Published:Updated:

ஹீரோயின் நீயா.. நானா? - `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பஞ்சாயத்தால் விருது விழாவைப் புறக்கணித்தாரா சுஜிதா?

சுஜிதா
சுஜிதா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துக்குள் பஞ்சாயத்து பண்ண முடியாத அளவுக்குப் பனிப்போர் முற்றிவிட்டது

மாமியார் மருமகளுக்கிடையே பிரச்னை, கூட்டுக் குடும்பமாக இருந்தால் குடும்பத்துக்கு வந்த மருமகள்களுக்கிடையில் பிரச்னை.. என்றைக்கு சீரியல்களின் ஒளிபரப்பு தொடங்கியதோ, அந்தநாள் தொட்டே இந்த இரண்டு விஷயங்கள்தான் முக்கால்வாசி சீரியல்களின் கதையாக இருந்து வந்திருக்கின்றன. `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை மட்டும் குறை சொன்னால் என்ன நியாயம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

அட, அந்த சீரியலே மம்முட்டி, முரளி நடிச்ச `ஆனந்தம்’ படத்துக் கதைங்க’ என்கிறீர்களா, அது நமக்குத் தெரியாது. ஆனால், `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துக்குள் பஞ்சாயத்து பண்ண முடியாத அளவுக்குப் பனிப்போர் முற்றிவிட்டது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். `இவருக்குப் பதில் இவர்’னு யாராவது மாறினாலும் மாறலாம்’ என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

`என்ன பிரச்னை’ என தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.

கூட்டுக் குடும்பத்துல நாலு அண்ணன் தம்பிங்க. மளிகைக் கடை நடத்தறாங்க. மூத்த மருமகள் மட்டும் இருக்கிற வரை பிரச்னை இல்லை. ரெண்டாவது மருமகள் வந்ததும் ஆரம்பிக்குது பிரச்னை. அந்தப் பிரச்னைகள்தான் தினசரி ட்விஸ்ட். மூத்த மருமகளா சுஜிதா வர்றாங்க. அடுத்த மருமகள் சித்ரா. கதைப்படி ரெண்டு பேருக்குமிடையே பழைய பகை இருக்கும்’ – சீரியலின் கதையை சில வார்த்தைகளில் சொன்ன அந்த பெயர் குறிப்பிட விரும்பாத துணை நடிகர், மேற்கொண்டு சொன்னதெல்லாம் சீரியஸ் ரகம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

`சுஜிதா, சித்ரா ரெண்டு பேரும் ஆரம்பத்துல அவ்வளவு ஒற்றுமையா இருந்தாங்க. `நாங்க அக்கா தங்கச்சிகளாக்கும்’னு வளைய வந்தாங்க. ரெண்டு பேரும் முறைக்கிற மாதிரி, சண்டை போடற மாதிரி சீன் இருந்தா, அது முடிஞ்சதும், அதையே இமிடேட் செய்து ஒருத்தருக்கொருத்தர் ஜாலி கேலி பண்ணிட்டிருப்பாங்க.

சீரியல் நல்லபடியா போனதால சேனல்ல இருந்து விருதுக்கும் தேர்வாச்சு.இங்கதான் பிரச்னை தொடங்கினதா தெரியுது. பெஸ்ட் சப்போர்ட்டிங் கேரக்டர்ங்கிற பிரிவுல சுஜிதாவுகக்கு விருது தந்தாங்க. அதேநேரம் சிறந்த நடிகைக்கான நாமினேஷன் லிஸ்ட்ல சித்ரா பெயர் இடம் பிடித்தது. சேனல் தன்னை ஹீரோயினாக் கருதலைங்கிற வருத்தம் சுஜிதாவுக்கு. 'விழா மேடையில 'யாருக்கு சப்போர்ட் பண்ணினேன்னு தெரியலை' ன்னு தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்திட்டு, பாதியிலேயே வெளியேறிட்டாங்க அவங்க. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும், நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை வளர்ந்துட்டேதான் போகுதே தவிர தீர்வுக்கு வழி தெரியலை. ஷூட்டிங்கிற்கு தேதி தர்றதுல தொடங்கி, ’கதையில யாருக்கு முக்கியத்துவம்’ங்கிற வரைக்கும் போய் நிக்குது. இது எங்க போய் முடியும்னு தெரியலை. இவங்க பஞ்சாயத்துக்கு நடுவுல மாட்டிக்கிட்டு பாவம் இயக்குநர்தான் தவிக்கிறார்’ என்பதே அந்த மேலதிக தகவல்.

சீரியலுக்கு தன்னை கமிட் பண்ணினப்ப, ‘நீங்கதான் லீட் ரோல்’னு சொன்னதா சித்ரா சொல்றாங்க. ’கதையில எனக்குத்தான் முக்கியத்துவம், நான் சீனியரும் கூட, அதனால என்னோட கேரக்டர்தான் லீட்’னு சுஜிதா நினைக்கிறாங்க, இதான் மேட்டர்’ என உடைத்துப் பேசிய டெக்னீசியன் ஒருவரும் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அந்த சீரியலைத் தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனத்தோட ராசி போல சார் அது. ‘ஆண்டாள் அழகர்’, ’பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’னு பல சீரியல்களைத் தயாரிச்சவங்கதான். இந்த எல்லா சீரியல்களிலுமே இதே டைப் பஞ்சாயத்து நடந்துதான் அந்தந்த தொடர்களை முடிச்சிருக்காங்க. ரெண்டு ஹீரோ அல்லது ரெண்டு ஹீரோயின்னு கமிட் செய்து சீரியலைத் தொடங்கிடுறாங்க. ஆரம்பத்துல சுமூகமாப் போனாலும் எங்காவது ஒருகட்டத்துல பிரச்சினை வந்திடுது. அதேபோல சீரியல்ல ஏதாவது பிரச்னைனு வந்தா சரி செய்ய முயற்சிக்காம, சைலண்டா இருக்கிற அணுகுமுறையை தயாரிப்புத் தரப்பு மாத்தினா மட்டுமே இந்த மாதிரி பிரச்னை வராமத் தடுக்க முடியும்’ என்கிறார், ஏற்கெனவே இப்படியொரு அனுபவத்தைச் சந்தித்த அந்த ஹீரோ.

உங்களுக்கும் சுஜிதாவுக்கும் இடையே பிரச்னையாமே’ என சித்ராவைக் கேட்ட போது, சீரியல்லயா அல்லது நிஜத்துலயா’ என்றவர், 'விருது விழாவுல என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். நான் எதுவும் பேச விரும்பலை. என்னைப் பொறுத்தவரை என்னால ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன்' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு