சின்னத்திரைக் காதல் ஜோடி அன்வர் – சமீராவை நினைவிருக்கிறதா? `ரியல் காதலர்கள் சீரியலிலும் காதலர்களாக வருகிறார்கள்’ என்றபடி `பகல் நிலவு’ தொடரில் அறிமுகமானார்களே, அவர்களேதான். நேற்று (11.11.19) மாலை பெளர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து இல்லற வாழ்வில் நுழைந்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் சமீராவின் வீட்டில் இருவருடைய பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக நடந்தது திருமணம்.

ரியல் காதலர்கள் சீரியலிலும் காதலிக்க `பகல்- நிலவு' செம ஹிட். ஆனால், யூனிட்டில் இருந்தவர்களுக்கும் அன்வர்- சமீராவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, தொடரிலிருந்து திடீரென வெளியேறியது இந்த ஜோடி.
பிறகு, சமீரா ஜீ தமிழ் சேனலில் `றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரைத் தயாரித்து அதில் ஹீரோயினாகவும் நடிக்கத் தொடங்கினார். `பொன்மகள் வந்தாள்’ தொடர் மூலம் அன்வர் மறுபடியும் தயாரிப்புப் பக்கம் வந்தார்.
`றெக்க கட்டிப் பறக்குது மனசு’ சில மாதங்களுக்கு முன் முடிய, அப்போதே இவர்களின் திருமணப் பேச்சு அடிபட்ட நிலையில்தான், தற்போது நிஜ வாழ்வில் தம்பதியாயிருக்கிறார்கள்.
புது ஜோடி அன்வர்- சமீராவிடம் பேசினேன்.
முதலில் பேசிய அன்வர்,``காதலர்களாகவே இருக்கிற லைஃப் ஜாலியாத்தான் இருந்தது. ஆனால், எல்லாத்துக்குமே ஒரு காலம் இருக்கு இல்லையா? நாலரை வருஷமா அன்வர் – சமீரா காதலர்களா இருந்தாங்க. இப்ப கணவன் மனைவியாக வேண்டிய காலம் வந்திடுச்சு. அதனால தம்பதியாகி இருக்கோம். நவம்பர் 15 சமீராவின் பிறந்தநாள். காதலர்களா இருந்தப்ப சமீராவுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவங்களை ஏதாவதொரு வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன். அதுதான் நான் அவங்களுக்குத் தர்ற பிறந்தநாள் பரிசு. இந்தப் பிறந்தநாளுக்கு எங்களோட திருமணம்தான் அந்தப் பரிசு'’ என்றவரிடம், ``சினிமா, டிவி நட்சத்திரங்கள் யாருக்கும் திருமணத்துக்கு அழைப்பில்லையே ஏன்?'' என்றேன்.
``திருமணம்கிற பேர்ல பணத்தை அவசியமில்லாம செலவு செய்றதை நானும் சமீராவும் விரும்பலை. அப்படி ஆகுற செலவுல நாலு பேருக்கு நம்மால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்யலாம்னு நினைக்கிறோம். எங்க வாழ்க்கை நாங்க ரெண்டு பேரும் வாழக் கூடியது. இதுல நாங்க முடிவெடுத்தா போதும். என்னோட இந்த முடிவைப் பார்த்து என்னோட உறவுக்காரங்கள்ல சிலபேர் நாங்களும் இதே மாதிரிதான் செய்யப் போறோம்னு சொல்றாங்க. அந்த வார்த்தைகள் எங்களுக்கு மனநிறைவைத் தருது.

இஸ்லாம் வழக்கப்படி மாப்பிள்ளைதான் பொண்ணு வீட்டுக்கு ஏதாவது கொடுத்து பொண்ணைத் தன்னோட வீட்டுக்குக் கூட்டி வருவாங்க. அதை `மெஹர்’னு சொல்வாங்க. அதையேதான் நானும் செஞ்சிருக்கேன். கல்யாணத்துக்கு மண்டபம் கூட கிடையாது. ரொம்ப சிம்ப்பிள்... சமீரா வீட்டுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'’ என அன்வர் சொல்ல, ``யெஸ்... இதுதான் எங்களுக்கு மனநிறைவைத் தருது’ என்கிறார் சமீரா.
வாழ்த்துகள் அன்வீரா!