Published:Updated:

"அப்ப ரசிகை இப்ப எனக்கு அத்தை!"- நெகிழும் `நாதஸ்வரம்' கீதாஞ்சலி

கீதாஞ்சலி

"துபாயில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. நான் இங்கே வந்ததுல இருந்து ஆறு மாசமா எக்ஸ்போ நடக்குது. எங்க வீட்ல இருந்து எக்ஸ்போ ரொம்ப பக்கம். அதனால தோணும் போதெல்லாம் நானும், என் கணவரும் கிளம்பி போயிடுவோம்!"

"அப்ப ரசிகை இப்ப எனக்கு அத்தை!"- நெகிழும் `நாதஸ்வரம்' கீதாஞ்சலி

"துபாயில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. நான் இங்கே வந்ததுல இருந்து ஆறு மாசமா எக்ஸ்போ நடக்குது. எங்க வீட்ல இருந்து எக்ஸ்போ ரொம்ப பக்கம். அதனால தோணும் போதெல்லாம் நானும், என் கணவரும் கிளம்பி போயிடுவோம்!"

Published:Updated:
கீதாஞ்சலி
'நாதஸ்வரம்' தொடரில் 'மகா' என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கீதாஞ்சலி. 'கல்யாண வீடு', 'வாணி ராணி', 'ராஜா ராணி' எனத் தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில் திருமணமாகி கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். எக்ஸ்போவை சுற்றிப் பார்க்கச் சென்றவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்.
கீதாஞ்சலி
கீதாஞ்சலி

"திருமணத்துக்குப் பிறகு நடிக்கிறதுக்கு என் கணவர் எந்த மறுப்பும் சொல்லல. எப்போனாலும் நடிக்கலாம் என்பதால் கொஞ்ச நாள் சீரியலுக்கு பிரேக் எடுத்திருக்கேன். என் கணவர் துபாயில் வேலை பார்க்கிறார். அதனால அவருடன் சேர்ந்து நானும் துபாய் வந்துட்டேன். இப்போதைக்கு சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கிற ஐடியா இல்ல. ரெண்டு, மூணு வருஷம் கழிச்சு ட்ரை பண்ணிக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

'நாதஸ்வரம்' சீரியலில் நான் நடிக்கும்போது என் கணவருடைய அம்மாச்சி என்னைக் காட்டி நான் சின்ன வயசில இந்தப் பொண்ணு மாதிரிதான் இருப்பேன்னு சொல்லியிருக்காங்க. எங்களுக்குத் திருமணம் ஆகும்போதெல்லாம் அவங்க உயிருடன் இல்லை. ஆனாலும், அப்பவே அவங்க அப்படிச் சொன்னது பர்சனலா என் கணவருக்கு ரொம்ப எமோஷனல் கனெக்ட் ஆகிடுச்சு. அதை அவர் என்கிட்ட சொன்ன தருணம் எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல" என்றவர் தொடர்ந்து பேசினார்.

கீதாஞ்சலி அவர் கணவருடன்
கீதாஞ்சலி அவர் கணவருடன்

"துபாயில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. நான் இங்கே வந்ததுல இருந்து ஆறு மாசமா எக்ஸ்போ நடக்குது. எங்க வீட்ல இருந்து எக்ஸ்போ ரொம்ப பக்கம். அதனால தோணும் போதெல்லாம் நானும், என் கணவரும் கிளம்பி போயிடுவோம். துபாயில் Global Village என ஒரு இடம் இருக்கு. அந்த இடத்தில் பல்வேறு நாடுகளில் கிடைக்கக்கூடிய உணவுகள் கிடைக்கும். அந்த இடம் எப்ப போனாலும் கூட்டமா ஜேஜேன்னு இருக்கும்.

ஆரம்பத்தில் நடிக்கிறதுக்கு பிரேக் எடுக்கணுமான்னு தயக்கமாதான் இருந்துச்சு. என் தங்கச்சி இப்ப மலையாள சீரியலில் கதாநாயகியா நடிச்சிட்டு இருக்கா. அவ குடும்பத்தை பார்த்துக்கிறா... அதனால, நான்தான் வீட்டை பார்த்துக்கணும் என்கிற சூழல் எனக்கு இல்ல. அதோடு, கணவரும் நடிக்கக்கூடாதுன்னு சொல்லல. ஃப்யூச்சர்ல கண்டிப்பா நடிப்போம் என்கிற நம்பிக்கை இருந்ததனால துணிந்து பிரேக் எடுத்துட்டு இங்கே வந்துட்டேன்.

கீதாஞ்சலி அவர் தங்கையுடன்
கீதாஞ்சலி அவர் தங்கையுடன்

இங்க சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கேன். சின்ன வயசில இருந்து என் தங்கச்சிக்கு நானே கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி கதை சொல்லுவேன். அவ வளர்ந்த பிறகும் என் கதையை கேட்டிருக்கா. அவ சொல்லிதான் கதை எழுதணும் என்கிற எண்ணம் எனக்கு வந்துச்சு. இப்ப அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கேன். அதுமட்டுமில்லாமல், யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என்கிற எண்ணமும் இருக்கு" என்றவரிடம் எக்ஸ்போ அனுபவம் குறித்துக் கேட்டோம்.

"இங்கேயும் வெரைட்டியான உணவுகள் டிரை பண்ண ஆப்ஷன் இருக்கு. தாய் உணவுகள் எல்லாம் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் இருவரையும் இங்கே சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தவிர, அவங்க தமிழ்ப் பாடல்கள் பாடும்போது மனசு நம்மை அறியாம பழைய நினைவுகளை எல்லாம் மீட்டுக் கொடுத்து ஊர் ஞாபகம் வந்துடுச்சு" என்றவரிடம் அவருடைய ரசிகர்கள் குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார்.

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

"'நாதஸ்வரம்' சீரியல் எனக்கு ரொம்பவே நெருக்கமான தொடர். என்னுடைய முதல் சீரியல், அதுமட்டுமில்லாம எங்க ஊரிலேயே எடுக்கப்பட்ட சீரியல். அதுல என்னுடைய 'மகா' கேரக்டர் என் பர்சனல் ஃபேவரைட். எங்க ஊரில் முத்துமாரியம்மன் கோயிலில் ஒருமுறை சாமி கும்பிட போயிருந்தேன். அங்கே என்னை பார்த்துட்டு என் ஃபேன்னு சொல்லி ஒருத்தங்க என்கிட்ட பேசினாங்க. நானும் அவங்ககிட்ட பேசிட்டு போட்டோலாம் எடுத்துட்டு வந்துட்டேன். பிறகு, எங்க வீட்டுக்கு எதிரில் அவங்களுடைய சொந்தக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க வீட்டுக்கு வந்தவங்க என்னை பார்த்ததும் ரொம்ப குஷி ஆகிட்டாங்க.

அப்படியே பேசி, பழகி அவங்க என்னை மருமகளேன்னும், நான் அவங்களை அத்தைன்னும் கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். ரசிகையா அறிமுகமானவங்க இப்ப எனக்கு அத்தையாகிட்டாங்க. என் கல்யாணத்துல இருந்து எல்லாத்துலேயும் முதல் ஆளா அவங்கதான் கலந்துகிட்டாங்க. அவ்வளவு ஏன், நான் துபாய்க்கு வரும்போது எனக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்து கொடுத்து பாசமா என்னை வழி அனுப்பி வச்சதும் அவங்கதான்!" என நெகிழ்கிறார், கீதாஞ்சலி.