Published:Updated:

"ஃபீல்டு அவுட்டானாலும் என்னை யாரும் ஒதுக்கறதில்லை... ஏன்னா?!"- `நாதஸ்வரம் பரமு' ஜெயஶ்ரீ

"சீரியலில் நடிக்கும்போதே நான் கர்ப்பமாகிட்டேன். எனக்கு எங்க வீட்ல ஏழு மாத வளைகாப்பு நடந்த சமயத்தில் சீரியலில் நான் மூணு மாசம் கர்ப்பமா இருக்குற மாதிரி காட்டினாங்க. வளைகாப்பு முடிஞ்சும் கை நிறைய வளையல் போட்டு நடிக்க முடியலை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'நாதஸ்வரம்' தொடரில் பரமு கதாபாத்திரத்தில் நடித்தவர், ஜெயஶ்ரீ. அந்தத் தொடர் முடிவடைந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகின்றன. 'நாதஸ்வரம்' தொடருக்கு பிறகு ஜெயஶ்ரீ எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.
ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

"என்னுடைய சொந்த ஊர் மதுரை. காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதுதான் 'நாதஸ்வரம்' தொடருக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விபட்டேன். எனக்கு நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. அதனால ஆடிஷனில் கலந்துகிட்டேன். ஆடிஷனில் செலக்ட் ஆன பிறகு எங்க அப்பா நடிக்க போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. திருமுருகன் சார் எங்க அப்பாகிட்ட ஃபோன்ல பேசினாங்க. அதற்கடுத்துதான் என்னை அனுப்பி வைச்சாங்க!" என்றவர் 'நாதஸ்வரம்' சீரியல் குறித்த நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"அந்த சீரியலில் நடிக்கும்போதே எனக்கு திருமணமாகிடுச்சு. எங்களுடையது லவ் மேரேஜ். நடிக்க ஆரம்பிக்கும்போதே நாங்க லவ் பண்ணிட்டு இருந்தோம். அப்போவே அவர் வேண்டாம்னு சொல்லியிருந்தா நான் நடிக்க வந்திருக்கவே மாட்டேன். என் ஆசைக்காக அவரும் சம்மதிச்சார். அதனால திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிச்சிட்டு இருந்தேன். காரைக்குடியில் ஷூட்டிங் நடந்ததால எனக்கு துணையா எங்க வீட்டிலிருந்து யாராச்சும் ஒருத்தர் வருவாங்க.

திருமுருகன் சாருக்கு அதிகமா தொந்தரவு கொடுக்குற ஆள்னா அது செட்லயே நான் மட்டும்தான். ஷூட்டிங் சமயத்தில் காலையில் சீக்கிரமே எழுந்திரிக்கணும். அதே மாதிரி நிறைய நாள் நைட் ஷூட்டெல்லாம் இருக்கும். எனக்கு அது சுத்தமா செட் ஆகலை. தூங்கமுடியலைங்குறதே மிகப்பெரிய விஷயமா இருந்துச்சு. அடிக்கடி திருமுருகன் சார்கிட்ட நான் நடிக்கலை, எனக்கு பதிலா வேற ஆளை போட்டுக்கோங்கன்னு சொல்லிட்டே இருப்பேன்.

ஜெயஶ்ரீ - முன்வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாமவர்
ஜெயஶ்ரீ - முன்வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாமவர்

சீரியலில் நடிக்கும்போதே நான் கர்ப்பமாகிட்டேன். எனக்கு எங்க வீட்ல ஏழு மாத வளைகாப்பு நடந்த சமயத்தில் சீரியலில் நான் மூணு மாசம் கர்ப்பமா இருக்குற மாதிரி காட்டினாங்க. அக்கா, தங்கச்சிங்க கூட்டமா நின்னுதான் எங்களுக்கு சீன் இருக்கும். அதனால எனக்கு குளோஸ்ல மட்டும்தான் எடுப்பாங்க. அதற்காக வளைகாப்பு முடிஞ்சும் கை நிறைய வளையல் போட்டு நடிக்க முடியலை. ஒன்பதாவது மாதம் வரையில் நடிச்சேன். ஒரு முறை ஃபேக் பெயின் வந்துடுச்சு. டைரக்டர் சார் உடனே மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனார். ஃபேக்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் மறுபடி செட்டுக்கு வந்து நடிச்சி கொடுத்துட்டு போனேன். திருமுருகன் சார் என்மேல மிகப்பெரிய நம்பிக்கை வைச்சிருந்தாரு. என்னால அதை காப்பாற்ற முடியலை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அவர் வாங்கின வீட்டை அவர் நடிச்ச சீரியல் தயாரிப்பாளருக்கே வாடகைக்கு விட்டுட்டேன்!"- தாரா ராஜசேகர்

அந்த சீரியல் முடிஞ்சதும் நடிக்கிறதை விட்டுட்டு முழுசா குடும்பத்தலைவி ஆகிட்டேன். என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். எங்களுக்கு மூணு பசங்க இருக்காங்க. பசங்களை பார்த்துக்கணுங்கிறதால எந்த வாய்ப்பையும் ஏத்துக்கலை. என் பொண்ணு அதே திருமுருகன் சாரோட 'கல்யாண வீடு' சீரியலில் நடிச்சிருந்தா. அது கூட சார் என்கிட்ட நேரடியா கேட்கலை. என்கிட்ட கேட்டா நான் தெளிவா ஒரு முடிவு சொல்ல மாட்டேன்னு அவருக்கு நல்லாவே தெரியும். அதனால, நேரடியா என் கணவர்கிட்ட பேசினார். பாப்பாவுக்கு நடிக்க பிடிச்சிருக்கான்னு கேட்டோம். அவளுக்கும் பிடிச்சிருந்ததால அந்த சீரியலில் நடிச்சா.

'நாதஸ்வரம்' டீம் எல்லோர்கூடயும் இப்போ வரைக்கும் பேசுவேன். நான் ஃபீல்டுஅவுட் ஆகிட்டேன்னு யாரும் என்னை ஒதுக்கி வைக்கலாம் மாட்டாங்க. எவ்வளவு பிஸியா இருந்தாலும் எப்போ நான் போன் பண்ணாலும் உடனே எடுத்து பேசுவாங்க. 'நாதஸ் சிஸ்டர்ஸ்'னு எங்களுக்கு ஒரு வாட்ஸப் குரூப் இருக்கு. அதுல அடிக்கடி பேசுவோம்.

ஜெயஶ்ரீ
ஜெயஶ்ரீ

நடிக்கிறதை விட்டு இத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு நிறைய பேர் பேசுவாங்க. இன்னமும் பலர் என் பெயர் 'பரமு'ன்னுதான் நினைச்சிட்டு இருக்காங்க. இதற்கெல்லாம் திருமுருகன் சாருக்குத்தான் நான் நன்றி சொல்லணும். இப்போ நான் மதுரையில் இருக்கேன். இப்போதைக்கு என் கவனம் முழுக்க என் பசங்களை நல்லா வளர்க்கிறது மட்டும்தான் என்கிறார்" ஜெயஶ்ரீ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு