Published:Updated:

அர்ச்சனாவின் அன்பு ஜெயிக்குமா, `அடிங்’ ஜெயிக்குமா? வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி! பிக்பாஸ் – 70

பிக்பாஸ் – நாள் 70

"என்னாத்த முகமூடி கலைக்கணுமாம்?” என்று கோபமாக புறணி பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது அவரின் ‘அன்புருவம்’ கலைந்து கோர முகம் வெளிப்பட்டது. ‘அடிங்’ என்று ஆத்திரமாக சொல்கிற வரைக்கும் சென்று விட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 70

Published:Updated:

அர்ச்சனாவின் அன்பு ஜெயிக்குமா, `அடிங்’ ஜெயிக்குமா? வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி! பிக்பாஸ் – 70

"என்னாத்த முகமூடி கலைக்கணுமாம்?” என்று கோபமாக புறணி பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது அவரின் ‘அன்புருவம்’ கலைந்து கோர முகம் வெளிப்பட்டது. ‘அடிங்’ என்று ஆத்திரமாக சொல்கிற வரைக்கும் சென்று விட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 70

பிக்பாஸ் – நாள் 70
நிஷா இன்று வெளியேற்றப்பட்டு விட்டார். ஒருவர் அன்புக்கு அடிமையாவதில் தவறில்லை. ஆனால் அது நிபந்தனையில்லாத அன்பாக இருக்கிறதா என்கிற தெளிவு அவருக்கு வேண்டும். ‘பாசம் கண்ணை மறைக்குது’ என்றொரு பிரயோகம் இருக்கிறது. நாம் ஒருவருக்கு இழைக்கும் அநீதிக்கு இன்னொருவரின் மீதுள்ள அன்பு காரணமாக இருந்து விடக்கூடாது. நிஷாவின் வெளியேற்றத்திற்கு பிரதான காரணம் இதுதான் என்று தோன்றுகிறது.

நகைச்சுவையிலும் நல்ல தமிழ் பேசுவதிலும் திறமையுள்ள நிஷா, பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் நிழலாகவும் ரியோவின் மெய்க்காப்பாளர் போலவும் சுருங்கிப் போனது பரிதாபம். அவருடைய பிரத்யேக ஆட்டத்தை அவர் ஆடாமல் பார்வையாளர் போல் நின்று தனக்குப் பிடித்தமானவர்களுக்கு (மட்டும்) கைத்தட்டிக் கொண்டிருந்தது ஆட்ட சுவாரஸ்யத்திற்கு முரணானது.

அர்ச்சனா மீதுள்ள பாசம் கண்ணை மறைக்க, அனிதாவிடம் ஆவேசமாக சண்டையிட்ட அந்தத் தருணத்தில் நிஷாவைப் பலரும் வெறுத்திருப்பார்கள். ஒரு வேளை ‘மலேசிய நிஷா’ வெளியே வராமல் இருந்திருந்தால் அவர் இன்னமும் பிக்பாஸ் வீட்டில் இருந்திருப்பாரோ என்னமோ? ஒருவர் தரும் ஊக்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது வேறு; தவறாகப் புரிந்து கொண்டு அழிவுப்பூர்வமாக இயங்குவது வேறு. நல்லெண்ணத்தில் கமல் தந்த ஊக்கத்தில் நிஷா ‘ஓவர்ஆக்ட்’ செய்து சொதப்பிவிட்டார் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் – நாள் 70
பிக்பாஸ் – நாள் 70

ஏறத்தாழ அர்ச்சனாவையும் நிஷாவின் நோக்கில் வைக்கலாம். அவர் ஆர்ப்பாட்டமாக வீட்டில் நுழைந்து மற்றவர்களின் முகமூடிகளை கழற்றும் நோக்கில் வில்லங்கமான கமென்ட்டுகளை சொன்னபோது, ஆட்டத்தின் போக்கையே அவரின் வெளிப்படைத்தன்மை மாற்றும் என்று தோன்றிற்று.

ஆனால் நாளடைவில் ‘தனக்கென்று கூட்டத்தை’ சம்பாதித்துக் கொண்டு அதன் தலைவியாக பாரபட்சத்துடன் செயல்படுவார் என்று நினைக்கத் தோன்றவில்லை. நிஷா அளவிற்கு அர்ச்சனா வெள்ளந்தியல்ல. அதுதான் வித்தியாசம். அம்பிற்கும் எய்பவருக்கும் உள்ள வித்தியாசம். சுச்சியும் அர்ச்சனாவைப் போலவே ஆர்ப்பாட்டமாக நுழைந்தவர்தான். ஆனால் அர்ச்சனாவிடம் உள்ள தந்திரமும் குயுக்தியும் இல்லாததால் விரைவிலேயே வெளியேறி விட்டார்.

ஒருவகையில் நிஷாவின் வெளியேற்றத்தில் ரியோவின் பங்கும் கணிசமாக இருக்கிறது. ஏனென்று யோசித்தால் புரியும். அதுவும் ‘பாசம் கண்ணை மறைத்த’ கதைதான்.

உங்களிடமுள்ள தனித்தன்மையும் நேர்மையும்தான் எந்தவொரு ஆட்டத்திலும் உங்களைக் காப்பாற்றும் என்பதே இதிலுள்ள நீதி.

ஓகே... 70ம் நாளில் நடந்தது என்ன?!

69-ம் நாளின் தொடர்ச்சி. ரமேஷ் வெளியேற்றப்பட்டதை அறிந்த நிஷா கதறி அழுது கொண்டிருந்தார். குறைந்தபட்சம் அவரைப் பார்த்து பேசி வழியனுப்பியிருந்தால் அவர் மனம் சற்று சமாதானம் ஆகியிருக்குமோ என்னமோ...

“எல்லாரையும் நல்லா சந்தோஷமா வழியனுப்பி வெச்சோம்... ஏன் இப்படி நமக்கு நடக்குது'’ என்று அனத்தினார் அர்ச்சனா. (ஆஹான்! சுச்சி வெளியேறிய நாள் அன்று அர்ச்சனாவும் நிஷாவும் ஒன்றாக முறைப்புடன் நின்று கொண்டிருந்த காட்சி எங்களின் நெஞ்சை விட்டு எந்நாளும் அகலாது).

‘'இதுக்குத்தான் சேஃப் கேம் ஆடக்கூடாது –ன்றது. ஜோடியா விளையாடினா ஜோடியா அனுப்பிடுவாங்க'’ என்று தங்கள் ‘அணியிடம்’ முனகிக் கொண்டிருந்தார் அனிதா. “அட! ஆமால்ல...” என்பது மாதிரி பார்த்தார் ஆஜித். ஆக, நிஷாவும் இன்று வெளியேறிவிடுவார் என்பதை அவர்கள் முன்பே உணர்ந்திருந்தார்கள் போல. (என்னது... ஜோடியா இருக்கிறவங்களை வெளியே அனுப்பறாங்களா?! என்று பாலாஜியின் மனம் ஒரு கணம் திகைத்திருக்கும்)

'‘நிஷா இந்த வாரமே போயிட்டாதான் மரியாதை. இல்லைன்னா அடுத்த வாரம் நான் அவங்களை நாமினேட் பண்ணிடுவேன்” என்று வெறுப்பில் சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ. (நியாயஸ்தனப்பா!).

பிக்பாஸ் – நாள் 70
பிக்பாஸ் – நாள் 70

“என்னமோ போரில் ஜெயிச்ச மாதிரி ஜாலியா இருக்குதுங்க பாரேன்'’ என்று காலை உதைத்துக் கொண்டிருந்தார் ரியோ. எதிர் டீமின் புன்னகையை அர்ச்சனா குழு வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ‘குரூப்பிஸம் இல்லை... இல்லை’ என்று சொல்லிக் கொண்டே அதற்கு தானே ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் ரியோ.

இது ஒரு ஆட்டம். தோற்றவர் வெளியேறத்தானே வேண்டும்? அதிலும் வாழைப்பழச் சோம்பேறியான ரமேஷ் வெளியேறுவதற்கு இவர்கள் கண்கலங்குவதெல்லாம் ஓவர். ஓய்வறையில் இருந்த நிஷாவை ரிலீஸ் செய்தார் பிக்பாஸ்.

'‘வேற யாராவதா இருந்தா தட்டி கேட்டிருக்க மாட்டாங்க. நீங்க துணிச்சலா கேட்டீங்க... நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன்'’ என்று அனிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆம்... அனிதாவின் இடத்தில் பாலாஜி இருந்திருந்தால் ‘ஜெயிலுக்கு செல்லாமல்’ அனிதாவை விடவும் அதிகமாக சண்டை பிடித்திருப்பார்.

அனிதாவின் இந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கதுதான். ஆனால் ஒருவேளை அனிதா, அர்ச்சனாவின் குழுவில் இருந்திருந்தால் அவரும் இன்னொரு ‘நிஷா’வாகத்தான் ஆகியிருப்பார் என்று தோன்றுகிறது. அர்ச்சனா குழுவிலிருந்து விலகி, வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பதுதான் அவரைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

“நிஷா செஞ்சது தப்புன்னு அதிகமா சொல்லிட்டு இருந்தது நான்தான். ஆனா இவங்க அதைப் பேசி பேசி வேற மாதிரி காண்பிச்சிட்டாங்க’' என்று கேபியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ரியோ. எனில் ‘Boring perfomer’ தேர்வில் நிஷாவை அவர் உடனே நாமினேட் செய்திருக்க வேண்டும். 'பிடிக்கலை வேற... சுவாரஸ்யம் வேற’ என்றெல்லாம் வார்த்தை விளையாட்டு ஆடி போங்காட்டம் செய்திருக்கக்கூடாது.

“ரமேஷூ... அவரு துணிய அவரே தோய்க்கலையாம். இதெல்லாம் ஒரு காரணமா?'’ என்று பேசிக் கொண்டிருந்தது ரியோ – கேபி அணி. (கடவுளே... இவங்களையெல்லாம் வெச்சிக்கிட்டு!)

பிக்பாஸ் – நாள் 70
பிக்பாஸ் – நாள் 70

"லவ் பெட்ல கூட்டம் குறையறது நல்லதுதான். அப்பத்தான் ஆட்டம் சூடுபிடிக்கும். இல்லைன்னா அதே மாதிரிதான் இருக்கும். அர்ச்சனா இன்னமும் வெளிப்படவேயில்லை... முகமூடி போட்டிருக்காங்க... நாமளும் இதுவரை அதைக் கவனிக்கலை" என்று சரியான பாயின்ட்டை சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. மறைந்திருந்து எய்பவர் அர்ச்சனா. மற்றவர்கள் எல்லாம் ஆயுதங்கள்தான்.

கமல் என்ட்ரி. வழக்கம் போல் அட்டகாசமான உடை. ஆனால் ஜீன்ஸ் பேன்ட் இரண்டு பக்கமும் கிழிந்திருந்தது. ஃபேஷன் என்கிற பெயரில் நிகழும் இம்மாதிரியான விஷயங்கள் எனக்கு எப்போதும் சிரிப்பையும் கோபத்தையும் தரும். ஒருவன் வறுமை காரணமாக கிழிந்த ஆடை போட்டிருப்பது வேறு. ஆனால் நாகரிகம் என்கிற பெயரில் செய்யப்படும் காமெடிகள் வேறு.

"தனித்தன்மை என்பது போற்றப்பட வேண்டிய குணாதிசயம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவசியம் சொல்லித்தரப்பட வேண்டிய விஷயம்" என்கிற முன்னுரையுடன் மேடைக்கு வந்தார் கமல். சரியான செய்தி. ஆரம்பக் கட்டத்தில் ஒருவரின் திறமையைப் பார்த்து இன்ஸ்பயர் ஆவது ஒருவகையில் சரி. ஆனால் அதையே வாழ்நாள் முழுக்க காப்பியடித்தால் அவரின் தனித்தன்மை வெளிப்படாமல் நகல் இயந்திரமாகவே அறியப்படுவார். அவரது வீழ்ச்சிக்கும் அது காரணமாகி விடும்.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், இன்று தானே முந்திக் கொண்டு ‘'உங்க டிரஸ் நல்லாயிருக்கு” என்று போட்டியாளர்களிடம் சொல்ல சபை கலகலத்தது. இன்று அனிதாவின் ஆடை எளிமையாக இருந்தாலும் வசீகரமாக இருந்தது. அவரும் கூட... (ஹிஹி)... ஆரியின் கோட், சூட், ரயில்வே டிடிஆரை நினைவுப்படுத்தினாலும் கமலைப் போலவே ஸ்டைலாக இருந்தார்.

"பிக்பாஸ் வீட்டில் இன்னிக்கு 70வது நாள்" என்று கமல் பெருமிதமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை காற்றில் வரைந்து காண்பித்தார் ரம்யா. அதைக் கிண்டலடித்தார் கமல். (கமல் – ரம்யா இரண்டு பேருக்குமான உரையாடலில் ஜாலியான சீண்டல்களும் நல்ல கெமிஸ்ட்ரியும் இருப்பதை நிறைய பேர் கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ‘என் ஸ்வப்னா புத்திசாலி’ என்பதேதான் கமலின் மைண்ட் வாய்ஸூம் என்று தோன்றுகிறது).

‘சாவுக்கு வாடான்னா பாலுக்கு வர்றான்’ என்கிற பழமொழி ஒன்று உண்டு. அது போல் சற்று தாமதமாக சபைக்குள் நுழைந்த பாலாஜியை கிண்டலடித்தார் கமல். பாலாஜி அணியையும் அர்ச்சனா அணியையும் தனித்தனியாக பிரிந்து அமரச் சொன்னார். (நெஜமான அணி இல்ல. ரோபோ டாஸ்க் அணி!).

பிக்பாஸ் – நாள் 70
பிக்பாஸ் – நாள் 70

“ஜோடியா விளையாடாதீங்க. ஜோடியா போய்டுவீங்க... மந்தமாக இருப்பதும் மந்தைத்தனமாக இருப்பதும் ஒன்றுதான்… உங்களுக்கு சுருக்குன்னு குத்தணும்னுதான் இதையெல்லாம் சொல்றேன்" என்று ஆரம்பித்தார் கமல்.

“பாலாஜி... உங்க டீம்ல சரியா விளையாடாத கறுப்பு ஆடு ஏதாவது இருக்குதா?” என்று கமல் கேட்ட போது ரியோவையும் நிஷாவையும் ‘லைட்டாக’ கை காண்பித்தார் பாலாஜி. இதையே அர்ச்சனாவிடம் விசாரித்த போது '‘எங்க டீம்ல அத்தனையும் பத்தரைமாத்து தங்கம். குறையே கிடையாது'’ என்று அடித்துச் சொல்லிய அர்ச்சனா, ‘ஷிவானியை’ மட்டும் மெலிதாக போட்டுக் கொடுத்தார்.

இந்தச் சமயத்தில் ரியோ கை தூக்க, "வாண்ட்டடா வந்து மாட்டறீங்களே தம்பி. நானே உங்களை விசாரிக்கணும்னு நெனச்சேன்…" என்கிற மாதிரியான முகபாவத்தை காண்பித்த கமல், "சொல்லுங்க" என்றார். "பட்டப் பெயர் வெச்சா அவங்க ஸ்ட்ராங் ஆயிடறாங்க" என்று விளக்கம் அளித்தார் ரியோ.

ஒரு உத்தியை பயன்படுத்திய பிறகுதானே அது வெற்றியடைகிறதா, அல்லது தோல்விடைகிறதா என்பது தெரியும்? ஆனால் இதற்கான ஆலோசனையின்போதே ரியோ ஆட்சேபித்திருக்கிறார் என்றால் அவர் எதிரணிக்கு தன்னிச்சையாக சார்பாக இருந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

"அது சரி. கேபிக்கு தனியா ஏதோ ஆலோசனை சொல்லிட்டு இருந்தீங்களே. அது என்ன மேட்டர்?" என்று கமல் ரியோவை விசாரிக்க, "கேபியை உடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால ஒரு யோசனையை சொன்னேன். எதிரணியா இருந்தா கூட அவங்க மேல அன்பு செலுத்தறதுதான் என் பாலிஸி" என்று விளக்கமளித்தார் ரியோ. (அர்ச்சனந்தாவின் பிரதம சிஷ்யன் போல).

ஆனால் அர்ச்சனா அணி தனது டாஸ்க்கை முடித்த பிறகுதான் கேபியிடம் இதை ரியோ சொல்லிக் கொண்டிருந்ததாக நமக்கு காட்டப்பட்டது. டாஸ்க்கின் இடையில் இதைச் சொல்லியிருந்தால்தான் அது நெருடல்.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

ஆனால் பொதுவாகவே ஒன்றைக் கவனித்திருக்கலாம். எதிரணியாகவே இருந்தாலும் ஒருவர் மனம் புண்படுவதாக தெரிந்தால் அவரிடம் சென்று ரியோ உடனே மன்னிப்பு கேட்டுவிடுவார். என்னவொன்று சம்பந்தப்பட்ட ஆசாமிக்கும் ரியோவிற்கும் குறைந்தபட்ச நல்ல உறவு இருக்க வேண்டும். ரியோவிடம் எழுவது உண்மையான கரிசனத்தால் எழும் மன்னிப்பா அல்லது பகைமையை உருவாக்க விரும்பாத முன்ஜாக்கிரதையா என்பது ஆய்வுக்குரியது.

