Published:Updated:

“டான்ஸ் அறிமுகத்தில் காதல் வந்துச்சு!”

குமரன் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
குமரன் தம்பதி

டிவி - ரியல் ஜோடி

“டான்ஸ் அறிமுகத்தில் காதல் வந்துச்சு!”

டிவி - ரியல் ஜோடி

Published:Updated:
குமரன் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
குமரன் தம்பதி

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்னும் ஒரேயொரு சீரியல் மூலம் நிறைய ரசிகர்களையும் புகழையும் சம்பாதித்திருக்கும் குமரனை தம்பதி சகிதமாகச் சந்தித்தேன்.

``என் அப்பா தங்கராஜனுக்குப் ‌பூர்வீகம் தஞ்சாவூர்ப் பக்கம் முத்துப்பேட்டை. பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்த அப்பாவுக்கு ஒரு டீக்கடையில வேலை கிடைச்சிருக்கு. பொறுப்பா அந்த வேலையைச் செய்தவர் ஒருகட்டத்துல சொந்தமா டீக்கடை வச்சார். ஒரு கடை நாலஞ்சு கடையாச்சு. பிறகு இங்கேயே செட்டில் ஆகி வேற வேற பிசினஸ் பண்ணினார்.

பதினெட்டு வயசுல இருந்தே பல இடங்கள்ல சுத்தி நிறைய அனுபவப் பாடங்களைக் கத்துக்கிட்டு வந்ததால, எங்களையும் அவரைப் போலவே அப்பா வளர்த்தார். வீட்டுல ரெண்டு அக்காக்கள், நான்னு மொத்தம் மூணு பேர். `நல்லாப் படிக்கணும்'னு மட்டுமே சொல்லி வளர்க்கலை. `வாழ்க்கையில எல்லா வேலைகளையும் தெரிஞ்சுக்கணும்'னு சொல்லிக் கொடுத்தார். உதாரணத்துக்கு பள்ளிக்கூடம் போறப்பவே நான் போடற துணியை நானேதான் துவைச்சு, அயன் பண்ணணும்.

பிளஸ் டூ முடிச்சதுமே மேல்படிப்புக்கு எங்கேயும் சேரலை. `உனக்குப் பிடிச்சதை ஈடுபாட்டோட செய்'னு சொல்லிட்டார். எனக்கு சினிமா விருப்பமா இருந்ததால அதுக்கான தேடுதல்ல இறங்கினேன். நடிப்பு, டைரக்‌ஷன் ரெண்டுமே ஆசை. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா `வேதா' `இது என்ன மாயம்' உள்ளிட்ட சில படங்களில் வந்து போனேன். வருஷம்தான் ஓடுச்சே தவிர, அங்கீகாரம் கிடைக்கலை. அடுத்த முயற்சியா, அப்பப்ப தயார் செய்து வச்சிருந்த ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டுக் கதை சொல்லக் கிளம்பினேன். வைபவ், அசோக் செல்வன் முதலான சில ஹீரோக்களுக்குக் கதை சொன்னேன். சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களே எங்கிட்ட கதை கேட்டிருக்காங்க. ஆனா, எதுவும் நடக்கலை'' என்ற குமரனிடம், `டி.வி பக்கம் வந்தது எப்படி' என்றேன்.

“டான்ஸ் அறிமுகத்தில் காதல் வந்துச்சு!”

``சினிமாவுக்கு மேலும் சில தகுதிகள் தேவைன்னு நினைச்சு டான்ஸ்ல கவனம் செலுத்தினேன். அந்த டான்ஸ்தான் என்னை டி.வி பக்கம் கூட்டிட்டுப் போச்சு. `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா', `மானாட மயிலாட' ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டது எனக்கு முக்கியமான திருப்புமுனை. முதல்ல கோரியோகிராபரா இருந்தேன். பிறகு முதல் வரிசைக்கு வந்து, அந்தத் தொடர்பு அப்படியே வளர்ந்து சீரியலுக்குக் கூட்டி வந்தது. `மாப்பிள்ளை' என்னுடைய முதல் சீரியல். தொடர்ந்து `ஈரமான ரோஜாவே' தொடர்ல `மாறன்'ங்கிற கேரக்டர் ஓரளவுக்கு நல்ல ரீச் தந்தது. ஆனா, ரெண்டு சீரியல்களிலுமே என்னுடைய எபிசோடுகள் குறைவுதான். ரெண்டாவது சீரியலும் முடிஞ்ச பிறகுதான் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' வாய்ப்பு வந்தது, இந்த சீரியல் மக்களால பெரிசா விரும்பப்படறதால, அங்கீகாரம் ஓரளவு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

ஏன்னா, இப்ப 700 எபிசோடைக் கடந்து ஒளிபரப்பாகிட்டிருக்கு சீரியல். இந்த சீரியல்ல கதிர்-முல்லை ஜோடிக்கும் சரி, தனியா என்னுடைய கேரக்டர் கதிருக்கும் சரி எக்கச்சக்கமான ரசிகர்கள். கொண்டாடித் தீர்க்கிறாங்க. ஒரு நடிகரா மக்கள் மனசுல இடம்பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன். இன்னைக்குத் தமிழ் பேசற ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்னைத் தெரியுது. பிளஸ் டூ முடிச்ச பிறகு காலேஜ் சேராம நிறைய வேலைகளைச் செஞ்சுகிட்டு சினிமாவைத் தேடி அலைஞ்ச அந்த அலைச்சலுக்கு இது ஓரளவு மனத்திருப்தியைத் தருது.''

`உங்களுடையது காதல் கல்யாணம் தானே?' என்றதும், ``இந்தக் கேள்விக்கு அவங்க பதில் சொல்வாங்க'' என மனைவி பக்கம் திரும்பினார்.

குமரனின் மனைவி சுஹாஷினி, ``ஆமாங்க‌. `ஜோடி' நிகழ்ச்சியில ஒரு போட்டியாளராக் கலந்துக்கிட்டேன் நான். அந்த நிகழ்ச்சியில எனக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் சொல்லித் தர வந்தார். அந்த அறிமுகம் அப்படியே நட்பா வளர்ந்து, கொஞ்ச நாள்ல காதலா கனிஞ்சு வந்தாச்சு. சில வருஷங்கள் காதலிச்சுட்டு, முறைப்படி ரெண்டு பேர் வீட்டுலயும் விஷயத்தைச் சொல்லி சம்மதம் வாங்கிக் கல்யாணம் செய்துகிட்டோம். கடவுள் ஆசியில நல்லபடியா போயிட்டிருக்கு வாழ்க்கை'' என்று நிறைவு காட்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism