“புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிதான், எனக்குச் சொந்த ஊர். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். அதன்பிறகு 13 வருடங்கள் பட்டிமன்றப் பேச்சாளராக அறந்தாங்கி மட்டுமல்லாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வேதாரண்யம், பேராவூரணி, பட்டுக்கோட்டை எனச் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், ஆடி மாத விழாக்கள் எனப் பலவற்றில் பேசிவந்தேன். 13 வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பலருக்கும் பிரபலமாகி இருக்கிறது. என் கணவர் ரியாஸ் அலி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவரை அம்மா பார்த்துக்கொள்கிறார்.

நான் இவ்வளவு பேசுகிறேன் என்றால், என் கணவர் அதற்கு நேர் எதிர். அவரைப் பேச வைப்பதுதான் எனக்கான செம டாஸ்க். அதைத்தான் எல்லோரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் & மிஸஸ்' நிகழ்ச்சியில் பார்த்திருப்பீங்களே. அவர் அதிகம் பேச மாட்டார். ஆனால், பெண்களை மதிப்பவர். உண்மையில் அவர் ரொம்ப நல்லவர். பிள்ளையை வெளியே கட்டிக்கொடுத்தால் சரியாக இருக்காதுனு அத்தை மகனான அவருக்குக் கொடுத்தாங்க. அப்போது அப்பா, மாப்ள, நான் நிஷாவை பார்க்க நினைக்கும்போது உடனே அழைத்துவந்து காட்டணும்னு சொன்னாங்க. ஆனால் காலம், அவரையே மாதக்கணக்கில் பார்க்க முடியாத அளவுக்கு என்னை பிஸியாக்கிவிட்டது. நான் ஊரில் இல்லாத சமயங்களில் குடும்பத்தை என் மாமியார் கவனிச்சுக்கிறாங்க. நான் ரொம்ப பாக்கியசாலி.
கஜா புயல் நிவாரணம் வழங்கிய அனுபவங்களைச் சொல்லுங்களேன்...
“பொதுவாகப் பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் உள்ளிட்ட கலைஞர்களை வாழ வைக்கும் ஊர் என்றால் வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள்தான். ஆடிமாதம் வந்துவிட்டால் திருவிழா களைகட்டும். கடந்த 10 வருடமாக இந்தப் பகுதியில் நடந்த பட்டிமன்றங்களில் பேசி, அதில் கிடைக்கும் பணத்தில்தான் எங்கள் குடும்பம் வாழ்ந்தது. அந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் எல்லாம் அத்துப்படி. எத்தனையோ நாள்கள், இரவு நிகழ்ச்சி முடித்துவிட்டு, சொந்த ஊருக்குப் போக பேருந்து வசதியில்லாமல், பஸ்டாண்டில் இரவு பகலாகக் காத்துக்கிடந்து ஊருக்குப்போன அனுபவங்களும் உண்டு. அப்படி சுற்றித் திரிந்த ஊர்கள் எல்லாம் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அவர்களுக்காகக் கையேந்தி நின்றேன். அதைப் பலர் விமர்சனம் செய்தார்கள். அந்த மக்களுக்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது பெரும் பாக்கியம்.
என் கணவர் குறித்து நிறைய கிண்டல் செய்வேன். அவரைக் கிண்டல் செய்தால் அதிகபட்சம் என் மாமியார் கோபப்படுவார்கள். அதனால் அவரையும் விட்டுவைப்பதில்லை. யார் சொத்தின் மீதும் கை வைக்காமல் என்னுடைய சொந்த பிராப்பர்டி மேல்தான் கை வைக்கிறேன்.அறந்தாங்கி நிஷா
பட்டிமன்றம் என்பது எனக்குத் தாய் வீடு போல. 13 வருடங்கள் பட்டிமன்றம்தான் எங்கள் குடும்பத்துக்குச் சோறுபோட்டது. நாங்கள் குடியிருக்கும் வீடு பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. என்னதான் விஜய் டிவி தொலைக்காட்சி, திரைப்படம் என நான் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாலும்கூட பட்டிமன்றங்களில் பேசுவதை ஆத்மார்த்தமாக நேசிக்கிறேன்.
