பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிக்கிடையில் அந்த நூறு நாள்களில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிவதெல்லாம் வடக்கில் சகஜம். தெற்கில் அப்படி ஒரு ஜோடியாக முதன் முதலில் நிஜ வாழ்க்கையில் இணைந்தார்கள் மலையாள பிக் பாஸ் ஜோடியான ஶ்ரீனிஷ் - பியர்லி.
இதோ தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய பாவனி - அமீர் ஜோடி, தங்கள் காதலை முறைப்படி அறிவித்திருக்கிறது. காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமாக தங்களது காதலை உலகத்துக்குச் சொன்ன இந்த ஜோடி தங்களது திருமணத்துக்கு இன்னும் ஓராண்டு ஆகலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

வாழ்த்துக்களைச் சொல்லலாமென பாவனியை அலைபேசியில் பிடித்தால், "ஐரோப்பாவில் இருக்கிறேன்" எனச் சொன்னார்.
ஆனாலும் பேசினார்...
"சீரியல்களில் நடிச்சிட்டிருந்த எனக்கு 'பிக் பாஸ் சீசன் 4' வாய்ப்பைத் தந்த விஜய் டிவிக்கு முதல் நன்றியைத் தெரிவிச்சுக்க ஆசைப்படுறேன். ஏன்னா, அந்த ஒரு நிகழ்ச்சி என்னைப் பெரிய அளவுல ரசிகர்கள்கிட்டக் கொண்டு போயிடுச்சு. பிக் பாஸுக்கு முன், பின் என ரெண்டு பார்ட்டா என் லைஃபைப் பிரிச்சுக்கலாம்.
நிறைய ரசிகர்களின் அன்பைத் தந்ததுடன் மட்டுமில்லாம, இவரை எனக்குத் தந்ததும் இதே நிகழ்ச்சிதானே? பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் காட்டின அக்கறை என்னை ஏதோ செய்தது.
எங்களுக்கிடையில் இருந்தது காதல்னு ரெண்டு பேருக்கும் கொஞ்ச நாள்லயே புரிஞ்சுடுச்சு. ஆனாலும் எங்களுக்கு ஆதரவு தந்து இந்தளவு உயர்த்திவிட்டிருக்கிற ரசிகர்களுக்கு சர்ப்ரைஸா சொல்லலாமேனுதான் காதலர் தினத்தன்னைக்குச் சொன்னோம்" என்றவரிடம்,

"'கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகலாம்' என்கிறீர்களே, ஏன் இந்த இடைவெளி?" எனக் கேட்டோம்.
"இப்போதான் ரெண்டு பேருமே சினிமாவுல தலைகாட்டத் தொடங்கியிருக்கோம். அடுத்தடுத்து சில புராஜெக்டுகள் வந்தபடி இருக்கு. சரியாத் திட்டமிட்டு அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கு. அதனாலதான் இந்த இடைவெளி. அப்புறம் காதலர்களா கொஞ்ச நாள்களாவது இந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்துக்கலாமேன்னு தான் இந்த முடிவு!" எனச் சிரிக்கிறார்.
வாழ்த்துகள் பாவனி - அமீர்!