Published:Updated:

"ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை இது மட்டும்தான்!"- தொகுப்பாளினி நிஷா

ஆனந்த கண்ணன், நிஷா
ஆனந்த கண்ணன், நிஷா

"பதினைந்து நாளுக்கு முன்னாடிதான் அவர் உடல்நிலை பற்றி எங்களுக்குத் தெரிஞ்சது. நான், முரளி, பிரஜின்னு எங்க டீம் எல்லோரும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு கண்ணனுக்குத் தொடர்ந்து நம்பிக்கை கொடுத்துட்டு இருந்தோம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சன் டிவியில் நட்சத்திர தொகுப்பாளராக திகழ்ந்த ஆனந்த கண்ணனுடைய மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சன் மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனந்த கண்ணனுடன் பணியாற்றிய நிஷா அவர் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கணவரும் தொகுப்பாளருமான முரளியுடன் நிஷா
கணவரும் தொகுப்பாளருமான முரளியுடன் நிஷா

"எனக்கு சன் மியூசிக்கில்தான் கண்ணன் அறிமுகமானார். நாங்க எல்லோரும் சன் மியூசிக் ஃபர்ஸ்ட் பேட்ச். எங்க பேட்ச் எல்லோரும் அப்போ எப்படி நண்பர்களாக இருந்தோமோ இப்போ வரைக்கும் அப்படித்தான். நாங்க அடிக்கடி சந்திச்சு பேசிக்கலைன்னாலும் எங்களுக்குள்ளே இருந்த பாண்டிங் அப்படியேதான் இருக்கு. கண்ணன் எப்போ சென்னை வந்தாலும் மறக்காம ஃபோன் பண்ணி பேசுவார். அப்படி இரண்டு, மூணு தடவை நேர்ல மீட் பண்ணியிருக்கோம்.

கண்ணன் எப்பவுமே ரொம்ப துறுதுறுன்னு இருப்பார். அவரை எப்பவும் கவலையா நாங்க பார்த்ததே இல்லை. அவருக்குள்ளே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை கொஞ்சம் கூட வெளியே காட்டிக்க மாட்டார். கண்ணன்னு சொன்னாலே அவருடைய சிரிச்ச முகம்தான் எங்க எல்லோருக்கும் ஞாபகம் வரும். அவர் ரொம்பவே பாசிட்டிவ் பர்சன். எங்களையும் பாசிட்டிவாவே இருக்க சொல்லுவார். கண்ணன் எங்ககூட மட்டும் க்ளோஸா இருக்கமாட்டார். எங்களை விட அதிகமா எங்க குடும்பத்துல உள்ளவங்க கூட ஜெல் ஆகிடுவார்.

குடும்பத்தினருடன் ஆனந்த கண்ணன்
குடும்பத்தினருடன் ஆனந்த கண்ணன்

கண்ணனுக்கு ஏற்ற மனைவிதான் நாகா. கண்ணனை ரொம்பவும் புரிஞ்சுகிட்டவங்க. கண்ணனுடைய பொண்ணு அவா. அவளை ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் என்ன கண்ணா அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைச்சிருக்கன்னு சொன்னேன். அவா அச்சு அசல் கண்ணன் மாதிரியே இருப்பா. குணத்துலேயும் கிட்டத்தட்ட கண்ணன் மாதிரிதான். கண்ணனுக்கு தமிழ்னா உயிர். அவருக்கு நாட்டுப்புற கலையில் ஏதாவது சாதிக்கணுங்குறதுதான் கனவு. அதுக்காக நிறைய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் இறந்து போறதுக்கு பதினைந்து நாளுக்கு முன்னாடிதான் அவர் உடல்நிலை பற்றி எங்களுக்குத் தெரிஞ்சது. நான், முரளி, பிரஜின்னு எங்க டீம் எல்லோரும் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு கண்ணனுக்கு தொடர்ந்து நம்பிக்கை கொடுத்துட்டு இருந்தோம். ஆனா, எங்களுடைய எந்த மெசேஜூக்கும் கண்ணன்கிட்ட இருந்து பதில் வரலை. அவர் அதிலிருந்து மீண்டு குணமாகி எங்க எல்லோருக்கும் ஃபோன் பண்ணி அவருக்கே உரித்தான புன்னகையோட பேசுவார்னு நம்பினேன். ஆனா, அவர் இறந்த செய்தி வரும்னு சத்தியமா எதிர்பார்க்கலை.

ஆனந்த கண்ணன்
ஆனந்த கண்ணன்

மூணு மாசத்துக்கு முன்னாடி புற்றுநோயால் என் அம்மா இறந்துட்டாங்க. அவங்களுடைய இழப்பில் இருந்தே நான் இன்னும் மீண்டு வரலை. இவரும் அதே மாதிரி புற்றுநோயால் இறந்துட்டார் என்பதை என்னால ஏத்துக்கவே முடியலை. அன்னைக்கு நைட் முழுக்க நான் தூங்கவே இல்லை. அழுதுட்டே இருந்தேன். இது வதந்தின்னு ஏதாவது நியூஸ் வரும்னு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன். கண்ணன் உயிரோடதான் இருக்கார்னு நம்பிட்டு இருந்தேன். நேற்று கண்ணனுக்காக நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் சிரித்த அவருடைய புகைப்படத்தை பார்த்துதான் நாங்க எல்லோரும் உடைஞ்சு அழுதோம்.

‘திடீர் புற்றுநோய், மூன்றே மாதங்கள், கலைந்த கனவுகள்!’ - ஆனந்த கண்ணனுக்கு என்ன நடந்தது?

கண்ணன் இறந்து போறதுக்கு முன்னாடி அவருடைய மனைவிகிட்ட என்னுடைய சாவு கல்யாண சாவு மாதிரி இருக்கணும். வீட்டுக்கு வர்ற எல்லோரையும் சிரிச்ச முகத்தோட வரவேற்கணும். மேள, தாளத்தோட என்னை தூக்கிட்டு போகணும்னுலாம் சொல்லியிருக்கார். அவருடைய ஆசைக்காக அதையும் அவங்க மனைவி செஞ்சிருக்காங்க. நாகாவுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியலை. பழகின எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்குன்னா கூடவே வாழ்ந்தவங்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.

ஆனந்த கண்ணன் மனைவி நாகாவுடன்
ஆனந்த கண்ணன் மனைவி நாகாவுடன்

கண்ணனுக்கு நாட்டுப்புற கலைகள் மீது காதல் அதிகம். அவருக்காக நாங்க எல்லோரும் சேர்ந்து இந்த கலைகள் தொடர்பாக ஏதாவது ஒரு விஷயம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கோம். அது மூலமா மட்டும்தான் கண்ணனை எங்ககூட வாழ வைக்க முடியும்" எனக் கலங்கியபடியே பேசினார் நிஷா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு