Published:Updated:

``விஜய் சார்கிட்ட அதைச் சொல்லியிருக்கணும்"-`வாரிசு' படப்பிடிப்பில் ரவிச்சந்திரனுக்கு நடந்ததென்ன?

வாரிசு

எல்லாத்தையும் இழந்துட்டு, பஸ்ஸுக்கு ஊர்ல ஒருத்தர்கிட்ட கடன் வாங்கித்தான் சென்னைக்கே வந்தேன். இங்க வேலை இல்லாம சில மாதங்கள் திரிஞ்சேன். சாப்பாட்டுக்கு நண்பன் ஒருவன் மாதா மாதம் பணம் தந்தான்.

Published:Updated:

``விஜய் சார்கிட்ட அதைச் சொல்லியிருக்கணும்"-`வாரிசு' படப்பிடிப்பில் ரவிச்சந்திரனுக்கு நடந்ததென்ன?

எல்லாத்தையும் இழந்துட்டு, பஸ்ஸுக்கு ஊர்ல ஒருத்தர்கிட்ட கடன் வாங்கித்தான் சென்னைக்கே வந்தேன். இங்க வேலை இல்லாம சில மாதங்கள் திரிஞ்சேன். சாப்பாட்டுக்கு நண்பன் ஒருவன் மாதா மாதம் பணம் தந்தான்.

வாரிசு
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனா கதாபாத்திரத்தின் அப்பாவாக நடிப்பவர் ரவிச்சந்திரன். 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட விஜய் டி.வி-யின் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மசாலாக் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் பெரிய நஷ்டம் உண்டாக ஊரை விட்டுக் கிளம்பி வேலை தேடி சென்னை வந்திருக்கிறார். நண்பர்கள் சிலர் மூலம் விளம்பரப் படத்தில் நடித்தவர், அந்த நூலைப் பிடித்துக்கொண்டு டி.வி, சினிமா என வந்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் மதிய உணவு இடைவேளையில் சந்தித்த போது மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினார்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

''இப்ப இருக்கிற `ஸ்டார் விஜய்' சேனல், நான் மசாலாக் கம்பெனி நடத்திட்டிருந்தப்ப விஜய் டி.வி. அன்னைக்கு இதே சேனல்ல சில நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரா இருந்துச்சு. நேரமோ என்னவோ எல்லாத்தையும் இழந்துட்டு, பஸ்ஸுக்கு ஊர்ல ஒருத்தர்கிட்ட கடன் வாங்கித்தான் சென்னைக்கே வந்தேன். இங்க வேலை இல்லாம சில மாதங்கள் திரிஞ்சேன். சாப்பாட்டுக்கு நண்பன் ஒருவன் மாதா மாதம் பணம் தந்தான்.

`இதுவும் கடந்து போகும்'னு சொல்வாங்க இல்லையா? அது என் வாழ்க்கையிலேயும் நடந்தது. கஷ்டங்கள் விலகுச்சு. விளம்பரப் படத்துல நடிச்சு என் முகத்தை நானே ஸ்கிரீன்ல பார்த்தப்ப, `பரவால்லயே, நமக்கும் நடிக்க வருதே'ன்னு நினைச்சேன்/ மசாலாக் கம்பெனி தொடங்கினப்ப, நானே தொழிலாளியா மெஷின் முன்னாடி நின்னு கத்துகிட்டுதான் முதலாளி ஆனேன். அதேபோல நடிப்பையும் முறைப்படி கத்துகிட்டு இறங்குவோம்னு நினைச்சேன். 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் டிராமா', 'தியேட்டர் லேப்' ல சேர்ந்து கத்துக்கிட்டேன்.

அங்க கிடைச்ச பயிற்சியும் தொடர்புகளும் எனக்குப் பெரிய உதவியா இருந்தது. தொடர்ந்து சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தன. ஆரம்பத்துல சீரியல் பண்ணத் தயக்கம் இருந்தது. `டி.வி பக்கம் போனா சினிமாவுக்குக் கூப்பிட மாட்டாங்க'ன்னு சிலர் என்னை நம்ப வச்சிருந்தாங்க.

அதனால சினிமாவுல மட்டும் நடிச்சிட்டிருந்தேன். `காதல் சொல்ல வந்தேன்', `சண்டியர்', `மதுபானக் கடை'ன்னு சில படங்கள் பண்ணினேன். ஆனாலும் பெருசா பேர் கிடைக்கலை. நிறைய சங்கடங்களையும் அவமானங்களையுமே சினிமா எனக்குத் தந்தது.

இயக்குநர் முத்தையா
இயக்குநர் முத்தையா

`நாளைய இயக்குநர்'ல வந்த பாக்யராஜ் கண்ணன் அவருடைய குறும்படத்துக்கு க்ளைமாக்ஸ்ல நடிக்கக் கேட்டார். நான் நடிச்சுக் கொடுத்து அவர் தேர்வானார். சம்பளமா எனக்கு அன்னைக்கு ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. `வளர்ந்துட்டு வர்றீங்க, பரவால்ல; கொடுக்கிறதைக் கொடுங்க‌'ன்னு நானும் அதை ஏத்துக்கிட்டேன். அப்ப `நான் படம் பண்ணும்போது உங்களுக்குக் கேரக்டர் நிச்சயம் உண்டு'ன்னு சொன்னார். இப்பவரைக்கும் தரலை.

`விருமன்' முத்தையா ஒருகட்டத்துல பணப்பிரச்னையில இருந்தப்ப என் பிள்ளைக்குக் கட்ட வச்சிருந்த ஸ்கூல் ஃபீஸைத் தந்தேன். அவரும் அன்னைக்கு 'என் படங்கள் எல்லாத்துலயுமே நீங்க இருப்பீங்க'ன்னார். தனியா ஆபீஸ் போட்டதுமே போய்ப் பார்த்தேன். ஆனா அவர் படத்துல நான் நடிக்கலை. இவங்க ஒருவேளை மறந்துட்டாங்களான்னு தெரியல.

இதையெல்லாம் சொல்லிக் காட்டணும்னு நான் விரும்பல. விஜய் டி.வி என்னை சீரியல்ல அறிமுகப்படுத்தின பிறகு சினிமாவுல கிடைக்காத ரீச் கிடைச்சிருச்சு. இப்பவும் தொடர்ந்து விஜய் டி.வி எனக்கு வாய்ப்பு தந்திட்டிருக்கு.

ஆனாலும் சில விஷயங்களை வெளியில பேசினா இன்னொரு முறை என்னை மாதிரி இன்னொருத்தருக்கு நடக்காது இல்லையா” என்றவர்,

”நிறைவா ஒரு விஷயத்தைச் சொல்றேன்” எனத் தொடர்ந்தார்...

”சில நாள்களுக்கு முன்னாடி ஒரு போன் வந்தது. ’பெரிய ஸ்டார் படம், ஒரு கேரக்டர் இருக்கு, உடனே வந்து டைரக்டரைப் பாருங்க'ன்னு கூப்பிட்டாங்க. போனேன். டைரக்டர் என்னைப் பார்த்தார். பேசினார், அஞ்சு நாள் வேணும்னாங்க. சம்பளம் பேசியாச்சு. எல்லாம் ஓகே. 'நாளைக்கு ஷூட் வந்திடுங்க'ன்னாங்க. எனக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷூட் போயிட்டிருக்கு. அவங்ககிட்ட விஷயத்தைச் சொன்னேன். 'பெரிய பேனர் சார், நல்ல வாய்ப்புதான், நீங்க போயிட்டு வாங்க, நாம அதுக்கேத்த படி ஷெட்யூலை மாத்திக்கலாம்'னு சொல்லி சம்மதம் தந்துட்டாங்க.

பொதுவா நான் எப்பவுமே வீட்டுல என் மனைவிகிட்ட எதையும் சொல்ல மாட்டேன்; என் பொண்ணுகிட்டத்தான் சொல்வேன். மகள் மூலம்தான் மனைவிக்கு மெசேஜ் போகும்.

'வாரிசு' பட ஃபர்ஸ்ட் லுக்
'வாரிசு' பட ஃபர்ஸ்ட் லுக்

மறுநாள் கிளம்பி ஷூட் போகறப்ப என் மகளுக்கு போன் பண்ணி 'அஞ்சு நாள் கழிச்சு ஒரு குட் நியூஸ் சொல்றேன்பா'ன்னு சொன்னேன். என் மகள், மகன் ஏன் என்னுடைய மனைவி எல்லாருமே விஜய் ரசிகர்கள். நான் போயிட்டிருக்கிறது 'வாரிசு’ ஷூட்டிங் ஸ்பாட். ஆர்வமா போய் அதே இயக்குநர் முன்னாடி போய் நின்னேன். சில நிமிடங்கள் என்னை ஏற இறங்கப் பார்த்துட்டு, உதவி இயக்குநர் காதுல ஏதோ சொல்லிட்டுப் போயிட்டார். உதவி இயக்குநர் என்கிட்ட வந்து 'கேரவன்ல போய் உட்காருங்க சார்'னு சொன்னார். போய் வெயிட் பண்ணிட்டிருந்தேன். கொஞ்ச நேர்ம கழிச்சு வந்த அந்த உதவி இயக்குநர் 'சார் உங்களைக் கிளம்பச் சொல்லிட்டார், உங்க லுக் ரொம்ப 'ரிச்'சா இருக்காம்’கிறார்.

'லுக்' பிரச்னைன்னா மேக்கப்ல சரி செய்யலாமே'னு நான் சொன்னதை அவர் காதுல வாங்கலை. பத்து நிமிஷம் பேசாம உட்கார்ந்துட்டேன். ஆரம்பத்துல தொழில்ல லட்சக்கணக்குல நஷ்டமடைஞ்சப்ப வராத வலி மனசுல தெரிஞ்சுது.

ஒரு சீனாவது நடிக்க வச்சுட்டு 'உனக்கு நடிப்பு வரலை'ன்னு சொல்லி அனுப்பினாக்கூட ஏத்துக்கிடுவேன். 40 வயசுக்கு மேல நடிக்க வந்த போதும் கத்துகிட்டுப் பண்ணணும்னு நினைச்சவனை ஏற இறங்கப் பார்த்து 'போயிட்டு வா'ன்னா? இந்த நிமிஷமும் அந்த அவமானத்தை நினைச்சா கண்ணுல தண்ணி வந்திடுது.

மனசைக் கொஞ்சம் திடப்படுத்திட்டு, நேரா முதல்நாள் என்னைக் கூப்பிட்ட மேனேஜர் கிட்ட போனேன். 'விஜய் சார் கேரவனல்தானே இருக்கார்; அவர்கிட்ட போய் 'உங்க படத்துல இப்படியொரு சம்பவம். ஒருத்தனை வம்படியாக் கூட்டி வந்து அசிங்கப்படுத்திட்டாங்க'ன்னு சொல்லிட்டுக் கிளம்பிடுறேன்'னு சொன்னேன். அவர் கையெடுத்துக் கும்பிடாத குறையா உங்களுக்குப் பேசினபடி இன்னைக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்துடுவாங்க'னு சொல்லி விஜய் சார்கிட்டெல்லாம் போகாதீங்க'ன்னு கேட்டுக்கிட்டார்.

பிறகு அப்படியே நொந்துபோய் வந்துட்டேன். அந்த ஒருநாள் சம்பளமும் நடிக்காமலேயே எனக்கு வந்தது. விஜய் சார் கிட்ட நான் விஷயத்தைக் கொண்டு போகணும்னுதான் நினைச்சேன். ஆனா 'போறாங்க'ன்னு விட்டுட்டேன். இத எதுக்குச் சொல்றேன்னா, முதல் நாள் என்னைப் பார்க்கிற இயக்குநருக்கு அந்த காஸ்ட்யூம்ல நான் ரிச்சா தெரிவேனா இல்லையாங்கிறது தெரியலையா, எதுக்கு என்னை அவமானப்படுத்தணும்?” என்றார் வேதனையுடன்.