Published:Updated:

"விவாகரத்து வாங்கினா என் குடும்பம் கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சேன்; ஆனால்...!"- `நாதஸ்வரம்' பென்ஸி

பென்ஸி

மேரேஜ் லைஃப் நல்லா இல்லைன்னா வாழ்க்கையே வேஸ்ட் ஆகிடும்!' - 'நாதஸ்வரம்' பென்ஸி

"விவாகரத்து வாங்கினா என் குடும்பம் கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சேன்; ஆனால்...!"- `நாதஸ்வரம்' பென்ஸி

மேரேஜ் லைஃப் நல்லா இல்லைன்னா வாழ்க்கையே வேஸ்ட் ஆகிடும்!' - 'நாதஸ்வரம்' பென்ஸி

Published:Updated:
பென்ஸி

`நாதஸ்வரம்' தொடரில் காமுவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர், பென்ஸி பிரிங்க்ளின். தொடர்ந்து `கல்யாண வீடு' தொடரிலும் இவர் நடித்திருந்தார். அக்காவாக, தங்கையாக, மனைவியாக ஒவ்வொரு குடும்பத்திலும் இவரைப் போன்ற ஒருவர் நிச்சயம் இருப்பார் என்ற அளவிற்கு ரசிகர்களுக்கு நெருக்கமான இந்த காமுவை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம்.

பென்ஸி
பென்ஸி

எனக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆட ரொம்பப் பிடிக்கும். பரதநாட்டியம், குச்சிப்புடி எல்லாம் கத்துக்கிட்டேன். என்னோட அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கணும்னு ஆசை. அவர் இந்தியன் பாங்க் மேனேஜராக இருந்தாலும்கூட ஆடிஷனுக்காக பல இடங்களுக்குப் போயிருக்கார். அப்படி அப்பா போகும்போது ஒருமுறை என்னையும் கூட அழைச்சிட்டுப் போனார். அங்க என்னைப் பார்த்துட்டு ஒருத்தர் குழந்தைங்க சீரியலில் நடிக்க நான் பொறுத்தமா இருப்பேன்னு சொல்லிட்டு தினமும் முகத்துக்கு தயிர்போட சொல்லி அட்வைஸூம் பண்ணினார். அப்ப நான் ஆறாம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன். அன்னைக்கு அவர் போட்ட விதை தான் என் மனசுல விருட்சமாக ஆரம்பிச்சிடுச்சு. எப்படியாவது சினிமாவில் நடிக்கணும்னு அன்னைக்கு தான் முடிவு பண்ணினேன். 

'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' போட்டியில் நானும் கலந்துகிட்டு செலக்ட் ஆனேன். எனக்கு கிளாசிக்கல் மட்டும்தான் தெரியும். வெஸ்டர்ன் கத்துக்க எங்க வீட்டுக்கு பக்கத்தில் எந்த வகுப்பும் அப்போ இல்லை. ஒரு கோரியோகிராபர் என்னை பார்த்துட்டு இவ்ளோ குண்டா இருக்கம்மா. நீ ஏன் போட்டியில் எல்லாம் கலந்துக்கணும்னு நினைக்கிறன்னு கேட்டார். அப்பவே பாடி ஷேமிங் என்கிற விஷயத்தை நான் எதிர்கொள்ள ஆரம்பிச்சிட்டேன். என்னால பண்ண முடியாதுங்கிற எண்ணத்தால பயந்துபோய் அந்தப் போட்டியில் தேர்வாகியும் நான் கலந்துக்கலை. அந்த வாய்ப்பை நாம மிஸ் பண்ணிட்டோம்.. முயற்சி பண்ணியாவது பார்த்திருக்கலாம்னு பல நாட்கள் அழுதிருக்கேன். பிறகு, வசந்த் டிவியில் ஆங்கரிங் பண்ணினேன். அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்க ஆரம்பிச்சேன்.

பென்ஸி
பென்ஸி

படிச்சு முடிச்சிட்டு ஒரு காலேஜ்ல ஹெச் ஆர் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்த்தேன். ஆனாலும், ஏதோ சந்தோஷமா இல்ல. என் கூட வேலை பார்க்கிற ஒருத்தர் தான் ஒரு சீரியலுக்காக ஓப்பன் ஆடிஷன் நடக்குதுங்கிற விஷயத்தை சொன்னார். அப்பவும் நடிக்கணும் என்கிற எண்ணத்துடன் ஆடிஷனில் கலந்துக்கல. எப்படியாவது டைட்டில் சாங்கில் டான்ஸ் ஆடிடணும் என்கிற எண்ணத்தோட தான் அங்கே போனேன். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அந்த ஆடிஷனில் கலந்துக்கிட்டாங்க. 4,5 ரவுண்ட் செலக்ட் ஆகி போனேன். காலையில் 7 மணிக்கு ஆடிஷனுக்கு போனேன்.. நைட் 7 மணிக்கு தான் திருமுருகன் சாரை மீட் பண்ணினேன். அவர் சொன்ன சீனை உள்வாங்கிட்டு நடிச்சுக் காட்டினேன். நல்லா நடிக்கிறாங்க.. இத்தனை நாளா எங்க வச்சுருந்தீங்க உங்க பொண்ணைன்னு என் அம்மாகிட்ட பாராட்டினார். அப்படித்தான் 'நாதஸ்வரம்' தொடரில் நான் செலக்ட் ஆனேன் என்றவர் தொடர்ந்து பேசினார்.

திருமுருகன் சார் செட்ல இருந்தார்னா கை, கால் எல்லாம் நடுங்கும். அந்த சீரியலில் நடிச்ச ஐந்தாண்டுகள் முழுக்க பாடம்தான். இப்ப எந்த சீரியலில் என்ன மாதிரியான கதைக்களம் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும் என்கிற உறுதியை எனக்குள் விதைச்சவர் அவர்தான்! நானும், கோபியும் (திருமுருகன்) நடந்துட்டே பேசுற மாதிரியான ஒரு சீன்.. 6 மணிக்கெல்லாம் வந்து சீன் பேப்பர் எல்லாம் படிச்சு ரெடியாகிட்டேன். அவருடன் ஷூட் ஆரம்பிக்கும்போது இப்ப நீ படிச்ச எதுவுமே சொல்லக் கூடாது.. காமுவா உன் அண்ணன் கோபிக்கிட்ட இந்த சூழலில் நீ என்ன பேசுவியோ அதை வெளிப்படையா பேசுன்னு சொன்னார். நானும் பேசினேன். ஒட்டு மொத்த டீமும் கைதட்டிப் பாராட்டினாங்க. அந்த சீரியலில் என் டிராக் தான் முதலில் எடுத்தாங்க. அதனால, செட்ல முதல் பாராட்டும் எனக்கு தான் கிடைச்சது.

பென்ஸி
பென்ஸி

திருமுருகன் சார் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற மாதிரியான மாடுலேஷனோட பேசுவார். அதைப் பிடிச்சு அவர் மாதிரியே அந்தக் கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறது கொஞ்சம் கஷ்டம். அவர் நம்ம நடிப்பை ரொம்ப ரசிச்சு பார்த்தார்னா எமோஷனல் ஆகி அழுதுடுவார். அவரை அழ வைச்சிட்டோம்னா நாம நல்லா நடிச்சிருக்கோம்னு அர்த்தம். அப்படி அவரை பல முறை அழ வைச்சிருக்கேன். 

'கல்யாண வீடு' சீரியலில் காஸ்டிங் தேர்வு செய்ற குழுவில் நானும் இருந்தேன். வேற வேற ஊர்களில் இருந்தெல்லாம் ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. அதுல பெண்கள் எல்லாரையும் நான் தான் கோ-ஆர்டினேட் பண்ணினேன். இப்பவும் சாருடைய டீமில் நான் இருக்கேன். அவர் இன்னும் பிராஜக்ட் ஆரம்பிக்கலைன்னாலும் டீம்ல இருக்கிற எங்களுக்கு தவறாம அவரால முடிஞ்ச சம்பளத் தொகையை இப்ப வரைக்கும் கொடுக்கிறார். இந்த பன்னிரெண்டு வருஷத்துல ரெண்டே ரெண்டு சீரியலில் தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் அதை நான் குறையா நினைக்கலை. 

பென்ஸி
பென்ஸி

நான் குண்டா இருக்கிறதை சிலர் குறையா பார்க்கிறாங்க. ஆனா, நான் ஹாப்பியா தான் இருக்கேன். ஒரு சிலர் இவங்க திருமுருகன் சீரியலில் மட்டும் தான் நடிப்பாங்கன்னுலாம் பேசியிருக்காங்க. உண்மையில் அப்படியெல்லாம் கிடையாது. சார் யாரையும், என் சீரியலில் மட்டும்தான் நீங்க நடிக்கணும்னு சொன்னதும் கிடையாது. நாங்க யாரும் அப்படி நினைச்சதும் கிடையாது. சிலர் கிடைக்கிற வாய்ப்புகளை ஏத்துக்கிட்டு நடிப்பாங்க. எனக்கும் சில சீரியல்களுக்கு ஆஃபர் வந்துச்சு. தங்கச்சி கேரக்டருக்காக என்னை கேட்டுட்டு போட்டோ பார்த்துட்டு அத்தை ரோலில் நடிக்கிறீங்களான்னு கேட்குறாங்க. சாரோட சீரியலில் சின்ன கேரக்டர், பெரிய கேரக்டர்னுலாம் இருக்காதுங்க.. யாரா இருந்தாலும் அவங்க ஸ்கோர் பண்ற மாதிரியான ஒரு சீனை நிச்சயம் அவர் எடுப்பார். அந்த மனசு யாருக்கு வரும்னு எனக்கு தெரியல.. அவருடைய சீரியல்கள் தவிர்த்து பேசப்படும் அளவிற்கு எனக்கு எந்தக் கதாபாத்திரமும் அமையல. நான் பெரிய அளவில் சம்பாதிக்கலைன்னாலும் என் கதாபாத்திரத்தின் பெயர் மக்கள் மனதில் நிற்கும்படி பெயர் வாங்கியிருக்கேன். அது போதும்! என்றவரிடம் அவருடைய ஃபேமிலி குறித்து பேசினோம்.

என்னுடையது அரேஞ்சுடு மேரேஜ். நாதஸ்வரம் சீரியல் முடியும் சமயம் எனக்கு திருமணம் ஆச்சு. பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்குள் நுழைஞ்சேன். லைஃப்ல எனக்கெல்லாம் விவாகரத்து ஆகும்னு கொஞ்சமும் நான் எதிர்பார்க்கலை. மேரேஜ் லைஃப் நல்லா இல்லைன்னா வாழ்க்கையே வேஸ்ட் ஆகிடும். ஆரம்பத்தில் மென்டலி ரொம்ப பிரஷர் இருந்துச்சு. நான் எல்லா பொண்ணுங்கிட்டேயும் சொல்றது ஒரே ஒரு விஷயம்தான். நீங்க என்ன படிச்சிருந்தாலும் சரி உங்களுக்குன்னு ஒரு வேலை நிச்சயம் இருக்கணும். அதுதான் நமக்கு கை கொடுக்கும். விவாகரத்து ஆனதும்கூட என்னால இயல்பா இருக்க முடியல. ரொம்ப வலியா இருந்துச்சு. எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க. நான் விவாகரத்து வாங்கினா என் குடும்பத்துல உள்ளவங்க கஷ்டப்படுவாங்கன்னு தயக்கம் இருந்தாலும் இதுக்கு மேல இந்த ரிலேஷன்ஷிப்பை தொடர முடியாதுங்கிறது என் அம்மா, அப்பாகிட்ட புரிய வச்சேன். என் குடும்பமும் என்னைப் புரிஞ்சுகிட்டாங்க. இப்போ இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே எனக்கு பயமா இருக்கு. 

பென்ஸி
பென்ஸி

ரொம்ப மென்டல் பிரஷரில் இருந்தப்ப தான் 'கல்யாண வீடு' சீரியல் வேலையை இழுத்து போட்டுட்டு செய்ய ஆரம்பிச்சேன். வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சதனால கொஞ்ச, கொஞ்சமா அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தேன். திருமுருகன் சாரில் இருந்து ஒட்டுமொத்த டீமும் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. 'நாதஸ்வரம்', 'கல்யாண வீடு' சீரியலில் நடிச்ச எல்லாரும் சீரியலில் மட்டும் இல்லைங்க நிஜத்திலும் நாங்க அக்கா, தங்கச்சியாக தான் பழகுவோம். எனக்கு சாகுற வரைக்கும் நடிக்கணும்னு ஆசை. சீக்கிரமே திருமுருகன் சாருடைய பிராஜக்ட் மூலமா உங்களை மீண்டும் சந்திப்பேன்னு நம்புறேன்!' எனப் புன்னகைக்கிறார், பென்ஸி பிரிங்க்ளின்.