சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “ஊடகங்கள் யாரையும் தவிர்ப்பதில்லை!”

விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயன்

ஜெயா டிவியில சீஃப் சவுண்ட் இன்ஜினீயரா இருந்த சமயத்துல விஜய் டிவியில் ‘தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு’ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு.

திரைப்படக் கல்லூரியில் ‘சவுண்ட் இன்ஜினீயரிங்’ முடித்துவிட்டு ஜெயா டிவியில் ஸ்க்ரீனுக்குப் பின்னால் நின்றபடி மீடியா கரியரைத் தொடங்கிய விஜயன், இப்போது நியூஸ் 7 தொலைக்காட்சியின் ‘பேசும் தலைமை’ ‘வியூகம்’ நிகழ்ச்சிகளின் நெறியாளர். முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரை, சுற்றுப்பயணங்களில் உடன் சென்ற விஜயன், பிறகு கருணாநிதியையும் பேட்டி கண்டிருக்கிறார். விஜயனிடம் பேசினேன்.

‘‘ஜெயா டிவியில சீஃப் சவுண்ட் இன்ஜினீயரா இருந்த சமயத்துல விஜய் டிவியில் ‘தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு’ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு. என்னுடைய பேச்சார்வத்தைத் தெரிஞ்ச சில நண்பர்கள் வற்புறுத்தவே, அதுல ஒரு போட்டியாளரா கலந்துகிட்டேன். கடைசியில நானே டைட்டிலும் வாங்கி 5 லட்ச ரூபாய் பரிசும் வாங்கினேன்.

இந்த ஒரு சம்பவம் என் கரியரையே மாத்திடுச்சு. அதுக்குப் பிறகு நெல்லை கண்ணன் சார், நாஞ்சில் சம்பத் சார், ரபி பெர்னார்டு ஆகியோர் அறிமுகம் கிடைக்க, தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள்ல பேசிட்டிருந்தேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சி தொடங்கினபோது, என்னைப் பத்திக் கேள்விப்பட்டு நம்பிக்கை வச்சு நெறியாளராக் கூப்பிட்டாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாத்த என்னால முடிஞ்ச உழைப்பைத் தந்துட்டு வர்றேன்.’’

விகடன் TV: “ஊடகங்கள் யாரையும் தவிர்ப்பதில்லை!”

அரசியல் விவாதங்களில் ஈடுபடும் நெறியாளர்கள்மீது அரசியல் சாயம், அதாவது பக்க சார்பு முத்திரை விழுகிறதே?

‘‘விவாதத்துக்கு எடுக்கிற தலைப்புகள் சில சமயங்களில் அப்படியொரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறது. உதாரணம் சொல்லணும்னா, ‘போலீஸ் அடித்ததில் இருவர் உயிரிழந்தார்’னு ஒரு விவகாரத்தை எடுத்தால், அந்த விவாதமே அரசுக்கெதிரானதா தெரியும். என்னைப் பொறுத்தவரைக்கும் விவாதத்துக்கு அழைக்கிற எல்லாருக்குமே பாரபட்சமில்லாம நேரம் ஒதுக்கறது, ப்ளஸ் ஒவ்வொருத்தர் சொல்றதையும் காது கொடுக்கிறது, இந்த ரெண்டு விஷயங்களையும் ஸ்ட்ரிக்டா கடைப்பிடிச்சா ஓரளவுக்கு பக்கச் சார்புங்கிற பேச்சே வரவிடாமப் பார்த்துக்கலாம்னு நினைக்கிறேன். இன்னொரு விஷயம், தமிழக மக்கள் அரசியல்ல தெளிவான ஒரு புரிதலுடன்தான் இருக்காங்க. நெறியாளர்கள் ஒரு சார்பா செயல்பட்டா இப்பெல்லாம் அவங்க ஈஸியா கண்டுபிடிச்சிடுறாங்க.’’

டிவி விவாதங்கள்ல இனி பங்கேற்கப்போவதில்லை என அ.தி.மு.க அறிவிச்சிருக்கிறதே?

‘‘ரொம்ப வருத்தம் தரும் விஷயம். பிரதான எதிர்க்கட்சி இதைப் பண்ணக் கூடாது. ஊடகங்களைத் தவிர்த்த தே.மு.தி.க கிட்டயுமே நான் முன்னாடி இதைச் சொல்லியிருக்கேன். எந்தக் கட்சியும் ஊடகங்களைத் தவிர்க்கலாம். ஆனா ஊடகங்கள் அவங்களைத் தவிர்க்காது. அங்க நடக்கிற விவாதங்கள் நடந்துட்டேதான் இருக்கும். நீங்க பேசலைன்னா உங்க ஆதரவாளர்னு யாராச்சும் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. ஊடகங்கள்கிட்ட கோபித்துக்கொண்டு விலகிப் போறீங்கன்னா மக்கள்கிட்ட இருந்து விலகிப் போறதாத்தான் அர்த்தம்.’’