"ரியோ ஒரு பாச ஊற்றா இருக்கறது ஒரு பிரச்னைதான் சார்" என்ற ஆரி, முன்பு ஆஜீத்திற்கு ரகசியத்தைச் சொல்லித் தந்த விஷயத்தை நினைவுகூர்ந்தார். "எனக்கொன்னும் அவர் சொல்லித் தரலை" என்று இதற்காக சபையிலேயே கேபி கோபித்துக் கொண்டார்.

"ஓகே... ரமேஷ் போனதுக்கு உங்க கருத்து என்ன?" என்று விசாரிக்க ஆரம்பித்தார் கமல். பெரும்பாலோனோர் ‘எதிர்பார்க்கவில்லை’ என்று கள்ள மெளனம் சாதிக்க, "நான் எதிர்பார்த்தேன் சார்... அவர் அர்ச்சனா டீமின் நிழலில் சொகுசாக வாழ்ந்து வந்தார். அவரோட தனித்தன்மை வெளியே வரலை. எனவே அவர் போனதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" என்று உண்மையை போட்டு உடைத்தார் அனிதா. ஆஜீத்தும் அதையே தயக்கத்துடன் வழிமொழிந்தார்.

“போவார்னு தெரியும் போன விதம்தான் பிரச்னை... farewell party கொண்டாட முடியாமப் போச்சு. அதான் வருத்தம்” என்று வருத்தப்பட்டார் அர்ச்சனா.

"வெளியே இருக்கும் மனநிலையும், போட்டியாளர்களின் மனநிலையும் ஒன்றாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவே யாம் இந்தக் கேள்வியை எழுப்பினோம்" என்றார் கமல். வெறும் 40 நிமிஷம் பார்க்கும் போதே ரமேஷின் சோம்பேறித்தனம் நம்மை எரிச்சலூட்டுகிறது என்றால் 24 மணி நேரமும் அவரைப் பார்க்கும் அர்ச்சனா டீமிற்கு அது நெருடலைத் தந்திருக்காதா? ‘எதிர்பார்க்கலை’ என்று ரியோ சொல்வதெல்லாம் அபத்தம்.

“சரி. எழுபது நாள் ஆயிடுச்சு. இன்னமும் இந்த வீட்டில் யாரு முகமூடியை கழட்டாம இருக்காங்கன்னு நெனக்கறீங்க?” என்கிற கேள்வியை கமல் பொதுவாக முன்வைத்தார்.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

ஒரு சராசரி நபர் என்னதான் திறமையாக நடித்தாலும் ஒரு வாரம் வரைக்கும் ‘ரொம்ப நல்லவன்டா இவன்’ என்பது போல் நடித்து தாக்குப் பிடிக்கலாம். ஆனால் அதற்கு மேல் தாங்காது. தன்னை உள்ளே ஒளித்துப் பூட்டி வைக்கும் பிரத்யேக குணாதிசயம் கொண்டவர்களால் எழுபது நாட்களுக்கு மேல் தாங்க முடியும். ஆனால் இவர்கள் ஆபத்தானவர்கள். எப்போது என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல, சமூகத்திலும் இப்படித்தான் இயங்குவார்கள்.

‘'அப்படில்லாம் யாரும் கிடையாது’' என்று பெரும்பாலோனோர் மறுக்க, ஆரி மட்டும் நிஷா, அர்ச்சனா, ரியோ ஆகியோர்களைக் குறிப்பிட்டு அவர்களிடம் ஒளிந்திருக்கும் குணாதிசயங்களைச் சொன்னது சிறப்பு. மந்தையிலிருந்து விலகி நிற்கும் ஆடாக ஆரி பல சமயங்களில் ஆச்சர்யப்படுத்துகிறார்.

ஆனால், ‘'நான் முகமூடி அணிந்திருக்கிறேன். சில விஷயங்களை மறைக்க முயல்கிறேன்'’ என்று பிக்பாஸ் நாட்களின் துவக்கத்திலேயே வெளிப்படையாக சொல்லி விட்டார் ரியோ, பிறகு தன் கோபத்தை மறைக்க முடியாமல் அவ்வப்போது வெடித்து விடுகிறார். கோபம்தான் அவர் மறைக்க விரும்பிய பலவீனம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

“முகமூடின்னா என்னது சார்” என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பாலாஜி கேட்க '‘டேய்... டேய்... உலக நடிப்புடா சாமி’' என்று சபை வெடித்து சிரித்தது. சமீப காலங்களில் ‘திருந்திய பிள்ளை’ போன்ற முகமூடியை பாலாஜி அணிந்து கொண்டிருப்பதைக் காணலாம். இதையே கமலும் நையாண்டித்தனத்துடன் குறிப்பிட்டார். ஆனால் ‘மனமாற்றம்’ என்கிற வார்த்தையை வழக்கம் போல் கமல் எடுத்துக் கொடுக்க அதை ‘டப்’பென்று பிடித்துக் கொண்டு விட்டார் பாலாஜி. (கமல் –ரம்யா கெமிஸ்ட்ரி மாதிரி கமல் –பாலாஜி கெமிஸ்ட்ரியும் கவனிக்க சுவாரஸ்யமான விஷயம்).

ஆரி போட்டுக் கொடுத்த பாதையில் வீறு கொண்டு பயணித்தார் அனிதா. ரியோ, அர்ச்சனா ஆகியோரைப் பற்றி அவர் குறிப்பிட்டதில் அர்ச்சனாவைப் பற்றிய அப்சர்வேஷன் மகா துல்லியமாக இருந்தது. இதனால்தான் இன்று முழுக்க அனிதாவின் மீது அர்ச்சனா காண்டாக இருந்தார் போல.

“எனக்கு ஈஸியா கோபம் வராது... வந்தா ரொம்ப நேரம் நீடிக்கும்'’ என்கிற ரகசியத்தை தயக்கத்துடன் போட்டு உடைத்தார் ஆஜீத். ‘Welcome to the group’ என்பது மாதிரி அவருக்குக் கை கொடுத்தார் ரியோ. (உங்களுக்குத்தான் ஈஸியா கோபம் வந்துடுமே ரியோ?!).

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70
“ஓகே... டாப் 2-ல இவங்க வரவே மாட்டாங்க... தேறாத கேஸூன்னு இரண்டு பேரை எழுதி வைங்க... நான் இப்ப வந்துடறேன்’' என்று பிள்ளைகளுக்கு ‘ஹோம் ஒர்க்’ கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றார் கமல்.

வாத்தியாரின் தலை மறைந்ததும் பிள்ளைகள் குடுமியை இழுத்துக் கொள்வது போல போட்டியாளர்கள் மறுபடியும் சண்டையை ஆரம்பித்தார்கள். ஆரிக்கும் கேபிக்கும் சூடான வாக்குவாதம். இந்த வாக்குவாதத்தில் நமக்கு வெளிப்பட்ட ரகசியம் என்னவெனில், ‘ஆட்டத்தின் இடையேயும் கூட’ ரியோ கேபிக்கு ‘டிப்ஸ்’ கொடுத்திருக்கிறார். ‘அடுத்து ஒரு பெரிய வெடிகுண்டு வரப்போவுது... இப்பவே சிரிச்சிடு’ என்பதுதான் அந்த டிப்ஸ். ‘வெடிகுண்டு’ என்று அவர் குறிப்பிட்டது ஆரியைத்தான். ஆனால் ஆரியின் பெயரை நேரடியாக சொன்னாரா என்பதில் தெளிவில்லை.

'‘நான் ரியோ கிட்டதானே என் கேள்வியை கேட்கறேன். நீ ஏன் குறுக்கே வர்றே?” என்று கேபியிடம் ஆரி கேட்பது நியாயமான கேள்வி. ஆனால் கேபி இதற்கு ஓவர் ரியாக்ட் செய்து குதித்தார். (அர்ச்சனா டீமிற்கு போனவங்களலாம் ஒரு மாதிரி ஆயிடறாங்க!). "நான் அதை கேபியை சிரி்க்க வைப்பதற்கான உத்தியாகத்தான் சொன்னேன்" என்று சடக்கென்று மாற்றிக் கொண்டார் ரியோ. இது கேபி முன்பே சொன்ன சமாளிப்புதான்.

“ஆரி ப்ரோ... நீங்களா இருந்தாலும் இந்தக் கரிசனத்தை உங்க கிட்ட காண்பிச்சிருப்பேன்'’ என்றார் ரியோ. ஒருவகையில் பார்த்தால், எதிரணியாக இருந்தாலும் கடுமையான சூழலில் மனிதாபினமான அடிப்படையில் சில சலுகைகளை காட்டுவதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. இதென்ன உலகப் போரா? எதிரி நாட்டு நபரிடம் ரகசியத்தைச் சொல்லக்கூடாது என்கிற அளவிற்கு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்றும் தோன்றாமல் இல்லை.

கமல் மேடைக்கு வந்தார். "புயலாக இருந்த பாலாஜி இப்போ அதன் மையம் மாதிரி அமைதியா இருக்காரு. பார்க்க சந்தோஷமா இருக்கு... பயபுள்ள கிட்ட சொல்லிடாதீங்க. வேதாளம் முருங்கை மரம் ஏறிடப் போவுது" என்பது போல் நம்மிடம் கண்ணடித்து விட்டு அகம் டிவி வழியாக சென்றார் கமல்.

இப்படி ஒரு போட்டியாளரைப் பற்றி தனிப்பட்ட வகையில் மேடையில் பாராட்டும் வேலையை கமல் எப்போதும் செய்ததில்லை. பாலாஜிக்கு மட்டும் இது ஸ்பெஷல் போல. (போட்றா வெடிய – இது பப்லு ஆர்மியின் மைண்ட் வாய்ஸ்).

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

"என்னாச்சு... ஹோம் ஒர்க் எழுதிட்டீங்களா?’' என்று அதட்டலுடன் கமல் விசாரிக்க அப்போதுதான் அடிஷ்னல் பேப்பரை வாங்கிக் கொண்டிருக்கும் மாணவன் மாதிரி இருந்தார் சோம். ‘'சரி. ரியோல இருந்து ஆரம்பிக்கலாமா?’' என்று கமல் கேட்டவுடன் ஆர்வமாக எழுந்த ரியோவைப் பார்த்து ‘'உக்காருங்க'’ என்று பங்கம் செய்தார் கமல். இன்னொரு முனையில் அமர்ந்திருந்த அனிதாவிடம் இருந்து துவங்கி இந்த ‘தாறு மாறு தக்காளிச் சோறு’ பட்டியல் வெளிப்பட்டது.

‘டாப் 2-ல் தேறாத கேஸ்’ - இதில் நிஷா, ஷிவானி ஆகிய இருவரின் பெயர்கள் அதிகம் அடிபட்டன.

தன்னையே நாமினேட் செய்து ‘வித்தியாசம்’ காட்டினார் பாலாஜி. தான் செய்யும் தவறுகள் சமுதாயத்தில் பிரதிபலித்து விடக்கூடாதாம். (இப்பல்லாம் பயபுள்ள நல்லவன் மாதிரி ஓவரா சீன் போடுறது தெரியுது. கேப்டன்ஸி டாஸ்க்ல தான் செஞ்ச தவறை தானே சொல்லியது கூட ஒரு ஸ்ட்ராட்டஜிதான் போல). “செல்ஃப் நாமினேஷன் கூடாது என்றால் ‘சோமை’ நாமினேட் செய்வேன்” என்றார் பாலாஜி. (அருமையான தேர்வு).

