக்கணும்னு ஓடிட்டிருந்தேன். எங்க வீட்ல கிருத்திகாவை எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி அவங்க வீட்லயும் என்னைத் தெரியும். நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னு அவங்களுக்கு ரிஜிஸ்டர் பண்ணிட்டோம். அந்த நேரத்துல கிருத்திகா வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. உடனே எங்களோட காதலை வீட்ல சொல்லவேண்டியதாயிடுச்சு'' என்றதும், கிருத்திகா தொடர்ந்தார்.

``நாங்களே எங்க பேரன்ட்ஸ் மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணினோம். அவங்ககிட்ட எங்க காதலைச் சொல்லி, `இப்போதைக்கு எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம்'னு எடுத்துச் சொன்னோம். எங்களுக்குன்னு சில கடமைகள் இருந்துச்சு. அந்தக் கடமைகளை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கிறதா அவங்ககிட்ட அனுமதி கேட்டோம். அவங்களும் எங்களைப் புரிஞ்சுக்கிட்டு சம்மதம் சொல்லிட்டாங்க.

போன வருஷம் லாக்டௌனில் எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. மீடியா ஃப்ரெண்ட்ஸ் பெரிய அளவுல கலந்துக்க முடியலை. கல்யாணம் முடிஞ்ச கையோட தலை தீபாவளியும் வந்துட்டுப் போயிடுச்சு. இந்த வருஷ தீபாவளியை சரத் வீட்ல வெச்சு கொண்டாடலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ஃபேமிலியில எல்லாருக்கும் டிரெஸ் எடுத்துட்டுப் போய் சர்ப்ரைஸ் பண்ணலாம்னும் பேசியிருக்கோம். சரத் வீட்ல நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்க. அங்கே எப்போ போனாலும் ஜாலியா கலகலன்னு இருக்கும்'' என்றதும், சரத் தொடர்ந்தார்.

``காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து, இப்போ வரைக்கும் கிருத்திகா அளவுக்கு இவ்வளவு கிஃப்ட் கொடுக்க முடியுமான்னு எனக்குத் தெரியலை. என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிஃப்ட்டுனு 24 மணி நேரத்துக்கும் ஒவ்வொரு கிஃப்ட்டா கொடுத்து அசத்திட்டாங்க. கார் வாங்கணுங்கிறது நீண்ட நாள் ஆசை. காரையும் கிஃப்ட்டா கொடுத்து, என்னோட அந்த ஆசையையும் நிறைவேத்திட்டாங்க'' என்றவரை இடைமறித்தது, ``இதுவரைக்கும் அவன் எனக்கு இப்படி ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்திருக்கானான்னு கேளுங்களேன்'' என்ற கிருத்திகா, தொடர்ந்து பேசினார்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிஃப்ட்! - சரத்-கிருத்திகா

``சின்ன வயசுல இருந்தே எனக்கு மீடியாவுல நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, டாக்டருக்கு படிக்கணுங்கிறது என்னோட கனவு. அதனால, அதுல மட்டுமே என் கவனத்தைச் செலுத்தினேன். இப்போ நியூட்ரீஷியன் மேனேஜராக வேலை பார்க்கிறேன். அதே சமயம், ஃப்ரீலான்சராக கிளினிக்கல் டயட்டீஷியனாகவும் இருக்கேன். ஒருத்தங்க கர்ப்பமாக இருக்கும்போதிலிருந்து, குழந்தை பிறக்கிற வரைக்கும் அவங்களை நான் கவனிச்சிக்கறதனால, அந்தக் குழந்தை பிறக்கும்போது ஏதோ நாமளே குழந்தை பெத்த மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். அந்த ஃபீல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலதான் அதை விடாமல் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ சரத்துக்காக மட்டுமே மீடியாவுல என்ட்ரி கொடுத்திருக்கேன்.

எனக்கும் சரத்துக்கும் இடையில் நிறைய சண்டைகள் வரும். ஆனா, அந்த சண்டையில தப்பு சரத் மேல இருந்தால்கூட, நானே போய் சரத்கிட்ட பேசிடுவேன். எனக்கு சரத்தா, என்னோட ஈகோவான்னா... சரத்துதான் எப்பவும் முக்கியம்! சரத்தைவிட என் ஈகோ பெருசில்லை. நான் கொஞ்சம் போல்டான பொண்ணுதான். ஆனா, சரத் உடைஞ்சா நானும் உடைஞ்சுடுவேன். என்னால சரத் அழுகறதைப் பார்க்கவே முடியாது. அதனாலதான் `குக் வித் கோமாளி’யில் ஆனந்தக் கண்ணீர்விட்டு அவர் வாங்கின விருதை டி.வி-யில இன்னும் நான் பார்க்கலை'' என்றவரின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளிவிட்டு, சரத் தொடர்ந்தார்.

``இப்போ ‘மிஸ்டர் & மிஸஸ்’ நிகழ்ச்சியில் எங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்து விளையாடிட்டு இருக்கோம். சீரியலில் நடிக்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைச்சிருக்கு. கிருத்திகா மீடியாவில் நடிக்க வர்றதும், வராம இருக்கிறதும் அவங்களோட விருப்பம். நாங்க ரெண்டு பேரும் முதல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ். பிறகுதான் கணவன், மனைவி. எந்த விஷயம்னாலும் நான் மனசுவிட்டு கிருத்திகாகிட்ட ஷேர் பண்ணிடுவேன். இதுவரைக்கும் எதையும் அவங்ககிட்ட சொல்லாம மறைச்சதில்லை. நான் மறைச்சாலும் அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க'' என்றவரின் காதை கிருத்திகா கிள்ளினார்.

இளம் தம்பதியருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டு விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு