Published:Updated:

`நர்ஸ் டு நடிகை' - பர்சனல் பகிரும் `நாதஸ்வரம்' ரேவதி

'நாதஸ்வரம்' ரேவதி

நாதஸ்வரத்திற்குப் பிறகு `கல்யாண வீடு' தொடரில் நடிச்சேன். ஏன்னு தெரியல எனக்கு வேற வாய்ப்பு வரல. நம்ம இன்னும் கமிட் ஆகாம இருக்கிறோமே என்கிற வருத்தம் எனக்கு இருந்திருக்கு... - ரேவதி

`நர்ஸ் டு நடிகை' - பர்சனல் பகிரும் `நாதஸ்வரம்' ரேவதி

நாதஸ்வரத்திற்குப் பிறகு `கல்யாண வீடு' தொடரில் நடிச்சேன். ஏன்னு தெரியல எனக்கு வேற வாய்ப்பு வரல. நம்ம இன்னும் கமிட் ஆகாம இருக்கிறோமே என்கிற வருத்தம் எனக்கு இருந்திருக்கு... - ரேவதி

Published:Updated:
'நாதஸ்வரம்' ரேவதி
'நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நமக்கு பழக்கப்பட்ட முகம் ரேவதி தாமோதரன். `நாதஸ்வரம்', `கல்யாண வீடு' தொடர்களில் நடித்தவர் தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தவர் தொடர்ந்து நடிப்பதற்கும் தயாராகிவிட்டார். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
'நாதஸ்வரம்' ரேவதி
'நாதஸ்வரம்' ரேவதி

எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா பின்புலம் கிடையாது. மதுரையில் வடமலையான் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்ப ஒரு விளம்பரத்துல நடிக்கிறதுக்காக கூப்பிட்டாங்க. அங்கிருந்துதான் ஷார்ட் பிலிம்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் நானே ஆக்டிங்கில் ஆர்வம் வரவும் ஆடிஷனில் கலந்துக்க ஆரம்பிச்சேன். ஆடிஷன் மூலமாகத்தான் சுந்தர பாண்டியன் பட வாய்ப்பும் கிடைச்சது. அப்படித்தான் 'நாதஸ்வரம்' சீரியல் வாய்ப்பும் அமைஞ்சது. எங்க வீட்ல நடிக்கப் போறேன்னு சொன்னதும் ரொம்பத் திட்டினாங்க. அம்மாவும், அக்காவும்தான், `உனக்கு ஆர்வம் இருக்குன்னா நீ முயற்சி பண்ணு' இப்போதைக்கு அப்பாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க. 'நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும்போதுதான், நான் நடிக்கிறேன்னே அப்பாவுக்குத் தெரிஞ்சது. அந்த சமயம் கொஞ்சம் கோபமா இருந்தாங்க. பிறகு சமாதானம் ஆகிட்டாங்க என்றவரிடம் நாதஸ்வரம் சீரியல் அனுபவம் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

நாதஸ்வரம் சீரியலில் 'மகேஸ்' என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சேன். எனக்கு முன்னாடி ஏற்கெனவே அந்தக் கேரக்டரில் 4 பேர் நடிச்சிருந்தாங்க. ஐந்தாவது ஆளாகத்தான் நான் நடிச்சேன். முதல் ஆறு மாசம் அந்த சீரியலில் நான் அழுதுட்டே இருக்கிற மாதிரியாகத்தான் சீன் இருந்துச்சு. அதுக்கு முன்னாடி சின்ன, சின்ன ஷார்ட் பிலிம்களில் தான் நடிச்சிருக்கேன். எனக்கு பெரிய அளவில் நடிப்பு பற்றியெல்லாம் தெரியாது. நேச்சுரலாகவே நான் கொஞ்சம் அமைதியான கேரக்டர் என்பதால் முதல் ஆறு மாசம் எப்படியோ அழுதுட்டே சமாளிச்சிட்டேன். அடுத்ததா அந்தக் கேரக்டர் டிராக் கொஞ்சம் மாறுச்சு. கணவரையும், நாத்தனாரையும் எதிர்த்துப் பேசுற மாதிரி இருந்துச்சு. என் முகத்தில் கோபமே வராது. அந்த டயலாக் ரொம்பக் கோபமா பேசுற மாதிரி இருக்கும். எங்க யூனிட்ல எப்பவும் ஒரு நாள் 6,7 சீன் எடுத்துடுவாங்க. அன்னைக்கு, நான் திட்டுற மாதிரியான ஒரு சீனை காலையில் இருந்து மதியம் வரைக்கும் எடுத்துடுச்சு.

'நாதஸ்வரம்' ரேவதி
'நாதஸ்வரம்' ரேவதி

அன்னைக்கு ஸ்பார்ட்ல டைரக்டர் திருமுருகன் சார் வேற இல்ல. அங்க யூனிட்ல டைரக்டர் திட்டுவாருன்னு வேற சொல்லி சத்தம் போட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு அழுகை வந்துடுச்சு. நமக்கு நடிக்க வரல.. நம்மளால ஏன் மத்தவங்களையும் கஷ்டப்படுத்தணும்னு தோணுச்சு. டைரக்டர் ஃபோன் பண்ணி என்கிட்ட பேசினார். நீ ஆசைப்பட்டு தானே நடிக்க வந்த டிரை பண்ணுன்னு சொன்னார். கூட நடிச்சவங்க எல்லாரும் சின்ன, சின்ன டிப்ஸ் கொடுத்தாங்க. கொஞ்ச, கொஞ்சமா அந்தக் கேரக்டருக்குள்ள போக ஆரம்பிச்சேன். பிறகு அந்தக் கேரக்டரே என் அடையாளமா மாறுச்சு.

அந்த சீரியலில் என் ஐந்து தங்கச்சிகூட தான் நான் ரொம்ப நெருக்கமா இருப்பேன். அவங்க எல்லாரையும் அந்தக் கேரக்டர் பெயர் சொல்லிதான் இப்பவரைக்கும் பேசுவேன். அவங்களும் என்னை மகேஸ் அக்கான்னு தான் கூப்பிடுவாங்க. அவங்க எல்லாரையும்விட செட்ல நான்தான் பார்க்கிறதுக்கு குட்டியா இருப்பேன். ஆனா, நான் அவங்களுக்கு அக்காவாக நடிச்சேன். செட்ல எல்லாரும் என்னை அவ்வளவு கேரிங் எடுத்து பார்த்துப்பாங்க. அவங்க எல்லாரும் ஆரம்பத்தில் இருந்தே அந்த சீரியலில் இருந்திருக்காங்க. நான் ஒன்றரை வருஷம் கழிச்சுதான் போனேன். எனக்குப் பல விஷயங்கள் அவங்க எல்லாருமே சொல்லிக் கொடுத்திருக்காங்க. இன்னைக்கு எல்லாரும் நல்ல இடத்துல இருக்காங்கன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

நாதஸ்வரத்திற்குப் பிறகு கல்யாண வீடு தொடரில் நடிச்சேன். ஏன்னு தெரியல எனக்கு வேற வாய்ப்பு வரல. நம்ம இன்னும் கமிட் ஆகாம இருக்கிறோமே என்கிற வருத்தம் எனக்கு இருந்திருக்கு. ஆனா, நான் எல்லா விஷயத்தையும் ஈஸியா எடுத்துப்பேன் என்பதால் அதையும் பெருசா எடுத்துக்கல என்றவரிடம் பர்சனல் குறித்துக் கேட்டோம்.

'நாதஸ்வரம்' ரேவதி
'நாதஸ்வரம்' ரேவதி

ஒரு விளம்பரப்படத்தின்போது என் கணவரைச் சந்திச்சேன். பிறகு மருத்துவமனையில் அவருடைய தங்கச்சிப் பையனை பார்க்க வந்திருந்தார். அப்ப ரெண்டாவது முறையா சந்திச்சோம். ரெண்டு பேரும் மீடியாவில் இருக்கிறதனால எதார்த்தமா ஃபோன் நம்பரை பகிர்ந்துக்கிட்டோம். அப்படியே பேச ஆரம்பிச்சு ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் மலர்ந்துடுச்சு. ரெண்டு பேர் வீட்டிலும் பேசி புரிய வச்சு சம்மதம் வாங்கி திருமணம் பண்ணிக்கிட்டோம்.

எங்க மாமியார் பத்திரிக்கை அடிச்சு எல்லாருக்கும் கொடுக்கும்போது, ``இந்தப் பொண்ணா இவளா உன் மருமவ.. அப்படி வாய் பேசுவாளே.. குடும்பத்தை பிரிச்சிடுவா"ன்னுலாம் சொல்லியிருக்காங்க. அந்த சமயம் நான் நாதஸ்வரம் சீரியலில் நடிச்சிட்டு இருந்தேன். அந்த யூனிட்ல இருந்த எல்லாரும் எங்க திருமணத்தில் கலந்துக்கிட்டு வாழ்த்திட்டுப் போனாங்க என்றவர் உடைந்து அழுத தருணம் குறித்து வலியுடன் பகிர்ந்து கொண்டார்.

எனக்கு முதல் குழந்தை சிசேரியன் மூலமாகத்தான் பிறந்தது. ரெண்டாவதும் சிசேரியன்தான் பண்ணாங்க . எனக்கு ரெண்டாவது குழந்தையும் பையன்தான் பிறக்கணும்னு ஆசைப்பட்டேன். அதேமாதிரி பையன்தான் பிறந்தான். சிசேரியன் பண்ணி 30 நாள் கழிச்சுதான் வீட்டுக்குப் போனோம். திடீர்னு ஒருநாள் வயிறு வலிக்குதுன்னு அழுதான். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். 24 மணி நேரத்துல என்ன நடந்ததுன்னே தெரியல. மறுநாள் நைட் 11 மணிக்கு எல்லாம் முடிஞ்சிட்டதா சொன்னாங்க. எதிர்பார்க்காத இழப்பு! நான் ரொம்ப சந்தோசப்பட்டுட்டேன்னு நினைக்கிறேன் அதான் அவனை இழந்துட்டேன். ஆனாலும், இன்னைக்கு வரைக்கும் அவன் இல்லைங்கிறதே எனக்கு தோணல. என்னுடன் தான் இருக்கிறான் என்றவர் சில நொடி மெளனத்திற்கு பின் பேசத் தொடங்கினார்.

நாதஸ்வரம் சீரியல் குறித்து பல விஷயங்களை நம்மிடையே ரேவதி பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!