நிஷா மற்றும் கேபியை நாமினேட் செய்த ஷிவானி “குழு மனப்பான்மையை விடவும் அதை பயன்படுத்திக் கொள்கிறவர்களின் மீதுதான் அதிக தவறு’' என்பது போல் ஒரு நீதியைச் சொன்னார். (சரியான விஷயம். ஆனால் அது உங்களுக்கும் பொருந்துமே மேடம்!)

ரியோவை நாமினேட் செய்த ஆரி, “அனிதா விவகாரத்தில் ‘அப்பவே சொல்லியிருந்தா’ என்று காரணம் சொன்னார் ரியோ. அவரேதான் இதை கவனித்து வாக்களித்திருக்கணும். மத்தவங்க எடுத்து சொல்லணுமா என்ன?” என்று காரணம் காட்டியது சிறப்பு.

இருப்பதிலேயே டாப் அர்ச்சனாவின் தேர்வுதான். நிஷாவையும் தன்னையும் நாமினேட் செய்து கொண்ட அர்ச்சனா, "அன்பு இல்லாத வீட்டில் எனக்கு இடம் இல்லை சார்... எனக்கெல்லாம் அவ்ள தெரவுசு பத்தாது" என்று சொன்ன போது நடிப்பில் பாலாஜியையே மிஞ்சி விடுவார் என்று தோன்றியது. (ஒரு விளையாட்டுப் போட்டில எப்படி அன்பு வரும்... என்னய்யா இது பித்தலாட்டம்?!)

ஆக... இந்தப் பட்டியலில் வராத பெயர்கள் என்று பார்த்தால் மிஞ்சியவர்கள் ஆஜீத், ரம்யா, பாலாஜி. இதில் ஆஜீத் பெயர் வராமல் தப்பித்ததை ஆஜீத்தே ஒப்புக் கொள்ள மாட்டார். அவரும் விரைவில் வெளியேற்றப்பட வேண்டியவர். ‘Caller of the week’-ல் தொலைபேசி வழியாக வந்த ‘பிக்பாஸ் பார்வையாளரான’ ராமகிருஷ்ணராஜாவும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொன்னார்.

‘'எங்கப்பா உங்களோட பெரிய ஃபேன் சார்'’ என்றார் வந்திருந்த பார்வையாளர். கமல் மூத்ததலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களைச் சேர்ந்த நடிகர் என்கிற கசப்பான உண்மை அப்போது வெளிப்பட்டது.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

"ஓகே... இந்த ஐவரில் காப்பாற்றப்படப் போகிறவர் யார்... வெளியேற்றப்படப் போகிறவர் யார்?" என்கிற கேள்வியை கமல் முன்வைக்க போட்டியாளர்களின் முகங்களில் டென்ஷன் ஏறியது. (ரம்யாவைத் தவிர). இந்தச் சமயத்தில் ரம்யாவிற்கும் கமலுக்கும் நடந்த ‘ஜாலியான’ உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது. (என்னவே நடக்குது இங்க?!). ரம்யாவை சீண்டி விளையாடிய கமல் இறுதியில் அவர் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொல்லி, "சேஃப் கேம் விளையாடாதீங்க” என்றும் கூடவே ‘டிப்ஸ்’ சொல்ல, ‘என்னையா சொல்றீங்க?' என்று ஆச்சர்யத்துடன் பார்த்தார் ரம்யா.

இதுவரையான நாட்களில் பிக்பாஸ் விளையாட்டை மிகத் திறமையாக கையாண்டு கொண்டிருப்பவர் ரம்யாதான். நீதியின் பக்கம் நிற்க வேண்டிய சமயங்களில் நிற்கிறார். என்றாலும் பல சமயங்களில் கள்ள மெளனத்துடன் கடந்து போய் விடுகிறார். இதுவொரு பலவீனம். அவர் புன்னகையால் அனைத்தையும் மழுப்புவது அவரின் அடிப்படையான இயல்பா, திறமையான முகமூடியா என்று பார்க்க வேண்டும்.

கமல் சென்ற இடைவேளையில் நிஷாவிடம் அனிதாவைப் பற்றி "என்னாத்த முகமூடி கலைக்கணுமாம்?” என்று கோபமாக புறணி பேசிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது அவரின் ‘அன்புருவம்’ கலைந்து கோர முகம் வெளிப்பட்டது. ‘அடிங்’ என்று ஆத்திரமாக சொல்கிற வரைக்கும் சென்று விட்டார் அர்ச்சனா. (அன்பு ஜெயிக்குமா... ‘அடிங்…’ ஜெயிக்குமா?!) "ஒருத்தன் தன் முகத்தைக் காட்டலைன்னா அது அவனோட பலம். பலவீனம் கிடையாது" என்று சொல்வதின் மூலம் அர்ச்சனா தன்னையே அம்பலப்படுத்திக் கொண்டார். ஆனால் பிக்பாஸைப் பொறுத்தவரை அது திறமையான உத்திதான்.

‘வாரம் ஒரு புத்தகம்’ என்கிற பகுதியில் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ என்கிற நாவலை அறிமுகம் செய்தார் கமல். ஜி.நாகராஜன் அடிப்படையில் கணித ஆசிரியர். அதற்காக தங்கப்பதக்கம் பெற்றவர். மதுரையில் இருந்த தனியார் பள்ளியில் இவரிடம் கணக்கு கற்றுக் கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக மாணவர்கள் வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’
ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’

பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை தம்முடைய படைப்புகளில் மிக நுட்பமாகவும் சிறப்பாகவும் பதிவு செய்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் நாகராஜன். மனித மனதின் இருண்மையான பக்கங்களை அம்பலப்படுத்துவதில் இவரது எழுத்து தனித்துவமாக இருந்தது. ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என்று இவர் எழுதிய வாசகம் புகழ்பெற்றதாக இருந்தது. அரசியல் கொள்கை மாற்றங்கள், தனிப்பட்ட தீய பழக்கங்கள் போன்றவற்றால் வீழ்ந்தார்.

‘'எனக்குப் பிடித்த பகுதி இது. இருக்கிற குறைந்த நாட்களில் நாலைந்து புத்தகங்களை கூட அறிமுகம் செய்யலாமான்னு ஆசையா இருக்கு’' என்று கமல் சொன்ன போது நூல் வாசிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

கமல் பரிந்துரை செய்யும் புத்தகங்களை உடனே இணையத்தில் தேடுபவர்களை ஏராளமாக காண முடிகிறது. அது வெறும் ஆர்வமாக மிஞ்சி விடாமல் நூலையும் வாசிக்கிறவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. கூடவே ஒரு வேண்டுகோளும். இந்த நூல்களின் pdf கள்ள நகல்கள் கிடைக்கிறதா என்று உடனே அலைபாயாதீர்கள். காசு கொடுத்து வாங்கிப் படிப்பதுதான் சம்பந்தப்பட்ட எழுத்தாளனுக்கும் எழுத்திற்கும் செய்யும் குறைந்தபட்ச மரியாதை.

அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமலிடம், "சார் ஒரு டவுட்டு... Safe Game-ன்னு என்னை சொன்னீங்களா? பொதுவா சொன்னீங்களா?" என்று சிணுங்கினார் ரம்யா. ‘'பொதுவாத்தான் சொன்னேன்... ரம்யாவிற்கு குறிப்பா சொன்னேன்'’ என்று சொல்வதின் மூலம் ரம்யாவிற்கே ஜாலி ஊசி ஏற்றினார் கமல்.

அடுத்ததாக அர்ச்சனா மைக்கை கழற்றி வைத்த விவகாரம். இது ப்ரமோவில் மிகைப்படுத்தி காட்டப்பட்ட போது ‘மாட்டினாங்க அர்ச்சனா’ என்று தோன்றியது. ஆனால் நிகழ்ச்சியில் வழக்கம் போல் அது ‘புஸ்’ ஆக மாறியது. தனது வாதத்திறமையினால் கமலின் கேள்வியை எளிதாக உடைத்துக் கொண்டு வந்தார் அர்ச்சனா.

அர்ச்சனா கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது, பாலாஜியிடம் நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு கமலையும் ‘குறுகுறு’வென்ற புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்ததால் அனிதாவிடம் தாவினார் கமல். ‘'என்ன அனிதா... என்னமோ சொல்லணும்னு தோணுதா... மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க'’ என்று கமல் கிண்டலடிக்க, சொல்வதற்கு தயங்கினார் அனிதா.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

"நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லு... சொல்லித்தான் பாரேன்" என்று ‘சூனாபானா’வாக மாறி எரிச்சல் காட்டினார் அர்ச்சனா. "இல்லை... மைக்கை எப்பவும் கழட்டக்கூடாதுன்றதுதானே ரூல்?” என்று அனிதா கோடிட்டுக் காண்பிக்க “ஆமாம்... மைக்கை கழட்டி வெச்சவங்களை வெளில கூட அனுப்பிச்சிருக்கோம்’' என்று கமல் ஊசியை ஏற்றியவுடன் ‘'மன்னிச்சுக்கங்க சார்’' என்று வேண்டா வெறுப்பாக இறங்கி வந்தார் அர்ச்சனா.

‘'ஓகே. எவிக்ஷன் லிஸ்ட்டிற்கு வருவோம்... யாரைக் காப்பாத்தலாம்?’' என்று கமல் பாவனையாக யோசித்த போது போட்டியாளர்களுக்குள் மறுபடியும் டென்ஷன் ஏறியது. ‘'ஸ்டோர் ரூமிற்கு போயிட்டு திரும்பி வந்துட்டதால நீங்க ‘சேவ்’ன்னு அர்த்தம் கிடையாது. நீங்க இன்னமும் லிஸ்ட்லதான் இருக்கீங்க” என்று சோமின் சந்தோஷத்தை ஜாலியாக உடைத்தார் கமல்.

பிறகு கேபி, சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார். எஞ்சியிருப்பவர்கள் நிஷா மற்றும் ஷிவானி.

‘'இதுல யாரு இருக்கணும்னு நெனக்கறீங்க?” என்று கமல் விசாரித்த போது ரியோ ஆச்சர்யகரமாக ‘ஷிவானி’ என்றார். (குரூப்பிஸம் இல்லையாமாம்). ஆச்சர்யகரமாக ஷிவானி இருக்க வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள். பாலாஜியும் அதையேதான் ஜபித்திருப்பார் என்பதை தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

மறுபடியும் அதேதான். நிஷாவுடன் ஒப்பிடும் போது ஷிவானி பலவீனமான போட்டியாளர் என்பது நமக்கும் சரி, போட்டியாளர்களுக்கும் சரி, நன்றாகவே தெரியும்... எனில் ஏன் இந்த பாரபட்சமான பதில்? அர்ச்சனா குரூப் தங்களுக்குள்ளாக காப்பாற்றிக் கொள்வதைப் போலவே பாலாஜியும், ஷிவானியை தொடர்ந்து காப்பாற்ற முயல்வது அப்பட்டமான பாரபட்சம். இரண்டு அணிகளும் குழு மனப்பான்மையில் இயங்குகிறது என்பதற்கான உதாரணம் இது.

இறுதியில் ‘நிஷா’ வெளியேற்றப்பட்ட செய்தியை அறிவித்தார் கமல். ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தாயம்மா... நிஷா’ என்கிற பாடலை பேக்ரவுண்டில் போட்டிருக்கலாம். நிஷா என்கிற திறமையான போட்டியாளர் ‘அன்பு’ என்னும் சறுக்கலில் வீழ்ந்த கதை இது.

ஷிவானியை ஓரங்கட்டிய ரியோ, "நான் யாருக்கும் ஃபேவரிட்டிஸம் பண்ணலைம்மா... கரிசனம்தான் காட்டினேன்'’ என்று கெஞ்சுவது போல் விளக்கம் அளிக்க ‘சரி சரி’ என்று அதை ஏற்றுக் கொண்டார் ஷிவானி.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

நிஷாவின் வெளியேற்றம் நிகழும்போது அர்ச்சனாவின் டிராமா தாங்க முடியாமல் இருக்குமே என்று நான் முன்பே அஞ்சிக் கொண்டிருந்தேன். அது உண்மையாயிற்று. ‘'ஒரு வாக் போகலாமா... ப்ளீஸ் நிஷா'’ என்று மிகையாக கெஞ்சலுடன் அழுத அர்ச்சனா... '‘போகாதே... போகாதே... நீயிருந்தால் நான் இருப்பேன்'’ என்று பாடாத குறையாக உருக ஆரம்பித்த போது நமக்குள் பரிதாபத்திற்குப் பதிலாக எரிச்சல்தான் வந்தது. 'அம்பது சப்பாத்தியை நானே தனியாக சுட வேண்டியிருக்குமே... என்ன செய்வேன் நிஷா?' என்பதுதான் அர்ச்சனாவின் உண்மையான மைண்ட் வாய்ஸாக இருந்திருக்குமோ?!

அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படுவதுதான் உண்மையான அன்பு. செலக்ட்டிவ்வாக சிலருக்கு மட்டும் தருவேன் என்றால் அதற்குப் பெயர் அன்பு அல்ல. பாரபட்சம்.

“போட்டியாளர்கள் யாருக்கும் உங்க மேல வெறுப்பு இல்ல. நீங்க சில இடத்துல சரியா விளையாடலை. அவ்வளவுதான் காரணம்'’ என்று நிஷாவிடம் பாலாஜி சொல்லியது சரியான ஆறுதல். அதுதான் உண்மையும் கூட. பார்வையாளர்கள் கூட நிஷாவை மனதார வெறுக்க மாட்டார்கள். அவரின் சறுக்கல்கள் மீதுதான் அவர்களுக்கு விமர்சனம் இருக்கும் என்று நம்புகிறேன்.

‘'பிக்பாஸ்... ஒரு ஐ லவ் யூ சொல்லக்கூடாதா?'' என்று நிஷா சிணுங்க, ‘ஆல் தி பெஸ்ட் நிஷா’ என்று வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ். (அதுவும் ஒருவகையான ‘ஐ லவ் யூ’தான்).

'‘குத்தி குத்தியே வெளியே அனுப்பிச்சிட்டாங்க... எதுக்கு போறோம்னு தெரியாமயே வெளியே போகுது'’ என்று நிஷா குறித்து அனத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. நிஷாவை காமெடி பீஸாக நிறுவுவதில் ரியோ பிரதான இடத்தில் இருந்தார். இதுவும் அப்படியான முத்திரை குத்தல்தான்.

‘'வாங்க நிஷா” என்று மேடையில் நிஷாவை வரவேற்ற கமல் “உங்க கிட்ட நிறைய எதிர்பார்த்தேன். அதனாலதான் கோடிட்டு காட்டிக்கிட்டே இருந்தேன். ஆனா பாசவலைல மாட்டிக்கிட்டீங்க... உங்க திறமை மினுக்கலாதான் அங்கங்க தெரிஞ்சது. முழுமையா தெரியல. அதான் என் வருத்தம். உங்க கிட்ட நிறைய எதிர்பார்த்தோம்" என்பது போல் கமல் சொன்னது பார்வையாளர்கள் நினைப்பதின் அச்சு அசலான பிரதிபலிப்பு.

பிக்பாஸ் - நாள் 70
பிக்பாஸ் - நாள் 70

‘'யார் மனசையும் புண்படுத்தக்கூடாதுன்னு நெனச்சேன் சார்’' என்றார் நிஷா. 'சும்மா இருந்த என்னை உசுப்பேத்தி ‘மலேசிய நிஷாவை கொண்டு வான்னு சொல்லி உடம்பை ரணகளமா ஆக்கிட்டீங்களே’ என்று நிஷா மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.

‘'விளையாட்டை விளையாட்டா பார்த்திருக்கணும் சார்'' என்று சுயபரிசீலனையோடு சொன்னார் நிஷா. அதென்னமோ தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சி மாதிரி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகுதான் போட்டியாளர்கள் திருந்தியது போல் பேசுகிறார்கள்.

நிஷா குறித்த பயண வீடியோ காட்டப்பட்டது. அதில் தான் காமெடி செய்த விஷயங்களைப் பார்த்து தானே சிரித்தார் நிஷா. மிகுந்த நகைச்சுவையுள்ளவர்களுக்குத்தான் இப்படி நேரும். இதைப் போலவே உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அழுதார். கமலும் சற்று கலங்கியது போல் தெரிந்தது.

அகம்டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்து வாழ்த்து சொல்லும் சடங்கு நடைபெற்றது. ‘'நிஷாக்கா... உங்களுக்காக ஒரு பன்ச் லைன். பல்லு விழுந்தா பொக்கை... நிஷாக்கா பேசியதெல்லாம் மொக்கை" என்று அந்த சமயத்திலும் பாலாஜி கிண்டலை விடாமல் இருந்தது சுவாரஸ்யம். "போடாங்..." என்று ஜாலியாக கோபப்பட்டார் நிஷா.

"டாப் டென் போட்டியாளர்கள் யாரென்பது தெரிந்து விட்டது. இனி ஆட்டம் சூடு பிடிக்கும்" என்று விடைபெற்றுச் சென்றார் கமல். (சூடு பிடிக்குமா... சரி நம்புறோம். நம்பித்தானே ஆகணும்?!).