Published:Updated:

"அப்பாவை சீண்டினா சும்மா இருக்க மாட்டேன்!"-`கலக்கப்போவது யாரு'க்கு எதிராக கொந்தளித்த பிரபு!

நடுவர்களில் ஒருவராக இருந்த ஆதவன், நடந்த சம்பவத்தில் தனக்கும் பங்கிருப்பதாகச் சொல்லி பிரபுவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பொறுமையா இருந்ததெல்லாம் போதும். எவ்ளோ நாள்தான் அப்பாவைக் கேலி கிண்டல் பண்ணிட்டிருப்பாங்க. இனி யாராச்சும் அப்படிச் செய்தாங்கன்னா நான் கேட்பேன்.''
நடிகர் பிரபு

சிவாஜி ரசிகர்கள் மத்தியில் நடிகர் பிரபு ஆவேசமாக இப்படிப் பேசும் வீடியோ சில தினங்களாக சமூக வலைதளங்களில் திடீர் வைரலாகி வலம் வருகிறது.

விசாரித்தால், "வீடியோ பழையதுதான்; ஆனால் இப்போது வைரலானதன் பின்னணியில் ஒரு சம்பவம் நடந்தது" என்ற சிவாஜி ரசிகர்கள் சிலர், அந்த சம்பவத்தை விவரித்தார்கள்.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

"சில தின‌ங்களுக்கு முன்பு விஜய் டிவியில ஒளிபரப்பாகி வர்ற 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' படத்தை வைத்து காமெடி செஞ்சாங்க. நகைச்சுவை நிகழ்ச்சின்னு எடுத்துட்டுப் போயிடலாம்னு பார்த்தா, படத்தின் காட்சிகளைத் தாண்டி ஜெயச்சந்திரன்கிறவர் நடிகர் சிவாஜியின் வாயசைவு, பாடி லேங்வேஜையெல்லாம் கலாய்ச்சார்.

சிவாஜின்னா நடிப்பு, நடிப்புன்னா சிவாஜின்னு வாழ்ந்தவர் அவர். அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவானை அதே நடிப்புத் துறையில இருக்கிறவங்க, அதுவும் இந்த மாதிரி ஷோக்கள் மூலமாத்தான் சின்னத்திரை, சினிமா வாய்ப்புகளைப் பெறலாம்னு புதுசாத் துறைக்குள் வர்றவங்க கேலி, கிண்டல் செய்றதை எப்படிங்க பொறுத்துக்க முடியும்?

மேடையில சிலர் இப்படிச் செய்றாங்கன்னா, நடுவர்கள்னு உட்கார்ந்திருக்கிற பிரபலமானவர்களும் அதை ஆமோதிக்கிற மாதிரி ரசிச்சுச் சிரிக்கிறாங்க.

இந்த நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் மனங்களைக் காயப்படுத்தினது மட்டுமல்லாம, உச்சமா சிவாஜி குடும்பத்தினரையும் சங்கடப்படுத்திடுச்சு.

அந்தக் காட்சியைப் பார்த்த நடிகர் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் ரொம்பவே வருத்தப்பட்டதோட உடனடியா தங்களுடைய கண்டனங்களை சம்பந்தப்பட்டவங்களுக்கும் தெரியப்படுத்திட்டாங்க!" என்றார்கள்.

மதுரை முத்து
மதுரை முத்து

நடிகர் பிரபு கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த ஆதவன், நடந்த சம்பவத்தில் தனக்கும் பங்கிருப்பதாகச் சொல்லி பிரபுவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான மதுரை முத்துவிடம் பேசினேன்.

''அந்தக் கால நடிகர்களை இந்தத் தலைமுறையினர்கிட்ட கொண்டு சேர்க்கிறாங்கன்னு நினைச்சுட்டா இந்த இடத்துல பிரச்னையே வந்திருக்காது. ஜெயச்சந்திரனுக்கு மட்டுமல்ல மேடையில இருந்த நான் உட்பட அத்தனை பேருமே சிவாஜி மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கிறவங்கதான். சிவாஜி ரசிகர்கள் மனசுல, அவரைக் கலாய்க்கிறது போல பட்டிருக்கு. அதனால அவங்க ஷோ டைரக்டர்கிட்டப் பேசினாங்க. பிரபு சார் குடும்பம் வருத்தப்பட்டதால நிகழ்ச்சியின் அடுத்த ஷூட்டிங்ல மன்னிப்புக் கேட்டுடலாம்னு டைரக்டரும் சொல்லிட்டார். அதோட பிரச்னை முடிஞ்சிடுச்சு!" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு