Published:Updated:

"அன்வருடன் சேர்ந்து நடிக்காம இருந்த காரணம், இப்போ இல்லை!" - சமீரா

’பகல் நிலவு’ அன்வர் சமீரா

மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள், 'பகல் நிலவு' அன்வர் - சமீரா.

Published:Updated:

"அன்வருடன் சேர்ந்து நடிக்காம இருந்த காரணம், இப்போ இல்லை!" - சமீரா

மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள், 'பகல் நிலவு' அன்வர் - சமீரா.

’பகல் நிலவு’ அன்வர் சமீரா

சித்தார்த், சமீரா நடிப்பில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடர் இம்மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' தொடரில் காதலர்களாக அறிமுகமான அன்வர் - சமீரா ஜோடி, ஆளுக்கொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சீரியல்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, சமீரா தயாரித்து நடித்த தொடர்தான், 'றெக்க கட்டிப் பறக்குது மனசு’. இந்த சீரியல் இதுவரை 521 எபிசோடுகளைக் கடந்த நிலையில், தொடர் நிறைவடைந்தது குறித்து சமீராவிடம் பேசினோம்.

"நடிப்பு போதும்னு இருந்தவளைப் ப்ரொடக்‌ஷன் சைடுல இறக்கிவிட்டது, அன்வர்தான். அது புது அனுபவமா இருந்தது. ப்ரொடக்‌ஷன் சைடுல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். நாம தயாரிக்கிற சீரியல்ல நாமளே நடிக்கிறப்போ நல்ல விஷயங்களும் இருந்தது, சில சங்கடங்களும் இருந்தன. சீரியலோட போக்கு, ப்ரொடக்‌ஷன் செலவு மாதிரியான விஷயங்கள் நம்மளோட கட்டுப்பாட்டுல இருக்கும்.

சமீரா - அன்வர்
சமீரா - அன்வர்

லாபமோ, நஷ்டமோ நாம மட்டுமே பொறுப்பு. சங்கடங்கள்னா, சக ஆர்ட்டிஸ்டுகள்ல சிலர் 'இவங்க தயாரிப்பாளரும்கூட'ன்னு கொஞ்சம் தள்ளி நிற்பாங்க. இது எனக்கு ரொம்பவே மனசை சங்கடப்படுத்திடுச்சு. எப்படியோ யாருடனும் எந்தக் கசப்பும் இல்லாம, தொடரை நல்லபடியா முடிச்சுட்டோம்." என்றவரிடம், 'அடுத்து என்ன திட்டம்?' என்றோம்.

" ‘பகல் நிலவு’ தொடர்ல எங்க ஜோடிப் பொருத்தம் சீரியல் ரசிகர்களால் ரொம்பவே விரும்பப்பட்டது. ஆனா, 'நிஜக் காதலர்கள் அறிமுகமாகிற சீரியல்'னு பயங்கரமா பில்டப் கொடுத்தாங்களா, சீரியல் செமயான அறிமுகத்தைத் தந்தது. ஆனா, துரதிர்ஷம் அந்த தொடர் நிறைவடையிறதுக்குள்ளேயே அதுல இருந்து வெளியேறவேண்டிய சூழல் வந்தது. அந்தக் கதையை இந்த இடத்துல பேசி யாரையும் சங்கடப்படுத்த விரும்பல.

சமீரா - அன்வர்
சமீரா - அன்வர்

அந்த சீரியல்ல இருந்து நாங்க வெளியேறினப்போ, 'மறுபடியும் எப்போ சேர்ந்து நடிப்பீங்க'ன்னு நிறைய பேர் கேட்டாங்க. இப்போவரைக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கிட்டேதான் இருக்காங்க. ரெண்டுபேருமே தயாரிப்புல இறங்கியிருந்ததால, எங்களால சேர்ந்து நடிக்க முடியாம இருந்தது. ஆனா, இப்போ அந்தத் தடை விலகி ரூட் க்ளியர் ஆகிடுச்சு. சொந்தத் தயாரிப்புல ஜோடியா நடிக்கிற மாதிரி ஒரு கதை ரெடியாகிட்டு இருக்கு. அதுதான் அடுத்த தயாரிப்பு!" என்கிறார், சமீரா.

"ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டதாலேயே, இந்த சீரியல் நிறைவடைந்ததாகப் பேசப்படுகிறதே?" எனக் கேட்டதும், குறுக்கிட்டார், அன்வர்."சீரியல் ஏரியாவுல சில போக்குகள் இன்னைக்கு ஆரோக்கியமானதா இல்லை. இந்தக் கசப்பான உண்மையைக் காலம் ஒருநாள் உணர்த்தும். சீரியலுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைக்குது. ஆனா, பின்னணியில் உழைச்ச எல்லோரும் அந்தப் பலனை அனுபவிக்கிறாங்களான்னா, இல்லை.

இப்படியான சிக்கல்கள் வர்றப்போதான், ஹீரோ மாறினார், ஹீரோயின் மாறினார், டைரக்டர் மாறினார், ஏன்... தயாரிப்பாளர் மாறினார்னு சீரியலைப் பற்றி தாறுமாறா செய்திகள் உலா வருது. இந்தமாதிரியான தர்ம சங்கடங்களுக்குள் சிக்குறதுக்குப் பதிலா, சீரியல் முடிவடையிறது நல்லதுதானே! ஒரு தயாரிப்பாளரா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்தது நாங்கதான். 500 எபிசோடு கடந்தாச்சு. போதுமே!. புதுசா ஒரு கதையோட மறுபடியும் சந்திக்கத்தான் போறோம்." என்கிறார், அன்வர்.

"சரி, எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க?" எனக் கேட்டால், இருவரும் 'கூடிய சீக்கிரம்' என வழக்கமான பதிலையே தருகிறார்கள்!