பட்டிமன்றத்தின் மூலமாக மக்களை மிக சுலபமாக ஈர்க்க முடிந்தது. கிராமத் திருவிழாக்களில் பட்டிமன்றப் பேச்சாளராக மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களிடமிருந்து பேசி அதையும் மேடையில் பேசும்போது கிடைக்கும் வரவேற்புகள் அதிகம். அப்படியான பட்டிமன்றங்களில் பேசுவதை எப்போதும் விரும்புகிறேன். நான் நடித்த நகைச்சுவைகளைப் பார்த்து, இவையெல்லாம் ஒரு காமெடியா எனப் பலநேரங்களில் சிரித்து இருக்கிறேன். ஆனால், மைக் இல்லாமல், விடுதலைப் போராட்டங்கள், மற்றும் புராணங்களை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தும், நாடகக் கலைஞர்கள் குறித்த ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அந்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சாம்பியன் போட்டியில், நாடக கலைஞர்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் கூத்து எனும் நிகழ்ச்சியை நடத்தினோம். அது எனக்கு மிகவும் பிடித்த காமெடி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை நான் மிகவும் ரசித்துள்ளேன்.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்னாடி, பின்னாடி என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். வடிவேல் சார் சொல்வதுபோல, கறுத்த குட்டியாக இருந்த நான் செவத்தக் குட்டியாகிவிட்டேன். என் வாழ்க்கையில் மோசமான எக்ஸ்பீரியன்ஸ் எதுவும் இல்லை. நிகழ்ச்சிகளுக்கு போகும்போது, பலர் நம்மை கேவலமாக விமர்சிக்கிறார்கள். எவ்வளவு உச்சிக்குப் போனாலும் பழையதை மறக்கக் கூடாது என்று. பல இடங்களில் நானே போட்டோவுக்கு நிற்பேன். திருவிழா நேரங்களில் போதையில் சிலர் செய்யும் அட்ராசிட்டி அப்பப்பா...
நான் பொதுவாக நிகழ்ச்சிகளில் மற்றவர்களைக் கிண்டல் செய்வதில்லை. அடுத்தவர் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆனால், என் கணவர் குறித்து நிறைய கிண்டல் செய்வேன். அவரை கிண்டல் செய்தால் அதிகபட்சம் என் மாமியார் கோபப்படுவார்கள். அதனால் அவரையும் விட்டுவைப்பதில்லை. யார் சொத்தின் மீதும் கை வைக்காமல் என்னுடைய சொந்த பிராப்பர்டி மேல்தான் கை வைக்கிறேன். அதனால கவலையில்லைங்க. நகைச்சுவை என்பது ஒரு குடும்பத்தைப் பற்றி பேசும்போது மக்கள் ரசிப்பார்கள். ஆனால், என் கணவரை அடிப்பேன் என மேடையில் பேசினால் அவரை அடிப்பேன் என்பதில் உண்மை இல்லைங்க .
சென்னையில் நடந்த நீட் தேர்வு குறித்த பட்டிமன்றத்தில் நான் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதால் கலந்துகொண்டேன். அதன் பிறகு, பலர் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாமே என அட்வைஸ் செய்ததால் இனி அரசியல் சார்ந்த பட்டிமன்றங்களில் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கியபோது நிறைய விமர்சனங்கள் வந்தது. அப்போதும், கடந்த சிலவாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திலும் நான் உடைந்துபோனேன். ஆனால் கலங்கியதில்லை. நான் உடையும் சமயங்களில் எனக்கு பெரும் ஆறுதலாக இருப்பது என் அம்மாதான்.
உண்மையில் அந்தப் பட்டிமன்றத்தில் தமிழிசை உள்ளிட்டோர் குறித்த மீம்ஸ் குறித்து பேச வந்தேன். உண்மையில் மேடையில் வாய் தவறி அப்படி நடந்துவிட்டது. அதற்காக கடந்த 10 நாள்களாக மிகவும் வருத்தப்பட்டு வருகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டேன். இனி மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களில் நான் கவனம் செலுத்த மாட்டேன் என இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆங்கிலம் தெரியுமா..?
“பலநேரங்களில் விமான நிலையங்களில் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எஸ் எஸ்.. நோ நோ என குரு சிஸ்யன் ரஜினி பாணியில் பதிலளித்ததால் ஏற்பட்ட வெளிநாட்டு அனுபவங்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமானது. மணிக்கணக்கில் காக்க வைத்திருக்கிறார்கள்.
உண்மையில் வெளிநாடு போன அனுபவம் இது என்றால், எனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா எனப் பிரமித்துப் போனது மலேசியா, சிங்கப்பூர், கனடா நாடுகளில்தான். சிங்கப்பூர் மற்றும் கனடாவில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகவும் மரியாதை கொடுக்கிறார்கள்.
சமைக்கத் தெரியுமா?
அப்பா கறிக் கடை வைத்திருந்தார். அதனால் எங்கள் வீட்டில் எப்போதும் கறிச் சோறுதான். அம்மா கறிக் குழம்பு நல்லா செய்வாங்க. அதைப் பார்த்து நானும் கறிக்குழம்பு நல்லா சமைப்பேன் நம்புங்க. ஆனால் பல மாதமாக சமையல் கட்டுபக்கம் போக நேரமில்லை. தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் இருப்பதால் குடும்பம், கணவர் பிள்ளைகளோடு செலவிடவே நேரமில்லாமல் சூழல்.
கிராமத்திலிருந்து சென்னைப் பட்டணத்துக்கு போன எனக்கு சென்னையே ஒரு வெளிநாடு சென்ற அனுபவம்தான். உண்மையில் சென்னை பல கலைஞர்களை வாழவைக்கும் ஊர். அவ்வளவு கலைஞர்களுக்கு வாழ்க்கை தந்த ஒரு ஊர். ஆனால் சென்னையில் தற்போது தண்ணீர் பிரச்னை பெரும் வருத்தத்தைத் தருகிறது. நிகழ்ச்சி முடிச்சுட்டு, அவசரத்துக்கு பாத்ரூம்போகக் கூட தண்ணியில்லாமல் தவித்த அனுபவங்களின் வலிகளைச் சொல்ல முடியாது..
தொலைக்காட்சி என்பது ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்த என்னைப் பிரபலமாக்கியது என்றால், அது தொலைக்காட்சிதான். பேச்சுதான் எனது மூலதனம். எனது திறமையை சரியாகக் கண்டறிந்து மக்களிடம் கொண்டு சேர்த்தது தொலைக்காட்சிதான். அதற்காக விஜய் டிவிக்கு எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு இலவசமாகத் தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறேன். நான் செல்லும் பள்ளிகளில் நிறைய பேச்சுப்போட்டிகள் நடத்திட கோரிக்கை வைக்கிறேன். அப்படி ஒருவேளை நான் படித்த பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடத்தியிருந்தால், நான் இன்னும் முன்னதாகவே பேச ஆரம்பித்திருப்பேன். எனக்குத்தான் வாய்ப்பு கிடைக்கல. மற்றவர்களுக்குக் கிடைக்கட்டுமே.
அரசியல் ஆசை…
பொதுச் சேவை நிறையச் செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு. அதனைத் தொடந்து செய்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளி அளவும் இல்லை. அது ரொம்பத் தூரம்.
ரியாலிட்டி ஷோக்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளதாகக் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை. நான் பல மேடைகளில் என்னைச் சுற்றி ஏராளமான ஆண்களுக்கு மத்தியில் நடித்துள்ளேன். ஆனால் என்னோடு பயணித்த பலரும், எனது கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்களே தவிர. எவ்விதமான தொந்தரவும் தந்ததில்லை. மற்ற இடங்களில் எப்படியெனத் தெரியவில்லை.
ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய யாருடன் நடிக்க ஆசை..
அவங்க கூட நடிக்க எனக்குத் துளியும் ஆசை இல்லை. ஆனால் வடிவேல் சாருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் நீண்ட கால ஆசை. நல்ல காமெடி ரோல்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அக்கா கதாபாத்திரங்களில் நடிப்பேன். அக்காக்கள் தம்பிகளோடு பாசமாக இருப்பார்கள். அதனாலோ என்னவோ நான் போகிற இடங்களில் எல்லாம் எனக்கு நிறையத் தம்பிகள் இருக்கிறார்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா குறித்து…
ஜெயலலிதா பயோபிக்கில், நடிக்க வாய்ப்பு கிடைத்தால், சின்ன கதாப்பாத்திரம் கிடைத்தாலும் நடிப்பேன். ஒரு சின்ன விமர்சனங்களைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அம்மா எவ்வளவு தாங்கியிருப்பார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கிறது அதனால்தான் அவர் அம்மா போல. அதேபோல் கலைஞர் ஐயாவையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வள்ளுவருக்குச் சிலை வைத்தடு உள்ளிட்ட அவரது திட்டங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது. அ.தி.மு.க-தி.மு.க யார் வேணாலும் தமிழகத்தை ஆட்சி செய்யுங்கள். ஆனால் பொதுமக்களின் நலன் கருதி மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கொண்டு வாங்க போதும்..”எனக் கும்பிட்டார்.