Published:Updated:

"எங்க பசங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனதேயில்லை!" - 'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்

''எங்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சீரியஸா எடுத்துக்கிட்டு ஜாலியா பண்ணினோம். இப்போ டைட்டில் வின் பண்ணினது ரொம்பவே சந்தோஷமா இருக்கு!" - 'மிஸ்டர்&மிஸஸ்' ஜெயபாரதி

'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்
'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்

விஜய் டிவி 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ஜோடி... சங்கர பாண்டியன் - ஜெயபாரதி. சங்கர பாண்டியன், 'தெக்கத்திப் பொண்ணு', 'சரவணன் மீனாட்சி' போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜெயபாரதி, பள்ளியில் அறிவியல் ஆசிரியர். டைட்டில் வென்ற கையுடன் அவர்களைச் சந்தித்து நாம் எடுத்த பிரத்தியேகப் பேட்டி இது!

''நாங்க மதுரையில் இருக்கோம். என் கூடப் பொறந்தவங்க ஐந்து பேர். எல்லோரும் பக்கத்து பக்கத்து வீட்டுல இருக்கோம். நான் இந்தப் புள்ளையோட ஸ்கூலுக்கு ஸ்கிரிப்ட் எழுதப் போனேன். போயிருந்த இடத்துல இந்தப் புள்ளையைப் பிடிச்சிருந்துச்சு. 'லவ்வெல்லாம் பண்ணத் தெரியாதும்மா... உன்னைப் புடிச்சிருக்கு... நாம கல்யாணம் பண்ணிக்கலாமா'ன்னு கேட்டேன். 'எதுவா இருந்தாலும் எங்க வீட்டுல கேட்டுக்கோங்க'ன்னு சொல்லிடுச்சு. வீட்டுல பேசி எல்லோரும் ஓகே சொல்லி எங்க திருமணம் நடந்துச்சு'' என சங்கர பாண்டியன் சொல்லவும், 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை'க்குள் வந்தது எப்படி என ஜெயபாரதி தொடர்ந்தார்.

"எங்க பசங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனதேயில்லை!" - 'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்

''இவங்க திடீர்னு ஒரு நாள், இந்த மாதிரி ஒரு போட்டியில் நம்மளை கலந்துக்கக் கூப்டுறாங்க... போகலாமா'ன்னு கேட்டாங்க. சட்டுன்னு கேட்கவும் தயக்கம் இருந்துச்சு. அப்புறம், சரி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு சொன்னேன். ஸ்கூலுக்கு மெடிக்கல் லீவு போட்டுட்டு இவர்கூட சென்னை வந்துட்டேன். இங்கே முதல் நாள் ஷூட்டிங் போனப்போ நான் பார்த்த முதல் ஆள் நிஷா அக்கா. அப்புறம் செந்தில் - ராஜலட்சுமி. ஒவ்வொருத்தரையும் பார்க்கப் பார்க்க பயம் அதிகமாகிடுச்சு. முதல் நாள் பர்ஃபார்ம் பண்ணும்போது பயத்தோடுதான் இருந்தேன். அப்புறம் எல்லோர்கூடவும் ஜாலியா பேச ஆரம்பிச்சிட்டேன். செட்டுல நாங்க எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி ஆகிட்டோம். அடுத்தடுத்த போட்டியில் பயமில்லாம ஜாலியா பண்ண ஆரம்பிச்சிட்டேன்'' என்றவரிடம் 'உங்களுக்கு டஃப் கொடுத்த போட்டியாளர் யார்?' எனக் கேட்க, சங்கர பாண்டியன் தொடர்ந்தார்.

''எல்லோருமே ஒவ்வொரு வகையில் திறமையானவங்க. என் கருத்தை நான் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்ங்குறதுல ரொம்ப தெளிவா இருப்பேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் யோசிக்கிறது கோபிநாத் சாரை மட்டும்தான். ஏன்னா, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து அவர் பேசியிருக்கிறார். அதனால் அவர் வாயிலிருந்து பாராட்டு வாங்குறது மிகப்பெரிய விஷயம். விவசாயிகள் படுகிற துயரம் குறித்து ஒரு பர்ஃபார்மன்ஸ் பண்ணினோம். அந்த பர்ஃபார்மன்ஸுக்காக நான் ஆசைப்பட்ட மாதிரியே கோபிநாத் சார்கிட்ட இருந்து பாராட்டும் வாங்கினேன்'' என்றவரை நிறுத்தி பாரதி தொடர்ந்தார்.

''கோபிநாத் அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். முதல்ல அவரைப் பார்த்ததும் 'அண்ணன்'னு கூப்பிட்டேன். அவரும் என்னை 'தங்கச்சி'ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டார். நாங்க டைட்டில் வின் பண்ணுவோம்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சீரியஸா எடுத்துக்கிட்டு ஜாலியா பண்ணினோம். இப்போ டைட்டில் வின் பண்ணினது ரொம்பவே சந்தோஷமா இருக்கு'' என்றவரிடம் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

"எங்க பசங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனதேயில்லை!" - 'மிஸ்டர் & மிஸஸ்' சங்கர பாண்டியன்

''எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு ஏழாவது படிக்கிறாங்க. ரெண்டாவது பொண்ணு யுகேஜி படிக்கிறாங்க. ரெண்டு பேருமே பொறுப்பான குழந்தைங்க. அவர் ஷூட் இல்லாதப்போதான் மதுரைக்கு வருவாரு. அதனால அடிக்கடி அப்பாவை மிஸ் பண்ணுவாங்க. இப்போ நானும் ஷூட்டுக்கு வந்துட்டதால் ரெண்டு பேரையும் மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எங்க பசங்களுக்கு இயற்கையான வாழ்வு வாழக் கத்துக் கொடுத்திருக்கோம்'' என்றதும் சங்கர பாண்டியன் தொடர்ந்தார்.

''என் புள்ளைங்க சிறுதானிய அரிசிகளுடைய பெயர்கள் எல்லாத்தையுமே சரியா சொல்லுவாங்க. சிறுதானிய சாப்பாடுதான் சாப்பிடுறாங்க. இதுவரைக்கும் ஒரு ஊசிகூட நான் என் பசங்களுக்குப் போட்டதில்லை. உண்மையைச் சொல்லணும்னா ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டுப் போனதில்லை. பாரதி, அவங்களுடைய ஸ்கூல் பசங்களை வைத்து பனை மரங்கள் நடுவாங்க. நாங்க ரெண்டு பேருமே அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கொடுக்கணும்னு எங்களால் முடிந்த விழிப்புஉணர்வுச் செயல்பாடுகளைப் பண்ணிட்டிருக்கோம்.

நடிப்பு, விவசாயம்னு ரெண்டையும் பார்த்துட்டிருக்கேன். தவிர, இப்போ விஜய் டிவியில் புதியதாக வரவிருக்கிற சீரியலில் நடிக்கப்போறேன். படங்களில் நடிக்கணும்ங்குறதுதான் என் ஆசை. அதுவும் சீக்கிரமே சாத்தியமாகும்னு நம்புறேன்'' - சங்கர பாண்டியன் புன்னகைக்க, அவர் கரம் பற்றிக் கொள்கிறார் ஜெயபாரதி.